கவிதை
உறுத்தல்
இருந்த
அம்பது பைசாவையும்
அர்ச்சகர் தட்டில் போட்டுவிட்டு
என்கையில் ஏதுமில்லையென
சண்டிகேசுவரரிடம்
சப்தமிட்டு திரும்புவதில்
அப்படியென்ன சந்தோஷமோ
அச்சிவனுக்கு.
பெருமாள் கோயில்
வாசல் அமர்ந்து
பிச்சையெடுக்கும் பெருமாளுக்கு
தன் பெயரில் ஒரு கடவுள்
இருப்பதில்
தாள முடியாத பெருமையுண்டு.
அக்கரைக் குளத்து
பெண்கள் படித்துறைக்கருகில்
அரிவாளுடன் காவல் காக்கும்
அய்யனாரின் கறைமனசு
ஒரு போதும்
குளித்துக் கரையேறுவதில்லை.
அலங்காரம் செய்த பிறகு
அம்பாளை வழிபடும்
அர்ச்சகரின் மனதில்
அபிஷேகம் பண்ணுகையில்
நனைந்த கறுப்பு முலைகள்
தெரிந்து தெரிந்து உறுத்தும்.
புதுப்பக்கள்
கூரையிழந்த வீடு
விளக்குப் பார்க்க ஆண்கள்
வீடு திரும்பவில்லை.
நடுக்கூடத்தில் நியாயம் நடக்கிறது.
நடுக் காட்டினில் மகன் ஒற்றைக் காலில்
நிற்பதாக ஆயா சொல்ல..
இல்லையில்லை...
நடுவீட்டில் வைத்திருந்த
நீர் குறைந்திருப்பதால்
அப்பாதான் குடித்தாரென்று
நடுவிளலவள் அடித்துச் சொல்கிறாள்..
அடுத்தவள் ஆமாம் என்கிறாள்,
அம்மாவின் நகைகளை அளந்தபடி
மூக்கைச் சிந்துகிறாள் மூத்தவள்...
இன்னும் எத்தனையோவென,
துக்கத்தில் துவண்டுக் கிடக்கிறாள்.
கூரையிழந்த வீட்டுக்குச் சொந்தக்காரி.
-நா.சுப்புலட்சுமி, திருப்பத்தூர்
உனக்கும் எனக்கும்
ராமருக்கு கோயில்
அல்லாவுக்கு மசூதி
தேவனுக்கு ஆலயம்
எனக்கும் உனக்கும்...
மண்டை உடைப்பு
சேலை அவிழ்ப்பு
தாலி அறுப்பு
தாய்மை அழிப்பு
பெண்மை அவமதிப்பு
சிறுமிகள் பரிதவிப்பு
பிள்ளைகள் பிச்சையெடுப்பு
வாழ்க (வா) தெய்வங்கள்!
வளர்க (வா) மதங்கள்!
வெல்க (வா) ஜனநாயகம்!
-யாழ்மகன், ஆத்தூர், சேலம்
துளிப்பா
வாடிய பயிரைக் கண்டவுடன்
வந்தது வள்ளலார் ரியல் எஸ்டேட்.
-கற்பனைப் பித்தன், பெரம்பலூர்
நடக்கும் என்பார்...
எல்லா நதிகளிலும்
சந்தோஷ அலைகள்
மேளதாள சப்தங்கள்
ஆமாம்
கங்கை-காவேரி கல்யாணம்.
திமிரு
குளம் நிறைய
தாமரைகள்
தீண்டாமை
திமிரில்...
26-15-06
ஜனவரி இருபத்தியாறு
குடியரசு கொண்டாட்டத்தில்
அவளை சந்தித்தேன்
ஆகஸ்ட் பதினைந்து
சுதந்திர தினத்தன்று
முதன்முதலாக என்னோடு
பேசினார். அது தொடரானது
டிசம்பர் ஆறன்று
அவள் அப்பனும்
ஆத்தாவும் என்னை
மிரட்டி..
குண்டு வெடிக்குமென
எச்சரித்தார்கள்.
என்
காதல்
முளைக்காமலேயே போனது.
-கவி.சிந்தாபாஸ், முத்தரசநல்லூர்.
வீண்
பட்டினி கிடந்து
சிற்பி வடித்த
கற்சிலைக்கு
நடக்கிறது
வீணாய் போகும்
பாலாபிஷேகம்
தேனாபிஷேகம்..
-இரா.கமலக்கண்ணன், சித்தோடு
ஊதுவத்தி
கசாப்பு கடையில் வீசிய
இரத்த வாடையை புனிதமாக்கியது
ஊதுவத்தி வாசனை
இருக்கின்றவருக்கு வாசனை கொடுத்தும்
இறந்த உயிர்களுக்கு
அஞ்சலி செலுத்தியும்.
கண்ணாடி
உயரமாக கட்டப்பட்ட கட்டடங்கள்
தூரத்திலிருக்கும் சாக்கடை நீரில்
தன் முகம் பார்க்கிறது தினந்தோறும்.
-கு.சந்தோஷ்குமார், சென்னை-28.
வெள்ளை இருட்டு
எங்கள் திரைத் தீயோர்
கடைசிக் காட்சியில் திருத்திவிடுவார்கள்
அல்லது அழிக்கப்படுவார்கள்.
எங்கள் திரையில் பணக்காரப் பெண்கள்
ஏழைகளைக் காதலிப்பார்கள்.
எங்கள் திரையில்
காதலர்கள் மணந்து கொள்வார்கள்
அல்லது தற்கொலை செய்துகொள்வார்கள்.
எங்கள் திரையில்
ஸ்பெஷல் எஃபெக்டுகளுடன் கடவுள் வந்து
துட்ட நிக்ரகச் சட்ட பரிபாலனம் செய்வார்.
கறுப்பு விழி இல்லா வெள்ளைக் கண் இது
கண் வழி நுழைகிற கள் இது.
பகுதி நேர மயக்கத்துக்கான
முழுநேரத் தொழில்
இங்கே இமை திறக்கும் போது
மூளை மூடிக்கொள்கிறது.
இந்தச் சுருள்
மனிதர்களைச் சுருட்டி வைக்கிறது.
காங்கிரீட் அரங்கங்களில்
நான்கு முறை உதிக்கும் இந்தச் சூரியன்
எங்களுக்கு எந்த வெளிச்சத்தையும் காட்டவில்லை.
விளக்கவித்துப் படிக்கிற பாடமிது...
வயது வந்தவர்களுக்கான அம்புலிமாமா.
நிஜத்தை ஒத்திவைக்கிற
நிழலாதிக்கம்.
நிழலையே விற்றுவிடமுடிகிற
விஞ்ஞான வேடிக்கை.
ஒளியும், ஒலியும் பார்த்தவர் அறிவு
ஒளியும், ஒழியும்.
காசு திரட்டுவதற்காக மாசு பரப்பும் இங்கே
மாமிசக் குலுக்கல் நடக்கும்.
மூத்தவர்களின் மழலை ஒலிக்கும்.
நம் தலையில் நாமே கை வைத்துக்கொள்ள
மயக்கும்
மோகினி ஆட்டம்.
திரையில் வேறு எதற்குக் கோமாளிகள்?
இங்கே எதிரில்தான் இருக்கிறோமே...
|