தலையங்கம்
தந்தை பெரியார் அவர்கள் சுமார் 77 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நூல் இராமாயணப் பாத்திரங்கள்! அது வால்மீகி இராமாயணத்தில் உள்ளவற்றை அப்படியே எந்த மிகைப்படுத்தலும் இன்றி தொகுக்கப்பட்ட நூல்.
தமிழ்நாட்டில் தமிழில் இதுவரை பல பதிப்புகள் வெளியாகி பல லட்சம் படிவங்கள் விற்பனையாகியுள்ள நூல்.
1959 இல் வட நாட்டிற்கு, குறிப்பாக உ.பி.,யில் கான்பூர், லக்னோ போன்ற ஊர்களுக்கு அங்கு நடத்தப்பட்ட ஒடுக்கப்பட்டோர் உரிமை மாநாடு மற்றும் பல நகர வரவேற்புகளுக்காக தந்தை பெரியார் அழைக்கப்பட்டு சென்றபோது, அந்த இராமாயணப் பாத்திரங்கள் ஆங்கிலத்தில் ‘Ramayana- A True Reading’ இராமாயணம் பற்றிய உண்மைகள் என்ற தலைப்பில் அச்சிட்டு எடுத்துச் செல்லப்பட்டு, பரப்பப்பட்டது.
லக்னோவில் தந்தை பெரியார் வரவேற்புக் கூட்டத்திலும், லக்னோ பல்கலைக் கழக சிறப்புக் கூட்டத்திலும் கூட தந்தை பெரியாருக்கு எதிராக, முழக்கங்களை எழுப்பி, கறுப்புக் கொடி காட்டியது ஜனசங்கம் என்ற அன்றைய பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பரிவாரங்கள்.
சாடிலால் சாத்தி, சிங் சவுராஷ்யா, வஸ்தாத் ராஜ் நாராயண்சிங் (இந்திரா காந்தியை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, இந்திரா தேர்தல் செல்லாது என்ற துணிச்சல் மிகுந்த தீர்ப்பு வெளிவரக் காரணமாக இருந்தவர்) மற்றும் பல்வேறு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர் மக்கள் ஆதரவுடன் அவ்வெதிர்ப்பு பிசுபிசுத்தது!
அந்த ஆங்கில நூலை வாங்கிப் படித்த, லலித்சிங் யாதவ் என்ற பகுத்தறிவு சமதர்ம சிந்தனையாளர் அதனை, இந்தியில் மொழி பெயர்த்து தாம் வெளியிட தந்தை பெரியார் அவர்களிடம் உரிமை கேட்டுப் பெற்றார்; அய்யாவும் மிகுந்த மகிழ்ச் சியுடன் இசைவினைத் தந்தார்.
அந்நூல் பல பதிப்புகள் அச்சாகி விற்கப்பட்டு வரு கிறது கடந்த 37 ஆண்டு களுக்கு மேலாக.
இந்த நூலுக்கு உண்மை இராமாயணம் சச்சி இராமாயண் என்று இந்தியில் பெயர் சூட்டி வெளியிட்டு விற்று வந்த நிலையில், இதனை உ.பி., அரசு தடை செய்தது. தடையை எதிர்த்து உ.பி., உயர் நீதிமன்றத்தில் நூல் வெளியீட்டாளர் ரிட் மனு தாக்கல் செய்து கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்க இடம் கிடையாது இந்திய அரசியல் சட்டத்தில் என்பதைச் சுட்டிக்காட்டி வாதாடினார். உ.பி., உயர்நீதி மன்றம் அத்தடை செல்லாது என்று தீர்ப்பளித்து விட்டது. அதன்மீது உ.பி., அரசு உச்சநீதிமன்றத்தில் (அப்பீல்) மேல்முறையீடு செய்தது.
அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜஸ்டீஸ் வி.ஆர். கிருஷ் ணய்யர் விசாரித்து (நெருக்கடி-கால நிலை அமலில் இருந்தபோது) மிக அருமையான தீர்ப்பு எழுதினார்.
