தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
நீதி?
குரல்
ஆய்வு
கவிதை
சிறுகதை
ஹாலிவுட் கலைவாணர்
கற்பனை கலாட்டா
நாட்டு நடப்பு
நூல் ஆறிமுகம்
எப்படி?
பேட்டி
நெசந்தானுங்க
சுயமரியாதைத் திருமணம்
உலகப்பார்வை
பதிலடி
2007 நோபல் பரிசுகள்
கல்வி

 

 

நூல் அறிமுகம்

நீதியைத் தேடி...

பிணை(ஜாமீன்) எடுப்பது எப்படி?
வாரண்ட் பாலா
வெளியீடு:கேர் சொசைட்டி,53, ஏதிர்தெரு, ஒசூர்-635109. பக்:272.
நூலிலிருந்து...
நடுவரின் சட்ட அறியாமையும், கட்ட பஞ்சாயத்தும்!
நடுவர்: நீங்க யாரு?
வா.பா.: குற்றம் சுமத்தப்பட்டவன்
நடுவர்: அது எனக்குத் தெரியும், என்ன படிச்சி இருக்கீங்க!
வா பா: 12வது படிச்சிருக்கேன்
நடுவர்: 12வது படிச்சி இருக்கிறேன்! அப்படீங்கறீங்க. ஆனா மனுவ சட்ட பிரிவெல்லாம் போட்டு கரெக்டா எழுதி இருக்கீங்க. இதெல்லாம் யார் கிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டீங்க?
வா பா: நான் யார் கிட்டேயும் கேட்க மாட்டேன். நானே பல பேருக்கு சொல்லிக் கொடுத்திருக்கேன்.
எனக்குச் சட்டம் தெரியும்.
(அப்போது எனக்கு பின்னால் நின்று விசாரணையை பார்த்துக் கொண்டிருந்த காவலர்கள் இருவரும் ஒருவருக்கொருவர், யோவ் வட்டம் தெரியுங்கிறான்யா! கண்டிப்பா இவன் வக்கீல்தான்யா என பேசிக் கொண்டு வெளியில் நகர்கின்றனர்)
நடுவர்: அப்ப நீங்க வக்கீல் தானே!?
வா பா: இல்லை
நடுவர்: வக்கீலும், இல்லேங்குறீங்க.. சட்டமும் தெரியுங்கிறீங்க... எப்படி?
வா பா: நான் ஓய்வு நேரத்தில கத புக்கு படிக்கிற மாதிரி... சட்ட புத்தகத்த படிப்பேன்.
நடுவர்: (அடுத்ததாக என்ன கேட்கிறது என புரியாமல் யோசிக்கிறார்) பின் சரி, எவ்வளவு பணம் வச்சிருக்கீங்க.
வா பா: 40 ரூபாய் வச்சிருக்கேன்
நடுவர்: 100 ரூபாய்க்கு கொறஞ்சி ஃபைன் போட முடியாதே?
வா பா: நான் ஃபைன் கட்றேன்று சொல்லலியே! வழக்க தான் நடத்தப் போறேன்.
நடுவர்: (இவனை நம்ம வழிக்கு கொண்டு வருவது எப்படி என யோசிக்கிறார்) பின், ஆமாம் இவ்ளோ சட்டம்லாம் பேசுறீங்க! ஏன் மனுவுல ஸ்டாம்ப் ஒட்டல...
வா பா: (நீதிபதிகளுக்கு சட்டம் தெரியாது என்பது இவர் விசயத்திலும் சரியாத் தான் இருக்கு. தெரியாட்டா என்ன சொல்லிக் கொடுத்திடலாம். அதான் நம்ம வேலை என நினைத்துக்கொண்டே) நான் குற்றம் சுமத்தப்பட்டவன். அதனால, எனக்கு எல்லாமே ஃபிரி தான்.
நடுவர்: நீங்க சொல்லுறது ஜெயில்ல இருக்கிறவங்களுக்கு மட்டும் தான்.
வா பா: இல்லிங்க.. எப்போ என்னைய காவலர்கள் கைது செய்தாங்களோ? அப்போதிலிருந்தே நானும் சிறையில் இருப்பது போல் தான். இப்போது பெயில்ல விட்டாலும், நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருப்பதாக தான் அர்த்தம். எனவே, நீதிமன்ற கட்டண சட்டம் 1870-இன் பிரிவு 19-இன்படி நான் ஸ்டாம்ப் ஒட்ட வேண்டியதில்லை.
நடுவர்: (என்ன இவன் எல்லாத்துக்கும் நமக்கு தெரியாத சட்டம் எல்லாம் பேசுறானே. இவன ஒரே போடா போட்டுட வேண்டியது தான்) அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்க ஸ்டாம்ப் ஒட்டினா தான் மனுவபரிசீலிக்கிற மாதிரி இருக்கும்.
(என்ன அநியாயம் பாருங்க.. நடுவருக்கு சட்டம் தெரியாது. அப்படீங்கிறத அவங்க வாயாலேயே அவங்கள அறியாமலேயே ஒத்துக்க வச்சிட்டேன். இப்போதாவது புரிஞ்சுதா உங்களுக்கு? மூச்சுக்கு முந்நூறு தடவ நீதிபதிகளுக்கு சட்டம் தெரியாது அப்படீன்னு சொல்றது)


