ஆசிரியர் பதில்கள்
யானைப் பசிக்கு சோளப் பொரி
கேள்வி 1: ராமர் பாலம் என்னும் மணல் திட்டுப் பற்றி கருத்து சொன்ன மத்திய அமைச்சர் கபில்சிபல் ராமர் பாலத்தை ராமர் தான் கட்டினார் என்று மக்கள் நம்பினால் அந்த நம்பிக்கையை நான் மதிக்கிறேன். ஆனால் அதற்கு அறிவியல் ஆதாரம் உண்டா? என்று கேட்டால், இல்லை என்று தான் பதிலளிக்க முடியும் என சொல்லியுள்ளாரே! இதற்கு என்ன பொருள்?
-ஐ.கிருபாகரன், சோளிங்கர்
பதில்: நம்பிக்கை (குயவை) வேறு; அறிவியல் வேறு. நடைமுறைக்கு ஆதாரத்திற்கு நம்பிக்கை உதவாது. அறிவியலே துணை நிற்கும்.
கேள்வி 2: சோ கூட்டத்துடன் சேர்ந்து சேது சமுத்திர திட்டத்தை வைகோ எதிர்த்துள்ளாரே?
-ஜீவிதா ரமேஷ், சேபேட்டை
பதில்: சேராத இடந்தனில் சேர்ந்தால் இந்த கதிதான்! இராமனை குடிகாரன் என்று வால்மீகி கூறியதை கூறக்கூடாதாம்! இவருக்கு ஏன் இன்னமும் பெரியார் முத்திரை! சேது சமுத்திரப் பிரச்னையில் முதல்வர் பற்றிக் கூறிவிட்டு, அவர் ஆதாரங்களைக் காட்டிய பின்னராவது, இந்த அவமானத்தை வலியச் சென்று அவர் வாங்காமலிருப்பது நல்லது.
கேள்வி 3: சமீபத்தில் தமிழக அரசு கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் இனத்தவருக்கு 7ரூ இட ஒதுக்கீடு செய்து அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த இடஒதுக்கீடானது பெருவாரியாக உள்ள பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இதை எவ்வாறு தாங்கள் ஆதரிக்கின்றீர்கள்? சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும், இன்னும் எத்தனை வருடங்களுக்கு இட ஒதுக்கீடு என்ற பெயரில், திறமையற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கப் போகின்றீர்கள்?
-ஜி.ராமச்சந்திரன், நன்னிலம்-610 105
பதில்: உங்கள் கேள்வியே தவறானது. திறமையற்ற, தோல்வி அடைந்தவர்களை யாரும் தேர்வு செய்வதில்லை. தகுதி, திறமை என்பது பற்றி சரியான தெளிவான விளக்கம் இல்லையே! 5000 ஆண்டுகாலமாக நிலவியதற்கு 50 ஆண்டுகால இடஒதுக்கீடு என்பதே யானைப் பசிக்கு சோளப் பொரி மாதிரி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
கேள்வி 4: பெரியார் படத்தின் ஒரிஜினல் னுஏனு எப்போது வெளிவரும்?
-அ.கோமகன், வலங்கைமான்
பதில்: விரைவில் வெளிவரும்.
கேள்வி 5: மழைக்காலங்களில் வீணாகக் கடலில் ஓடி கலக்கும் வெள்ள நீரை, தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளிலும், கொள்ளிடத்திலும் தரை மட்ட தடுப்பு அணைகளை கட்டுவதன் மூலம் சேமிக்கலாம் அல்லவா?
-கு.நா.இராமண்ணா, சீர்காழி
பதில்: தாராளமாக சேமிக்கலாம். அப்படி ஒரு திட்டத்தை கலைஞர் அரசு செய்யும் என்றே நம்புகிறோம்.
கேள்வி 6: தமிழக முதல்வருக்கு காட்டுமிராண்டித் தனமான கொலை மிரட்டல் விடுத்த ராம்விலாஸ் வேதாந்தி மீது தி.க. சார்பில் வழக்கு தொடரப்படுமா?
-கே.கே.பாலசுப்ரமணியன், குனியமுத்தூர்
பதில்: புகார் கொடுத்துள்ளோம். அதன் மீது என்ன நடவடிக்கை என்று பார்த்துப் பிறகு அடுத்த நடவடிக்கை பற்றி யோசிப்போம்.
கேள்வி 7: திரு.அத்வானி அவர்கள் ராமர் இல்லையென்றால், தசரா கிடையாது, தீபாவளி கிடையாது. ராஜ்கோட்டில் காந்தி சமாதியில் உள்ள ஹேராமை அழித்துவிட வேண்டியது தானே என்கிறார். இதனால் யாருக்கு நட்டம்?.
-எஸ்.நல்லபெருமாள், வடசேரி,தாகர்கோவில்-629 001
பதில்: பூணூல் கூட்டத்திற்கும், ஏமாற்றும் புல்லர் கூட்டத்திற்கும் நட்டம்.
கேள்வி 8: ஏழை, பணக்காரர்களின் அந்தஸ்து இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. படித்த ஒரு குறிப்பிட்ட கூட்டத்தை வைத்துக் கொண்டு, ஏழை மக்களை அரசு புறக்கணிப்பது தானே, இதற்குக் காரணம்?
-மு.தமிழ்ப்பாண்டியன், வில்லிவாக்கம்,சென்னை-49
பதில்: ஏழ்மையும் வறுமையும், உண்மை-யாய் சமதர்ம ஆட்சி வந்தால் தான் முற்றாக ஒழிய வாய்ப்பு ஏற்படும்.
கேள்வி 9: பெங்களூரில், தமிழக முதல்வரின் மகளின் வீட்டை குண்டுவீசித் தாக்கியதன் மூலம், மதக்கலவரத்தைத் தூண்டிவிட்டு, பல இலக்கம் தமிழர்களைக் கொன்றுக்குவிக்க அணியமாகி-விட்டது தெளிவாகிறது. இந்நிலையில், நம் அறவழிப் போராட்டம் என்ன பயனைத் தரும்? தற்காப்பு நடவடிக்கைகளுக்காவது நாம் அணியமாக வேண்டாமா?
-கவிஞர் ம.வீரபாண்டியன்,பழவூர், நெல்லை
பதில்: பொறி தட்டும் சிந்தனைக்கும் செயலுக்கும் உரிய தங்கள் யோசனைக்கு நன்றி.
|