தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
நீதி?
குரல்
ஆய்வு
கவிதை
சிறுகதை
ஹாலிவுட் கலைவாணர்
கற்பனை கலாட்டா
நாட்டு நடப்பு
நூல் ஆறிமுகம்
எப்படி?
பேட்டி
நெசந்தானுங்க
சுயமரியாதைத் திருமணம்
உலகப்பார்வை
பதிலடி
2007 நோபல் பரிசுகள்
கல்வி

 

 

சிறுகதை

என்.செல்வராஜ்

பாலுவின் கார் மிதமான வேகத்தில் சென்று-கொண்டிருந்தது. மலைப் பிரதேசம் என்பதால் சாலை எங்கும் மழைநீர் வடிந்து கொண்டிருந்தது.
பாலு அமெரிக்காவில் கம்யூட்டர் இன்ஜினி-யராக பணிபுரிகிறான். கை நிறைய சம்பளம். மன நிறைவான வாழ்க்கை. எல்லாம் இந்த நான்கு வருடங்களில் கிடைத்தது. அதற்கு முன்பு.
பாலு செல்வக் குடும்பத்தில் பிறந்தவன் அல்ல. இன்று வயிற்றுப் பசி தீர்ந்தது. நாளைக்கு என்ன செய்வது என்ற ஏக்கத்திலும் துக்கத்திலும் உள்ள குடும்பம்.
அவன் தந்தைக்கு விவசாய வேலையைத் தவிர வேறு வேலை தெரியாது. அவன் தாய் வீடே உலகம் என்று வாழ்பவர். அவனுக்கு அழகு மயில் போல ஒரு தங்கை உண்டு.
பாலுவை பத்தாம் வகுப்பு வரை படிக்க வைப்பதற்கு அவன் குடும்பம் திணறிப் போனது. பாலு நன்றாக படிப்பான். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் உயர்ந்த மதிப்பெண்-களைப் பெற்றிருந்-தான். மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேறி இருந்தான்.
பள்ளியில் மதிப்பெண் சான்றிதழ் தரும்போது தலைமையாசிரியர் கேட்டார்:-தம்பி! நல்ல மார்க், என்ன குரூப் எடுக்கப் போறே? என்று.
படிச்சது எல்லாம் போதும் சாமி. ஏதாவது வேலைக்கு போகட்டும். வயித்துப் பசியே தீர்க்கறதே எங்களுக்கு பெரும்பாடு. இனி எதுக்குப் படிப்பு?
பாலுவின் தந்தை கூற, பாலுவின் கண்களில் கண்ணீர் திரண்டது. பாலு வீட்டின் ஏழ்மையை நினைத்து அழவில்லை. படிக்க ஆசைப்-படுகிறோம்; படிக்க வசதி இல்லாமல் போய்-விட்டதே என்ற துக்கத்தினால் அழுகிறான்.
பாலுவின் கண்ணீருக்கும் பலன் கிடைத்தது. சமூக சேவை செய்யும் சுழற்சங்கம் அவனைப் படிக்க வைக்க முன் வந்தது.
வறுமை, வேறு வழி இல்லை என்னும் இக்கட்டில் நம்மைக் கொண்டுபோய் நிறுத்தும்-போது நம்முடைய ஆற்றல் பல மடங்கு அதிகரிக்கும். முடியாததையும், முடித்துக் காட்டும். இந்தக் கூற்று பாலுவைப் பொறுத்தவரை உண்மையாகிவிட்டது.
தன் குடும்ப வறுமையை போக்க வேண்டும் என்று படித்த பாலு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்றான்.
மாநில ரேங்க பெற்றதால் பாலு இனி படிக்கப் போகும் படிப்பிற்கான செலவை அரசு ஏற்றுக்கொண்டது.
பாலுவிற்கு கொஞ்சம் தைரியம் வந்தது. கம்ப்யூட்டர் படிப்பை படித்தான். படிப்பு முடியவும் கேம்பஸ் இன்டர்வியூ நடக்கவும் சரியாக இருந்தது. அமெரிக்க நிறுவனம் எங்கள் நாடு வல்லரசாக திகழ உங்களைப் போன்ற அறிவாளிகள் எங்கள் நாட்டிற்கு தேவை என்பதை நேராகக் கூறாமல், அவனை வேலையில் சேர்த்துக் கொண்டது.
அமெரிக்கா சென்றவுடன் மாதா மாதம் வீட்டிற்கு பணம் அனுப்பினான். வாடகை வீட்டை விட்டுசொந்த வீட்டில் குடிபுகுந்தனர். அவன் தங்கையை நல்ல கல்லூரியில் சேர்க்க ஏற்பாடாகி இருந்தது.
