ஹாலிவுட் கலைவாணர்

சு.அறிவுக்கரசு
கொஞ்ச நாள்களே மணவாழ்க்கையில் இணைந்திருந்த மில்பிரிட் வாழ்வூதியத்தை தொகையாகப் பெற்ற தொகை மூன்று லட்சம் டாலர்கள்! எவ்வளவு பெரிய தொகை! இந்தத் தொகை தங்களுக்குக் கூடக் கிடைக்கும் வாய்ப்பு கிட்டுமே என வனிதாமணிகள் அவரை வட்டமிட்டனர். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவரின் நண்பர்கள் அவரிடம் கூறி வந்தனர்.
அப்படியிருந்தும் ஒரு நடிகை-ஒரு குழந்தைக்குத் தாயாக இருந்த போதிலும் கைபடாத ரோஜா என்றே கூறி வந்த நடிகை-சாப்ளினுக்கு நெருக்கமாகி விட்டாள். மனைவியை இழந்து தனியனாக இருந்த பணக்கார ஆண்கள் எப்படியும் இப்படிப் பட்டோரின் வலையில் விழுவது என்பது வாடிக்கை தான். இருவரும் பழகி வந்தனர்.
ஒரு நாள், அந்த நடிகை யாராலோ கடத்தப்பட்டு விட்டாள். அப்பொழுது அவள் பயணித்துக் கொண்டிருந்த காரிலிருந்து கடத்தப்பட்டுவிட்டாள். அவளுடைய பொருள்கள் காரில் கான்னாபின்னாவென்று சிறதறிக் கிடந்தனவாம். செய்தி நாடு முழுவதும் பரவியது. சாப்ளின் மிகவும் வேதனைப்பட்டார்.
சாப்ளினுக்கு ஒரு கடிதம் வந்தது. பிரித்துப் படித்தார். அவருடைய அன்புக்குப் பாத்திர-மான நடிகையைப் பெற வேண்டும் என்றால் ஒரு பெருந்தொகையை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேர்ப்பிக்க வேண்டும் என எழுதியிருந்தது. நடிகையிடம் மயங்கிக்கிடந்த சாப்ளின் அவளைத் திருப்பப் பெற விரும்பினார். ஆனாலும், இதில் ஏதோ சூது இருக்கலாம் எனவும் நினைத்தார். எந்த இடத்தில் பணத்தைச் சேர்க்க வேண்டும் என்று கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததோ, அந்த இடத்தைக் கண்காணித்தார். ஒரு இளைஞன் அங்கு வந்து போவதைக் கவனித்துவிட்டார். அவனைப் பிடித்து உதைக்கவே உண்மையைக் கக்கிவிட்டான். அந்த நடிகையே அப்படி ஒரு கடிதத்தை எழுதச் சொல்லிய உண்மையைத் தெரிவித்துவிட்டான்.
நடிகை ஒளிந்திருந்த இடத்தையும் அவன் கூறிவிட்டான். சாப்ளினின் நண்பரான பத்திரிகையாளர் ஒருவர் அந்த இடத்திற்குப் போனார். அவரைப் பார்த்த நடிகை ஓடித் தொடங்கினாள். அவளையும், மடக்கிப் பிடித்து விட்டனர். அவளுடைய காசுபறிக்கும் திட்டம் அம்பலமானது. ஏடுகள் எல்லாம் அதைப் பற்றி எழுதின.
