தலையங்கம்
கடந்த 2006-இல் பதவியேற்ற கலைஞர் அரசு, தனித்தமிழர் ஆட்சியாக அமைந்த காரணத்தாலும், இன உணர்வும், மொழிப் பற்றும் மானமிகு கலைஞர் அவர்களது குருதியோட்டம் என்பதாலும், சொன்னதைச் செய்யும் ஆட்சி அவர்தம் ஆற்றல்மிகு ஆட்சி என்பதாலும், 2006-07-ஆம் கல்வி ஆண்டிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை படிப்படியாக பள்ளிக் கூடங்களில் தமிழ் ஒரு பாடமாக கட்டாயமாக்கப்படும் என்ற ஓர் சட்டத்தைப் பிறப்பிக்கத் தவறவில்லை.
சட்டமன்றத்தில்கூட சிலர், கட்டாயப் பாடமாக தமிழை ஏன் உடனே 10 ஆம் வகுப்புவரை ஆக்கிடவில்லை என்ற கேள்வியை சில கட்சி நண்பர்கள் கேட்டபொழுது, பள்ளிக் கல்வி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள், அவர்களே, மன நிறைவு கொள்ளும் வண்ணம் அருமையாக (துணைக் கேள்விகளுக்கும்) பதிலளித்தார்கள்!
இந்த சட்டத்தை எதிர்த்து, பொதுநல வழக்கு போடுவதே தனது பணியாகக் கொண்ட ஒருவரும், ஒரு அமைப்பும் சென்னை - உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
தமிழக அரசின் அட்வகேட் - ஜெனரல் இரா. விடுதலை அவர்களும், சிறப்பு வழக்குரைஞர் சேகர் அவர்களும் அரசின் சார்பாக வாதாடி பல்வேறு வாதங்களை எடுத்து வைத்தனர். அதனை ஏற்ற தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் திரு. ஏ.பி. ஷா, ஜஸ்டீஸ் திரு. டி. முருகேசன் ஆகியோர் அடங்கிய முதல் (பெஞ்ச்) அமர்வு, மனுதாரர் வழக்கைத் தள்ளுபடி செய்து, தமிழ் கட்டாயம் என்ற சட்டம் செல்லும் என்று கூறி ஒரு நல்ல தீர்ப்பை அளித்துள்ளனர்!
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழை - அதுவும் செம்மொழி தமிழை - தமிழர்களின் வீட்டுப் பிள்ளைகளை கட்டாயப்படுத்திப் படிக்க வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே என்று வேதனை ஓர்புறம் நம்மைக் குத்தினாலும், இந்த முயற்சிக்கும் எங்கே முட்டுக்கட்டைகள் போடப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை நீக்கியமை நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது!
நீதிமன்றங்கள் இதுபோன்ற அரசின் கொள்கை முடிவுகளை யொட்டிய சட்டங்கள் செயலாவதற்கு ஊக்கிகளாக இருக்க வேண் டும். சமூகநீதி சம்பந்தமாக நீதிமன்றங்களில் சில பெரும்பான்மை மக்கள் விரோத உயர்ஜாதி ஆதிக்கத்தைப் பாதுகாக்கும் போக்கு கொண்ட சில தீர்ப்புகளால், வெகுஜனம் வெகுண்டெழும் நிலைக்குச் சென்று கொண்டுள்ளது!
சிதம்பரம் கோயில் மண்டபத்தில் தமிழ் இசை, தேவாரம் - திருவாசகம் பாட இந்து அறநிலையத்துறை அனுமதி வழங்கினால், அதை எதிர்த்துத் தடை ஆணை என்பது போன்ற பல வேதனை தரத்தக்க இச்சூழ்நிலையில், இந்தத் தீர்ப்பு ஒரு திருப்பத் தீர்ப்பாகவே கொள்ளவேண்டும்!
மருந்தின் தேவையைக் குழந்தைகள் அறியாமல், குடிக்க மறுக்கும்போது, கட்டாயப் படுத்தித் தருவது யாருக்காக? குழந்தை களுக்காகத்தானே!
தனி மனித உரிமை என்ற பெயரால் எதையும் எதிர்ப்பது என்பதை ஏற்க முடியாது; அது பாதிக்கப்பட முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு உள்ளடக்கமாகக் கொண்ட வரவேற்கவேண்டிய ஒரு தீர்ப்பு ஆகும்!
தமிழ்நாட்டின் விசித்திரங்கள் பலப் பல!
தமிழ்நாட்டில் ``தமிழில் இசை பாடுக என்பதற்குப் போராட்டம்!
தமிழில் வழிபாடு, அருச்சனைக்குப் போராட்டம்!
கோயில்களில் தமிழிலும் அருச்சனை செய்யலாம் என்ற விசித்திர அறிவிப்பு
குட முழுக்கு தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் புலமையும், சீர்மையும் வாய்ந்த வல்லுநர்களாலும் கூட நடத்த முடியாத நிலை போன்ற பல்வகை முரண்பாடுகள்!
இவை எல்லாவற்றையும்விட சென்னை - உயர்நீதிமன்றத்தில் தமிழில் நடவடிக்கைகள் நடைபெற அரசியல் சட்ட ரீதியாக வாய்ப்பிருந் தும், சட்டப்படி உரிமை இருந்தும், வட மாநிலங்களில் அவர்களது தாய்மொழி அதிகாரபூர்வ பயன்பாட்டில் இருந்தாலும், இதற்கு நமது முதல்வர் கலைஞர் எடுத்த முயற்சிகளுக்கும், சிற்சில தடைகள் சில இடங்களிலிருந்து உள்ளன.
இவைகளையும் உடைத்தெறிந்து தமிழ் ஆட்சி மொழியாக அனைத்து மட்டத்திலும் இயங்கிட, தமிழர்கள், தமிழ் இன உணர்வாளர்கள், மொழி உணர்வாளர் களை, ``மொழி வெறியர்கள் (கூயஅடை ஊயரஎளைவள) என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளிட (ஏன் முந்தைய ஆட்சியில் சிறைக் கூடத்திலும் கூடத் தள்ளிட்ட நிலை இருந்ததை நீக்கி) தமிழர் தம் பொற்காலம் கலைஞரின் பொற்கால ஆட்சியில் உதயமாகிவிட்டது!
காரிருள் அகன்றது!
கதிரவன் ஒளி பாய்ந்தது
திக்கெட்டும் தமிழ் முழக்கம்
திசையெங்கும் தமிழர் உரிமை
உணர்வு ஓங்கட்டும்!
இது ஒரு தொடக்கமாக அமைய வாழ்த்துகள்.
கி. வீரமணி
ஆசிரியர்
|