கவிதை

சுண்ணாம்பு இரவல் கேட்டு
நாக்கை இழந்த கதை நமது.
வளர்ச்சிக்கு உதவுவதாய்
தளரச் செய்த துணை
எழுவதற்கு எனப் பற்றிய கரம்
அழுத்துகிறது.
பல்லக்கு என்று ஏறினோம்,
இன்று அது நம் முதுகில்.
கடல் கிழவனைச் சிந்துபாத்
எப்படித் தள்ளப்போகிறான்?
புற்றுநோயைவிட
வளர்ச்சி வேகமிக்கது கடன்.
கரன்சி நோட்டுக்குள் நம்மை வைத்துச்
சுருட்டிப் புதைத்துவிடும் உலக முதலாளியம்.
பீரங்கியின் நவீன வடிவம்
அந்நியப் பணம்
வாங்கினோம், உண்மைதான், திருப்பித் தரும்போது
கையுமல்லவா காணாமற்போகிறது
நாம் பெருமைப்படலாம்;
பிச்சையெடுப்பதற்கும், தங்கக் கொப்பரை
உலக வீதிகளில் அங்கப்பிரதட்சணம் செய்ய
போயிங்கில் போயிறங்குவோம்.
அந்நியச் செலாவணி ஈட்டுவதற்கு
அனைத்தையும் விற்று நலிகிறோம்
ஏற்றுமதி செய்ய இன்னும் நம்மிடம்
என்ன இருக்கிறது புராணங்களைத் தவிர?
கடன் வாங்கிக் கழித்தவை
இறந்த காலமும், நிகழ்காலமும், எதிர்காலமும்
பொருளாதார ஆதிக்கங்களின்
கொம்புக்கு ஆடும் குரங்காய் இழிந்தோம்
சுதந்திரத்தை வாங்கித் தந்தாராம் காந்தி
இவர்கள் விற்றுத் தீர்க்கிறார்களே...!
வேட்டைக்காரர் வருகையால்
ராட்டை நொறுங்குகிறது
நிமிர்ந்த கொடிகளை வணங்குவோம் வணங்குவோம்;
குனிந்து பாராதீர்,
நிர்வாணம் தெரியும்!
-நீலமணி
புதுப்பாக்கள்
படகு கவிழ்ந்து பலி
நடக்கவா கவிழ்க்கவா
இராமர் பாலம்?
குறுக்கே பூணூல் கயிறு
தடுக்கியா விழுவான்
கப்பலோட்டிய தமிழன்?
இராமர் பாலத்தில்
இராமர்கள் நடக்கட்டும்
நமக்கு தமிழன் கால்வாய்
மக்களால் மக்களுக்காக மீறிய உச்ச அற மன்றம்
முகத்தில் கரி
மணியோசை இல்லை இனி
தலைவெட்டும் வேதாந்தம்
இந்துத்துவா இறைச்சிக்கடை
-த.ரெ.தமிழ்மணி
ஏழைகள்
பரம பதத்தில்
ஏணியில் கால் வைத்து
ஏறிச் செல்ல விருப்பம் தான்
இருந்தாலும்
என்ன செய்ய?
பாம்புத் தீண்டியே
பழகிப் போனோம்.
இடைச்சொல்
ஆண்டாண்டு காலமாய்
அண்ணன் தம்பியாய்
வாழ்ந்தான் மனிதன் மனிதனாய்
பங்காளிகளுக்குள்
பகையை மூட்டி
அதிகாரத்தைக் கைப்பற்ற
நூல் போட்ட(ஆ) சாமி
கோர்த்து விட்ட
புதிய சொல் ஜாதி
சு.சண்முக சுந்தரம், கருத்தனேந்தல்
பொழுதும் பழுதும்
வீட்டில்
எந்தச் சண்டை
சச்சரவுமில்லை
மாமியார்-மருமகள்
தந்தை-மகன்
தாய்-மகள்
இப்படி எந்த உறவுக்குள்ளும்
மனமுறிவில்லை
கணவன் மனைவியிடையே
மணமுறிவுமில்லை.
பொழுது போக்கும்
பெட்டி(டி.வி) பழுதாம்.
பொழுது போக்கும்
பெட்டியின்
பழுது நீக்கப்பட
பழுதானது
குடும்பம்!
-கே.பி.மாரிகுமார், மதுரை.
கருணை?
அன்பே
சிவம்! - அவன்
புலித்தோல் மேல்
தவம்!
வல்லமை
கோவர்த்தன கிரி
தாங்கிய கோபாலன்-கோயில்
மேலேயே
இடிதாங்கி!
விளங்காதவை
அஷ்டமி-நவமி
விளங்காத நாள்!
அந்நாளில் பிறந்த
அவதாரங்களை வணங்கும்
பக்தன் மட்டும்
விளங்குவானா?
-வெ.தண்டபாணி, சூலூர்
வரவேயில்லை....
கோயில் திருவிழாவில்
ஜாதிச் சண்டை
பாதிக்கப்பட்டோர்,
அனுமதிக்கப்பட்டனர்
மருத்துவமனைகளில்.
நியாயம் தேடி
முறையீடு-
நீதி மன்றத்தில்,
வன்முறை தடுக்க
ஊரைச் சுற்றி
காவல் துறை.
பாதுகாப்புப் பெட்டகத்தில்
பத்திரப்படுத்தப்பட்டது
அம்மன் நகைகள்.
வேடிக்கை பார்த்தோர்
விசாரிக்கப்பட்டனர்
சாட்சியங்களாய்!
கடைசி வரை
வரவேயில்லை-
சாமி....!
-புதுவை.ம.ஞானசேகரன்,
முத்திரையர்பாளையம்.
|