அரசியல் அரைவேக்காடுகள்
 |
கொள்கையென்றால் என்ன அது என்று கேட்கும் சில கோமாளிகள் அரசியல் கட்சிகளைத் தொடங்கியுள்ளனர். சினிமா தொழில் போன பின்பு வேறு தொழில் தெரியாததால் கட்சி தொடங்கி அதில் முதலீடு செய்கின்றனர். என்றாவது ஒரு நாள் அறுவடை செய்துவிட மாட்டோமா என்ற எண்ணம் அவர்களுக்கு. எந்தக் கட்சியிலும் இடம் கிடைக்காதவர்கள் அல்லது அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் இந்தக் கட்சிகளில் சேர்ந்து கூட்டம் கூட்டுகிறார்கள். சினிமா மாயையால் சேர்ந்த இந்த லட்சிய மற்றவர்கள் அரசியலில் முளைவிடும் ஆபத்தான போக்கு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. திராவிட இயக்க ஆட்சியை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என, பலநாள் பகையை மனதில் வைத்துள்ள பத்திரிகைப் பார்ப்பனர்கள் இந்த கொள்கையற்ற கோமாளிகளை ஊக்குவிக் கிறார்கள். தமது ஊடகங்களின் மூலம் ஊதிப் பெரிதாக்கிக் காட்ட முயற்சிக்கிறார்கள். புதிய அரசியல் கட்சிக்காரர்கள் தமக்கென சொந்தக் கருத்து இல்லாமலும் உலக அரசியலை, உள்நாட்டு அரசியலை உருப்படியாகப் படிக்-காமலும் இருக்கிறார்கள் என்பதை அவர்-களின் அறிக்கைகளில் இருந்தே உணர முடிகிறது. முதல்வர் அவர்கள் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கினார். அப்போது அதை வரவேற்ற விஜயகாந்த், சில நாட்கள் கழித்து இது தாமதமான நடவடிக்கை என்கிறார். என்றைக்காவது இவர் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதுண்டா? வாய்க்கு வந்ததைப் பேசுவது இவருக்கு வழக்கமாகி விட்டது.
தன் கட்சியில் ஊழல் உள்ளதை ஒத்துக் கொள்ளும் இவர் அவர்களை ஒழுக்கத்துக்கு கொண்டு வந்து திருத்துவாராம். (தினகரன் 22.09.07-பக் 5) கட்சியில் ஊழல் பேர்வழிகளை வைத்துள்ள இவரால் எப்படி ஊழலற்ற ஆட்சி தர முடியும்? சுதந்திரமாகி 60 ஆண்டுகளில் ஒழிக்கமுடியாத வறுமையை, இவர் ஆட்சிக்கு வந்தால் ஒழித்து விடுவாராம். அண்மையில் இவர் நடத்திய வறுமை ஒழிப்பு தினத்திற்கே இவர் செய்த செலவு பல லட்சங்கள். அதாவது வறுமை ஒழிப்பு.. வறுமை ஒழிப்பு என்று இவரது கட்சியினர் செய்த விளம்பரங்களுக்கே பல லட்சங்கள் செலவு செய்துள்ளார்.
இதெல்லாம் ஒருபுறம். இராமன் பாலம் பிரச்சினை பற்றியும், சிலர் எழுப்பியுள்ள கேள்வியிலும் அறிவு கொழுந்து விட்டு எரிந்தது. ராமர் என்ன இன்ஜினியரா என்று முதல்வர் கேட்கிறார். நான் கேட்கிறேன், நீங்கள் திருவள்ளுவரைப் பற்றி புகழ்கிறீர்களே, அவர் எந்தக் கல்லூரியில் படித்தார்? விஜயகாந்தின் கேள்வி எப்படிப் பார்த்தீர்கள். அறிவுக் கொழுந்து விஜயகாந்த் அவர்களே, கவிதை எழுத கல்லூரி போய்ப் படிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த அடிப்படை உண்மை-கூட உங்களுக்குத் தெரியவில்லையே!
இலக்கியங்களை ஆர்வத்துடனும், நல்ல புரிதலுடனும் படித்து, மொழியின் தன்மையை நன்குணர்ந்து தமக்கு முந்தைய பல படைப்பு-களை, கவிதைகளை ஏராளமாய்ப் படித்த ஒரு-வருக்கு கவிதை எழுதும் ஆற்றல் தானாக வந்து-விடும். பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், கலைஞர் போன்றவர்கள் எல்லாம் கல்லூரி சென்று படித்தவர்கள் அல்ல. மாறாக மேலே சொன்னபடி இலக்கியம் கற்றவர்கள்.
ஆனால், பாலம் கட்டுவதற்கு கல்லூரி போய் படித்தே ஆக வேண்டும். அந்தக் காலத்-தில் அமைந்தது என்று எடுத்துக் கொண்-டாலும் பொறியியல் அறிவு பெற்றிருக்க-வேண்டும். வெறுமனே மணலை அள்ளிப் போட்டாலோ, கல்லைத்தூக்கிப் போட்டா-லோ அது அப்படியே அசைவற்று அமைந்து விடாது.
கல்லணையும், தஞ்சைக் கோயிலையும் அமைத்தவன் பொறியியல் அறிவு பெற்றவன் தான். இராமாயணத்தில் சொல்வது போல அம்புகள் விட்டோ, குரங்குகளினாலோ, அணில்களினாலோ கட்டப்பட்டதல்ல. தமிழ்-நாட்டிலுள்ள ஒவ்வொரு கட்டடத்திற்கும் ஒரு வரலாற்றுக் குறிப்பு உள்ளது. ராமன் பொறியி-யல் அறிவு பெற்றிருந்தான் என்று எந்த ராமாய-ணத்திலாவது உள்ளதா? முதலில் எத்தனை இராமாயணங்கள் உள்ளன என்பதாவது தெரியுமா? புராணங்கள் என்பவை எல்லாம் கற்பனை. வரலாறு என்பது உண்மை. இந்த அடிப்படையே தெரியாத நடிகருக்குப் பின்னால் சில ஆயிரம் அப்பாவிகள். முதல்வர் அளித்த முகவரியில் முகம் காட்டிவரும் சில ஊடகங்கள் இந்த முழுமையற்றதுகளை முன்னிலைப்படுத்துகின்றன. தலைலையை எடு, நாக்கை வெட்டு என்று வெறிக்கூச்சலிட்ட மதவெறியனுக்கு எதிராக ஒரு குறைந்தபட்ச கண்டனத்தைக் கூட விஜயகாந்த் தெரிவிக்க-வில்லை. தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்-களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறுகிறார்கள் விஜய-காந்தும், மற்றவர்களும்.
எதிர் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்-காக திருவள்ளுவரையே இழிவுபடுத்தும் அளவுக்கு விஜயகாந்த் சென்றுள்ளார்.
அரசியல் பற்றிய அடிப்படை அறிவு சிறிது மற்றவர்கள் அரசியலில் அதிகரிப்பது நாளைய தலைமுறைக்கு நல்லதல்ல.
-பெரியாரிடி
|