ஹாலிவுட் கலைவாணர்-8
 |
அமெரிக்காவின் ஒரு மாநிலம் அலாஸ்கா. வடக்கே பனிப்பிரதேசத்திற்கு நெருக்கமாக அமைந்துள்ள மாநிலம். எங்கும் பனிமயம்தான். குளிர் தாங்க முடியாது. பனிக்காற்றும் மழை அடித்துக் கொண்டே இருக்கும். வாழ்வதே கடினம். யாரும் போகாத, போக விரும்பாத பகுதி. அங்கே தங்கம் கிடைத்தது. க்ளாண்டைக் (Klondike) என்ற இடத்தில் தங்கம் கண்டு பிடிக்கப்பட்டது.
தங்கம் என்றவுடன் பலரும் அதைக் கைப்பற்றக் கிளம்பினார்கள். மனிதர்களின் நடமாட்டமே இல்லாத பகுதிக்கு மனிதர்களை ஆசை இட்டுச் சென்றது. குளிர், காற்று, உணவு இல்லாமை போன்ற பல இடர்ப்பாடுகளால் பலர் இறந்தே போனார்கள். அங்கே காலோ, கணிலோ, பயிரோ எதுவுமே விளையாது. சாப்பாட்டுப் பொருள்களை எடுத்துத்தான் செல்ல வேண்டும். இருப்பு தளர்வதற்குள் தங்கத்தைக் கைப்பற்ற வேண்டும். இயலாவிட்டால் திரும்பி விட வேண்டும்.
ஆசை வயப்பட்டவர்கள் இன்று, நாளை என்று பசியும் பட்டினியுமாகப் பனியிலும் குளிரிலும் விறைத்துப் போய் செத்தே போய்விட்டனர். பலபேர் பனி மழையில் சிக்கி மனச்சிதைவு அடைந்து பைத்திமாகத் திரிந்து இறந்து போனார்கள். பல பேர்கள். இவர்களில் ஏழைகள் தாம்!
இந்த க்ளாண்டைக் ஊருக்குப் போக கில்கூட்பாஸ் (Chilcoot Pass) என்கிற கனவாய் வழியாகத்தான் போக வேண்டும். பனி நிறைந்த மலைகள், நடுவில் சிறிய பாதை அதன் வழியே தான் செல்லவேண்டும். சென்றார்கள். ஏடுகளில் அந்தச் சிரமமான பயணத்தைப் படிக்க சாப்ளின் அந்தப் பொன்வேட்டையைச் சினிமாவாகப் பிடிக்கத் திட்டமிட்டார். பொன்வேட்டை கோல்ட் ரஷ் எனப்பட்டது. சாப்ளின் தன் படத்திற்கு அந்தப் பெயரையே வைத்தார். இத்தனைக் காலமும் தம் சினிமாக்களின் மூலம் சிரிக்க வைத்தவர், இந்தப் படத்தின் மூலம் மக்களைச் சிந்திக்க வைக்க வேண்டும் என நினைத்தார்.
பொன் வேட்டைக்குப் போனவர்கள் பணக்காரர்களல்லர். ஏழைகள், பணக்-காரர்களால் சம்பளம் தரப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட கூலிக்கார ஏழைகள். அவர்களில் ஒரு ஏழை தான் கதாநாயகன். ஒரு தங்கக் கட்டி கிடைத்தால் போதும், வயிற்றுக்குச் சோறு கிடைத்து விடும் என்று அங்கே போன ஏழை. இவன் அங்கே போனதற்குக் காரணம் பண ஆசையல்ல. பேராசையல்ல; வெறும் வயிற்றுப் பசி மட்டுமே. இதைத்தான் படமாக்கினார். அவரே ஆரம்ப காலத்தில் பசிக் கொடுமையால் அலைந்தவராயிற்றே!
