கவிதை
எப்படி மேல்?
கையில் கமண்டலமும்
வாயில் புளுகும் வைத்து
பிச்சையில் உடல்
வளர்த்தாய்
உலைக்களத்தில் வெந்த
எம் உழைப்பை....
இளைப்பாற குடித்த கஞ்சி
பரபிரம்மா தந்ததென்றாய்
நன்றிக் கடனுக்கு...
ஆட்டுப்பட்டி காவல்காத்த
கிழக்காக குடிகொண்ட
கிருஷ்ணன் இடிதாக்கி
கருகியதை
தெய்வக் குற்றமென்றாய்....
பசியால் குழந்தை
கேவலைப் பார்த்து
பாவத்தின் தண்டனை
என்றாய்...
சாக்கடை அள்ளி
காசில் குடித்த
டீ தண்ணியை
புண்ணியத்தின்
வெகுமதி என்றாய்...
நீ சொல்லும்
கடவுளை
காணச் சென்றேன்...
கொல்லைக்கு
நடத்ததும்
மனம் நெருடியது
காலில் மலம் பட்டு...
அங்கு ஓரமாக
சந்தனம் கும்குமம் பூசி
பேர் சென்ன விநாயகன் என்னுள் எதையும்
உணர்த்தவில்லை
மலத்தைவிட
உணர்வற்ற கல்
எப்படி மேல்..?
முருக சிவகுமார், சென்னை.
புதுப்பக்கள்
குறி
ஏழு நாளுக்குள்ள
அசம்பாவிதம் ஒண்ணு
நிகழப் போவுது, குறி சொன்ன
குடுகுடுப்பைக் காரனுக்கு
கிடைத்தது.
ஏழுபடி அரிசி,
எழுபது ரூபாய்,
வீட்டுக் காரனுக்கு
தொலைந்தது நிம்மதி.....
வலி
கைரேகை உருட்டும் போது
ஏற்படுகிறது
படிக்காத தன் வலி...
- இரா.கமலக்கண்ணன், சித்தோடு.
பொருத்தம்
திருமணப் பொருத்தம்
இருமனப் பொருத்தம்
இதற்கிடையில் ஏன்?
ஜாதகப் பொருத்தம்!
-வே.பாலமணிகண்டன், நுங்கம்பாக்கம்.
பகுத்தறிவுப் பார்வை!
புராண நாயகனுக்கு
ஏக பத்தினி என்றேன்-
ஏற்று மகிழ்ந்தனர்.
நாயகனின் நைனாவுக்கு
அறுபதாயிரம் மனைவியர் என்றேன்-
நாத்திக சாதி என்றனர்.
தலைக்கவசம் கட்டாயம்
என்றது அரசு உத்தரவு
பிறப்பும், இறப்பும் அவன் கையில்
என இறைவனை உண்மையாக
நம்புவோருக்கு - விதி விலக்காம்!
-கே.கே.பாலசுப்பரமணியன், குனியமுத்தூர்
முதிர்கன்னி!
அம்மனுக்கு பட்டுச்சேலை
மனைவி கழுத்தில் மஞ்சள் கயிறு
அடகு கடையில் தங்கத்தாலி!
அண்டா, குண்டா அடகு வைத்து
அம்மனுக்கு நேர்த்திக்கடன்
குடும்பம் போட்டது மொட்டை!
கடவுளுக்கு திருக்கல்யாணம்
ஊருக்கே அறுசுவை விருந்து
வீட்டுக்குள்ளே மகள் முதிர்கன்னி.
அய்யர் குறித்த சுபவேளை
அமர்க்களமாய் மகள் திருமணம்
அக்னிக்கு இரையான அவலம்.
ஜவுளிக்கடையில் அணிவகுப்பு
பாவையர் மேனியில் அலங்கரிப்பு
பட்டுப்பூச்சிகளின் உயிர்த்துடிப்பு.
- குன்னம் ராமண்ணா.
ஏக்கம்
வங்கக் கடலோரம்
நடந்தேன்
ஈரக்காற்று
என்னை கடந்தது...
உலகம் சுற்றும்
காற்று நாயகனே
சற்றே நிற்பாயா?
சேதியொன்று தெரிய வேண்டுமென்றேன்...
நின்றது காற்று!
என் ஈழத்தமிழினம்
எப்படி உள்ளது?
என் தாய்களின்
கண்ணில் இன்னும்
குருதி வடிகிறதா?
கற்பை காக்க
என் சகோதரிகள்
மாண்டு கொண்டுதான்
வருகிறார்களா?
தமிழீழ மொட்டு
மலரும் காலம்
நெருங்கிவிட்டதா?
இங்கே
மனிதர்களிடம் கேட்டால்
தீவிரவாதி என
சிறையிலடைக்கிறார்கள்...
நீயாவது நிலவரம்
சொல்வாயா என்றேன்!
கவலை வேண்டாம்
தோழனே
மரணபயமில்லாத
உன் வீரத்தமிழினம்
அழியாது....
சுதந்திரப் பூவின் வாசம்
உன் நாசி தொடும் காலம்
வந்து கொண்டே
இருக்கிறது
காத்திரு வருகிறேன்
நல்ல சேதியோடு
மீண்டும்...
காற்று நண்பனே
காத்திருக்கிறேன்
வந்து விடு...
உனக்கும்
எனக்கும் உள்ள
உறவு முடிவதற்குள்
-தமிழ்பிரபா, சென்னை
|