ஆசிரியர் பதில்கள்
கேள்வி: சேது சமுத்திர திட்டத்திற்கு மதவாதிகளின் எதிர்ப்பு இருக்கும் இவ்வேளையில், டெல்லியில் நடைபெற்ற ராமலீலா நிகழ்ச்சியில் ராமர், லட்சுமணன், அனுமான் ஆகியோர் போல வேடம் அணிந்தவர்களுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆரத்தி எடுத்து, நிகழ்ச்சியின் முடிவில் ராவணன் உருவ மொம்மையை தீயிட்டு கொளுத்தியது சரியா?
- த. சுரேஷ், நாகர்கோவில்
பதில்: வாக்கு வங்கி அரசியலின் விநோதங்-கள் இவை! குஜராத், இமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் காரணமாக இந்த கண்ணோட்டம் இருக்கலாம். பொதுவாக காங்கிரஸ் அமைப்பில் உள்ளவர்-களில் நேருவைத் தவிர மற்றவர்கள் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பற்றி அதிகம் கவலைப்-படாதவர்கள்தானே!
கேள்வி: கீதையின் பல கருத்துக்கள் திருக்குறளிலும் கூறப்பட்டு இருப்பதாலும் மேலும், இந்துவாகிய திருவள்ளுவரால், இந்துக்களுக்காக எழுதப்பட்ட பொது அறநூல் திருக்குறள் என்பதால், பிற மத அறிவு ஜீவிகள், திருக்குறளை ஏற்க மறுப்பதாக, ஒரு நிகழ்ச்சியில் முக்கிய பேச்சாளர் குறிப்பிட்டார். அன்னாரின் கருத்து தங்களுக்கு உடன்பாடா?
- அறவரசன், சென்னை - 29
பதில்: அபத்தமான கருத்துக்கள் அவை; கீதையும் குறளும் தத்துவங்களால் நேர் எதிரிடையானவை. மேலும் எந்த மத நூலும் அல்ல. யார்தான் எதைத்தான் பேசுவது என்பதற்கு வரைமுறையே இல்லை! எல்லாம் அறிவு ஜீவிகள் தான் நம்நாட்டில்?
கேள்வி: பயன்படுத்தாத பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்போர், பயன்படுத்தாத (ஆதாம் பாலம்) மணல் திட்டின் ஒரு பகுதியை கப்பல் போக்குவரத்திற்கு ஆழப்படுத்தும் போது - ஓலமிடுவது ஏன்?
- எஸ்.நல்லபெருமாள், வடசேரி
பதில்: மத வியாபாரத்திற்கு அண்மையில் வேறு சரக்குக் கிடைக்காததால் - இராம பக்தி - திடீர் சேது பந்தனம் துவங்கி இராம பஜனை பாடுகின்றனர் பா.ஜ.க.வினர்! அவ்வளவுதான்!
கேள்வி: மைனாரிட்டி சர்க்கார், மைனாரிட்டி சர்க்கார் என்று அடிக்கடி கூறி வரும் செல்வி ஜெயலலிதா அவர்கள் அந்த மைனாரிட்டி சர்க்காரில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகிப்பது சரியா?
- தி. இரமணன், தண்டையார்பேட்டை
பதில்: 5 ஆண்டு மைனாரிட்டி மத்திய சர்க்கார் (நரசிம்மராவ் பிரதமராக இருந்த-போது) கீழ்தான் இவர் முதல்வராகவே இருந்தார். அப்போது அப்படி அழைத்தாரா? இப்போது அவ்வளவு ஏளனம், இளக்காரம் எப்படி வந்தது. இன உணர்வு அற்ற தமிழர்களால்தான்!
கேள்வி : தீபாவளி என்ற பண்டிகை திராவிடரான நரகாசூரனை ஆரியர் கொன்ற தினம். ஆகையால் தீபாவளி திராவிடர்கள் கொண்டாடக் கூடாது என்று பள்ளி மாணவனிடம் சொன்னேன். அவன் நம்ம வீட்ல யாராவது இறந்துப் போனால் கரும காரியம் செய்து கறிசோறு திங்கிற மாதிரிதான் தீபாவளி பண்டிகையும் அதனால கொண் டாடலாம் என சப்பை கட்டு கட்டுகிறான் இது போன்ற மாணவர்களை எப்படி திருத்துவது?
- வெங்கட. இராசா, ம.பொடையூர்
பதில்: தேவ - அசுரப் பேராட்டம் - ஆரிய ஆதிக்கம் பற்றி பல வகையிலும் பொறு-மையாகச் செல்லுங்கள்.
கேள்வி: பெயருக்கு முன்புறமோ, பின்புறமோ சாதியின் பெயரை போடக்கூடாது என்று அரசாங்கம் சட்டம் கொண்டு வந்தால் என்ன? பெரம்பலூரில் அய்யங்கார் கேக், சுவீட் கடை உள்ளது இதை ஒழிக்க வேண்டும் தி.க. முன் வருமா?
- கா. அண்ணாமலை, பெரம்பலூர்
பதில்: சாதி ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்பதற்காகப் போராட்டம் நடத்துவது மிக முக்கியம். அய்யா சொன்னபடி அரசியல் சட்டத்திலேயே அத்திருத்தம் வரவேண்டும்.
கேள்வி: தமிழை ஆட்சிமொழி, பயிற்று மொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழி என அனைத்து துறைகளிலும் அரியணை ஏற்றும் போராட்டங்களில் தமிழறிஞர்கள் பங்கெடுத்துக் கொள்வதில்லையே ஏன்?
- கு.நா. இராமண்ணா, சீர்காழி
பதில்: பல தமிழறிஞர்கள் - விருந்து சமைத்து படைக்கப்பட்டால் வருவார்களே தவிர போராட்டக் களத்திற்கு அவ்வளவு எளிதில் வர அவர்கள் எல்லாம் சோம சுந்தர பாரதிகளா, புரட்சிக் கவிஞர் போன்றவர்களா?
கேள்வி: மக்கள் தொலைக்காட்சியின் அணுகுமுறை தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது எதைக் காட்டுகிறது?
- வடகாடு கரு. காளிமுத்து
பதில்: தமிழின உணர்வாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
கேள்வி: நம்முடைய பாராளுமன்றத் தொடர் முழுவதும் கூச்சலும், கோசங்களும், அடிதடிகளுமாக இருக்கின்றதே இதை, சட்டமன்ற உறுப்பினர்களை அவை காவலர்கள் வெறியேற்றுவது போல், பாராளுமன்ற உறுப்பினர்களை ராணுவத்தினரை கொண்டு வெளியேற்ற சட்டம் இல்லையா? கூட்டத் தொடர் முழுவதும் நீக்க முடியாதா?
- சு. கொண்டல் சாமி, ஒட்டநத்தம்
பதில்: அங்கு இவ்வளவு வம்பு செய்ய சொல்லிக் கொடுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்-கள் இல்லை அதனால், அவர்கள் சொல்லுமுன் வெளியேறி விடுகிறார்கள்! |