மேதை என மற்றவர்களால் மதித்து நடத்தப்பெற்ற தன்னை ஒரு நடிகை ஏமாற்-றிடத் திட்டம் போட்டாளே என்பதும், அதற்குத் தான் கொண்டிருந்த அன்பைத் தூண்டிலாகப் பயன்படுத்திவிட்டாளே என்ற எண்ணமும் அவரின் ஈகோவைத் தாக்கி-விட்டன. அதே வேளையில் தன் பழைய காதலி எட்னா பர்வெயன்ஸ் அவருடைய நினைவுக்கு வந்தாள். பல படங்களில் தன்னுடன் நடித்தவள். சில காலம் காதலியாக இருந்தவள். அவளுக்குக் கூடத் தெரிவிக்காமல் மில்பிரிட்டைத் திருமணம் செய்து கொண்டு வாழத் தொடங்கிய போதும் வாடிப் போகாதவள், சாப்ளினிடம் அதைப் பற்றி எதையுமே கேட்காதவள். தன் உயரம் அறிந்த நல்ல பெண்.
ஒரு முறையல்ல, இருமுறை தான் நேசித்த பெண்களின் துரோகத்தைச் சந்தித்த பிறகு, பெண்கள் தன்னைவிடத் தம்மிடம் இருக்கும் பணத்தைக் காதலிக்கிறார்கள் என்கிற உண்மை சுட்ட பொழுதுதான் எட்னாபர்வ-யென்சைப் பற்றிய நினைப்பு மேலோங்கியது. அவர் மனம் அவரைக் குத்தியது. தாம் திருமணம் செய்து கொண்ட பிறகு பட வாய்ப்புகள் எதுவும் வராத நிலையில் எட்னா வாழ்க்கைத் தேரை உருட்டுவதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்ததை அறிந்த போது அவர் மனம் அந்த நல்லவளுக்காக அழுதது.
பெண்களே இனி வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார். பெண்ணாகி வந்த ஒரு மாயப் பிசாசு என்று இங்கே ஓர் ஆள் பாடியதைப் போன்ற நிலைக்கு வந்து விடவில்லை. எட்னாவுக்குக் கதாநாயகி பாத்திரத்தைக் கொடுத்து ஒரு படம் எடுக்க முடிவு செய்தார். அவரே வழக்கம் போல இயக்குநர். ஆனால், இதில் அவர் நடிக்க-வில்லை. நடிக்காமல் இயக்குநர் பொறுப்பை மட்டுமே அவர் வகித்தது இந்தப் படத்தில் தான். அந்தப் படம் "பாரிசில் பெண்" (A Women of Paris) படத்தைப் பற்றிச் சிந்தித்து தம் மனதுக்குள்ளேயே செதுக்கிக் கொண்டி-ருந்த போது சன்னிசைட் (Sunnyside) என்ற படத்தை எடுத்தார். அதில் நடித்தார். எட்னா-வையும் நடிக்க வைத்தார்.
அவருடைய புகழ்பெற்ற முழு நீளப் படமான தி கிட் (The Kid) தோன்றியதும், அதில் நடித்த சிறுவன் கிடைத்ததும், ஒரு சுவாரசியமான கதைபோல் இருக்கும். ஒரு நாள், ஒரு நாடகத்தைப் பார்த்தார். தந்தையும், மகனுமாக நடித்துக் கொண்டிருந்தனர். மகனாக நடித்தவன் அய்ந்து வயதுச் சிறுவன். அவன் நடிப்பும், நடை-உடை-பாவனைகள், அவன் செய்த குறும்புக் கோட்டைகள் என எல்லாமே எல்லாரையுமே கவர்ந்த விட்டன. காட்சிகள் முழுவதையும் கண்ட மக்கள் அனைவருமே சிரித்துக் கொண்டேயிருந்தனர். அவர்களில் சாப்ளினும் ஒருவர். சிறுவன் அவரை வெகுவாகக் கவர்ந்து விட்டான்.
சிறுவனின் தந்தையைச் சந்தித்தார். நடிக்கக் கூப்பிட்டார். தன்னைத் தான் கூப்பிடுகிறார் என நினைத்த தந்தை சிறுவனாகத் தேடுகிறார் என்றவுடன் சலித்துக் கொண்டார். எனினும், சம்மதம் தெரிவித்தார் ஒரு நிபந்தனையுடன், அந்தப் படத்தில் அவருக்கும் வேடம் தர வேண்டும், சாப்ளின் சம்மதித்தார். இல்லை-யென்றால் மகனை நடிக்க அனுமதிக்க மறுத்-தால்... தம் லட்சியப்படம் எடுக்க முடியாமல் போய்விடுமே!
