தலையங்கம்
அறிவியல் மனப்பான்மையை மக்களிடம் வளர்ப்போம்
மூட நம்பிக்கைகளால் மனிதர்களின் வாழ்க்கை எவ்வளவு சிதைந்து சின்னாபின்னப்பட்டு இறுதியில் உயிர்க்கொல்லி என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது என்பதற்கு திருமங்கலத்திற்கு அருகே (மதுரை மாவட்டம்) உள்ள பெரிய ஆலங்குளம் என்ற ஊரில் நடைபெற்றுள்ள நிகழ்ச்சியே எடுத்துக்காட்டாகும். 2005 பேர்கள் வசிக்கும் சிற்றூர் அது. வைரஸ் என்ற நச்சுக் காய்ச்சலால் இளம் தளிர்கள் (வயது 4, வயது 8) அவதிப்பட்டனர்.
அதை அறிந்து அங்கு சிகிச்சை அளிக்கச் சென்ற மருத்துவத் துறையினரின் சிகிச்சையை ஏற்காது, இது வெறும் அம்மை நோய்தான்; வீட்டுக்கு வீடு வேப்பிலைக் கொத்தினைச் சொருகி வைத்தால், ``ஆத்தா வந்துவிட்டுத் திரும்பிப் போய்விடுவாள் என்று கூறி மருத்துவச் சிகிச்சையை ஏற்க மறுத்துள்ளனர்.
இந்த இரண்டு பெண் குழந்தைகளும் நோய்க்குப் பலியாயினர் என்று சொல்வதைவிட, மூட நம்பிக்கை நோய்க்கே பலியாயினர் என்று கூறுவதுதானே சரியானது?
கடவுள் நம்பிக்கை - ஜோதிட மூட நம்பிக்கை, வாஸ்து மூட நம்பிக்கை, எண் கணித `நியூமராலஜி மூட நம்பிக்கை, யாகங்கள் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற பெரும் மூட நம்பிக்கை - இப்படி பலப் பல மூட நம்பிக்கைகளால் நம் நாடும், மக்களும் மிகவும் கீழிறக்கத்திற்கு நாளுக்கு நாள் சென்று கொண்டிருக்கின்றனர்!
அறிவியல் படிக்கும் இளைஞர்கள்முதல், அய்.ஏ.எஸ்., அதிகாரிகள், அய்க்கோர்ட், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வரை கையில் கயிறு கட்டிக் கொண்டு, தனது கையில் உள்ள மாந்திரீக சக்தி வாய்ந்த கறுப்பு அல்லது பல வண்ணங்களில் தான் தனது வெற்றி, வளர்ச்சி, எதிர்காலம் எல்லாம் இருக்கிறது என்று நம்பி, கெட்டு அழிவதைக் கண்டு நமக்கு வெட்கமும், வேதனையும் தான் மிஞ்சுகிறது.
சிறு கத்தியை எடுத்து அறுத்தாலோ, கையினால் இழுத்துப் பிய்த்தாலோ அக்கயிறு அறுந்து விடும் என்றால், அது எப்படி ``சக்தி வாய்ந்த கயிறாக இருக்க முடியும்? சிந்திக்க வேண்டாமா? கத்தி அல்லவா உடைய வேண்டும்?
மாதந்தோறும் மூட நம்பிக்கைகளை, போதையைத் தொடர்ந்து ஒவ்வொரு மனிதருக்கும் ஊற்றிக் கொண்டே இருந்தால், அவன் எழுந்து நிற்க முடியுமா?
நவராத்திரி - பெரியவர்களின் பொம்மை விளையாட்டு. புரட்டு புராணங்களை வைத்து இப்படி ஒரு கேலிக்கூத்து இம்மாதத்தில், ஆயுத பூஜை வேறு!
சென்ற மாதம் பிள்ளையார் என்ற வடநாட்டு இறக்குமதி மூடச் சரக்கினை வைத்து மதவெறியைத் தூவி, கடலில், ஆற்றில், குளத்தில் கரைத்த மிகமிக அசிங்கமான காட்டுமிராண்டித்தனம், சுற்றுச்சூழலை மிகவும் மாசு படுத்திய பண்டிகை (இந்து மதப் பண்டிகை) வட நாட்டுக் கறுப்புப் பணமும், மதவெறி பாசிசமும் கைகோத்த ஓர் மானக்கேடான பண்டிகை!
