தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
இந்துத்துவா
ஆய்வு
பதிலடி
நாட்டு நடப்பு
சேதுக் கால்வாய்
ஹாலிவுட் கலைவாணர்
மருத்துவமும்
கவிதை
சிறுகதை
எப்படி
நூல் அறிமுகம்
புதிய தொழில்நுட்பம்
அண்ணல் அம்பேத்கர்

 

 

எப்படியெல்லாம் வந்தான் ராமன்?

இந்திய அரசியலில் சில கட்சிகள் மதத்தைப் புகுத்தி குழப்பி மக்களின் மலிவான கடவுள் நம்பிக்கையைப் பயன்படுத்தி வாக்குகளைக் கைப்பற்றலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டன. வடநாட்டில் இந்த முயற்சிகளுக்குத் துணை போனது ராமன்! அயோத்தியில் ராமன் கோயில் ஒன்று இருந்ததாகவும், அதை இடித்து அந்த இடத்தில் பாபர் மசூதி ஒன்றைக் கட்டிவிட்டதாகவும் கதை கட்டி விவகாரத்தை வளர்த்து ஆதாயம் தேடினார்கள் ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள்.
இந்துக்களும், இஸ்லாமியர்களும் இது தொடர்பாக வழக்குகளைப் போட்டதால் பாபர் மசூதி இருந்த இடத்தைப் பூட்டி சீல் வைத்துவிட்டார்கள். யாரும் நுழையக்கூடாது என்ற நிலை உருவாகிவிட்டது டிசம்பர் 1949இல்!
1984 அக்டோபரில் விசுவ இந்து பரிசத் அமைப்பு பாபர் மசூதியை விடுவிக்கப் போவதாகக் கச்சை கட்டி முனைப்பு காட்டியது. லால்கிஷன் அத்வானியைத் தங்களின் தலைவராகப் பிரகடனப்படுத்தியது. இவர் பாகிஸ்தானில் பிறந்து, படித்து பிறகு இந்தியாவுக்கு வந்தவர்.
இந்து மதத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் பாபர் மசூதியை இந்துக்களுக்கு திறந்துவிடும்படி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். இதை இசுலாமியர்கள் எதிர்த்தனர்.
1987இல் தொலைக்காட்சியில் ராமாயணம் தொடர் தொடங்கப்பட்டது. வட இந்தியப் பாமர மக்களிடையே பிரபலம் அடையத் தொடங்கியது.
1989இல் செங்கல் எடுத்துவரும் பூஜையை விசுவஇந்து பரிசத் தொடங்கியது. தெற்கே, வடக்கே, கிழக்கே, மேற்கேயிருந்து செங்கல்களைக் கொண்டு வந்து அயோத்தியில் ராமன் கோயில் கட்டுவதாகத் திட்டம்.
1989இல் கோயில் கட்டுவதற்கான அனுமதியை அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி வழங்கினார். அவர் மனதில் நாடாளுமன்றத் தேர்தல் நிழலாடியது. அரசியல் ஆதாயத்திற்காக அனுமதி அளித்தாரோ?
1990இல் சோம்நாத் எனும் ஊரிலிருந்து ரத யாத்திரை ஒன்றை அத்வானி ஆரம்பித்தார். அந்த ஊரிலிருந்து புறப்பட்டு வழியெங்கும் பிரச்சாரம் செய்து அயோத்தியை அடைந்து ராமன் கோயில் கட்டத் தொடங்குவது என அறிவித்தார். பிகார் மாநில சமஸ்திபூர் என்ற இடத்தில் அவரைக் கைது செய்து அயோத்திக்குப் போகவிடாமல் செய்தார் லாலுபிரசாத் (யாதவ்).
கரசேவகர்கள் என்ற பெயரில் அவருடன் வந்தவர்களும் அவரால் தூண்டிவிடப் பட்டவர்களும் பாபர் மசூதியைத் தாக்கினார்கள். காட்டுவிலங்காண்டித்தனமான இந்தத் தாக்குதலில் இருந்து மசூதியைக் காப்பாற்றிடப் பாதுகாப்புப் படையினர் முயன்றனர். இந்த நடவடிக்கையில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
