பெட்டிச் செய்திகள்
வாட்டும் வறுமை
இந்தியாவில் 83 கோடியே 60 லட்சம் பேர் மாதம் ரூ.600/- மட்டுமே வருமானம் ஈட்டுகிறார்கள். அதாவது தினந்தோறும் ரூ.20 மட்டுமே வருவாய் பெறுகிறார்கள். இது நாட்டின் மக்கள் தொகையில் 77 சதவீத மாகும்.
ரூ.12க்கும் குறைவாக வருவாய் ஈட்டு பவர்கள் தான் வறுமைக் கோட்டிற்கும் கீழ் உள்ளதாகக் கருதப்படுகின்றனர். எனவே, இந்த 77 சதவீதம் பேர் வறுமைக் கோட்டில் வரவில்லை.
தாழ்த்தப்பட்டோர் 88 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோர் 80 சதவீதமும், இஸ்லாமி யர்கள் 85 சதவீதம் பேர்கள் வறுமையில் வாடுகின்றனர்.
வேலைக்கு செல்வோரில் 39.49 கோடி பேர் அதாவது 86 சதவீதம் பேர் அமைப்புச் சார துறையில் வேலை செய்வோராவர்.
-தேசிய அமைப்புச் சாரா துறை நிறுவன ஆணையத்தின் கீழ் 2004 - 2005 ஆம் ஆண்டு வரையிலான ஆய்வறிக்கையிலிருந்து...
வித்தியாசமான கட்சிதான்
அண்மையில் நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலின் போது பிரதிபாபாட்டில் மீது பா.ஜ.க. பலவாறு புகார் எழுப்பியது. இல்லை, இல்லை... புளுகு கிளப்பியது. ஒரு பெண் முதல் முதலாக குடியரசுத் தலைவராவதை இந்துத்து வாக்களால் ஏற்றக்கொள்ள முடியுமா? குய்யோ முறையோ என்று கத்தினார்கள்.
வடநாட்டு சோ அருண் ஷோரி நுஒயீசநளள இதழில் கட்டுரைத் தொடரே தீட்டினார். அது தினமணியிலும் வெளிவந்தது. (தினமணி இப்போது ஆர்.எஸ்.எஸ். ஊதுகுழல் தானே) ஒருவேளை பிரதிபா பார்ப்பனப் பெண்மணியாக இருந்தால் அடக்கி வாசித்திருப்பார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட வராகப் போய்விட்டாரே. அதனால் தான் அவதூறுகள், ஆர்ப்பாட்டங்கள்.
டெல்லி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அருண்ஷோரி அப்போது பேட்டியளித்தார். நேர் காணல் கண்டவர் கரன்தாப்பர். அதில் அருண் ஷோரி சொல்லியதெல்லாம் பொய் என்று தெரிய வந்துவிட்டது. ஏனென்றால் அது வழக்கமானது தானே. அதனால் சத்தம் போடாமல் இருந்துவிட்டார். ஆனால் இதுபற்றி பா.ஜ.க.வின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் ஒரு பத்திரிகைகாரர் கேட்டுவிட்டார். இதற்கு ராஜ்நாத்சிங் சொன்ன பதில்தான் உச்சகட்ட நகைச்சுவை.
அருண்ஷோரி தெரிவித்த தகவல்கள் தவறானவை. வருத்தம் தெரிவிக்கிறோம். இதற்காக பா.ஜ.க. ஒன்றும் வெட்கப்படவில்லை என்றார். ராமன் புளுகில் தொடங்கி ராமன்பாலம் புளுகுவரை எதற்குத்தான் பா.ஜ.க. வெட்கப்பட்டுள்ளது. இப்படி யெல்லாம் இருக்கிறார்களே என்று இந்த புண்ணியப் பூமியின் மக்கள் தான் வெட்கப்படுகிறார்கள்.