தங்கம் தேடி அலைந்து அலைந்து அலுத்துப் போனவர்கள் கில்கூட் பாஸ் வழியாக நடந்து செல்வார்கள் வரிசையாக! அந்த வரிசையின் கடைசியில் சார்லி சாப்ளின் வருவார், தன் டிரேட் மார்க் நடை, உடை, பாவனைகளுடன் கைப் பிரம்பை ஆட்டிக் கொண்டு! இவருக்கும் பின்னால் ஒரு கரடியும் வரும். கரடி வருவது யாருக்கும் தெரியாது. இவருக்கும் தெரியாது. இவரது சிந்தனை முழுவதும் உணவு எங்கே கிடைக்கும், தூங்கும் இடம் எங்கே இருக்கும் என்பதுதான்!
வரிசையில் பின்னாலேயே வந்த கரடி தன் குகை வந்ததும் அதன் உள்ளே நுழைந்து விடும். யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல்! விலங்குக்கும் வீடு உள்ளது, மனிதர்களுக்கு இல்லையே என்பதை விளங்க வைப்பார் இந்தக் காட்சயீயின் மூலம்.
பனிக்காற்று சாப்ளினைக் கீழே தள்ளுகிறது. விழுகிறார். எழுகிறார். நடக்கிறார். அண்ணாந் பார்க்கிறார். மலை உச்சியில் ஒரு குடில் (காட்டேஜ்) தென்படுகிறது. அங்கே போகிறார். உள்ளே நுழைகிறார். அதனுள் ஏற்கெனவே ஒரு ஆள் இருக்கிறான். பார்வைக்குச் சரியான முரடன். சாப்ளினை வெளியே துரத்துகிறான். வெளியே வருவார். பனிப்புயல் அவரைத் தள்ளி விடும். மீண்டும் குடிலுக்கு உள்ளே விழுவார். முரடன் தன் முரட்டுக் கைகளால் சாப்ளினைப் பிடித்துத் தள்ளி விடுவான். பனிக்காற்று இருவரையும் தள்ளிவிடும். இருவரோடு சேர்ந்து இன்னொரு ஆளும் குடிலுக்குள் தள்ளப்-படுவான். அவன் பெயர் பிக்ஜிம் (Big Jim) பெருத்த உருவம் கொண்டவன்.
குடிலில் முதலில் இருந்த முரடன் இரண்டு பேர்களையும் வெளியே அனுப்ப வேண்டிய நிலை. முரடன் வாசலுக்குத் துரத்த வரும் போது வீசிய காற்றில் மூன்று பேருமே குடிலுக்கு உள்ளே தள்ளப்படுகிறார்கள். குடிலின் பின்பக்கக் கதவின் மேல் விழுந்ததால், கதவு திறந்து கொண்டு வெளியே விழுவார்கள். அங்கும் வீசம் காற்று இவர்களை உள்ளே தள்ளிவிடும். இப்படியாக முன் பக்கக் கதவுக்கும் பின் பக்கக் கதவுக்கும் இடையே காற்றினால் இரண்டு முரடர்களும் அலைக்-கழிக்கப்படுவார்.
இரண்டு முரடர்களும் சண்டை போடத் தொடங்கி விடுவார்கள். ஒரு துப்பாக்கியைக் கைப்பற்ற இருவருக்குமிடையே சண்டை. பல நேரங்களில் துப்பாக்கி குறிபார்ப்பதற்காக திருப்பப்படும் போதெல்லாம் சாப்ளின் நிற்கும் திசைக்கே வந்துபோகும். உயிர் ஆசையில் பயந்து போன சாப்ளின் இங்கும் அங்கும் ஓடுவார், குடிலுக்கு உள்ளேயே! இரண்டு முரடர்களில் யார் துப்பாக்கியைக் கைப்பற்றிக் குறிபார்த்தாலும் அந்த இடத்தில் சாப்ளின் இருப்பார்; பயந்து நடுங்கிக் கொண்டே ஓடுவார்! பார்ப்பவர்கள் எல்லாரும் சிரித்துக் கொண்டே இருப்பார்கள்.
