கொண்டாட வேண்டுமா கோகுலாஷ்டமி!

இம்மாதம் 14ஆம் நாள் ‘கோகுலாஷ்டமி’ என்று நாள்காட்டிகள் கூறுகின்றன. கோகுலாஷ்டமி என்றால் என்ன? அதுதான் கோபியர்களையெல்லாம் கூடிக்கூடிக் கூத்தடித்த கிருஷ்ணனின் பிறந்த நாளாம்! இந்த நாளைக் கொண்டாட வேண்டிய அவசியமென்ன? அவன் என்ன மனித சமூகத்துக்கு ஆற்றொனா அரிய பணிகளை ஆற்றியவனா? அறிவுக் கூர்மையை போதித்தவனா? என்றால் இல்லை, இல்லை. அவன் கதைகள் அத்தனையும் பிறப்பு முதல் வளர்ப்பு வரை ஆபாசக் களஞ்சியமே!பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்களே அவன் எப்படிப் பிறந்தான் என்பது குறித்து புராணங்கள் கூறும் கதையை அறிவார்களா?தேவர்கள் எல்லாம் ஒன்றுகூடி விஷ்ணுவிடம் போய் உலகத்தில் அதர்மம் அதிகமாகிவிட்டது. தர்மம் அழிந்து வருகிறது. இதைத் தடுக்க வலிமையான ஒருவன் வேண்டும் என்று கேட்டார்கள். உடனே விஷ்ணு தன் மார்பிலிருந்து இரண்டு மயிர்களைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அதில் ஒரு மயிர் கருமை வண்ணமாகவும் ஒரு மயிர் வெண்மையாகவும் இருந்ததாம். கருமயிர் கண்ணனாகவும், வெண்மயிர் அவன் அண்ணனாகவும் உருவெடுத்ததாம். அவனைக்  கேசவன் என்றே அழைப்பார்கள். (கேசம் என்றால் மயிர்) ஆம், பக்தர்களே! மயிரிலிருந்து மனிதன் பிறந்தான் என்று கூறினால், அதை ஏற்று அவன் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு அவசியமென்ன? அதனால் பலன்தான் என்ன? மயிரிலிருந்து மனிதன் எப்படித் தோன்ற முடியும்? என்று சிந்திப்பதுதானே அறிவுடையார் செயலாக இருக்க வேண்டும்.அவனுடைய வளர்ப்பும், வளர்ந்தபின் அவன் செய்த சேட்டைகளையும் புராணங்கள் கூறுவதைப் படித்தால் அவனை ஒரு கடவுள் என்றோ அல்லாது கொண்டாடப்பட வேண்டியவனாகவோ கொள்ள முடியுமா என்பதை சற்று சிந்தித்துப் பாருங்களேன்.பிரம்மவர்த்த புராணத்தில் அவன் இராதாவுடன் கூடி வாழ்ந்த முறைகெட்ட வாழ்க்கை பற்றி வர்ணிக்கப்பட்டுள்ளதே. இராதா முன்னமே ஒருவனுக்கு மணமுடிக்கப்பட்டு அவனுடன் வாழ்ந்தவள். ஆக அடுத்தவன் மனைவியைக் கவர்ந்து தன் காமக்கிழத்தியாக்கி ஆபாசம் வளர்த்தவன் ஆண்டவனா? அவளின்றி ருக்மணி என்பவளும் அவனுக்கு மனைவி. இருவரும் போதாமல் குப்ஜா என்ற பெண்ணுடனும் கூடிக் குலாவுவானாம். இவர்கள் மட்டுமன்றி கோபியாஸ்திரிகள் 16,000 பேர். அவர்கள் அத்தனை பேருடன் அவன் அடித்த கொட்டங்கள்தான் உங்கள் புண்ணிய புராணங்களின் ஏடுகளில் புழுத்துக் கிடக்கின்றனவே.அவனுடைய மொத்த மனைவிகள் 16,108 என்றும், அவன் பெற்ற குழந்தைகள் 1,80,000 (ஒரு லட்சத்து எண்பதாயிரம்) என்றும் புளுகு மூட்டைப் புராணங்கள் புகல்கின்றனவே.‘தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன், தெருவில் பெண்களுக்கு ஓயாத தொல்லை’ என்ற பாடல் வரியே அவனுடைய குரங்குச் சேட்டைகளுக்கு சாட்சியமன்றோ!கோபியர்கள் 16,000 பேர் குளிக்கும்போது அவர்களின் சேலைகளையெல்லாம் தூக்கிக் கொண்டு மரத்தின் மீதேறி அமர்ந்து கொண்டதுமன்றி அவர்கள் நிர்வாணமாக தங்கள் கைகளை மேலே தூக்கி தன்னை வணங்கினால்தான் துணிகளைக் கொடுப்பேன் என்றானாமே! ஆமாம், கைகளை மேலே தூக்கி நின்றால்தானே முழு நிர்வாணமும் அவன் கண்களுக்கு களிப்புக் காட்சியாகி காமம் மீதூறும். இவன்தான் கடவுளா? இவனுக்கு விழாவா? பண்டங்களும் பட்சணங்களும் படையலா?அய்யய்யோ! போதும் போதும் உங்கள் கிருஷ்ணன் பெருமை! அவனையா நாம் கொண்டாட வேண்டும் என்று எண்ணி சுயமரியாதையோடு  என்றுதான் சிந்திக்கப் போகிறீர்கள்? இப்படிக் கேட்போரை வைவதை விட்டு விவரமாகச் சிந்தியுங்களேன்.                                                                                                                -முரசு    செய்திகளை பகிர்ந்து கொள்ள

ஆபிரகாம் பண்டிதர்

பிரபல தமிழிசைக் கலைஞரும் சித்த மருத்துவருமான ஆபிரகாம் பண்டிதர் திருநெல்வேலி மாவட்டத்தில் சாம்பவர் வடகரை என்ற சிற்றூரில் பிறந்தார்(1859). ஆசிரியர் பயிற்சி முடித்து, தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.தமிழ் மருத்துவத்தில் அளவு கடந்த ஆர்வம் கொண்டிருந்ததால், தஞ்சாவூரின் புறநகர்ப் பகுதியில் 100 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் பெரிய மூலிகைப் பண்ணையை உருவாக்கினார். உள்ளூர் மக்களிடையே அது பண்டிதர் தோட்டம் எனப் பிரபலமடைந்தது.மூலிகைகளைப் பயன்படுத்தி பல்வேறு சித்த மருந்துகளைத் தயாரித்தார். இவர் தயாரித்த கோரசனை மாத்திரை இந்தியாவில் மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரிட்டிஷ் அரசு இவரது சேவையைப் பாராட்டி ராவ் பகதூர் பட்டம் வழங்கியது.சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசை குறித்த செய்திகள் இன்றைய கர்னாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதைப் பண்டிதர் சுட்டிக் காட்டினார். இதன்மூலம் தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்தார்.பழந்தமிழ் இசை வடிவமே இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் இசைக்கப் படுகிறது என்பதை நிரூபிப்பதற்காக முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டை தஞ்சாவூரில் நடத்தினார். 1912ஆம் ஆண்டு சங்கீத வித்யா மகாஜன சங்கத்தை நிறுவினார்.தனது பல்லாண்டு கால தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை கருணாமிர்த சாகரத் திரட்டு என்ற இசை நூலாகத் தொகுத்து 1917இல் வெளியிட்டார். தமிழிசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் குறித்த ஒரு கலைக்களஞ்சியமாக இது போற்றப்படுகிறது. சுமார் 1,400 பக்கங்கள் கொண்ட இந்நூல் இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கான மூலநூலாக அமைந்துள்ளது.ஆசிரியர், தமிழிசைக் கலைஞர், படைப்பாளி, சித்த மருத்துவர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டிருந்த ஆபிரகாம் பண்டிதர் 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் நாள் தமது 60ஆவது வயதில் மறைந்தார்.           செய்திகளை பகிர்ந்து கொள்ள

இடஒதுக்கீட்டால் மருத்துவரான இருளர் இனத்துப் பெண்!

இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவராகிச் சாதித்துள்ளார். அவர் பெயர் துளசி. மேல்நிலை கல்விக்காக பல சவால்களை சந்தித்த துளசி, முயன்று மருத்துவராய் வெற்றிபெற்று இருளர் சமூகத்தின் இருளை நீக்கி இருக்கிறார். அடிப்படை மருத்துவ வசதிகூட கிடைக்காமல் அவதிப்படும் தன் இன மக்களுக்கு பணி செய்வதே தன் விருப்பம் என்கிறார் இந்த ஒளிவிளக்கு.கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திற்கு மிக அருகில், கோவை மாவட்டத்தின் தமிழக எல்லைப்பகுதியான ஆனைக்கட்டியை ஒட்டி அமைந்திருக்கும் அட்டப்பாடி பகுதிதான் துளசியின் பிறப்பிடம். இங்கு, தமிழ் பேசும் ஆதிவாசி இன மக்கள் அதிகம் உள்ளனர். இதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (இருளர்) பிரிவைச் சேர்ந்த முத்துசாமி மற்றும் காளியம்மா தம்பதியின் ஒரே மகள் துளசி. இவர் அட்டப்பாடி அகளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியிலும், பள்ளி இறுதி ஆண்டுகளை ஆங்கில வழியிலும் பயின்றிருக்கிறார்.பனிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில், மருத்துவத்திற்குத் தேவையான அதிக மதிப்பெண்கள் துளசிக்குக் கிடைக்கவே, மருத்துவ நுழைவுத் தேர்வையும் எதிர் கொண்டிருக்கிறார். முதல் முயற்சியில் அவருக்குத் தோல்வி கிடைத்தபோதும், ஒரு சிலரின் வழிகாட்டுதலின்பேரில் முயன்று மருத்துவ நுழைவுத் தேர்விற்கான பயிற்சியினையும் மேற்கொண்டிருக்கிறார். இருளர் மக்களின் எட்டாக் கனியாய் இருந்த மருத்துவப் படிப்பில், நுழைவுத் தேர்வில் எஸ்.டி. பிரிவில் 17ஆவது தரவரிசையில் வெற்றி பெற்ற துளசிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசு மருத்துவக் கல்லூரியில், அய்ந்தாண்டுகள் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பை, தனக்கு கிடைத்த மிகப் பெரும் வாய்ப்பாய் எண்ணி, சரியான முறையில் பயன்படுத்தி இருக்கிறார் இவர். எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில், அதில் முதலிடம் பிடித்த இவர், இருளர் இன மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.துளசி தேர்ச்சி பெற்ற செய்தி கேட்டு அவரது உறவினர்களும், அவரது ஊர் மக்களும் மகிழ்ச்சியடைந்ததுடன், தொடர்ந்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். ‘டாக்டர் ஆன இருளர் இனத்தைச் சேர்ந்த முதல் பெண்’ என்கிற பெருமை துளசிக்கு கிடைத்துள்ளது.துளசியின் ஊரான அட்டப்பாடி பகுதியில் அளவுக்கு அதிகமாக குடித்துக் குடித்தே இறந்த மக்கள் ஏராளம். இங்கே மதுவுக்கு எதிராக பெண்கள் திரண்டு பெரும் போராட்டமும் நிகழ்த்தியுள்ளனர். இப்பகுதியில் மட்டும் கேரள அரசு மதுக்கடைகளுக்கு தடை விதித்துள்ளது. இங்கு மருத்துவராகப் பணியாற்ற யாரும் முன்வராத நிலையில் பாம்புக் கடியால் இறப்போர் அதிகம். துளசிக்கு இரு கனவுகள். ஒன்று, அறுவை சிகிச்சை நிபுணர் ஆவது. மற்றொன்று, தன் ஊரான அட்டப்பாடியிலேயே மருத்துவச் சேவை புரிவது. வாழ்த்துகள் துளசி!!பள்ளிகளில் சேரும்போது விண்ணப்பங்களில், சாதி குறித்த காலம் எதுக்கு? இன்னும் இடஒதுக்கீடு எதற்கு? தகுதி, திறமைதானே முக்கியம்? என்ற கேள்விகளை முன் வைப்பவர்களுக்கு...? இடஒதுக்கீடு என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்தால், மிகவும் பின்தங்கிய நிலையில், வாழ்வின் கடைக்கோடியில் வாய்ப்பற்று வாழும், இருளர் சமூகத்தைச் சேர்ந்த துளசி மருத்துவராகி இருக்க இயலுமா?செய்திகளை பகிர்ந்து கொள்ள

கணபதி உருவ பொம்மை உடைப்பு!

திராவிடத் தோழர்களே! இந்தியாவில் “வெள்ளைக்கார சக்கரவர்த்தி’’ ஆட்சி ஒழிந்து பார்ப்பன ஆதிக்க “ஜனநாயக ஆட்சி’’ ஏற்பட்டதிலிருந்து, இன்று, இந்த நேரம் வரை ஒவ்வொரு மாத்திரை நேரமும் வருணாச்சிரம தரும ஆட்சி வளர்ந்து வளம் பெற்று வருகிறது.வருணாச்சிரம தருமத்தைப் புகுத்தப் பார்ப்பன ஆதிக்க ஏகபோக ‘ஜனநாயக’ ஆட்சியானது ஆட்சி முறை  பல துறைகளில் பல கொடுமையான முறைகளைக் கையாண்டு வந்தாலும்  திராவிட நாட்டில் _ தமிழ் நாட்டில் _ தென் இந்தியாவில் _ சென்னை ராஜ்ஜியத்தில் “வெள்ளைச் சக்கரவர்த்தி’’ காலத்தில் ஒரு அளவுக்கு  முன்னேற்ற மடைந்திருக்கிற திராவிடர்களை மனுகால சூத்திரர் ஆக்கத்திட்டம் கொண்டு உத்யோகத் துறையிலும், கல்வித் துறையிலும் திட்டம் வகுத்து செயலில் இறங்கிவிட்டது.1.    சூத்திரர்களுக்கு அரசாங்க உத்யோகத்தில் இருந்த “சூத்திர’’ வகுப்பு உரிமை, அரசமைப்புச் சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டு, அய்கோர்ட் (உயர்நீதமன்ற) தீர்ப்பு மூலம் அந்த நீக்கம் உறுதியாகி அமலுக்கு வந்துவிட்டது. இதிலிருந்து “சூத்திரன்’’ (தமிழர்கள்) உத்தியோக உரிமை அற்றவர்களாக  ஆக்கப்பட்டு விட்டார்கள்.2.    சூத்திரர்களுக்குக் கல்வித் துறையில் ஒரு அளவுக்குப் பெரிய கிளர்ச்சி மீது சிறிது உரிமை இருந்தது. அதுவும் ஆச்சாரியார் ஆட்சியில் அழிக்கப்பட்டுவிட்டது.3.    கல்வித் துறையில் மேல்வகுப்பு அதாவது உத்தியோகத்திற்குத் தகுதியாகும் படிப்புதான் “சூத்திரன்’’களுக்கு உரிமை இல்லாமல் இருக்கும்படி செய்யப்பட்டுவிட்டது என்றாலும், பொதுக் கல்வி என்பதுகூட சரிவரப் பெறுவதற்கு இல்லாமல் அடிப்படைக் கல்வி என்னும் பேரால் தகப்பன் தொழிலை _ பரம்பரைத் தொழிலை, படிக்கவேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது.இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் எந்த நாட்டிலும் இல்லாத இந்த அதிசயமான முறையானது, நாட்டுநலனுக்கு  ஆகவோ, கல்வி நலனுக்கு ஆகவோ, ஆட்சி நலனுக்கு ஆகவோ, அல்லது மக்கள் ஒழுக்க நலனுக்கு ஆகவோ அல்லாமல் பார்ப்பான் நலனுக்கும், சர்வ ஆதிக்க நலனுக்கும் ஆதரவு ஏற்படுத்தப்பட்டு இருந்து வருகிற வர்ணாசிரம தரும புதுப்பிப்புக்கு ஆகவே ஸிமீஸ்வீஸ்வீஸீரீக்கு  ஆகவே இந்த “ஜனநாயக ஆட்சி’’ என்பதில் செய்யப்பட்டு வருகிறது என்பதைக் காட்டுவதற்கு ஆகவேயாகும்.இன்று இந்தத் திராவிட (தமிழ்) நாட்டு திராவிட மக்கள் தங்கள் நாட்டிலேயே, தங்கள் “100க்கு 90க்கு மேற்பட்டு ஓட்டுரிமை’’ பெற்றிருந்தும், “ஜனநாயக’’ ஆட்சியிலேயே இந்த இழிநிலை; அதாவது சூத்திர, பஞ்சமநிலை அடைந்திருப்பதை ஒழித்துக் கொள்ள வேண்டுமானால்-_ இந்து வர்ணாச்சிரம தருமமுறையை அழித்து  ஒழித்தாலொழிய வேறு எந்தக் காரணத்தாலும் யாராலும் முடியாது என்று நான் மனப்பூர்வமாகச் சித்த சுத்தியாக நம்புவதால்,  வருணாசிரம முறையைஅழிக்கமுற்படும் முறையில் முன்னுரையாக இதைக் கூறுகிறேன்.சமீப காலமாகவே பொதுமக்கள் உணரலாம்; என்னவெனில் ஆட்சியின் வேலையும், அதிகாரிகளின் வேலையும், சவுண்டிப் பார்ப்பனர் முதல் சங்கராச்சாரியார் பார்ப்பனர்வரை சர்வ பார்ப்பனர்களும் வருணாசிரம வேத சாஸ்திர புராண இதிகாசங்களைப் பிரசாரம் செய்வதும், இந்திய பிரசிடென்ட்டு, இந்திய பிரதமர், மற்றும் இராஜ்ய கவர்னர்கள், இராஜ்ய பிரதமர்கள் முதல் யாவரும் பார்ப்பனர்களாகவே ஆகிக்கொண்டு, மேற்கண்ட வேதசாஸ்திர புராண முதலிய பிரச்சாரங்களும் செய்து வருவது என்றால், இதில் ஏதாவது சூழ்ச்சி, உள்கருத்து இல்லாமல் இருக்க முடியுமா?மற்றும் இவை மாத்திரமல்லாமல் நம் சூத்திர மக்களில் செல்வவான், கல்விமான், அரசியலில் விளம்பரம், பதவிபெற்ற உலக விளம்பர சீமான்கள் முதல் எச்சிலைக் கலைச் செல்வவான்கள் வரையில் 100க்கு ஒருவருக்கு கூட கவலையோ, மான உணர்ச்சியோ இல்லையே என்று நான் காணும்போது, 75 ஆண்டு வாழ்ந்து அண்மையில் சாகப்போகிற நான், 35 ஆண்டுகளாக வீடு, வாசல், செல்வம், தொழில், மனைவி “மக்களை’’ துறந்த சன்னியாசியாக நம் திராவிடமக்களுக்கு இந்தச் சூத்திரப்பட்டம் ஒழிய வேண்டு மென்றே பாடுபட்டு வந்து, வருகிற நான், ஆண்டு ஒன்றுக்கு 30 ஆயிரம், 40 ஆயிரம் ஏன் 50 ஆயிரம் ரூபாய்கூட வரும்படி உள்ளதான எனது எஸ்டேட்டை பாழடையவிட்டுவிட்டு, பரதேசியாய் பிரயாணங்களுக்கும், பிரச்சாரத்திற்கும் பொதுமக்களிடம் செலவு பெற்று வாழ்ந்துவரும் நான், இதற்கு  இந்த வருணாசிரம தரும முறை ஒழிய ஏதாவதொரு நாள் இதற்குக் காரியம் செய்யாமல் என் உயிர்போக எப்படி என்னை விட்டுக்கொண்டு இருக்க முடியும்?ஆச்சாரியார் முதல்மந்திரி பதவிக்கு வந்தது குறித்து உண்மையில் மகிழ்ச்சி அடைந்தவன் நான். காரணம் பிரகாசம், கம்யூனிஸ்டு, பொறுப்பற்ற “உதிரிகள்’’ என்பவர்கள் ஆட்சியைவிட நமக்கு நன்றாகக் கண்டித்து, எதிர்த்து, போர் துவக்க  வசதி இருக்கக்கூடிய ஓர் ஆட்சி, அதுவும் சொந்த வாழ்வில் கண்ணியமும், உலக அனுபவ அறிவும் உள்ளவர் ஆட்சிக்கு வருவதுமேல் என்று கருதி ஆதரித்தேன்.இதற்குக் காரணம் தனிப்பட்டவர்கள் சொந்த முறையில் நடந்துகொண்டிருக்கிற முறைபற்றின அனுபவம் எனச் சிறிது இருந்ததேயாகும். ஆச்சாரியாரும் அதுபோலவே ஆட்சிக்கு கவர்மெண்டுக்கு கவுரவம் இருக்கிற  மாதிரியிலேயே பெரிதும் நடந்துவருகிறார். என்றாலும் -_ தனது (பார்ப்பன) வகுப்புக்கு ஒரு வகுப்பின் உத்தமபுத்திரன் எப்படி நடந்துகொள்ளுவானோ அதுபோல், “தேவர்களுக்கு ராமன் நடந்து கொண்டது’’ போல்தான் நடந்து கொண்டிருக்கிறார். நம்மில் துரோகிகள், அனுமார்கள், விபிஷணர்கள் இருந்தால் அதற்கு நான் என்ன செய்யமுடியும்?ஆனதால் நான் என் சொந்தப் பொறுப்பில் முன்பு பல தடவை கூறி இருப்பதுபோல வருணாசிரம வியாதியை ஒழிக்க கடைசி சிகிச்சையாக, நாளது மாதம் 27ஆம் தேதி புதன்கிழமை தமிழ் நாடெங்கும் புத்த விழா கொண்டாடி மாலை 6 மணிக்குப் பொதுக்கூட்டத்தில் வருணாசிரம வாதிகள் பெரும்பாலோருக்கும் “முதல் தேவன்-_தெய்வம்’’ என்று உருவாக்கி இருக்கும் செயற்கை உருவ கணபதி அறிகுறியை மக்கள் உள்ளத்தில் அழித்துவிட வேண்டும் என்பதாகப் பொது மக்களை அதாவது மனு வருணாச்சிரம தருமத்தை வெறுக்கிற பொதுமக்களையும் திராவிடர் கழகத் தோழர்களைச் _ சிறப்பாக இளைஞர்களையும் வேண்டிக் கொள்ளுகின்றேன்.அன்று பிள்ளையார் அல்லது கணபதி உருவம் என்பதை மண்ணால் செய்து பொம்மை உருவத்தையே கொள்ளுங்கள்.  சர்க்கார் 144 (தடை ஆணை) போட்டால் உருவத்தை அழிப்பதை நிறுத்திவிடுங்கள். அவர்கள் கழகக் காரியாலயத்தில் அல்லது அவரவர்கள் வீட்டில் உடைத்து மகிழ்ச்சி கொண்டாடுங்கள்.  நரகாசுரனைக் கொன்றதற்கு ஆக பார்ப்பனர்களும் பார்ப்பன அடிமைகளும் எப்படிக் கொண்டாடுகிறார்களோ அது போல் உருவத்தை உடைத்து கொண்டாடுங்கள்.புத்த பிரான் வருணாச்சிரம தர்மத்தையோ இந்த வருணாச்சிரம தேவர்களையோ ஏற்றுக்கொண்டவர் அல்ல; அவற்றை ஒழிப்பதே புத்தர் மதத்தின் உட்கருத்து, முதல் கருத்து. இந்தத் தேவர்களைத், தெய்வங்களை நாம் வணங்குவது ஏற்பது மிகுதியும் முட்டாள் தனமும் மானமற்ற தன்மையுமாகும். நமக்குக் கடவுள் என்பதெல்லாம் நம் நடத்தையில் சத்தியம்,  நாணயம், தயவு, உபகாரம் செய்தல், துரோகம் செய்யாமல் இருத்தல் ஆகியவையாகும்.(பெரியார் ஈ.வெ.ரா அறிக்கை: ‘விடுதலை’, 6-5-1953)      செய்திகளை பகிர்ந்து கொள்ள

பிள்ளையார் சதுர்த்தியா? மதவெறி கலகத் தூண்டலா?