1990 நவம்பரில் மண்டல் குழு அறிக்கையின் பேரில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை-வாய்ப்-பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து வி.பி.சிங் ஆணையிட்டார்.
இந்தச் செயலால் உயர்ஜாதிப் பார்ப்பன இயக்கமான பா.ஜ.கட்சி, வி.பி.சிங் அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்று-விட்டது. வி.பி.சிங் அரசு பா.ஜ.கட்சி நடவடிக்கையால் கவிழ்ந்தது.
1992ல் டிசம்பர் 6 (அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்)இல் பாபா மசூதி இந்து மத வெறியர்களால் இடித்து நொறுக்கப்பட்டது. உத்திரப்பிரதேசத்தில் முதல் அமைச்சராக இருந்த கல்யாண்சிங், நயவஞ்சக வாக்குறுதி தந்ததை இந்தியப் பிரதமர் நரசிம்மராவ் நம்பி காவல்துறை, பாதுகாப்புப் படையினரை நடவடிக்கை எடுக்கவிடாமல் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டார். மசூதி இடிக்கப்-பட்டது.
காவிக் கட்சிக்காரர்கள் பலபேர் கைது செய்யப்பட்டனர். அதே ஆண்டு டிசம்பர் 16இல் அயோத்தியில் என்ன நடந்தது என்பதைப் பற்றி விசாரித்து அறிக்கை தருவதற்காக நீதிபதி லிபரான் கமிஷன் அமைக்கப்பட்டது. 15 ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 31 உடன் கமிஷனின் ஆயுள் முடிகிறது. எனவே, விசாரணை அறிக்கை கிடைத்துவிடும்.
1998 முதல் 2004 முடிய பா.ஜ.கட்சி ஆட்சி நடத்தியது. பதவியைப் பிடிக்க வேண்டும் என்பது தான் பா.ஜ.கட்சியின் ஒரே நோக்கம். அது நிறைவேறி விட்டது. எனவே, ராமனை மறந்து விட்டார்கள், ராமனுக்குக் கோயில் கட்டுவதையும் விட்டு விட்டார்கள். யாராவது நெருக்கிப் பிடித்துக் கேட்டால் அதற்காகத் தனியே குழு அமைத்துள்ளார்கள், பா.ஜ.கட்சிக்குச் சம்பந்தம் இல்லை என்பார்கள்.
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என இசுலாமிய அமைப்புகளைக் கெஞ்சிப் பார்த் தார்கள், மிரட்டிப் பார்த்தார்கள், கட்டப் பஞ்சாயத்து செய்து பார்த்தார்கள். ஒன்றினாலும் வெற்றி பெற முடியவில்லை. ராமனால் இனிமேல் அரசியல் ஆதாயம் ஏதும் கிடையாது என்று முடிவு செய்து கை கழுவி விட்டனர் போலும்!
அரசியல் ரீதியாகப், போண்டியாகிவிட்ட பா.ஜ.கட்சி, திட்டங்கள் எதுவும் வைத்திராத கட்சியாகி அரசியல் ரீதியாக வறண்டு கிடக்கிறது. இந்த நிலையில் ராமனை மீண்டும் கையில் எடுக்கிறது. தமிழ்நாட்டுக்கு நலந்தரும் மிகப் பெரிய திட்டமான சேதுக்கடல் கப்பல் போக்குவரத்துக் கால்வாய்த் திட்டத்தினால் தி.மு.கழக ஆட்சிக்கும், மத்தியில் ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கும் பெரும் புகழ் நிச்சயமாக வந்து சேரும். இதனை அனுமதித்துவிட்டால் இவர்கள் அரசியல் அநாதைகள் ஆகி விடுவார்கள்.
ஆகவே, அதனை எதிர்க்க ராமன் பாலம் என்று கதை கட்டிவிட்டுக் கலவரம் செய்யப் பார்க் கிறார்கள். திட்ட ஆராய்ச்சி செய்ததும், திட்டங்களை அனுமதித்து ஆணையிட்டதும் பா.ஜ.கட்சி அமைச்சர்களே! இருந்தும் இப்போது அதைப் பற்றியெல்லாம் எதுவும் கூறாமல், ராமன் பாலத்தை இடிக்காதே என்கிறார்கள்! இப்போது வந்துள்ள இந்த அறிவு அப்போது எங்கே போய் இருந்தது? என்ன செய்து கொண்டு இருந்தது?