கடைசியில் துப்பாக்கி பிக்ஜிம் கைக்கு வந்துவிடும். சமாதானமாக இருக்கலாம் என மூவரும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விடுவார்கள். அந்த நேரத்தில் நான்காவதாக ஒருவர் குடிலுக்குள் நுழைவார். அது ஒரு நாய்.
வெளியே பனிழை, காற்று, கடுங் குளிர், இப்படியே மூன்று நாள்கள். மூவரும் குடிலுக்கு உள்ளேயே. பசிக் கொடுமை. குடிலில் இருக்கும் மெழுகுவத்தியை எடுத்து அதில் உப்பைத் தூவி சப்ளின் சாப்பிட்டு விடுவார். மற்றவர்களுக்கு அதுவும் இல்லை. உணவு வேண்டுமே! வெளியே போனால் தா எதையாவது தேடலாம். யார் போவது? சீட்டுப் போட்டுப் பார்க்க முடிவு செய்கிறார்கள். சீட்டுப் போட்டதில் முதன் முதலில் குடிலுக்குள் இருந்த முரடனின் பெயர் வருகிறது.
அவன் வெளியே போகிறான். அவன் ஜெயிலில் இருந்து தப்பி வந்த கைதி. அவனைத் தேடிக் கெண்டு வந்த காவலர்கள் அவனைப் பார்த்து விடுகின்றனர். அவனைப் பிடிக்க முயலும் போது அவன் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுகிறான். அங்கே இருந்த பனியில் பயணம் செய்ய உதவும் ஸ்லெய் (Sleigh) வண்டியில் ஏறி ஓடிவிடுகிறான்.
அந்த நாள் - நன்றித் திரும்பினாள் (Thnaks GIveing Day) இவன் பயிர் செய்து, விளைச்சலை அறுவடை செய்ததற்காகக் கடவுளுக்கு நன்றி கூறும் நாள். அமெரிக்காவில் இது பிரபல-மான பண்டிகை. அந்த நாளில் இவருக்குச் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. சாப்பாடு கொண்டு வர வெளியே போனவனும் திரும்-பாத நிலை. அவன் போலீசைக் கொன்று விட்டுத் தப்பி ஓடியது இவருக்குத் தெரியாது அல்லவா? உணவுக்கு என்ன செய்வது?
தான் அணிந்திருந்த பழைய ஷூவைச் சாப்பிடலாம் என முடிவு செய்து, தண்ணீரில் போட்டு வேக வைக்கிறார். வெந்ததும் முள் கரண்டியால் அதை எடுத்து ஷூ கட்டும் கயிறைத் தனியே வைக்கிறார். அதன்மேல் வெந்நீரை ஊற்றி நனைக்கிறார். கத்தியால் வெந்துபோன ஷூவை வெட்டுகிறார். ஷூவின் மேல் பாகத்தைத் தன் தட்டில் வைத்துக் கொண்டு அடிப்பாகத்தை பிக்ஜிம்முக்கு ஒரு தட்டில் வைத்துப் பரிமாறுகிறார். முரடனான அவன், இவர் தட்டில் இருந்த மேல் பாக ஷூவைப் பறித்துக் கொண்டு தன் தட்டில் இருந்த ஆணி அடித்த அடிப்பாகத்தை இவர் தட்டில் போடுவான்.
இவர் ஏதோ பெரிய ஆடம்பர ஓட்டலில் அமர்ந்து சாப்பிடுவதைப் போல ஷூலேஸை (ஷூ முடியும் கயிறு) உண்பார். நூடுல்ஸ் போல நினைத்துக் கொண்டு அதை உண்பது போலச் சாப்பிடுவார். இவர் சப்பிச் சப்பிச் சுவைத்துச் சாப்பிவதைப் பார்க்கும் மக்கள் இன்றைக்கும் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். அதே நேரத்தில் மக்களைச் சிந்திக்கவும் வைத்தார். பசி மனிதனைப் படுத்தும் பாட்டில் அவன் எதையும் தின்பாண் என்கிற உண்மையை உணர்த்துவார். ஏழைக்கு எதுவும் விருந்துதான் என்பதையும் கூடுதலாக உணர்த்துவார்.