கடவுளுக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை என்று கூறும் ஆத்திகர்கள் _ நம்பிக்கை யாளர்களின் நகைமுரண்பாடு எது தெரியுமா?பிறக்காத கடவுளுக்கு (சரியாகச் சொல்ல வேண்டுமானால் இல்லாத கடவுளுக்கு) பிறப்புக் கொண்டாடியும் இறப்புக்கான புராணக்கதை கூறுதலும் ஆகும்!விநாயகருக்கு _ “சதுர்த்தி’’ (பிறந்த நாள்)கிருஷ்ணருக்கு _ “அஷ்டமி’’ராமனுக்கு _ “நவமி’’கந்தனுக்கு _ “சஷ்டி’’பிள்ளையார் சதுர்த்தியாம்! _ செப். 25இல் முன்பு ஆண்டுதோறும் ஒருநாள். அதுவும் வெறும் மூடநம்பிக்கை மட்டும்தான்; களிமண் பிள்ளையாரை, செய்யும் இடத்திற்கே சென்று, கையில் உள்ள காசுக்கேற்ப வாங்கிவந்து, கொழுக்கட்டைப் படையல் வைத்து, பிறகு குளத்திலோ, கிணற்றிலோ, ஆற்றிலோ போட்டுவிடுவார்கள். பக்தர்களின் ஆக்கலும் அழித்தலும்தான் அது!விநாயகர் பிறப்பு ஆபாசம்! அறுவறுப்பு.  (கதைகள் தனியே தரப்பட்டுள்ளன! படியுங்கள்!) இப்படி வெறும் மூடநம்பிக்கைப் பண்டிகையாகக் கொண்டாடப்பட்ட இந்தப் பண்டிகையை, விபரீதமான மதவெறிக்குத் திருப்பியவர், மஹாராஷ்டிர மாநில பாலகங்காதரதிலகர் என்ற மராத்திப் பார்ப்பன வெறியர்.மராத்திய பகுதியான முந்தைய பம்பாய் மாகாணத்தில், திலகர் இதை ‘கணேஷ் திருவிழா’ என்று சில அடி உயரப் பிள்ளையார் உருவச் சிலைகளை உருவாக்கி அதை முச்சந்தி, நாற்சந்திகளிலும், வீடுகளின் திண்ணைகளில் அல்லது வெளிப்புறங்களில் வைத்து பக்தி போதையை ஏற்றி, வெள்ளையர்களுக்கு எதிராக இதனை ஆயுதமாகப் பயன்படுத்தினார்.பிளேக் பரவியபோது, அதை ஒழிக்கத் தீவிரம் காட்டி, பல எலிகளைக் கொன்று பிளேக்கிலிருந்து அம்மக்களைக் காப்பாற்றிய வெள்ளைக்கார கலெக்டரைப் பாராட்டுவதற்குப் பதிலாக, சுட்டுக் கொன்றார்கள். காரணம், பிரிட்டிஷ்காரன் நமது விரோதியானபடியால், நமது விநாயகர் வாகனங்களை ஒழிக்கிறார் என்று பிரச்சாரம் செய்து, அப்பாவி மக்களை அவருக்கு எதிராக ஏவிவிட்டவர் இந்தத் திலகர்.இப்போது வடநாட்டிலிருந்து பிள்ளையார் பொம்மைகளை பெரும் அளவில் செய்து (வடநாட்டு முதலாளிகளின் பணத் திருவிளையாடல் காரணம்) இங்கே 2000, 3000, 5000 என்று பொம்மை விளையாட்டு விளையாடி, பார்ப்பன சனாதன ஹிந்து வெறியை ஊட்டி, இஸ்லாமியர்களின் மசூதிக்குப் பக்கம் ஊர்வலம் சென்று, அங்கே “பிரச்னைகளை உருவாக்கி, மதக் கலவரத்தை விதைக்கின்றார்கள்.எனவே, இப்போது _ இன்றைய காலகட்டத்தில், அந்தப் பண்டிகை, பிள்ளையார் பின்னால் காவிக் கொடியும், கலகம் செய்வோரும், காலிகளும், கூலிகளும்தான் உள்ளனர்.முன்பு, வெறும் மூடநம்பிக்கை மட்டும். அதனால், சமூகம் ஒருங்கிணைப்புக்கு ஆபத்தில்லாத அறியாமைச் செயலாக மட்டுமிருந்தது. இப்போதோ, ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி என்ற காவிக் கலவரக் கும்பல்களின் மதவெறி தூண்டும் வம்புகள் காரணமாக, மதக் கலவரமும், சமூக நல்லிணக்கப் பாதிப்பும் ஏற்படுகின்றன.கூடுதலாக, பலவித சாயங்கள் கலந்து மாசுக் கட்டுப்பாட்டுக்கு எதிராய் சுற்றுச்சூழல்  பெரிதும் பாதிக்கப்படும் பேரபாயமும் ஏற்படுகிறது!உயர்நீதிமன்றம் சுற்றுச்சூழல் மாசுபடக் கூடாது என்பதில் கண்டிப்பான உத்தரவுகளை வழங்கியும் அவற்றைப் புறந்தள்ளி, ஆட்சியாளர்கள், மக்கள் வரிப் பணத்தில் ஒரு லட்சம் காவலர்களைப் பாதுகாப்புப் பணிக்கு ஒதுக்கி, அரண் அமைத்து கலவரம் நிகழாது தடுத்து நிற்பதும், நீர்நிலைகளில், கடலில், இரசாயனம் கலந்த பிள்ளையார் சிலைகளைக் கரைக்க அனுமதிப்பதும் சரியா? தேவையா? மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் அரசும் மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டியது கட்டாயக் கடமையல்லவா?பூஜைக்குப் பின்னே கலவரம் ஒளிந்துள்ளது! சில ஆண்டுகளுக்கு முன் திருவல்லிக்கேணி மசூதி வழியே செல்ல ஒரு முயற்சி. அதனால் வெடித்த கலவரத்தால் துப்பாக்கிச் சூடுவரை சென்றதை மறக்க  முடியாதே!மதவெறி மாய்ப்போம்!மனித நலம் காப்போம்!கி.வீரமணி,ஆசிரியர்.                                                                                                     செய்திகளை பகிர்ந்து கொள்ள

உலகெங்கும் பெரியார்! உறுதி செய்த ஜெர்மன் மாநாடு!