இவர்கள் கூறுகிறார்கள்

ராமாயணம் நல்ல கதை, உண்மைக் கதை அல்ல. நல்ல மனிதனாகக் காட்சிதரும் ராமனை நான் காண்கிறேன். பரிபூரண மனிதனாக ராமனை என்னால் ஏற்கமுடி-யாது. காரணம் அவன் சீதையை நடத்திய விதம்
-சசி.தேஷ்பாண்டே, எழுத்தாளர்
ராமன் சீதையைச் சாதாரண மனிதன் போலச் சந்தேகப்பட்டுத் தீயில் இறங்கச் சொன்னான்.
தீக்குளித்த பிறகும் சில நாள் கழித்துக் காட்டுக்குத் துரத்தி விட்டான்.
ராமன் பொறுப்பற்ற தந்தை; சீதையுடன் தன் மகன்களையும் காட்டுக்குத் துரத்தினான்.
இந்து ஆணாக ராமன்; கீழ்ப்படிந்த பெண்ணாக சீதை என்று சித்தரிப்பதுதான் ராமாயணம்.
இவற்றைத் தெளிவாகப் படம் பிடித்து முரட்டு ஆண் ராமன் எனக்காட்டும் நாடகத்-தைத் தயாரித் துள்ளவர் ஹேமா ராம-கிருஷ்ணன்.
----
ராமன் கதாநாயகன் தான்; ஆனால் அவனின் கால்கள் களிமண்ணால் ஆனவை. தன் தாயையும், மனைவியையும் அவன் நடத்திய விதம் சங்கடப் படுத்துகிறது.
பிகார், வங்காளம், மகாராட்டிரம், ஆந்திரப் பிரதேசப் பகுதிகளில் கிராமப்புற மக்கள் பாடி வரும் நாட்டுப் புறப்பாடல்-களில் ராமனைக் கேலி செய்து சீதையைப் புகழ்ந்து வரிகள் இருப்பதை நான் கேட்டிருக்-கிறேன்.
ராமாயணத்தில் ராமன் மனிதன் தான். கடவுள் அன்று.
-நவநீத தேவ்சென்-எழுத்தாளர்.
ராமனை பா.ஜ.கட்சியினர் பெரிய வீரனைப் போலக் காண்பித்து வில், அம்புடன் படம் காட்டுகிறார்கள். எப்படி ஒரு வீரன் தன் மனைவியைப் பற்றிக் கேவலமாகப் பேச முடியும்? 20 வருடங்-களுக்கு முன்பு ராமன் பெயருக்கு இருந்த கவர்ச்சி இன்று (வடநாட்டில்) கிடையாது
-ஊர்வசி புடாலியா, எழுத்தாளர்
ராமன் தெய்வமாக வழிபடுவதற்குத் தகுதி இல்லாதவன். அவன் சீதாவை மட்டும் சந்தேகப் படவில்லை. லட்சுமணன், பரதன், அனுமன் ஆகியோரையும் சந்தேகப்படும் அளவுக்கு மிக சராசரியான மனிதன்.
-(வெள்ளி நாக்குப் படைத்தவர் எனப்பட்ட) ரைட் ஆனரபிள் வி.எஸ்.சீனுவாச சாஸ்திரி.

ராமாயணம் வரலாறா?

இதிகாசம் என்றால் நடந்தது என திருவாய் மலர்ந்து ஜெர்மனியிலிருந்து, பாபநாசம் பார்ப்பனர் ரவிசங்கர் அருளி-யிருக்-கிறார். ராமாயணம் வரலாறா? என்ற கேள்விக்கு எழுத்தாளர் புஷ்பா அய்யங்கார் பதில் எழுதுகிறார் (பார்க்க:அவுட்லுக் 1.10.2007)
வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ராமன் ஒரு கற்பனைக் கதாபாத்திரமே! ஏனென்-றால் அவன் வாழ்ந்ததாகக் கூறுவதற்கு ஆதாரமாக அவன் காலத்து நாணயங்-களோ, அவன் காலத்துப் பிரகடனங்களோ, வேறு ஆதாரங்களோ கிடையாது
சிறீசிறீ ரவிசங்கர் என்ன கூறுவார்? பேசாமல் (தான்) வாழும் கலையைப் பார்த்துக் கொண்டு 100 கோடிச் சொத்தினைக் காப்பாற்றிக் கொள்ளட்டும். தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் சோற்று-க்குத் திண்டாடி வீட்டை விட்டு ஓடிப்-போனவர் களெல்லாம் வரலாறு பற்றிப் பேசக்கூடாது.

ராமனுக்கு மரியாதை எவ்வளவு?