தீர்ப்பு செப்டம்பர் மாதம் தந்தை பெரியார் பிறந்த நாளன்று (17.9.1976) வெளிவந்தது. ஆனால், அன்றைய தினம் இத்தீர்ப்பை விடுதலையில் வெளியிடக்கூடாது என்று தணிக்கை அதிகாரிகள் (எமர்ஜென்சி காலத்தில்) கூறிவிட்டனர்!
அது பிறகு தமிழாக்கம் செய்யப்பட்டு (1977-இல்) உண்மை ஏட்டில் முழுமையாக வெளிவந்துள்ளது. (கடந்த இதழில் தீர்ப்பின் முக்கிய பகுதிகள் வெளியிடப்பட்டிருந்தது).
கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரி-மையைப் பறிக்க இயலாது; ஆயிரம் எண்ணங்கள் - மாறுபட்ட கருத்துகள் மலர்வது-தான் ஆரோக்கிய ஜனநாயகம் ஆகும். அதனை அரசியல் சட்டம் பாதுகாக்கிறது. எனவே, இராமாயணம்பற்றி பல விமர்சனக் கருத்து-களைக் கூற எவருக்கும் உரிமை உண்டு என்ற அடிப்படையில் நீதிபதி கிருஷ்ணய்யரின் தெளிவான தீர்ப்பு அமைந்தது.
30 ஆண்டுகள் உருண்டோடிவிட்டபிறகு பெரியார் உ.பி., சட்டமன்றத்தில் கலக்குகிறார்!
செல்வி மாயாவதி தலைமையில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி பெரியாருக்கு கொள்கை ரீதியாக சிறப்புச் செய்வதைக்கண்டு, பார்ப்பனீய சக்திகளால் சகித்துக் கொள்ள முடியாமல் மாரடித்துப் புலம்புவதுபோல புலம்புகிறார்கள்.
எந்த ஒரு நூலையும் இரண்டுமுறை தடைசெய்ய முடியாது; அதுவும் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு அந்நாளைய உ.பி., அரசு விதித்த தடை செல்லாது என்று அறிவித்த பிறகு செய்ய முடியாதே!
இந்த சாதாரண உண்மைகளைக்கூட இராம பக்தர்கள், மதவெறிப் பார்ப்பனர்கள் அங்கே புரிந்துகொள்ளாமல் சலசலப்புக் காட்டுவது என்பது அறியாமையின் உச்சமல்லவா?
பல லட்சக்கணக்கில் பெரியார் நூல்கள் இந்தியில் விற்பனையாவதற்கு இதுபோன்ற அருமையான வாய்ப்பு எப்போதாவது கிட்டுமா? கிட்டவே கிட்டாது!
எனவே, பின்புத்தி படைத்த பார்ப்பனர்களே நன்றாகப் பிரச்சாரம் செய்யுங்கள். பெரியார் எழுதிய இராமாயணத்தை அல்ல - வால்மீகி எழுதிய இராமாயணத்தைக் கொளுத்திடு-வதன்மூலம், திராவிடர் கழகம் செய்யவேண்டிய பணியை நீங்களே முன்னின்று செய்கிறீர்கள் என்பதை அறிய எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
நிறுத்திவிடாதீர்கள் - தொடர்ந்து செய்யுங்-கள். தென்னாட்டில் இராமன் போணியாகாத சரக்காகி விட்டது; வடநாட்டிலும் அப்படி ஆவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு உழை-க்கும் பார்ப்பனர்களே - எதிர்ப்பை மேலும் தீவிரப்படுத்துங்கள். அதுதான் நமக்கு விளம்பரம் என்பார் தந்தை பெரியார். அது நூற்றுக்கு இரு நூறு சதவிகிதம் உண்மையா-கிறது இப்போது!
கி. வீரமணி
ஆசிரியர் |