நடிகவேள் எம்.ஆர்.ராதா நூற்றாண்டு
சீர்திருத்த எண்ணங்கள் என்னிடம் இயற்கையாகவே இருந்தது. நான் ஜெகந்நாதய்யர் கம்பெனியிடம் இருந்தபோது சிறு பையன். அந்தக் கம்பெனியில் சமையல் எல்லாம் பிராமணர்கள் தான். அவர்கள் சாப்பிடும் இடமும் தனி. அங்கே நாங்கள் யாரும் போகக் கூடாது. இது ஏன் என்று பல நாட்களாக எனக்குச் சந்தேகம். சமையல் நடந்து கொண்டிருக்கும்போது குடு குடு என்று சமையல் கட்டுக்குள் ஓடிப் போய்விட்டு வந்துவிடுவேன். யாராவது பார்த்துவிட்டால் அடியும் வாங்கிக்கொள்வேன். நான் அப்படிச் செய்த நாட்களில் கூட சமையல் ருசியாகத்தான் இருந்தது. நாங்கள் தொட்டதை பிராமணர்கள் சாப்பிட மாட்டார்கள். சாப்பிட்டால் செத்துவிடுவார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஒரு நாள் எனக்குக் கொடுத்த காப்பியில் பாதி குடித்துவிட்டு, மீதியை வாயில் ஊற்றி மறுபடியும் கிளாசில் துப்பி ஒரு பிராமண நடிகர் சாப்பிடும் காப்பியோடு கலந்துவிட்டேன். அவரும் குடித்துவிட்டார். ஆனால் சாகவில்லை. எனக்கு ஒரே ஆச்சரியம். சில சமயங்களில் மேடையில் கடவுளைப் பற்றி தவறாகப் பேசி விடுவேன். உள்ளே போய் அடி வாங்குவேன். ஆனால் அது தெரிந்து பேசியதில்லை. அந்த நேரத்தில் அப்படி வந்துவிடும். எதையெ டுத்தாலும் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசி அடி வாங்குவேன். அன்று தொடங்கிய எதிர்ப்பு இன்று வரை மாறவில்லை.
-ஒரு பேட்டியில் எம்.ஆர்.ராதா தோழர்களே! இவ்வளவு காலம் கழித்து எனக்கு இன்று வரவேற்பு அளித்-துள்ளீர்கள். காரணம், நான் இன்று சினிமாவில் இருப்பதுதான். நான் நாடகத்தில் எவ்வளவோ சாதனைகள் செய்தபோது அளிக்காத வரவேற்பை இப்போது அளிக்கிறீர்கள்.
சினிமா என்பது ரிட்டையர்ட் லைஃப். இதையெல்லாம் நான் விரும்புவதில்லை. சினிமாக்காரர்களை உயர்த்தாதீர்கள். இந்த நேரத்தில் ஒரு விஞ்ஞானியையோ, ஒரு அறிஞரையோ அழைத்திருந்தால் உங்களுக்குப் பயன் தரும் செய்திகளைக் கூறியிருப்பார்கள். இன்று உலகின் மிகப்பெரிய பிரச்சினை. உழைப்பு அதிகம், கூலி மிகவும் குறைவு என்பதாகும். ஆனால், சினிமா உலகம் இதற்கு நேர்மாறானது. உழைப்பு குறைவு, ஊதியம் மிகவும் அதிகம். அதுமட்டுமல்ல ஒரு அலுவலகத்தில் அல்லது ஒரு தொழிலில் ஈடுபடும் போது தவறு செய்தால் தண்டனை தருவார்கள். அல்லது எச்சரிக்கையாவது செய்வார்கள். ஆனால், சினிமாவில் ஒரு காட்சியில் சரியாக நடிக்கா விட்டால் நாற்காலியில் அமரச் செய்து ஃபேன் போட்டு ஆப்பிள் ஜூஸ் போன்றவைகளைக் கொடுத்து அடுத்த காட்சியில் நடிக்க வைப்பார்கள். ஆதலால் தான் சினிமாக்காரர்களை உயர்த்த வேண்டாம் என்று சொல்கிறேன்.
நாடகத்தின் மூலமாகத்தான் நாட்டுக்கு வேண்டிய நல்ல விஷயங்களை நான் சொன்னேன். சொல்கிறேன். நான் நாட்டிற்கு அகம் போன்றது நாடகம் என்று சொல்கிறவன். வாழ்க்கையில் ஓய்வுபெறும் காலம் என்று ஒன்று உண்டல்லவா? அதைப் போல இப்போது ஓய்வு காலத்தில் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கத்தில் எம்.ஆர்.ராதா பேசியது:
ராதாவின் நாடகம் பற்றி பெரியார்:
மக்களின் நன்மைக்காக ஆடப்படும் ஒரு நாடகத்தைப் பார்த்துச் செல்லும்போது நல்ல புத்தியோடு போவார்கள். நல்ல அறிவுரைகள் நாடகத்தில் இருந்தால், பார்த்துச் சென்ற மக்கள் மனதில் அது ஓரளவு நிலைத்து நிற்கும். எனவே, அது-போன்ற நடிகவேள்-ராதாவின் நாடகம் போன்றவைகளுக்கு சர்க்கார் முதல் ஸ்தானம் அளிக்க வேண்டும்.
மனித சமுதாயத்தில் நல்வாழ்வுக்கும், முன்னேற்றத்திற்கும், நல்லறிவு பெறுவதற்கும் நம் நாட்டிலே இலக்கியம், நாடகம் முதலியவைகள் தேவை.
(விடுதலை, 9.4.1952) |