சிறுவனுக்குச் சம்பளம் 75 டாலர்கள், தந்தைக்குச் சம்பளம் 125 டாலர்கள். எல்லாமே வாரச் சம்பளம் தான். அங்கே எல்லாமே வார அடிப்படையில் தான்! இன்றளவும், தந்தைக்கு 125 டாலர்கள் கொடுத்து மகனைத் தான் வாங்கினார். இல்லையென்றால் அப்பன் பிட்டுக் கொண்டு போய்விட்டால்... சாப்ளின் வணிக விசயத்தில் வல்லுநர் தான்.
பையன் பெயர் ஜாக்கிகூகன். கண்களில் சதாசர்வநேரமும் சிரிப்பின் ஒளி. அதனூடே இழையோடிக் கொண்டேயிருந்த சோகம். பிஞ்சு முகம். ஆனாலும், ஒரு ஏக்கம், இவை சாப்ளினைக் கவர்ந்தன. அவனில் அவர் தன்னைக் கண்டார். தாம் சிறுவனாக இருந்த போது இவனைப் போலவே இருந்ததை நினைவு கூர்ந்தார்.
தன் சிறுவயது நிகழ்ச்சிகளைக் கலந்து உயிரோட்டமுள்ள காட்சிகளை உருவாக்கி-னார். சிறு சிறு சம்பவங்களையும், காண்போர் கண்களையும் கருத்தையும் கவர்ந்திடும் வகையில் அமைத்தார். குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிடப் பெற்றோர் படும்பாடுகள் குழந்தைகளுக்குத் தெரியாது அல்லவா? அதனை உணரவைக்கப் புதுப்புது வழிகளைக் கையாண்டார்.
படத்தை எடுத்து முடிக்க ஓராண்டுக் காலம் எடுத்துக்கொண்டார். இது பல கிசுகிசுகளுக்கு வழிவகுத்துவிட்டது. சாப்ளினின் கற்பனை ஊற்று வறண்டு விட்டது; சிந்தனை தூர்ந்து விட்டது; அவர் அவ்வளவு தான் என்றெல்லாம் பேசத் தொடங்கினர். இவரும் தம் பங்குக்குப் பத்திரிகையாளர்களிடம் பேச மறுத்து வந்தார். பத்திரிகையாளர்கள் இதையே சாக்காக வைத்துக் கண், காது, மூக்கு வைத்துக் கண்டதையும் எழுதத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், அவர் கவலைப்படாமல் கருமமே கண்ணாக இருந்தார். படம் வெளி வந்தது.
படத்தின் முதல் காட்சி மகப்பேறு மருத்துவமனையின் வாசலில் தொடங்கும். கைக் குழந்தையுடன் ஓர் இளம் பெண் வெளியே வருவாள். அவள் எட்னா பர்வெயன்ஸ், படத்தில் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற தாய். ஓர் ஓவியன் அவளைக் காதலித்துக் குழந்தையைக் கொடுத்துவிட்டு ஒடிப் போய்விட்டான். மிகவும் ஏழையான, தாய் வாழ வழியில்லாததால் ஒரு முடிவோடு வெளியே வருகிறாள். குழந்தையை யாரிடமா-வது சேர்ப்பித்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டு விடவேண்டும் என்கிற எண்ணம். எவரிடம் குழந்தையைச் சேர்ப்பது? தேடிய அவள் கண்களில் தென்பட்டது ஒரு பெரிய பங்களாவின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார். அந்தக் காரின் உள்ளே, குழந்தையை வைத்து விட்டுப் போய் விடுகிறாள். காரின் உரிமையாளர் செல்வந்தராகத் தான் இருப்பார், தன் குழந்தையை நன்றாக வளர்ப்பார் என்கிற நம்பிக்கை அவளுக்கு!
