தலையங்கம்

தமிழ்நாட்டு முன்னெற்றத்தை தடுப்பது மக்கள் விரோதச் செயலே!

நாட்டில் படிப்பறிவு வேகமாக வளர்ந்து வருகின்ற நிலையில், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் மிக முக்கிய தேவையாகும்.
மக்கள் நல அரசாக விளங்கும் எந்த அரசும், இந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கிட, தொழில் மயமாக நாட்டை ஆக்கினால் தானே முடியும்?
கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்து, கடந்த 15 மாதங்களாக நடைபெறும் ஆட்சி, அது தேர்தல் அறிக்கையில் தந்த 177 வாக்குறுதிகளில் 70 தவிர, இதற்குள்ளேயே 5 ஆண்டு காலத்திற்காகக் காத்திராமல், `ராக்கெட் வேகத்தில் செய்து முடித்து வருகின்றதே!
சொன்னதை மட்டும் இந்த ஆட்சி செய்யவில்லை; சொல்லாத தையும் அல்லவா சேர்த்து செய்து வரலாறு படைத்து வருகிறது!
தமிழ்நாட்டைத் தொழில் மயமாக்கும்போது, அதைப் பரவலாகவும் ஆக்கிட பல அருமையான தொழில் திட்டங்களை, பொதுத் துறை, தனியார் துறை, கூட்டுத் துறை (இரண்டும் இணைந்தவை) என்று சிறப்பாக செய்து வருகின்றது தமிழ்நாடு அரசு.
எடுத்துக்காட்டாக, சிறீபெரும்புதூர் பகுதி, மறைமலை நகர் பகுதி - ஒரு பெரிய தொழில் மண்டலமாக அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்குபோல காட்சியளிக்கிறதே, எங்கும் தொழில்கள் வளர ஒப்பந்தங்களைப் போட பிரபல தொழிலதிபர்கள் எல்லாம் தமிழ்நாட்டை நாடி வருகிறார்கள்!
மும்பையில் தொழில்களைத் தொடங்க அழைக்கப்பட்ட தொழிலதிபர்கள் மகராஷ்டிரா அரசின் கோரிக்கையை ஏற்காது, தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் தொடங்க முயலுகின்றனர்!
வெளிநாட்டவர்களும் ஒரு நிலையான, நிம்மதியான, தொழி லாளர்களின் ஒத்துழைப்பு நிறைந்த, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு இல்லாத மாநிலமாக இத்தமிழ்நாடு திகழும் வகையில் தி.மு.க., ஆட்சி நடைபெறுவதால், இங்கே விரும்பி வருகிறார்கள்! அவர்களுக்கு அடிக்கட்டுமான உதவிகளை ஆட்சியாளர் செய்து தருவது அவசியமல்லவா?
இந்த வளர்ச்சி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நம் மக்கள் தவறினால் அது தற்கொலைக்குச் சமமாகும்!
கிருஷ்ணகிரி பகுதி தொழிற்சாலை, கடலூரில் புதிய கப்பல் துறைமுகம், தென்மாவட்டங்களில் முந்தைய நாங்குநேரி, கூடங் குளங்களையும் தாண்டி நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் பல புதிய தொழிற்சாலைகள், `டைட்டானியம் என்ற தாதுப் பொருளைப் பயன்படுத்தி, டாட்டாவுடன் கூட்டுத் துறை (Joint Sector) மூலம் தொடங்கும் திட்டம்; ஏற்கெனவே சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் அடுத்த ஆண்டில் முடிவடையும் வேகத்துடன் மும்முரமாக நடைபெறும் நல்லதோர் சூழ்நிலை; தென்பகுதியில் அகல இரயில் பாதைகள் - இப்படி வளர்ச்சியின் மைல்கள் நாளும் பெருகிக் கொண்டே உள்ளன!