பாலுவின் கார் வீட்டு வாசலில் நிற்க ஊரே வேடிக்கைப் பார்த்தது. பாலுவின் பெற்றோர் பெருமிதத்துடன் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, என்னோட மகன் என்று கூறாமல் அவனை உள்ள அழைத்துச் சென்றனர்.
பாலு மீண்டும் அமெரிக்கா புறப்பட நான்கு நாட்களே இருந்தன. அதற்குள் தான் பிறந்த மண்ணை மூன்று, நான்கு முறை சுற்றி வந்து விட்டான்.
தான் பிறந்த மண்ணிற்கு ஏதோ செய்ய வேண்டும் என்ற எண்ணம் பாலுவிற்கு தோன்றியது. என்ன செய்யலாம் என பாலு ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போது, தம்பீ, உன்னைப் பார்க்கறதுக்கு, உங்கிட்ட பேசறது-க்கு ஊர் பெரியவங்க வந்திருக்-காங்க என்று அவன் தாய் அவனின் சிந்தனையை கலைத்தார்.
பாலு எல்லோருடைய முகத்தையும் கவனிக்க தவறவில்லை. வரவேற்று எல்லோர்-க்கும் தேநீர் கொடுத்தான். வந்தவர்கள் ஒரு திட்டத்துடன் வந்த காரணத்தால் அவர்களால் அமைதியாக அமர முடியவில்லை. ஒருவர் முந்திக்கொண்டு, தம்பீ!, நம்ம ஊர்க் கோயில் பாழடைஞ்சு கிடைக்குது. அதை இடிச்சு தரைமட்டமாக்கிட்டு புதிய கோயில், ராஜ-கோபுரம் கட்டுலாம்னு முடிவு செஞ்சிருக்-கோம். நீங்க தான் அந்த கோயிலை கட்டித்-தரணும். உங்களுக்கு புண்ணியம் போகும் என்றார் கரகரத்த குரலில்.
பாலு சிறிது நேரம் அமைதி காத்தான். பாலு தீதும், நன்றும் பிறர் தர வாரா என்ற கொள்கை கொண்டவன். அவரவர் வாழ்க்கை-யில் உயர்வு காண்பதும், தாழ்ச்சி அடைவதும் விதிப்பயன் அல்ல. அவரவரின் விடாமுயற்சி, கடின உழைப்பு, சகிப்புத்தன்மையே காரணம் என்ற எண்ணத்தை மனதிற்குள் நிலை நிறுத்திக் கொண்டவன்.
பாலு குரலை சரி செய்தபடி, நீங்க வந்தது ரொம்ப லேட். நம்ம ஊர் பள்ளிக்கூடம் இருக்கற இடம் சதுப்பு நிலம். அது மட்டும் இல்லே ஆற்றங்கரை ஓரத்துல இருக்கறதுனால கட்டிடத்-தோட அடித்தளம் எப்பவும் குளிர்ச்-சியாக இருக்கும்.
உட்கார பெஞ்ச் கிடையாது. ஒவ்வொரு பையனும் தன்னோட வீட்ல இருந்து கொண்டு போற பிளாஸ்டிக், சாக்குப்பை மேல உட்-கார்ந்து பாடம் படிக்கறாங்க.
வெயில் காலத்துல சரி, மழைக்காலத்தில் மழையில நனைஞ்சிட்டு வர்றவங்க அப்படியே தரையில உட்காந்த உடம்பு எதுக்காகும்.
உடம்பு நடுக்கத்துல அவங்களால படிப்புல கவனம் செலுத்த முடியுமா? காய்ச்சல் வந்து காட்டுக்கு போக வேண்டியது தான்.
கவர்மெண்ட் கிட்ட நான் சம்பாதிச்ச பத்து இலட்சம் பணத்தை குடுத்து புதுசா ஒரு பள்ளிக்கூடம் கட்டச் சொல்லப் போறேன். இனிமேலாவது படிக்கற பசங்க பெஞ்சு மேல உட்காரட்டும்.
நாலு எழுத்து படிச்சா தான் அறிவு வளரும். சிந்தனை வரும். நம்ம கிட்ட இருக்கற தாழ்வு மனப்பான்மை ஒழியும்.
பள்ளிக்கூடம் கட்டுனா அது அப்படியே இருக்கும். கோயில் அப்படி இல்லே. எப்போ நமக்குள்ளே சாதிச் சண்டை, மதச் சண்டை வரும்னு தெரியாது; இடிப்போம்னு தெரியாது.
கோயில இழுத்து மூடுவோம். ஊரே கலவரமா இருக்கும். மனுசனோட சிந்தனைச் சக்தி வளர்ந்தா இப்படி நடக்காது. அதுக்கு பள்ளிக்கூடம் தான் தேவை; கோயில் இல்லே!
பாலு பேசி முடிப்பதற்குள் எதையோ எதிர்பார்த்து வந்த கூட்டம் எதுவும் கிடைக்-காத காரணத்தால் ஆத்திரத்துடன் வெளி-யேறியது. ஆத்திரம் அவர்கள் நடையில் தெரிந்தது.