நின்று கொண்டிருந்த காரைப் பார்த்து-விட்ட இரண்டு திருடர்கள் காரை அபேஸ் செய்துவிடுகின்றனர். ஓடிக் கொண்டிருக்கும் போது குழந்தை அழுகிறது. சத்தம் பேட்டுக் காரை நிறுத்திவிட்டுத் துப்பாக்கியை எடுத்துப் பிடித்தபடி பின் கதவைத் திறக்கிறார்கள். குழந்தை அழுது கொண்டிருக்கிறது. அதற்குப் பசி அழுகிறது. சாலப் பரிந்து பாலூட்டும் தாய் தான் ஓடிவிட்டாளே! குழந்தை அழுகிறது. திருடர்க்ள் சமூக எதிரிகள் தானே! குழந்தை-யின் பசியை உணரும் சக்தியும், மனமும் அவர்களுக்கு ஏது? குழந்தையை ஒரு குப்பைத் தொட்டிக்குப் பக்கத்தில் கிடத்திவிட்டுக் காருடன் பறந்து விட்டனர்.
குழந்தை அழுது கொண்டிருக்கிறது. அநத வழியே வந்த சாப்ளின் குப்பைகளைத் தாண்டித் தாண்டித் தன் புகழ் பெற்ற நடையைப்போடுகிறார். நடந்து கொண்டே ஒரு சிறிய தகரடப்பாவை எடுக்கிறார். பதப்படுத்தப்பட்ட மீன் வைக்கப்படும் டப்பா. அதன் உள்ளே சிறு சிறு சிகரெட், சுருட்டுத் துண்டுகள். யாரோ குடித்துக் கீழே போட்ட-வற்றை இவர் பொறுக்கிச் சேகரித்து இருப்பு வைத்திருக்கிறார். அதில் ஒன்றை எடுத்து மிக ஸ்டைலாக உதட்டில் பொருத்திப் பற்ற வைத்துப் புகைக்கிறார். பணக்காரர்கள் தம் விலை உயர்ந்த சிகரெட் பைப் புகைப்பது போல இவரும் புகைக்கிறார்.
 |
குழந்தையின் அழுகுரல் இவர் காதுகளில் விழுகிறது. கண்கள் குழந்தையைக் கண்டு-விட்டன. அதை வாரி எடுத்து அணைத்துக் கொண்டே வீடுகளைப் பார்க்கிறார். எந்த வீட்டின் மாடியிலிருந்து குழந்தை தூக்கி எறியப்பட்டிருக்கும் என்று ஆராய்ச்சி மனப்பாங்குடன் பார்க்கிறார். குழந்தையைக் குப்பையாகக் கருதும் குள்ள மனிதர்களும் இந்த சமூகத்தில் இருக்கிறார்களே, என்கிற எண்ண ஓட்டத்தால் கவலை ரேகைகள் ஓடும் அவரின் முகம் அவரது மனநிலையைக் காட்டும். வசனமே இல்லாமல் காட்சிகள் நிறைந்த படம்! நம்மூர் நடிகர்கள் பலபேர் அம்மாதிரிப் படங்களில் நடிக்க முடியுமா? என்கிற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தும்!
இவரே அன்னக் காவடி, ரொட்டிக்கு அல்லாடும் பரம ஏழை. இந்த லட்சணத்தில் இந்தக் குழந்தையை நம்மால் வளர்த்துக் காப்பாற்ற முடியாது என்பதால் அதை மீண்டும் கண்டெடுத்த குப்பைத் தொட்டிக்-கருகேயே வைத்து விடலாம் என்று நகர்வார். அந்த நேரம் பார்த்துக் காவலர் ஒருவர் கம்பீரமாக நடந்து வருவார். அவரைப் பார்த்துப் பயந்தவர், ஒரு அசட்டுச் சிரிப்புடன் குழந்தையுடன் நடக்கத் தொடங்குவார்.