17 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.சி.காரில் ஏறி ராமஜன்மபூமிக்கு (அயோத்தியா) போன அத்வானி, இப்போது ராமகர்மபூமிக்கு (ராமேசுவரம்) வருகிறார். சோர்ந்து போய் துவண்டுவிட்ட, தம் கட்சியையும், அரசிய-லையும் வளர்ப்பதற்கு ராமன் கோயில் பயன்படாது எனப்புரிந்து கொண்ட அத்வானி, ராமன் பாலத்தைக் கையில் எடுத்துள்ளார்.
வளமான கதையம்சம் கொண்ட ராமாய-ணம் வால்மீகியால் சமஸ்கிருதத்தில் முதலில் எழுதப்பட்டது. ஓரளவு எல்லாரு-க்கும் தெரிந்த வகையில் அந்தக் கதை வந்ததற்கே, அது பல மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது தான் காரணம். இருப்பினும் ராமன் கடவுள் ஆக யாராலும் கும்பிடப்படுவதில்லை. வங்காளத்தில் துர்கா, மராட்டியத்தில் கணேசன், ஒரிசாவில் ஜகன்னாத் என்று மூன்று திசைகளிலும் வேறு கடவுள்களின் ஆதிக்கம்.
தென்னாட்டிலோ, பெரியார் இராம-சாமி-யின் பகுத்தறிவுக் கருத்துக்களின் ஆதிக்கம் நிலவுகிறது என்று ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியர் விஜயா ராமசாமி எழுதுகிறார்.


