இதையெல்லாம் எழுதமாட்டார்

கதை எழுதும் ஒருவர், சுவையாக, கவனமாக, சுத்தமாக, நலமாக, சத்தானதாக, வகைவகை யானதாகத் தயாரிக்கப்படும் உணவு, சாக்கடைக்கும், நகரக் கழிவுக் குழிக்கும் போகும் அவலம் தான் தனது பாடு பொருள் என்று மிகுந்த சமூகக் கவலை கொண்டவர்போலக் காட்டிக் கொண்டு காவிக்கு வக்காலத்து போட்டிருக்கிறார். (காவி என்றால், இந்து மதச் சனாதனம் என்றும் கொள்ளலாம்; கறையேறிய கருத்து என்றும் எடுத்துக் கொள்ளலாம்)
கோயில்களில் சிதறு தேங்காய் உடைப்பதைப் பற்றிக் கணக்குப் போட்டு ஏதேதோ எழுதியிருப்பவர் என்ன சொல்ல வருகிறார்? தேங்காய் உடைக்க வேண்டாம் எனக் கூறுபவராக இருந்தால், அதைத் தேங்காய் உடைப்பதைப் போல எழுத வேண்டாமா? இல்லையே! பின் எதற்கு விளக்கெண்ணெய் வியாக்கியானம்? எழுது கோலுக்கும் இழப்பு, அச்சடித்த தாளுக்கும் இழப்பு. படித்த எனக்கு நேரத்திற்கும் இழப்பு.
லாரியில் அரைபடும் தேங்காய் 3,12,000 எனப்புள்ளி விவரம் கூறுபவர், பூசணிக்காய் உடைத்து இருசக்கர வாகனங்களில் விபத்து ஏற்படுத்துவதும், ஓட்டுபவர்கள் சாவதும் ஆயுத பூஜை என்ற பெயரில் வருடாந்திர வாடிக்கையாகிப் போனது பற்றியும் எழுதுவாரா? மாட்டார். பெரிய புத்தர் மாதிரி போதனை செய்பவர், நோய் முதல் நாட வேண்டாவா?
ஆட்டுக்கு வாழைப்பழத்தோல் கொடுத்த முசுலீம் பற்றியும், பசுவுக்குப் புல் வாங்கிப் போடும் வட நாட்டுப் பெண்கள் பற்றியும் எழுதியிருக்கிறார். ளுஞஊஹ பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்துக்காரர் செய்ய வேண்டிய வேலையைச் செய்துள்ளார். சரி இரண்டும் ஒன்றா? ஆட்டுக்குத் தந்தது பிராணிகள் மீது வைத்த அன்பு. பசு மாட்டுக்குத் தருவது - பக்தி அல்லவா? அறிவோடு யோசிக்க வேண்டும். கீரைக் கற்றையோ, புல்கட்டோ பசுவுக்குத்தான்! வண்டி மாட்டுக்கோ, ஏர் மாட்டுக்கோ தருவதில்லை ஏன்? பசுவின் உடம்பில் இந்துக் கடவுள்கள் உள்ளன. பசுவுக்குப் போஷாக்கு தந்தால் கடவுளுக்கும் போஜனம் தந்ததாகிறது! புரிகிறதோ?
நாகபஞ்சமியன்று பாம்பைக் கண்டு பரிதாபப்பட்டு எழுதுகிறார். பால், பாம்புக்கான பானம் அல்ல என்கிறார். பாதிசரி. மடியில் பாலருந்த இயலாதாம் பாம்பால், அட, மண்டூகமே! பாம்பு பால் குடிக்குமா? அதற்கு நாக்கு கிடையாதே! நாக்கு இருந்தால் அல்லவா உறிஞ்சியோ (நம்மைப் போல) நக்கியோ (நாய், புலி, சிங்கம் போல) குடிக்க முடியும்? பாம்புக்கு இருப்பதெல்லாம்-நாக்கு போலத் தெரியும் உறுப்பு மட்டுமே, அதுவும் முனையில் பிளவு பட்டு இருக்கும். இது மூக்கு செய்யும் முகர்கின்ற வேலையைச் செய்ய பாம்புக்கு உதவுகிறது. விஷமக் கட்டுரை எழுதும் முன்பு விலங்கு நூலைப் படிக்கட்டும். கல்லாதான் சொற் காமுறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று என்பதைப் போலாகி விட்டது இவர் கதை.