***
எதிலுமே நாங்கள் வித்தியாசமானவர்கள். எங்கள் கட்சி வித்தியாசமான கட்சி என்று பா.ஜ.க. வினர் சொல்லிக்கொள்வார்கள். இது பலமுறை நிரூபணமாகியும் உள்ளது. பின்ன, பகிரங்கமாக பாபர் மசூதியை இடிச்சாங்களே... இதுமாதிரி வேறு கட்சி உண்டா?....
இவர்களின் கட்சி முன்னாள் முதலமைச்சர் பைரான்சிங்ஷெகாவத் துணைக் குடியரசுத் தலை வராக இருந்தார். தார்மீக நெறியென்றால் கிலோ என்ன விலை எனக் கேட்டு இந்த இந்துத்துவா தொண்டர் துணை குடியரசுத் தலைவர் பதவியை விட்டு விலகாமலேயே குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இப்போது இன்னொரு செய்தி. இன்னும் அரசு தனக்களித்த வீட்டை ஷெகாவத் காலி செய்யவில்லையாம். இதனால் புதிய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரிக்கு வீடு ஒதுக்க முடியாமல் அதிகாரிகள் சிரமப்பட்டுள்ளனர். அன் சாரியும் வேறு வழியில்லாமல் அரியானா பவனில் குடியேறியுள்ளார்.
-பெரியாரிடி
ரெண்டு பேருக்கும் முட்டிக்கிச்சு
தமிழ்ப் பத்திரிக்கையுலகில் இரண்டு பேர் இருக்கிறார்கள். அப்பப்பா...பயங்கர அறிவு ஜீவிகள். முன்னணி வாரப் பத்திகைகளில் பொளந்து கட்டும் இவர்கள் செய்வது ஒரு நூலகரின் வேலை. அதாவது வாசகர் கேட்டும் கேள்விக்கு என்சைக்ளோ பீடியாவிலிருந்து விடையைத் தேடி எடுத்து ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து எழுதுவது.
என்சைக்ளோபீடியா என்றாலே என்னான்னு தெரியாத நம்ம தமிழ்ச் சொந்தங்கள் இந்த மதனையும்-சுஜாதாவையும் அறிவு ஜீவிகளாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் வேதனையான செய்தி.
அண்மையில் வெளியான ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்திற்கு சுஜாதா உரையாடல் எழுதியிருக்கிறார். அதில் பன்னித்தான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்று எழுதியிருந்தார். இதைப்பற்றிய ஒரு வாசகரின் கேள்விக்கு ஆனந்தவிகடனில் மதன் பதில் எழுதினார், சிங்கம் கூட்டமாத்தான் வரும் என்று பதில் சொல்லியிருந்தார். இதைப்படித்த சுஜாதாவுக்கு கோபம் வந்து இருக்கலாம், மதன் சிங்கத்திடம் விசாரித்திருப்பார் என்று குங்குமத்தில் ஒரு பதிலின் மூலம் கிண்டல் செய்திருந்தார்.
இப்ப எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் அறிவு ஜீவிகளே. இதுல எது சரி? நீங்க சரியாப் படிக்காம சொல்றீங்களா? இல்ல நீங்க வச்சிருக்கிறய என்சைக்ளோபீடியாவுல கோளாறா? இத்தனை நாளா இது மாதிரி எத்தனை கேள்விகளுக்கு தப்பு தப்பா பதில் சொல்லியிருக்கீங்க? எங்க ஆளுங்களும் அதப் படிச்சிட்டிருக்காங்கப்பா.
அட வாசகத் தமிழர்களே... இதுக்குத்தான் நான் சொல்றேன், நேர நீங்களே போய் நூலகங்கள்ல இருக்கிற புத்தகங்கள எடுத்துப் படிங்க. அது தான் நமக்கு நல்லது. அப்புறமா ஒரு சேதி. நாங்க பார்த்த வரையில மலம் திங்க வர்ற பன்னிங்கதான் சிங்கிளா வந்திருக்கு தெரியுமா?
-மணிமகன்
|