உலகிலேயே எந்த மதக்காரனும் இப்படி அவன் நம்பும் - வணங்கும் கடவுளை தண்ணீரில் ``முக்கி விசித்திர விபரீத விளையாட்டு விளையாடமயாட்டானே! மகாவெட்கம்!!
அடுத்து `தீபாவளி என்ற பெயரில் மற்றொரு அருவருக்கத்தக்க ஆபாச அறியாமைப் பண்டிகை. இது வெறும் மூட நம்பிக்கை பரப்பும் நாள் மட்டுமல்ல; தமிழர் - திராவிடர் மீது தொடுக்கப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பை அடிப்படையைக் கொண்ட நரகாசுரன் வதை என்ற கற்பனை.
பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலில் ஒளிந்துகொண்டான் இரண்யாட்சதன். மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து மீட்டான்; பூமாதேவிக்கும், பன்றிக்கும் பிறந்த நரகாசுரனை வதம் செய்து அழித்ததாகக் கூறி இப்படி அறிவுக்குச் சற்றும் பொருந்தாத ஆபாசத் திருநாள்! பூமாதேவி பன்றியுடன் புணர்ந்து ஒரு பிள்ளை பெற்றாளாம்; அதுதான் நரகாசுரனாம்!
இதை அப்படியே மாற்றி, தீமையை அழித்து, நன்மையைச் செய்வதுதான் இதன் அடிப்படை என்று அறிவுறுத்தினான் என்ற பிரச்சாரம் பொருந்தாக் கதையின் போதனை இது!
பக்தர்களே கூட இப்போது சற்று சிந்தித்து வெட்கப்படு கிறார்கள்!
அறிவியல் மனப்பான்மை, ஏன், எதற்கு என்று கேள்வி கேட்பது, சீர்திருத்தம், மனிதநேயம் - இவை அனைத்தும் இந்நாட்டு குடிமகன் ஒவ்வொருவருடைய அடிப்படைக் கடமை என்று (இந்திய அரசியல் சட்டத்தில் 51-ஏ பிரிவு என்பதன்மூலம்) கூறிவிட்டு, இப்படி அரசுகளே தீபாவளிக் கூத்து அடிக்க மக்களை ஆயத்தப்படுத்துவது வேதனையும், வெட்கமும்படத்தக்கது. தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் செய்த பிரச்சாரம் என்ற வெளிச்சம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், நாம் எவ்வளவு மோசமான காட்டுமிராண்டிகளாக பக்தியின் பேராலும், மூடத்தனத்தின் பேராலும் ஆகியிருப்போம் என்பதை எண்ணுங்கள்!
பகுத்தறிவாளர் எக்கட்சியில் இருந்தாலும், அவர்களும் சுயமரியாதை வீரர்களும், தீபாவளி மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யவேண்டும்!
பலூன் பெரிதானாலும், குண்டூசி சிறிய அளவுதான் என்றாலும், குத்தினால் என்னவாகும்?
அதுபோல, பலூன் பெரிதாக இருப்பினும், மன உறுதியுடன் அடைமழைபோல் இடையறாத குண்டூசி குத்திடும் பிரச்சாரத்தைச் செய்யுங்கள்.
மக்களை அறியாமை, மடமை, மூடத்தனம் இவற்றிலிருந்து காப்பாற்ற அனைவரும் முனைப்புடன் ஒன்றுபட்டு பிரச்சாரம் செய்வோம்!
அறிவும், தெளிவும் இருந்தால் ரூபாய் 2500 கோடி தமிழ்நாட்டுத் திட்டத்தினை - சேது கால்வாயை- ராமனைக் காட்டி தடுக்க முயற்சிக்கும் இழிதகைமை அரசியல் களத்தில் தோன்ற முடியுமா?
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! திருந்துங்கள்!!!
கி. வீரமணி
ஆசிரியர்
|