தமிழர்கள் மீது வெறுப்பைக்கக்கும்
புராண இதிகாசங்கள்

புராணங்கள் இந்து மதத்தின் அடிப்படை வேர்கள் புராணங்கள் இல்லை என்றால் இந்து மதமும் இல்லை, கடவுள்களும் இல்லை. ஏனெனில் புராணங்களில் வரும் கதாபாத்திரங்-களே இந்து மதத்தில் கடவுள்களாக விளங்கு-கின்றன.
ஆத்திக அன்பர்கள் புராண இதிகாசங்கள் மீது இரு வித கருத்தைக் கொண்டிருக்-கிறார்கள். பலர் அவற்றை உண்மையானவை என்று முழுதாக நம்புகிறார்கள். வேறு சிலர் அவை கற்பனையாக இருந்தாலும், அவை போதிக்கும் கருத்துக்கள் நீதியையும், ஒழுக்கத்-தையும் போதிப்பவையாக இருக்-கின்றன என்கிறார்கள். சிறு வயதில் நான் முதல் கருத்தையும் அதன்பின்னர்; இரண்டாவது கருத்தையும் கொண்டிருந்தேன். தற்போது புராணங்கள் தொடர்பான எனது கருத்துக்கள் தலை-கீழாக மாற்றம் பெற்றிருக்கின்றன.
புராணங்களில் வரும் கடவுள் பாத்திரங்கள் விலங்குகளும், மேற்கொள்ளாத இழிந்த முறையை மேற்கொண்டுள்ளன என்பதை பக்த கோடிகள் பாராயணம் செய்யும் புராண ஏடு-களே நமக்கு சாட்சியாக விளங்குகின்றன. எடுத்துக்காட்டாக:
தாருகா வனத்து முனிபத்திகளை பாலியல் வல்லுறவு கொண்ட சிவனார், தான் பெற்ற மக-ளான திலோகத்தமையை தனது தார-மாக்கிக் கொண்ட பிரம்மா, தனது கண்ணன் அவதாரத்தில் பல்லாயிரக்கணக்கான கோபிய-ருடன் ராஸ லீலை நடத்திய விஷ்ணு.
இந்த மும்மூர்த்திகள் மூவரும் சேர்ந்து அத்தி என்ற முனிவரின் மனைவியான அனுசூயையை நிர்வாணக் கோலத்தில் பார்க்க முற்பட்டது என இந்தப் புண்ணியக் கதைகளின் ஒழுக்க விழுமியங்கள் நைல் நதி அளவுக்கு நீளுகின்றன. மும்மூர்த்திகளின் செயல்களே இப்படி என்-றால், மற்றவர்களைப் பற்றிச் சொல்லியா தெரிய வேண்டும். இவை எந்த ஒழுக்கத்தையும், நீதியையும் போதிக்கின்றன என்பதை இதைப்-படிப்பவர்களின் மூளையின் செயல்பாட்டிற்கே விட்டுவிடுகிறேன்.
கடவுளர்களின் செயல்களை வெறும் பால் மயக்கத்தோடு பார்க்கக்கூடாது என் வாதிடு-பவர்களும் உள்ளனர். பாலியல் என்பது தவறான கருத்து அல்ல. உடலின்பத்தின் சுவை-களை வள்ளுவரின் இன்பத்துப் பால் வெளிப்படையாகவே பகர்கின்றது. அக-நானூறு, குறுந்தொகை போன்ற சங்க இலக்கி-யங்களிலும் பாலியல் கருத்துக்கள் சொல்லப்-பட்டிருக்கின்றன.
ஆனால், புராணங்கள் உடல் ஒழுக்கத்துடன் பாலியலைப் பேசவில்லை. பிறன் மனை நோக்கியவர்கள், பெற்ற பெண்ணையே பெண்-டாள நினைத்தவாகள், விலங்குகள் என்றும் பாராமல் அவற்றோடும் உடலுறவு கொண்ட-வர்கள் என அருவருக்கத்தக்க செயல்களை செய்தவர்களை தேவர்கள் என்றும் கடவுள்கள் என்றும் போற்றுகின்றன புராணங்கள்.
புராணங்கள் தமிழர்களுடைய சொத்து அல்ல. இது போன்ற அருவருப்பான கதை-களை பழந்தமிழர் எழுதவும் இல்லை. புற-நானூற்றில் ஒரு காட்சி, காதலன் ஒரு-வனுக்கு மார்பில் வேல் பாய்ந்து விடுகிறது அவன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடி வருகிறான், ஏன்? பூமியின் மடியில் விழுவதை-விட தனது காதலியின் மடியில் இறப்பதை அவன் விரும்புகிறான். இறுதியில் அவனது காதலியின் மடியில் உயிர் விடுகிறான்.
இதைப்போல் குறந்தொகையில் இரு மான்கள் தாகத்துடன் செல்கின்றன வழியில் தென்படும் சிறு குட்டையில் ஒரு மான் அருந்துவதற்குத்தான் நீர் உள்ளது. இரண்டும் சென்று வாயை வைக்கின்றன. ஆனால் நீர் மட்டும் அப்படியே உள்ளது. ஆண் மான் குடிக்-கட்டும் என்று பெண் மானும், பெண்-மான் குடிக்கட்டும் என்று ஆண் மானும் தங்கள் தாகத்தின் வலியை மறைக்கின்றன. இவைகள் அல்லவா பண்பாட்டின் வேர்கள். ஆனால், நம்மவர்களோ தமிழ் இலக்கியங்களின் பெருமை தெரியாமல் புராணச் சாக்கடைக்குள் முகம் புதைக்கின்றனர்.
