கற்பு
கணேசகுரன், நாகப்பட்டினம்
தீக்குளித்து எழுத்த பின்பு
சீதை கேட்டாள் இராமனைப் பார்த்து
அவன் சிறையில் உன் நினைவாய்
நானிருந்தபோது
நீயிருந்தாய், நானின்றி இவ்வுலகில்
எனக்கில்லாத சுதந்திரம்
சந்தர்ப்பம் உனக்கிருந்தது
நொடிப் பொழுதில் சுகங்கள் உன்னைத் தேடிவரும்
கேட்காமலே சொர்க்கம் இருப்பிடம் நாடி வரும்
நீ ஆண்மகன்; அழகன்
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவன்
இராமன். சரி அது சீதைக்கல்ல
எனக்குமுண்டு நெருடல்
மிச்சமுள்ள தீயில்
நீயிறங்கு இராமா என்றாள்
அப்போது வானில் அசரீரி ஒலித்தது
சீதை நீயே உத்தமியென
உன்னைத் தெரிந்த இராமன்
உலகத்தார்க்கு
உரைத்திட வைத்தான் இத்தீ மூலம்
மாறி மாறி தீயிறங்கினால்
பூ பூப்பதை யார் பார்ப்பது.
இது தீ விளையாட்டு அல்ல
அவனின் தீராத விளையாட்டு
அசரீரி மறைந்தது
பின்குறிப்பு :
அன்று கேட்ட அசரீரி
ஓர் ஆண் குரல் என்பதையும்
இறுதி வரை இராமன்
இறங்கவில்லை நெருப்பில்
என்பதையும் நினைவில் கொள்க.
புதுப்பாக்கள்
முரண்பாடு
உழவனுக்கு
கிடைத்தது
பட்டினிச்சாவு!
ஓதுவானுக்கு
கிடைப்பது
பல்லக்கு?
பாவம்
பாவத்தை(ச்)
சொன்னாள்
பாதிரியிடம்
பகிர்ந்து
கொண்டார்
பாதிரியும்.
மதி+கெல்மெட்
மதி
வலியது
தலை...காக்கும்
கவசம்!
விதி
விதி
வலியது
தங்கவேல்சாமி
திருட்டு
இந்தியா
மும்பையில்
காமத்திபுரா
கொல்கத்தாவில்
சோனாகஞ்ச்
தொடர்ந்து
முதலிடத்தில்
எயிட்ஸ்!
தெண்டம்
ஒரு முழம்
முல்லைப் பூ
மூன்று ரூபாயா?
தெண்டம்
தெண்டம்
என்றவள்
அரை முழம்
அருகம் புல்லை
அய்ந்து ரூபாய்
கொடுத்து
வாங்குகிறாள்
கோயிலில்?
பட்டறிவு
தலையில்
விழுந்த பல்லி
துள்ளி
ஓடுது சுவரில்
பகுத்தறிவைச் சொல்லி?
ஈழம்
ஒரே ஒரு
முழம்
பூ கேட்கிறாள்
தமிழ்த்தாய்!!!
யோகம்
என்னைப் பார்
யோகம் வரும்
கடைகளில்
கழுதைப்படம்
-கவிஞர்.ஆர்.டி.இலக்கிய ஏழை,
சிங்கம்பாறை-1.
தீர்ப்புகள்
ஓயாத மழை
உறங்காத இரவு
ஒழுகும் வீடு
இப்போது இல்லை
அம்மா காட்டிய நிலவு
குழந்தைகள் காப்பகம்
சேரி எங்கும் குடிசை
ஒரே ஒரு கட்டிடம்
கோயில்
ஊசலாடும் உயிர்
நெஞ்சு குழிக்குள்
தாய் மண் வேட்கை
புத்தகம் முழுக்க
காணாமல் போயிருந்தன
பூச்சிதின்ற எழுத்துகள்
கோயிலுக்கு வண்ணம்
தீண்டத்தகாதவன் தீட்டியது
குடுமிகள் குடழுக்கு
வாய்க்கரிசி போட்டனர்
ஊர்மக்கள்
வறுமையில் இறந்தவன்
ஒவ்வொரு நாட்டிலும்
ஓர் இன அடிமைகள்
உலகெங்கும் பெண்ணடிமை
ஊர் மக்களிடம்
சிக்கித் தவிக்கிறது
கோயில் தேர்
வறுமைச் சாவுகள்
மலத்தை அள்ளி பிழைப்பு
இந்தியா ஒளிர்கிறது
பெட்டிகள்முன்
அடங்கிப் போகின்றது
தீர்ப்புகள்
-செந்தமிழினியன், புதுச்சேரி
|