இந்நிலையில் இதற்கு ஒரு திட்டமிட்ட செயற்கைத்தனமான - தனிப்பட்ட ஒரு சுரண்டல் திமிங்கலத்தின் தூண்டுதலோடு, அப்பாவி மக்களை பலியாக்கி அவர்களின் எதிர்காலத்தோடு - `ஏதோ எல்லாமே போய்விடும் என்று அவர்களை அச்சுறுத்தும் பணியில் பல அரசியல் கட்சிகள் ஈடுபடுவது மிகவும் வேதனைக்குரியது, கண்டனத்திற்குரியது!
தமிழ்நாடு முதல்வர் அளித்த ஒரு விளக்கத்தில்,
``அரசு எந்தக் காரியத்தைத் தொடங்க நினைத்தாலும் ஏதாவது ஒரு குறை கூறி திட்டங்களை தாமதம் செய்ய முயல்பவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்!
எந்தக் கருத்து எத்தரப்பிலிருந்து எடுத்து வைக்கப் பட்டாலும், அதனை `எடுத்தேன், கவிழ்த்தேன் என்று மறுத்து அலட்சியப் படுத்துபவரல்ல நமது முதல்வர் கலைஞர்.
மக்களாட்சித் தத்துவப்படி எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என்பதில் தயக்கம் காட்டாதவர் அவர்.
இதுதான் அவரது பலம். இதை பலவீனம் என்று எதிர்க்கட்சிகளோ, தோழமைக் கட்சி என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கட்சிகளோ கருதிவிடக் கூடாது!
``அரசே இதனை நடத்தலாம் என்று கூறுகிறார்கள். ரூபாய் 2300 கோடி உடனே முதலீடு செய்ய அரசிடம் நிதி உள்ளதா என்று அவர்கள் யோசிக்கவில்லை என்று கூறியுள்ளார் முதலமைச்சர்.
டாடாவின் தொழிற்சாலை அமைவதைத் தடுத்தால் (அது ஒரு கூட்டுத் திட்டம்) நிலங்களைக்கூட (அவைகளில் பெரிதும் தேரி நிலம் - தேரி என்றால் மணற்பாங்கான விவசாயம் செய்ய இயலாத நிலம்) டாடா நல்ல விலை தந்து பெற பாதுகாப்பு உள்ளது என்றாலும், தூங்குபவர்களைத் தானே எழுப்ப முடியும்? தூங்குவது போல் பாசாங்கு செய்பவர்களை, இதில் அரசியல் தூண்டிலைப் போடுபவர்களை எப்படி எழுப்ப முடியும்?
பிரபல பொருளாதார நிபுணர் - நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென் அவர்கள், கொல்கத்தாவிலிருந்து வரும் ஆங்கில நாளேடான `தி டெலிகிஃராப் ஏட்டில் அளித்த பேட்டியை, நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது விளக்கமான அறிக்கையில் பெரும் பகுதியைச் சுட்டிக்காட்டியிருந்தார்!
``வளமான நிலங்களை தொழிற்சாலைக்கு அளித் தாலும், அங்கு உற்பத்தி செய்யும் பொருள்களின் மதிப்பு, வேளாண் உற்பத்தி, பொருள்களைவிட பல மடங்கு அதிக மதிப்புடையதாக இருக்கும். மான்செஸ்டரிலும், லங்கா ஷயரிலும், வளமான விவசாய நிலங்களில்தான் தொழிற் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
``ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா விவசாயத்தில் வளம் கொழித்தாலும், சிலரே வேளாண்மையில் ஈடுபடுகின்றனர்.
என்று அமர்த்தியாசென் குறிப்பிட்டுள்ளதும் கவனத் தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய கருத்தாகும்!
``5 ஆண்டுகளில் ஒரு ஆண்டு நட்டம், ஒரு ஆண்டு லாபம்; மூன்று ஆண்டுகள் நட்டமும், லாபமும் அற்ற `ஏனோதானோ நிலை என்பதுதானே நமது விவசாயப் பொருளாதார மதிப்பீடு!