உலகம் தழுவிய சிந்தனையாளர், உலக மக்கள் நலம் விரும்பிய மானுடப் பற்றாளர், உலக சமத்துவம் விரும்பிய சமதர்மவாதி பெரியார் என்பதால், அவரின் சிந்தனைகளை உலகம் வணங்கி ஏற்கும் என்பதை தொலைநோக்கோடு சிந்தித்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள், பெரியாரின் “மண்டைச் சுரப்பை உலகு தொழும்’’ என்று பல பத்தாண்டுகளுக்கு முன்னே முழங்கினார்.அதன்படியே பெரியாரின் சிந்தனைகள், அமெரிக்கா முதற்கொண்டு பல நாடுகளிலும் பரவி அண்மையில் ஜெர்மனியில் மாபெரும் சுயமரியாதை மாநாடாக மலர்ந்தது. சுயமரியாதை மணம் பரப்பியது.ஜெர்மனி --_ கொலோன் பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட “பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டின் தொடக்க விழா” 27.07.2017 அன்று மாலை 4.30 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 8 மணி) எழுச்சியுடன் துவங்கியது.வரவேற்புரைமாநாட்டினை நடத்திடும் அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்யத்தின் ஜெர்மனி நாட்டு கிளையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் மாநாட்டுக்கு வருகை தந்தோர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பன்னாட்டு மாநாடு கொலோனில் நடைபெறுவதற்கு எடுத்த முயற்சிகள் பற்றி எடுத்துரைத்த அவர், அதற்காகப் பெருமைப் படுவதாகவும் தமதுரையில் குறிப்பிட்டார்.தொடக்க உரைலண்டன் நகர கிராய்டன் மாநகராட்சியின் துணை மேயர் வணக்கத்திற்குரிய மைக்கேல் செல்வநாயகம் மாநாட்டைத் திறந்துவைத்து சிறப்பானதொரு உரையினை வழங்கினார். பெரியார் சுயமரியாதை  இயக்க பன்னாட்டு மாநாட்டினை தொடங்கி வைப்பது தமது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு எனவும், பெரியாரின் மனிதநேய தத்துவம் உலகமெலாம் பரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.  பெரியார் தம் கொள்கைகளை உலகமயமாக்கும் பணியில் தாமும் இணைந்து பணியாற்றிட அணியமாக இருப்பதாகவும் கூறினார்.புத்தகங்கள் வெளியீடுபன்னாட்டு மாநாட்டில் வெளியிட ஜெர்மன் மொழியாக்கத்தில் இரண்டு நூல்களும், மூன்று ஆங்கில நூல்களும் அச்சிடப்பட்டன. ‘கடவுளும் மனிதனும்‘ (Gott und Mensch) எனும் தந்தை பெரியாரின் தமிழ் உரையினை உள்ளடக்கிய நூலினை கொலோன் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சி வல்லுநர் கிளாடியா வெப்பர் ஜெர்மனியில் மொழி பெயர்த்துள்ளார். ‘பெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கைச் சுருக்கம்“ (Periyar E.V. Ramasamy - Eine Kurzbiographie) நூலினை கொலோன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஸ்வென் வொர்ட்மேன் ஜெர்மனியில் மொழிபெயர்த்துள்ளார். இந்த இரண்டு ஜெர்மனி மொழியாக்கங்களை பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்லஸ் வெளியிட, முதல் நூலினை ஸ்வீடன் பல்கலைக் கழகப் பேராசிரியர் உப்சல் மற்றும் கொலோன் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் ஸல்க் பெற்றுக் கொண்டனர். பேராசிரியர் அ. அய்யாசாமி எழுதிய “பெரியார் சுயமரியாதை”(Periyar Self-Respect) எனும் ஆங்கில நூலினை பெரியார்  மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் தமிழர் தலைவர் கி. வீரமணி வெளியிட முதல் நூலினை ஜெர்மனியில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட ஆராய்ச்சி மாணவர்கள் ராகுலன் - ஒலிவியா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.“பெரியார் நினைவிடம்: கல்வெட்டுப் பொன்மொழிகள்” (Inscriptions at Periyar Memorial)  (தமிழ், ஆங்கிலம்)  நூல்களை திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி வெளியிட பல்கலைக் கழக மாணவர் பாஸ்கல் பெற்றுக் கொண்டார்.‘ரிவோல்ட்’ ஏட்டில் வெளிவந்த சுயமரியாதை தத்துவம், இயக்கம்பற்றிய கட்டுரைகளின் தொகுப்பான ‘பெரியார் சுயமரியாதை இயக்கம்‘ (Periyar Self-Respect Movement) எனும் ஆங்கில நூலினை தமிழர் தலைவர் வெளியிட, வியட்நாம் நாட்டைச் சார்ந்த கொலோன் பல்கலைக் கழக ஆராய்ச்சி  மாணவர் சினா முதல் நகலினைப் பெற்றுக் கொண்டார். ஜெர்மன் மொழியாக்க நூல்களைப் படைத்த கிளாடியா வெப்பர், ஸ்வென் வொர்ட்மேன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி சால்வை அணிவித்து சிறப்புச் செய்து பாராட்டினார்.புத்தக வெளியீட்டிற்குப் பின்னர் அமெரிக்க நாட்டு மருத்துவர் சித்தானந்தம் சதாசிவம் மாநாட்டு வாழ்த்துரை வழங்கினார். அமெரிக்க பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி, வாழ்த்துரை வழங்கினார்.மாநாட்டு சிறப்புரைநிறைவாக பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி மாநாட்டு சிறப்புரையினை ஆற்றினார். சுயமரியாதை தத்துவம் பற்றி ஆங்கிலத்தில் அரியதொரு சொற்பொழிவினை வழங்கினார். தந்தை பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகள்  ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் மக்களுக்குப் பயன்பட்டன. ஆனால் பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்  அனைத்து நாட்டினருக்கும், ஒட்டு மொத்த மானிடருக்கும் உரியது. பெரியார் சுயமரியாதைத் தத்துவம், உலகளாவிய தத்துவம் எனக் குறிப்பிட்டுக் கூறி  தமது உரையில் விரிவாக விளக்கிப் பேசினார்.அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இதர அய்ரோப்பிய நாடுகளிலிருந்து பேராளர்கள் பலரும் மாநாட்டுக்கு வருகை தந்திருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த பேராளர்களும் மாநாட்டில் பங்கேற்றனர்.ஆய்வுக் கட்டுரைகள் அரங்கம்பன்னாட்டு மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகளாக, ‘பெரியார் சுயமரியாதைத் தத்துவம் மற்றும் இயக்கம்’ பற்றிய ஆய்வுக் கட்டுரை அரங்க நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.முதல் ஆய்வரங்கின் தலைவரான தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஆய்வரங்க கட்டுரைகள் பற்றிய செய்திகளுடன் சுயமரியாதை இயக்க வரலாற்றுப் பதிவுகளைப் பற்றிய ஓர் ஆய்வுரையினை தொடக்கத்தில் வழங்கினார்.பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறைத் தலைவரான பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம் “சுயமரியாதை : சமூக மற்றும் மனித விடுதலைக்கான சிறந்த தனித்துவக் கருவி ஒரு வரலாற்று ஆய்வு” எனும் தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரை உரையினை வழங்கினார். அடுத்து சுவீடன் நாட்டுப் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் பீட்டர் ஸால்க் “சுயமரியாதை’’ எனும் தலைப்பில் பல்வேறு வரலாற்றுப் படைப்புக் குறிப்புகள் உள்ளடக்கிய உரையினை ஆற்றினார். பின்னர் ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழக டாக்டர் பட்டம் பெற்ற ஆராய்ச்சி மாணவி டாக்டர் சிர்.உன்ரா “அரசர் வெளிப்படையாக இருக்கிறார் - பகுத்தறிவு, விமர்சனம் மற்றும் வீரிய அரசியல் செயல்பாடு’’ எனும் தலைப்பில் ஆழமான ஆய்வுரையினை வழங்கினார்.