இந்தக் காட்சியை வடிவமைக்க ஒரு பின்னணியும் உண்டு. கலிஃபேர்னியா மாநிலத்-தில் சியோராநெவடா எனும் இடத்தில் மலை ஏறி மடிந்தவர்களின் உடலைப் பசியோடிருந்த-வர்கள் வெட்டிப் பச்சையாகவே தின்ற நிலையை ஒளிப்படங்களின் பார்த்ததன் தாக்கமே இது.
 |
இன்னொரு உண்மையில் நடந்த நிகழ்ச்சி-யையும் குறிப்பிடலாம். கப்பல் உடைந்து ஒரு தீவில் ஒதுங்கிய அமெரிக்க நாட்டு மக்கள் கடலோரத்தில் கிடந்த செருப்புகளைக் கடித்துத் தின்ற நிகழ்ச்சியின் பிரதிபலிப்பு இது எனக் கூறலாம்.
இந்தப் படத்தில் இன்னொரு காட்சி. இவர் சந்தித்த நாட்டியக்காரிகளைத் தன் குடிலுக்கு விருந்துக்கு அழைக்கிறார். அவர்களும் சம்மதிக்-கவே விருந்துக்கான ஏற்பாடுகளைச் செய்து-விட்டு நடனப் பெண்களுக்காகக் காத்திருக்-கிறார். அவர்கள் வரவேயில்லை, நடன அரங்கில் பணக்கார இளைஞர்களுடன் நடனமாடிக் கொண்டிருப்பதைக் காட்டு-வார்கள். இவரைக் காட்டும் போது சோகமாக உட்கார்ந்திருப்பார். முள் கரண்டியில் பன்களைக் குத்தி எடுத்து ஆட்டி ரசிப்பார்.
மற்றொரு காட்சியில் பசியால் வாழும் பிக்ஜிம் உணவு கேட்டு, கிடைக்காத ஆத்திரத்தில் இவரைக் கோழியைப் போல நசுக்கிச் சாப்பிடுவதுபோலத் துரத்துவான். திரையில் சாப்ளினுக்குப் பதிலாக ஒரு கோழியும் பிக்ஜிம்மும் மட்டுமே ஓடிக் கொண்டிருப்பார்கள். படம் பார்த்த மக்கள் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிப் போனார்கள்.
படம் மகத்தான வெற்றி. ஏராளமான பணத்தை கோல்டு ரஷ் வாரிக் கொட்டியது. பதினான்கு மாதங்களில் பத்து லட்சம் டாலர்கள் செவழித்து எடுத்த படம். படம் அவருக்குக் கெட்டுக் கொடுத்த லாபம் 60 லட்சம் டாலர்கள். இந்த ஊமைப் படம் திரையுலக வரலாற்றில் நிரந்தர இடத்தைப் பிடித்த படம். திரைப்படக் கலையிலும் மாணவர்களுக்கு இந்தப் படம் ஒரு பாடப் புத்தகம்.
படம் இன்பியல் முடிவு. இவர் தங்கி இருந்த குடில் புயலில் விழுந்து விடுகிறது. குடிலின் அடியில் பாறை பாறையாகத் தங்கம். சாப்ளினும் பிக்ஜிம்மும் கோடீசுவரர்களாக மாறி விடுவார்கள். இவரைப் படம் பிடிக்க வருகிறார்கள். கோடீசுவரன் ஆவதற்கு முந்தைய படம் பிடிக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள். இவரும் அறைக்குள் போய் வருவார், டிராம்ப் ஆடையில் ஏழைத் தோற்றத்தில் இவரைப் பார்த்த கப்பல் காவலர்கள் டிக்கெட் எடுக்காத பயணி என நினைத்துத் துரத்துவார்கள்! ஒரே சிரிப்புதான்! ஆடைதான் முக்கியம் என உலகு நினைக்கிறது! |