வெளிச்சம்

புலவர்.ந.ஞானசேகரன், எம்.ஏ., பி.லிட்., பி.எட்.,
வெளியீடு:தமிழ்ப்பதிப்பகம், தெற்குவீதி, திருலோக்கி-609 804. பக்:96, ரூ.30/-
நூலிலிருந்து...
தீயில் இறங்கினார்; தீச்சட்டி ஏந்தினார்
திடுக்கிட வைத்துப்பல் சித்து விளையாடினார்
போயொரு நாளில் திரும்புவ தாய்ச் சொல்லி
புதைகுழி புகுந்து பூசைகள் புனைந்தவர்
சேய்களாம் பக்தர்கள் சேவிக்கப் பணித்துமே
சென்றவர் உயிரிலாப் பிணமாய்க் கிடந்தார்!
மாயச் சாமியார் சாயம் வெளுத்தது
மடையனாம் மனிதன்றான் திருந்திடக் காணோம்!


கண்ணாடிச் சித்திரங்கள்
நந்தவனம் சந்திரசேகரன்

வெளியீடு:இனிய நந்தவனம், 5 புதுத்தெரு, உறையூர், திருச்சி-3. பக்:64/ரூ.25/-
56 கவிஞர்களின் சிறந்த கவிதைளைத் தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்ட நூல். புதுமுயற்சி நல்ல முயற்சி. கவிஞர்களின் புகைப்படங்கள் மற்றும் முகவரியோடு வழங்கப்பட்டுள்ளது. ஒரு புதுக்கவி மலராய் மணம் பரப்புகிறது இந்நூல்.
நூலிலிருந்து...
மறுபடியும்...
கட்டுடைக்கப்பட்ட
காலமிது...
திரைச்சீலைகள் விலகி
கணினியின் சன்னல் வழியே
காவியம் படைக்கிறாய்..
அடுக்களை மட்டுமே
என்பதிலிருந்து விடுபட்டு
ஆகாயத்தைத் தொட்டுவிட்டாய்..
அதிகாரப் பிடிகள் தளர்ந்த
சம்பிரதாயக் கறைகள் அகன்று
சுயத்தின் வெளிச்சத்தில்
பிரகாசிக்கிறாய்...
அடைத்து வைத்த
கூண்டுகளின் கதவுகள்
உடைக்கப்பட்டு
உன் சிறகுகளை நீயே விரித்துக் கொள்கிறாய்...
ஆனாலும்
எப்படி முடிந்தது உன்னால்
மறுபடியும்
சின்னத்திரை முன்னால்...


கடல், நிலம், மக்கள்

தொகுப்பாசிரியர்: முனைவர்.ச.மி.ஜான்கென்னடி சே.ச.
வெளியீடு: இயேசு சபை சுனாமிப் பணிகள், வைகறைப் பதிப்பகம், பெஸ்கி கல்லூரி, திண்டுக்கல்-624 001.
பக்: 112, ரூ.40/-
நூலிலிருந்து...
மனித வாழ்வின் மிக அடிப்படையான அச்சப்பொரு ளாக இயங்குவது கடல். பேரழிவுகளையும், இயற்கை யின் தாக்குதல்களையும் கொண்ட ஆற்றலுடைய கடல் வழிபாட்டுக்குரியதாக மாறுகின்றது. ஆக்கம் என்பதும் அழிவு என்பதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் அக்கடல் வெளியை, மனிதனின் உடல்வெளி என்னும் ஓர் அலகால் அளவிடப்படுவதின் மூலம் மனித இருத்தல் தனது முழு இருப்பை வியாபித்துக் கொள்ள முடிகின்றது. இந்நிலையில் வாழ்தல் என்பது மரணத்திலிருந்து தப்புதல் என்பதாகச் செயல்படுகிறது. இங்கு மீனவர் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பொருளைப் பற்றியுமான பதிவு படிவம் பெறுகின்றது. இங்குப் பொருள் என்பது மீனவரால் எதிர்கொண்ட பொருள்-அதாவது, மொழி-அறிவு அல்லது தொழில் நுட்பம் இவற்றின் தளமாக வடிவம் கொள்கின்றது.
கடலானது உயிர்வாழ்தலின் செயல்பாடாக அடையாளம் கொள்ளப்படுகின்றது. உயிர்வாழ்தலை மீனவருக்குத் தரமுடியும் என்பது அறியப்படும் அதே நிலையிலும், அவர் உயிர் வாழ்தலைச் சிதைக்கக் கூடிய ஆற்றலும் கடலுக்கே உண்டு எனும் முரண்நிலை உண்மையும் அதனுள் பொதிந்துள்ளது. மீனவர் எதிர்கொண்ட பேரழிவுகளும் இயற்கையின் மிகப் பெரும் அச்சுறுத்தல்களும் கடல்வெளி சார்ந்ததும், காலம் சார்ந்ததுமான கொடுங்காட்சிகளாகப் பதிவு கொண்டிருக்கின்றன. உயிர்வாழ்தலைத் தருகின்றது. அதே நிலையில் உயிர் வாழ்தலைச் சிதைக்கவும் முடியும் எனும் தனது ஆற்றலை எப்போதும் நிறுவிக் கொண்டே இருப்பதால் கடலுடனான மீனவரின் பிணைப்பு முரண் இருமைத் தன்மை உடையதாய்ச் செயல்படுகிறது.