தேநீர் இடைவேளைக்குப் பின்னர் இரண்டாம் ஆய்வரங்க  நிகழ்வுகள் தொடங்கின.இரண்டாம் ஆய்வரங்க அமர்விற்கு அமெரிக்கா - பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் தலைமை வகித்துப் பேசினார்.கொலோன் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சி மாணவரும், மாநாட்டில் வெளியிடப்பட்ட “பெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கைச் சுருக்கம்’’ நூலின் ஜெர்மன் மொழி பெயர்ப்பாளருமான ஸ்வென் வொர்ட்மன் “வரலாற்றுக் காலங்களில் இந்தியாவில் பகுத்தறிவு’’ எனும் தலைப்பில் தமது ஆய்வினை வழங்கினார். கொலோன் பல்கலைக் கழக அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியர் டாக்டர் உல்ப்காங்க் லைட்டோல்டு “அரசியல் அமைப்பு சாசனம் - அய்ரோப்பிய அரசியல் எண்ணங்கள்’’ எனும் தலைப்பில் தாம் வெளியிட உள்ள ஆராய்ச்சி நூலின் சுருக்கத்தினை உரையாக முழங்கினார். அடுத்து புலம் பெயர்ந்த ஈழத் தமிழரும், தமிழீழப்போர் நடைபெற்ற காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்தவருமான டாக்டர் எஸ்.ஜே. இமானுவேல் “சுயமரியாதையும் மானுடமும்’’ எனும் தலைப்பில் தமது அனுபவங்களை ஆய்வுரையாக அளித்தார். பின்னர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் “பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் த.ஜெயக்குமார் “சுயமரியாதைக் கோட்பாடு  பெரியாரின் மனிதநேயப் பார்வை’’ எனும் தலைப்பில் பெரியாரது பொது வாழ்க்கை பற்றிய சுருக்கத்தினை ஆய்வுக் கட்டுரையில் வழங்கினார்.நண்பகல் உணவு இடைவேளைக்குப் பின்னர் ஆய்வரங்கத்தின் மூன்றாம் அமர்வு தொடங்கியது. அமெரிக்கா - பெரியார்  பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் இலக்குவன் தமிழ் தலைமை உரையாற்றினார். அமெரிக்கா வாழ் மருத்துவர் சரோஜா இளங்கோவன், “பெரியாரும் மகளிர் அதிகாரத்துவமயமும்’’ எனும் தலைப்பில் தமது ஆய்வினை வழங்கினார். அடுத்து பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை ஆலோசகர்  பேராசிரியர் டாக்டர் எஸ்.தேவதாஸ் “பெரியார் சுயமரியாதை இயக்கம் -சமூக மாற்றத்திற்கான கருவி’’ எனும் தலைப்பில் கட்டுரையினை சமர்ப்பித்து உரையாற்றினார். பின்னர் திராவிடர் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், “நாத்திக தத்துவ அறிஞர்கள்: பெரியார் ஈ.வெ.ராமசாமி மற்றும் பிரெட்ரிக் நீட்சே - ஓர் ஒப்பீட்டு ஆய்வு’’ எனும் தலைப்பில் ஓர் ஆய்வினை உரையாக அளித்தார்.ஆய்வரங்கத்தில் பங்கேற்ற ஒவ்வொரு அறிஞர், சான்றோர்,  செயல்பாட்டாளர்களின் ஆய்வுரைக்குப் பின்னர் பங்கேற்பாளர்களின் வினாக்களுக்கு, ஆய்வுரையினர் விளக்கம் அளித்தனர்.தேநீர் இடைவேளைக்குப் பின்னர் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் நடைபெற்ற  கலந்துறவாடல் களத்தில் பேராளர்கள் பங்கேற்றனர். தொடக்க உரையினை திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆற்றினார். பின்னர் குவைத் புரட்சி மேதை தந்தை பெரியார் நூலகத்தின் சார்பில் பங்கேற்ற கவிஞர் லதாராணி பூங்காவனம் உரையாற்றினார். “சமூகப் புரட்சி 1929 சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டு தீர்மானங்கள் - நடைமுறை ஆக்கங்கள்’’ எனும் தலைப்பில் களத்தில் பங்கேற்றோர் கருத்துரை வழங்கினர். பகுத்தறிவாளர் கழகத்தின் செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி “சுயமரியாதை இயக்கம்’’ பற்றிய தம் ஆங்கிலக் கவிதையினை வாசித்தார்.நிறைவாக கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வரலாற்றுக் குறிப்புகளுடன் தமது தலைமை உரையினை உணர்ச்சிப் பெருக்குடன் வழங்கினார். நிகழ்ச்சியினை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் தொகுத்தளித்தார்.மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக  பேராளர்களின் ஆர்வமிகு பங்கேற்புடன் நிறைவடைந்தன.29.07.2017 அன்று பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாட்டின் 3ஆம் நாள் நிகழ்வு நடைபெற்றது. நேற்றைய தினம் 3 அமர்வுகளில் ஆய்வுக் கட்டுரைகள் அரங்கம் நடைபெற்றது. இன்றும் தொடர்ந்து 4ஆவது அமர்வாக ஆய்வுக் கட்டுரைகள் அரங்க நிகழ்வு நடைபெற்றது. இந்த அமர்வுக்கு ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் தலைமையேற்று வழிநடத்தினார்.“பெரியார் சுயமரியாதை இந்திய வரலாற்றில் ஓர் எழுச்சிமிகு தாக்கம்’’ என்னும் பொருளில் திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தமது ஆய்வுரையினை வழங்கினார். அடுத்து, “தென்னிந்தியாவில் சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம்’’ என்னும் தலைப்பில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக டாக்டர் பட்ட ஆராய்ச்சி மாணவர் எம்.விஜயானந்த் உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத்தலைவர் கோ.ஒளிவண்ணன் “சமூகநீதி’’ என்னும் தலைப்பில் தமது ஆய்வுக் கட்டுரையினை அளித்தார்.ஆய்வுக் கட்டுரை நிறைவரங்கம்தேநீர் இடைவேளைக்குப் பின் லண்டன் கிராய்டன் மாநகராட்சியின் துணை மேயர் மைக்கேல் செல்வநாயகம் தலைமையில் ஆய்வுக் கட்டுரைகள் நிறைவரங்கம் தொடர்ந்தது.குவைத் கவிஞர் லதாராணி பூங்காவனம், “தென்னிந்தியாவில் பாலினச் சுரண்டலும் _ சுயமரியாதை இயக்க எழுச்சியும்’’ எனும் தலைப்பில் உரையாற்றினார். பகுத்தறிவு எழுத்தாளர் ஆ.கலைச்செல்வன், “மாணவரும் சுயமரியாதையும்’’ எனும் தலைப்பில் தனது ஆய்வுரையை வழங்கினார்.இளைஞர்களுக்கான கட்டுரைப் போட்டிஇம்மாநாட்டின் சிறப்பம்சமாக 32 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான பன்னாட்டு கட்டுரைப் போட்டியினை அமெரிக்கா _ பெரியார் பன்னாட்டு மய்யம் நடத்தியது. இதில் பங்கு பெற்றோர், ”பெரியார் சுயமரியாதை இயக்கமும் _ பயன் விளைவுகளும்’’,  “பெரியாரின் மானுட நேயம்’’, “மகளிர் அதிகாரத்துவ மையம்’’ ஆகிய தலைப்புகளில் ஆங்கிலத்தில் தங்கள் சிந்தனைச் சிதறல்களை சிறப்பான முறையில் கட்டுரை வடிவத்தில் தந்திருந்தனர்.வரப்பெற்ற கட்டுரைகளை அலசி ஆய்வு செய்து பரிசுக்குரியோர் தேர்வு செய்யப்பட்டனர்.முதல் பரிசு: டாக்டர் பிரியதர்சினி இராசேந்திரன், கும்பகோணம்.இரண்டாம் பரிசு: உதயகுமார், கணினிப் பொறியாளர், சென்னை.மூன்றாம் பரிசு: பவதாரிணி, திருச்சி.ஆறுதல் பரிசு: 12 வயதே ஆன தியா சவுகான், டில்லி.இவர்களுக்கான பரிசுகளை அமெரிக்கா _ பெரியார் பன்னாட்டு மையம் அனுப்பும் என்று அதன் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் அறிவித்தார்.தீர்மானம் நிறைவேற்றம்தீர்மானம்: தந்தை பெரியாரின் சிந்தனைகளான சுயமரியாதை _ மனிதநேய வாழ்க்கை முறை பரந்துபட்ட, உலகளாவிய அளவில் உணரப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் சுயமரியாதையுடன் எல்லா வகையிலும் சமத்துவம் மிக்க வாழ்க்கை முறையினை வலியுறுத்தும் தந்தை பெரியாரின் மானுட நேயத்துடன் கூடிய சுயமரியாதைப் பகுத்தறிவுத் தத்துவத்தை உலகமயமாக்குவது என பெரியார் சுயமரியாதை பன்னாட்டு மாநாடு தீர்மானிக்கிறது.