குறுங்கதை
அரை நாள் விடுமுறை
பனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை இறைவணக்கத்திற்கான மணி அடிக்க, எல்லா வகுப்பு மாணவ, மாணவிகளும் அணி-வகுத்து பள்ளிக்கு முன்புறம் உள்ள மைதானத்-திற்கு வந்தனர். பள்ளியின் முன்புறம் பொக்கை வாய் புன்னகையுடன் சிலை வடிவாக காந்தியடி-கள், சீருடையில் மாணவ, மாணவிகள் அணி-வகுத்து வருவதை புன்னகையுடன் ரசிக்கின்றார்.
தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் காலை இறை வணக்கம் முடிந்தது. மாணவ-மாணவிகள் தங்கள் வகுப்பிற்கு கல்வி பயில போகும் அழகையும், மவுனமான புன்னகையுடன் பார்க்கிறார் தேசப்பிதா.
வகுப்புகள் தொடங்கின. தமிழாசிரியர் விவேகானந்தன் அரவது வகுப்பில் மாணவர்கள் வருகைப் பதிவேட்டில் மாணவர்கள் பெயரை வரிசையாக சொல்ல, ஒவ்வொரு மாணவரும் உள்ளேன் அய்யா என்று குரல் கொடுத்தனர். ஜெ.பாலாஜி என்று தமிழாசிரியர் அழைத்தார். மூன்றாவது பெஞ்சில் இருந்து நிமிர்ந்து எழுந்த பாலாஜி உள்ளேன் அய்யா என்று குரல் கொடுக்க அந்தக் குரல் கேட்டு அவனை, நிமிர்ந்து சற்று கோபமாக, நேற்று மதியம் அரைநாள் விடுமுறை கேட்ட கடிதத்தில் சினிமாவுக்கு போறேன் என்று எழுதிவிட்டு போயிருக்க, எவ்வளவு தைரியம் உனக்கு?.
தமிழாசிரியர் கேள்விக்கு சற்றும் சளைக்காமல் சினிமா பார்க்கத்தான் போனேன் என்று பாலாஜி சொன்னான்.
மேலும், கோபமான தமிழாசிரியர் எவ்வளவு திமிரிருந்தா பள்ளிக்கு வராமல் படம் பார்க்க போனேன்னு சொல்லுவ? அதுவும் பண்ணுனது தப்புன்னு தெரிஞ்சும் தலை நிமிர்ந்து நிற்கிறியாடா என்று ஆவேசமாக பிரம்புடன் எழுந்து வந்தவரை பாலாஜியின் ஆவேச வார்த்தைகள் தடுத்து நிறுத்தின.
தமிழனையே தலை நிமிரச் செய்தவரோட வாழ்க்கை வரலாற்று சினிமாவைப் பார்த்துவிட்டு வந்து தலை குனிந்து நின்னா? அந்த மாபெரும் பெரியாருக்கு மரியாதையா அய்யா? என்று பாலாஜி உணர்ச்சிவசமாய் பேசிவிட்டு பெரியார் படம் பார்க்கப் போனேன் அய்யா என்று உரக்கக் கூறினான். அடிப்பதற்காக பிரம்புடன் வந்த ஆசிரியர் பாலாஜியை ஆரத்தழுவிக் கொண்டார்.
பிரம்பு அவர்கள் பாதங்களுக்குக் கீழே மிதிபட்டுக் கொண்டிருந்தது.
|