நமது பழந்தமிழ் இலக்கியங்களில் வரும் கதைகளை படிக்கும் போது வீரம் மிளிர்கிறது. நேர்மைப் போரிடை புகுந்து வாழாத தமிழனை வரலாறு மதிக்காதென்பது அக்கதை-களில் தெரிகிறது. இமய வரம்பினில் புலிக் கொடியைப் பறக்க விட்ட கரிகாற் சோழன். தமிழைப் பழித்த கனக விசயரின் தலையில் கல்லினை ஏற்றி கண்ணகிக்கு விழா எடுத்த சேரன் செங்குட்டுவன். ஆரியப் படைவென்ற தலையனங்கானத்துச் செருவென்ற பாண்டியன். எதிரியிடம் சரணடைந்து உயிர் வாழ்வதை விட மரணம் பெரிதென அதனை வரவேற்ற கணைக்கால் இரும்பொறை போன்றவர்களின் கதைகளைப் படிக்கும் போது வீரமும், தியாகமும் கொப்பளிக்கக் காண்கிறோம். சாத்திரம் காட்டும் கட்டுக்கதைகளில் கூட தமிழன் சரித்திரம் காட்டும் கற்பனைக் கதை முளைத்ததில்லை.
ஆனால், இதிகாசங்களில் வரும் போர்-களிலோ சூது. வஞ்சகம் தவிர வேறு என்ன இருக்கிறது. வாலி, பீஷ்மர், கர்ணன், துரியோ-தனன், அபிமன்யு என ஒருவருமே நேர்மை-யான முறையில் கொல்லப்படவில்லை. போரில் ஆயுதம் தரிக்க மாட்டேன் என தான் செய்த சத்தியத்தையும் மீறி கடவுள் அவதாரமாகக் கருதப்படும் கண்ணனே பீஷ்மரை கொல்ல சக்ராயுதத்தை எடுத்துக் கொண்டு ஓடிய கூத்துக்கள் தான் இவற்றில் நிறைந்திருக்கின்றன.
அதீதக் கற்பனை கொண்ட கதைகளை நாங்கள் நம்பத் தேவையில்லை. அதற்காக அவைகளை வெறுக்க வேண்டிய கட்டாய-மில்லை. புராணக் கதைகள் பல நாடுகளில் இருந்திருக்கின்றன. குறிப்பாக கிரேக்க நாட்டு புராணக் கதைகள் மிகவும் புகழ் பெற்றவை. ஆனால், அந்தக் கதாபாத்திரங்களுக்கு யாரும் கோயில் கட்டிகுடமுழுக்கு செய்வதில்லை. ஒரு காலத்தில் கடவுள்களாக வழிபட்ட அந்த கதா-பாத்-திரங்களின் சிலைகள் தற்போது அருங்காட்சியத்தில் காட்சிப் பொருள்களாக மாறி-விட்டன. அவற்றின் வழிபாட்டு இடங்கள் வெறும் புராதனச் சின்னங்கள் என்ற முறையில் தான் கிரேக்கம் போன்ற நாடுகளில் பாதுகாக்-கப்பட்டு வருகின்றன.
இந்துப் புராணங்களின் தன்மையோ சற்று வேறுபட்டது. அவை வெறும் அதீதக் கற்-பனைக் கதைகளாக மட்டும் இருந்தால் பட்டி விக்கிரமாதித்தன் கதைகளைப் போல் அல்லது தற்போது மேலை நாடுகளில் சக்கைபோடு போடும் ஹாரிபோர்டர் போல் வாசித்து-விட்டுப் போகலாம். மாறாக அவைகளில் தமிழ் விரோதப் போக்குகள் காணப்படுகின்றன. வேத உபநிடதங்களைப் போல் இவைகளும் பார்ப்பனர்களை உயர்த்தி சூத்திரர்களை தாழ்த்தியே எழுதப்பட்டிருக்கின்றன. மகா-பாரதத்தில் துரோணர் என்ற பிராமணருக்காக ஏகலைவன் என்ற சூத்திரனின் கட்டை விரல் வெட்டப்பட்து இதற்கு சரியான எடுத்துக்-காட்டு. புராண இதிகாசங்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அவை ஆரியர்களுக்கும், தமிழர்களுக்கும் நடந்த போர்களை மையமாக வைத்து எழுதப்பட்டது என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள். தங்களை எதிர்த்த தமிழ் மன்னர்-களைத் தான் ஆரியர்கள் அசுரர்-களாகவும், அரக்கர்களகாவும் சித்தரித்து புராணங்களைப் படைத்தார்கள். அத்துடன் இராவணனுக்கு பத்துத் தலை போன்ற அதீத கற்பனைகளையும் சேர்த்தார்கள்.
பிறவிப் பெண்ணடிமைத்தனம் புராண இதிகாசங்களில் மித மிஞ்சிக் காணப்-படுகின்றது. குஷ்டம் பிடித்த கணவனை கூடையில் வைத்து தாசி வீட்டுக்குச் சென்ற நளாயினி, கட்டிய கணவனின் சுடு சொல் கேட்டு தீக்குள் குதித்த சீதை, இந்திரனோடு கட்டிலில் கூடிய அகலிகை, பஞ்ச பாண்டவர் அய்வருக்கும் பொது மனைவியாக இருந்த பாஞ்சாலி, கணவன் பார்வையற்றவன் என்பதற்காக கண்ணைக் கட்டிக் கொண்ட காந்தாரி போன்றவர்களை எண்ணும்போது பெண் என்பவள் விறகுக் கடைக்கு ஒப்பாகத்-தான் ஆரிய தர்மத்தில் மதிக்கப்படுகிறாள் என்பது புலனாகிறது.
புராணங்களும், இதிகாசங்களும் பண்பாட் டையும், நீதியையும் போதிக்கும் கதைகள் அல்ல. மாறாக ஒழுக்கக் கேடுகளும் மனித ஏற்றத் தாழ்வுகளும் கபட நாடகங்களும் தான் அதில் நிறைந்து காணப்படுகின்றன.