இந்தத் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஈராண்டுக்கு ஒருமுறை இத்தகைய பன்னாட்டு மாநாட்டை நடத்துவது என ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.இத்தீர்மானத்தை டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் முன்மொழிய வருகை தந்திருந்த பேராளர்கள் நீண்ட கரவொலி எழுப்பி வழிமொழிந்தனர்.அடுத்த பன்னாட்டு மாநாடு 2019ஆம் ஆண்டில் அமெரிக்க அய்க்கிய நாட்டில் நடைபெறும் எனும் அறிவிப்புத் தீர்மானம் பேராளர்களிடையே மகிழ்வு பூத்த வரவேற்பினைப் பெற்றது.சமூக நீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழா1996ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா _ பெரியார் பன்னாட்டு மய்யத்தால், “சமூக நீதிக்கான கி.வீரமணி விருது’’ வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய நிகழ்வுகளில் இந்தியா, சிங்கப்பூர், பர்மா, குவைத் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சமூகநீதிப் போராளிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக 2016ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா மாநாட்டின் நிறைவு விழாவாகவும் அனைத்து நிகழ்வுகளுக்கும் சிகரம் வைத்தது போன்றும் நடைபெற்றது.இதில் அமெரிக்கா _ பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் இலக்குவன் தமிழ் வரவேற்புரையாற்றினார். தன் வரவேற்புரையையே சமூகநீதி பற்றிய ஓர் விளக்க, ஆய்வுரையாகவே வழங்கினார்.டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் லண்டன் கிராய்டன் மாநகராட்சித் துணை மேயர் வணக்கத்திற்குரிய மைக்கேல் செல்வநாயகம் அவர்களுக்கு, “சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை’’ வழங்கினார்.விருதுக்கான பட்டயத்துடன் விருதுத் தொகையான ரூபாய் 1 லட்சமும் வழங்கப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்துப் பாராட்டினார். திருமதி மோகனா வீரமணி அவர்கள் நினைவுப் பரிசு ஒன்றை மைக்கேல் செல்வநாயகத்துக்கு வழங்கினார்.சமூகநீதிக்கான கி.வீரமணி விருது பெற்ற மகிழ்வில் மைக்கேல் செல்வநாயகம் அவர்கள் உணர்ச்சிப் பூர்வமாக நெகிழ்ந்து நெக்குருகி தன் நன்றியினை ஏற்புரையாக நிகழ்த்தினார்.மேலும் அவர் தனக்களிக்கப்பட்ட விருதுத் தொகையான ரூபாய் ஒரு இலட்சத்தை திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு தமது நன்கொடையாக தமிழர் தலைவரிடம் மகிழ்ச்சியோடு அளித்து பெரியார் உலக அமைப்பின் மகோன்னதப் பணியில் தன்னையும் அய்க்கியப்படுத்திக் கொண்டார்.தமிழர் தலைவர் கி-.வீரமணி அவர்கள் பெரியார் இயக்க வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய இம்மாநாட்டின் நிறைவுரையை கருத்துரையாக, வாழ்த்துரையாக வழங்கினார்.டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் நன்றியுரை நவில மாநாடு நிறைவுற்றது.மாநாட்டு மாண்பு குறித்து தமிழர் தலைவர் அவர்கள் 7-8-2017இல் வெளியிட்ட அறிக்கையில் ஒரு பகுதிஜெர்மன் பல்கலைக்கழக தமிழாராய்ச்சித் துறைத் தலைவரும், ஜெர்மனி பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவராக சிறப்புடன் செயல்படுபவருமான பேராசிரியர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் அம்மையார் அவர்கள் தலைமையில் அமைந்த வரவேற்புக் குழுவினர் அம்மாநாட்டினை மூன்று நாள்களிலும் நடத்திய ஒழுங்கும், கட்டுப்பாடும், செறிவும் நாம் அனைவரும் மூக்கில் விரலை வைத்து வியக்கத்தக்க வகையில் நடந்தேறி தனி வரலாறு படைத்தன! அம்மாநாட்டில், இதுவரைகண்டறியாதன கண்டோம்!கேட்டறியாதன கேட்டோம்!!உணர்ந்தறியாதன உணர்ந்தோம்!எம் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவனான யான் அம்மாநாட்டில் தலைமை தாங்கும் வாய்ப்புப் பெற்றமை எனக்கு பல்கலைக்கழகங்களில் பட்டங்கள் பெற்றதையும் விட கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு பெரியார் மாணவனுக்கு இதைவிடப் பேறு  வேறு ஏது?பெரியார் பன்னாட்டு அமைப்பினருக்கு எமது தலைதாழ்ந்த நன்றிப் பெருக்கு உரியதாகும்.இவ்வாண்டல்ல; இரண்டாயிரம் - புத்தாயிரத்தில் நம் இலக்கு - “பெரியாரை உலக மயமாக்குவோம்“ என்பதாகும்!அது கனவல்ல; கானல் நீரல்ல! இதோ செயல் வடிவம்!ரைன் நதிக்கரையில்2017இல் நடைமுறைப்படுத்தப்பட்ட வரலாறு. அதுவும் விஞ்ஞானிகளையும், தத்துவ மேதைகளையும், வரலாற்றுப் புரட்சியாளர் களையும் தந்த ஜெர்மனி நாட்டின் ரைன் நதிக்கரையில்...!“காவிரிக் கரையில் படர்ந்த பெரியார் தத்துவங்கள் ஜெர்மனி ரைன் நதிக்கரையில் கிளைத்தன!’’ என்று தமிழர் தலைவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மையல்லவா? ஊடகங்களின் உயர்வான பாராட்டுதந்தை பெரியாரின் சிந்தனைகள் உலகெங்கும் பரவிவரும் நிலையில், ஜெர்மனியில் சுயமரியாதை கொள்கைக்கென ஒரு மாநாடே நடத்தப்பட்டதை தமிழக பத்திரிகைகள் பெரிய அளவில் செய்திகளை வெளியிட்டுப் பாராட்டின.இனமான ஏடான முரசொலி, நக்கீரன், உண்மையை ஒளிக்காது துலங்கச் செய்யும் ஜூனியர் விகடன் போன்ற அச்சு ஊடகங்களும், தமிழகத்தின் காட்சி ஊடகங்களும் மாநாட்டுச் செய்திகளை வெளியிட்டு, மக்களின் மாசற்ற தலைவர் தந்தை பெரியாருக்கும், அவரின் மகத்தான கொள்கைகளுக்கும் பெருமை சேர்த்தன.தலைவர்கள் வாழ்த்து தளபதி மு.க.ஸ்டாலின் (தி.மு.க.)1926-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சுய மரியாதை இயக்கத் தின்  91-ஆம் ஆண்டினைக் கொண்டாடும் வகையில், ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் ஜூலை 27 முதல் 29 வரை நடைபெற உள்ள பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் பன்னாட்டு மாநாடு சிறப்புற நடைபெற்றிட, சுயமரியாதை இயக்கத்தின் அர்ப்பணிப்பு கொண்ட தொண்டன் என்கிற முறையில் எனது வாழ்த்தினைத் தெரிவிப்பதை ஓர் பெருமைமிகு கடமையாகக் கருதுகிறேன்.திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் சுயமரியாதைக்காக, பெருமையுடனும்,  அர்ப்பணிப்புடனும் அயராது உழைப்பதோடு, தொலை நோக்காளர் தந்தை பெரியார், மக்களிடம் பரப்பிய கொள்கைகளை, லட்சிய சுடரைத் தாங்கி மேலும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறோம்.மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில் விவாதிக்கப்படும் தலைப்புகள், சமூகநீதி, சுயமரியாதை, பெண்கள் முன்னேற்றம் ஆகிய தளங்களில் சுயமரியாதை இயக்கம் வரலாற்று ரீதியாக ஏற்படுத்திய விழிப்புணர்வு குறித்து நிறைவான ஒளியைப் பாய்ச்சும் என்று அறிந்து மகிழ்கிறேன். ஜெர்மனி வாழ்மக்களுக்கும் இக்கொள்கைகள் நெருக்கமாக இருக்கும் எனக் கருதுகிறேன். எந்த ஒருநாட்டிற்கும் எதிர்காலச் சிற்பிகளாக திகழ இருக்கும் மாணவர் சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டுதலாகவும்,  தகவல் களஞ்சியமாகவும், இம்மாநாடு முக்கிய பங்காற்றும் எனவும் கருதுகிறேன்.திராவிடர் கழகத்தின் தலைவராக விளங்கும் டாக்டர் கி.