காக்கைக்குச் சோறு வைக்கிறார்களாம். பித்ருக்கள் வந்து சாப்பிடுகிறார்களாம். பித்ருக்கள் தந்திர ஒளியிலிருந்து உற்பத்தியாகும் நீரைக் குடித்துப் பசியாறுகிறார்களாம். இந்த நீர் அமாவாசையன்று கிடைக்காததால்தான் தர்ப்பணம் (நீரைத் தெளித்தல்) செய்ய வேண்டும் என்று தினமணி (10.8.07) எழுதியுள்ளது. எதை ஏற்பது என்பதை நாஞ்சில் நாடன் முடிவு செய்து தெளிவுபடுத்திப் பிறகு பகுத்தறிவாளர் களைப் பற்றிப் பேசலாம்.
முன் நிறைந்த வாளைமீனைத்திவசமாகக் கொடுத்தால் பித்ருக்கள் 12 ஆண்டுகள் பசி இல்லாமல் இருப்பார்கள் என்று மனு தர்மம் கூறுவதை இவர் படித்திருக்கிறாரா? பித்ருக்கள் பசியாற எவ்வளவோ கூறப்பட்டுள்ளன, மனு(?) தரும சாஸ்திரத்தில்! காக்கை சோறு தின்பது பற்றிக் காணோமே! ஞாபகமாய் வந்து சாப்பிட்டு விட்டுப்போன (திருக்கழுக்குன்றம்) கழுகுகள் எங்கே? அவை வராததால் கடவுள் பட்டினி கிடக்கிறதா? இதைக் கண்டறிந்து சொல்லிய பின், பகுத்தறிவைப் பற்றியும் பகுத்தறிவாளர்கள் பற்றியும் எழுதிப் பிழைக் கலாம்! அதுவரை, மேற்கண்ட திருக்குறளையே நினைவு படுத்திக்கொள்ளவும்.
தமிழால் பிழைத்த தமிழின விரோதியையும், துணைக்கழைத்துக்கொண்டு காக்கை புகழ்பாடுகிறார். சனிப்பெயர்ச்சி நடந்ததால் பாதிக்கப் படும் ராசிக்காரர் போலிருக்கிறது. சனீசுவரனின் வாகனத்தைக் காக்கா பிடிக்கிறார்.
மீந்ததை சாக்கடையில் கொட்டுவது என்ன மனோதர்மம் என்றெனக்குப் புரிவதில்லை என அங்கலாய்த்துக்கொள்கிறார். மீந்ததைப் பள்ளம் வெட்டிக் கொட்டும் காரியம் இன்றைக்கும் சங்கரமடத்திலிருந்து எல்லாப் பார்ப்பனச் சமாராதனைகளிலும் நடக்கிறதே, இது என்ன இந்து தர்மம் எனக் கேட்கப்படாதோ? நாடனின் பேனா அவ்விடம் போகாதோ?
உணவின்றி வாடும் பெருங்கூட்டம் ஒன்று நமது நாட்டில் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது என்று திமிர்த்தனமாகவும், ஏளனமாகவும் எழுதுகிறார். அந்தக் கூட்டத்தின் ஏழ்மையைப் போக்க ஏதாவது எழுதுகிறாரா? 30 கோடி மக்கள் கூட்டம், ஒருவேளைச் சோறின்றி இருக்கிறது. இந்த லட்சணத்தில் கடவுளுக்குப் பெயர் அன்னபூரணி! அன்னபூரணி ஓட்டலைப் பற்றி எழுதியவர், கடவுள் அன்னபூரணியைப் பற்றி எழுதமாட்டார். கல் சிலைக்கு வடித்துக்கொட்டு வதாகச் சொல்லிக் கொட்டியளக்கும் குருக்கள் பற்றியும் எழுத மாட்டார்.

 

Viduthalai | Unmai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar.org | Dravidar Kazhagam | Vibgra