அடுத்த தெருவில் குழந்தையை வைத்துத் தள்ளிக் கொண்டுபோகும் Prem என்கிற வண்டியில் தன் குழந்தையை வைத்துத் தள்ளிக் கொண்டே ஒரு தாய் போவாள். ஒரு வீட்டின் முன்பு தள்ளு வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே போவாள். சாப்ளின் தன் கையில் உள்ள குழந்தையை தள்ளுவண்டியில் வைத்து விடுகிறார். அந்த நேரம் பார்த்து உள்ளே போன தாய் வெளியே வருகிறாள். சாப்ளின் செய்ததைப் பார்த்துவிட்டு சாப்ளினை மிரட்டுகிறாள். பயந்துபோன அநாதைக் குழந்தையை எடுப்பதுபோல அவளின் குழந்தையை கையில் எடுப்பார். அந்த நேரத்தில் பழைய போலீசுக்காரர் வருவார். மீண்டும் அநாதைக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு சாப்ளின் நடக்கத் தொடங்குவார்.
குழந்தையுடன் தன் ஒற்றை அறை வீட்டு-க்குத் திரும்புவார். டீ பாட் (Tea Pot) குழந்தை பால் குடிக்கும் கெண்டியாக மாற்றப்பட்டுப் பால் ஊற்றிக் குழந்தையை வளர்ப்பார்.
அய்ந்தாண்டுகள் உருண்டு சிறுவனாக அநாதைக் குழந்தை வளர்ந்துவிடுவான். இந்தப் பாத்திரத்தில் ஜாக்கி கூகன். சாப்ளினைத் தன் தந்தை என்றே நம்பி வளர்ந்தான். அக்கம் பக்கத்துக்காரர்கள் சிறுவனின் பெயரைக் கேட்ட போது ஜான் என்கிறார் சாப்ளின். அவனை வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்-படுகிறார். வேலை எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் சாப்பிட வேண்டுமே! ஒரு வழியைக் கண்டு பிடிக்கிறார்.
கண்ணாடி ஜன்னல்களைச் சிறுவன் கல்லெறிந்து உடைத்துவிட்டுப் போய்விடுவான். சிறுதி நேரம் கழித்து அந்த வீட்டுக்கு சாப்ளின் வந்து கண்ணாடிபாட்டுத் தரட்டுமா எனக் கேட்பார். கண்ணாடி உடைந்ததால் கவலைப்-பட்ட வீட்டுக்காரர் அதனை மாற்றுவதற்கு உடனடியாக வழி ஏற்பட்டதே என்று மகிழ்ந்து சாப்ளினுக்கு வேலை கொடுப்பார். இவரும் கண்ணாடியை மாற்றி விட்டுப் பணம் பெற்று வாழ்க்கையை ஓட்டுவார். தமிழ்ப் படங்களில் இந்தக் காட்சியைப் பார்த்திருப்பீர்களே! சிவாஜிகணேசனும் குலதெய்வம் ராஜகோ-பாலும் நண்பர்களாக நடித்துக் கண்ணாடியை உடைக்கும் காட்சி இடம் பெற்ற படம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்த சபாஷ் மீனா! வயதானவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். இந்தக் காட்சி உலகம் முழுக்கப் பல மொழிப் படங்களில் இடம் பெற்ற காட்சியாகும். இதன் முன்னோடி சார்லி சாப்ளின்.
அத்தோடு மட்டுமல்ல, சினிமாத்துறையில் Cinematic Metapher என்று சினிமாவுக்கே உரிய உவமையைச் சொல்வார்கள். அந்த வகை உவமை இப்படத்தில் கையாண்டிருப்பார். Eirectorial Touch எனப்படும் இக்கலை உலகமொழிப் படங்களில் எல்லாம் இடம் பெற்றது. இன்றைக்கும் இந்தியப் படங்களில் கையாளப்படுகிறது.
|