வீரமணி அவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களும் இருபுறமும் கரம் கோர்த்து பயணிக்கும், தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் மற்றும்  திராவிடர் இயக்க வரலாற்றில் இந்த மாநாடு சிறப்பான இடத்தை பெறும். மாநாடு மிகச் சிறப்பான வெற்றி பெற எனது வாழ்த்துகள்.வைகோ வாழ்த்து (ம.தி.மு.க.)1932ஆம் ஆண்டில் அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தந்தை பெரியார் அவர்கள், 17.05.1932 இரவு 7.30 மணிக்கு மாஸ்கோவில் இருந்து இரயில் மூலம் ஜெர்மனிக்குப் புறப்பட்டு, 19.05.1932 அன்று காலை 9.30 மணிக்கு பெர்லின் நகரை அடைந்தார். 14.06.1932 வரை அங்கேயே தங்கி, ஜெர்மனி முழுவதிலும் பயணம் செய்து பல்வேறு மக்களையும், தலைவர்களையும் சந்தித்து அவர்களின் கலை, பண்பாடு குறித்து அறிந்துகொண்டார்.அத்தகைய பெருமைக்கு உரிய ஜெர்மனியில் கொலோன் பல்கலைக் கழக வளாகத்தில் இந்த மாதம் 27, 28, 29 ஆகிய நாட்களில் சுயமரியாதை இயக்கத்தின் 91 ஆம் ஆண்டு நிறைவு விழாவினை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் ஜெர்மனி கிளை நடத்துகின்றது.நூறாண்டுக்கால வரலாற்றுப் பின்னணியும், சிறப்பும் கொண்ட நம் திராவிடர் இயக்கத்தின் துவக்கமான சுயமரியாதை இயக்கத்தின் விழாவை அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து முதலான நாடுகளின் பேராளர்கள் எல்லாம் ஜெர்மனியில் கூடிக்கொண்டாடுவதும், பெரியாரின் தனிச்சிறப்பை பன்னாட்டு பெருமக்களிடையே பரப்புவதும் நாம் அனைவரும் உவகையுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரவேற்கத்தக்கதாகும்.வில்லில் இருந்து புறப்பட்ட கணை எப்படி போய்ச் சேரவேண்டிய இலக்கை அடைந்துதான் நிற்குமோ, அதனைப்போலவே பெரியாரின் பெரும்பணியும் வெற்றியை ஈட்டும்வரை ஓயாது என்று முழக்கமிட்ட அறிஞர் பெருந்தகை அண்ணாவின் எண்ணத்திற்கு வலுசேர்க்கவும், வாகை சூடவும் உள்ள ஜெர்மனியின் சுயமரியாதை மாநாடு வெற்றிகளைக் குவித்திட மறுமலர்ச்சி தி.மு.கழகம் பாசமலர்களை, வாச மலர்களை தூவி வாழ்த்துகின்றது! இரா.முத்தரசன் வாழ்த்து (சி.பி.அய்)பெரியாரின் சுயமரியாதை இயக்கப் பணியின் தொடர்ச்சியாக உலக அளவில் பெரியாரின் கொள்கைகளை எடுத்துச்செல்ல ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் நடக்கும் மாநாட்டிற்கு எங்களது வாழ்த்துக்கள்.பெரியார் துவக்கிவைத்த சுயமரியாதை இயக்கம், அவர் இவ்வியக்கத்தை துவக்கியதன் மிக முக்கிய காரணம் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் நீங்கவேண்டும் என்பதுதான், பெரியார் கண்ட இயக்கத்தினால் ஏற்பட்ட தாக்கத்தின் பலன் தமிழகம் மட்டுமல்ல; வட இந்தியா துவங்கி உலகம் முழுவதும் தற்போது தெரியவருகிறது. சமூக நீதிக்கான போராட் டத்தை உலகெங்கும் எடுத்துச்செல்லும் நோக்கில் உங்கள் பயணம் அமைந்துள்ளது.ஜெர்மனியில் நடக்கவிருக்கும் பன்னாட்டு கருத்தரங்கம் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் நடக்கவிருக்கிறது. இன்று உலகமெங்கும் மக்கள் சுரண்டப்படுகின்றனர். மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. முக்கியமாக சமூகத்தின் அடித்தட்டு மக்கள் மிகவும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.மிகவும் முக்கியத்துவம் மிகுந்த இந்த மாநாட்டில் பல்வேறு தலைசிறந்த தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். தற்போது உலகம் எதிர்கொள்ளும் சூழல் மற்றும் மிகவும் மோசமான முதலாளித்துவச் சுரண்டல்கள் போன்றவற்றை எதிர்க்கொண்டு அவற்றை முறியடிக்கும் வகையில் இம்மாநாடு இருக்கும் என்பதில் எங்களுக்கு அய்யமில்லை.  சமூக விழிப்புணர்வுடன் சமூகப் புரட்சியும் இந்த காலகட்டத்தில் தேவைப்படுகிறது, இந்த மாநாடு புதிய சமூகத்திற்கு புத்துயிர் ஊட்டும், உங்கள் பயணம் பாதுகாப்பகவும் இனிமையாகவும் இருக்க எங்களது வாழ்த்துக்கள்!தொல்.திருமாவளவன் வாழ்த்து (வி.சி.க.)‘பெரியார் பன்னாட்டு மய்யத்தின்’ சார்பில் ஜூலை 27,28, மற்றும் 29 ஆகிய மூன்று நாட்கள் ஜெர்மனியில் “பெரியார் சுயமரியாதை இயக்க மாநாடு” நடைபெறுவதை அறிந்து பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.1932இல் பெரியார் பயணம் செய்து சுயமரியாதை சிந்தனைகளைப் பரப்பிய அதே ஜெர்மனி தேசத்தில், 85ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சுயமரியாதை இயக்கத்தின் அனைத்துலக மாநாடு நடைபெறுவது, தந்தை பெரியாரின் கருத்தியல் வலிமைக்குக் கிடைத்த ஒரு மகத்தான வெற்றியாகும். அத்துடன், தந்தை பெரியாருக்குப் பின்னர் அவரது சிந்தனைகளையும், இயக்கத்தையும் கட்டிக்காப்பாற்றி, இன்று உலகளாவிய வகையில் வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றிருப்பது ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அளப்பரிய சாதனையாகும்.ஜெர்மனி தேசத்தின் ‘டோச்சு’ மொழியில் இன்று பெரியாரின் சிந்தனைகள் மொழி பெயர்ப்புச் செய்யப்படுவதும் அய்ரோப்பியர்கள் உள்ளிட்ட பன்னாட்டவரிடையே சுயமரியாதை உணர்வுகளை ஊட்டுவதும் போற்றுதலுக்குரிய வரலாற்றுச் சாதனையாகும். இத்தகைய சாதனையை நிகழ்த்தியுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களையும் இம்மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைத்துள்ள பெரியார் இயக்கப் பன்னாட்டுப் பொறுப்பாளர் களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனமாரப் பாராட்டுகிறது. புரட்சிகர மாற்றங்களைப் படைக்கும் உலகச் சிந்தனையாளர்களின்  வரிசையில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும் ஒளிவீசுகிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த பன்னாட்டு மாநாடு மகத்தான வெற்றி பெற விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் (இ.யூ.மு.லீ)சமூகப் புரட்சியாளர் பெரியார் இன்று உலக அரங்கில் மதிக்கப்படும் தலைவராக விளங்குகிறார் என்பதில் தமிழக மக்களாகிய நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர் சிறந்த மனிதநேயர், அரிய புரட்சியாளர் மற்றும் அபூர்வமான ஆளுமைத் திறன் கொண்டவர்.தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம், மக்களை அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் பழைமைச் சடங்குகளில் இருந்து விடுவித்துள்ளது. மக்கள் தொண்டாற்றுவதில் தந்தை பெரியார் உயர்ந்து விளங்கிய தலைவர். மாநாடு பெரியாரின் தத்துவங்களை அகிலம் எங்கும் பரப்பிட வாழ்த்துகிறோம்.மாநாட்டில் தந்தை பெரியாரின் கொள்கை வாரிசாக விளங்கும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் பெயரால் அமைந்த சமூகநீதி விருதினை வழங்கும் மாநாட்டு ஏற்பாட்டாளர் களுக்கு எமது வாழ்த்துகள்.பெரியாரின் சுயமரியாதை இயக்க மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் எமது அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவிக்கிறோம்.        செய்திகளை பகிர்ந்து கொள்ள