நம் முதல்வர் கலைஞர் அவர்கள், தனது அறிக்கையை முடிக்கும்போது, ``தென் மாவட்டங்கள் முன்னேறவேண்டும்; அந்தப் பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கவேண்டும்; பொருளா தாரத்தில் அவர்கள் சிறப்படையவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் அரசு பற்றியும், அரசின் நல்ல காரியங்களுக்குக் குந்தகம் விளைவிக்க நினைப் பவர்கள் பற்றியும், அந்தப் பகுதி மக்களே சிந்தித்து முடிவெடுக்கட்டும். அரசு எந்தக் காரியத்தைத் தொடங்க நினைத்தாலும், ஏதாவது குறைகூறி திட்டங்களைத் தாமதம் செய்ய முயல்பவர்கள் யார் என்று மக்கள் புரிந்துகொள்வர் என்று குறிப்பிட்டிருந்தார்.
சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகரங்களில் மக்கள் நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகும் நிலையில் துணை நகரங்கள் அமைக்க முயன்றால், அரசியல் கட்சிகள் இந்த ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரட்ட இது ஒரு `சான்ஸ் என்று கருதி முட்டுக்கட்டை போட்டதனால் இன்று பாதிப்புக்கு உள்ளாவது யார்? பொதுமக்கள்தானே!
அரசுக்கோ, முதல்வருக்கோ என்ன நட்டம், அவரும் ``நிம்மதியாகத் தூங்கப் போய்விட்டால், அப்புறம் எல்லோரும் தூங்கியே கிடக்கவேண்டிய வாய்ப்புக் கேடுதான்!
நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க செயலாளர் திரு. சந்திரன் ஜெயபால் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள ஒரு சுருக்கென தைக்கும் கருத்து முக்கியமானது.
``ஒரு காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாசேரேத் தில் உள்ள ஸ்பின்னிங் மில்லும், ஆறுமுகநேரியில் உள்ள தாரங்கதாரா கெமிக்கல் ஓர்க்சும் படித்தவர் களுக்கும், பாமரர்களுக்கும் வாழ்க்கையில் ஒரு பிரகாசத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. அதேபோன்று இப்போது அமையவிருக்கும் டைட்டானியம் டை-ஆக்சைடு தொழிற்சாலை படித்தவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கும் கேந்திரமாக அமையவிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
``அரசியல் ரீதியாக துண்டு துண்டாகப் பிரிந்து கிடக்கும் மக்களின் மத்தியில் கருத்துக் கேட்கிறோம் என்று களத்தில் குதித்திருக்கும் அரசியல் கட்சிகள், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க யாரிடம் கருத்துக் கேட்டார்கள்?
தூத்துக்குடி அருகில் உள்ள ஸ்டெர்லைட் கம்பெனி இன்னமும் விஷ வாயுவைக் கக்கிக் கொண்டுதான் இருக்கிறது என்று அறிக்கையில் கூறியுள்ளார்.
அங்குள்ள மக்கள் விழித்துக் கொண்டார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல சான்று!
தென் மாவட்டங்களில் முன்பு வெடித்த ஜாதிக்கலவரம், வெடிகுண்டு தயாரிக்கும் குடிசைத் தொழில் போன்ற அபாயம் தடுக்கப்பட, ஜஸ்டிஸ் ரத்தினவேல் பாண்டியன் குழு (முன்பு கலைஞர் அரசால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு) தந்த பரிந்துரைகளில் முக்கியமானது தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதன்மூலம்தான் முடியும் என்று கூறியதே - அதன் தொடர் நடவடிக்கை தானே இந்த தொழில் முயற்சிகள்! இதனை முட்டுக் கட்டை போடுவது வெகுமக்கள் விரோத செயல் அல்லவா? சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!


கி. வீரமணி
ஆசிரியர்

Viduthalai | Unmai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar.org | Dravidar Kazhagam | Vibgra