தேவாரம் சுடுகிறது

நீரை வென்றது
நெருப்பை வென்றது
நூல்வேலி எதிர்ப்பதால்
நொறுங்குகின்றது.
புல் தடுக்கி விழுகிறது
சொல்
பாட்டால் பெருமை என்ற தலங்கள்
கேட்டால் கழுவிக் கொள்ளும் குளங்கள்
பன்னிரு திருமுறை என்பர்
முறையை எப்படிக்
கேடு என்கிறீர்?
செம்மொழி எம்மொழி
உம்மொழி எம் மொழி?
அரவம் அணிந்த சிவன் அடியாரே -
ஊர்ந்துவரும் அரவமா தேவார வாக்கியம்?
கல்லைக் கழுவும் சாதி
சொல்லைக் கழுவத் துடிக்கிறது
எங்கள் குரல் தீட்டு
எங்கள் சில்லறைக்கு மட்டும் உண்டியல் நீட்டு
பொய்யிலும் வேற்றுமை
சமக்கிருதப் பொய்தான்
சாலச் சிறந்ததாம்!
உங்கள் கோயிலுக்குள்ளே புகுந்தால்
எங்கட்குப் புரிவது
புளியோதரை மட்டுமே!
மட்குடத்திலாவது நீரை வைக்கலாம்
மகுடத்துள்ளிருப்பது கனிமண்தானே!
எங்கள் வியர்வை ஈரம் விலக்கினால்
எந்தக் கோபுரம் நிமிர்ந்து நிற்கும்? |