நெசந்தானுங்க
அதே குரல்... வேற தொண்டை
பவானந்தி
மருந்து சொல்றதுக்கு நோயென்னன்னு கேட்டா, நீ கேட்டதுனால தான் நோயே வந்ததுன்னு சொன்னா சொல்ற ஆளை என்ன நினைப்பீங்க?
இப்படித்தான் ரொம்ப ஜாதி ஒழிப்பு வீரர்கள் (!) பேசுவாங்க பேச்சளவில! ஜாதியை ஒழிக்கணும்னு சொல்லிப்பாருங்க... பள்ளிக் கூடத்தில சேர்க்கும்போதே ஜாதி கேக்குறாங்க. எப்படி சார் ஜாதி ஒழியும்னு இந்த மேதாவிகள்லாம் பதில் சொல்லும்.
பள்ளிக்கூடத்தில ஜாதி கேட்கிறது - பாப்பார வீட்டுப் பிள்ளைன்னா பெஞ்சில உக்கார வைக்கிறதுக்கும்; பறையர் வீட்டு பிள்ளைன்னா பெஞ்சில நிக்க வைக்கிறது-க்கும் இல்ல. எந்த காரணத்தால் ஒடுக்கப்-பட்டோமோ, அந்தக் காரணத்தா-லேயே உரிமை பெறுவதற்குத்தான். சுருக்கமா சொன்னா முள்ளை முள்ளால் எடுக்கிற முறைக்குப் பெயர்தான் இட ஒதுக்கீடு.
சமூகத்தில உயர் ஜாதியா தாங்கள் இருக்கணும். ஆனா இடஒதுக்கீட்டினால நம்மாளுக்கு எந்த பாதிப்பும் வந்திடக்-கூடாதுன்னு நினைக்கிற ஆளுங்க எப்படிப் பேசுவார்கள் தெரியுமா?
நான் என் புள்ளைக்கு ஜாதியில்லைன்னு சர்டிபிகேட்ல போடுறேன்யா. ஆனா ஜாதி ஒழியணும்னு பேசுற நீ செய்வியா அப்படி?-ன்னு வீரவசம் பேசுவாங்க. ஹை.... உனக்கு சமூகத்தில மட்டும் மரியாதை வேணும்; நான் இந்த ஜாதின்னு சொல்லிப் பெருமைப்படணும்.
பொழப்புக்கு ஆப்புன்னதும் ஜாதி ஒழிப்பு சிந்தனையெல்லாம் வருதே! அந்த மாதிரி ஆளுகளயெல்லாம் நீ ஜாதி மறுப்புத் திருமணத்துக்குத் தயாரான்னு கேட்டுப்பாருங்க. அப்பத் தெரியும்.
சரி, இது எதுக்கு இப்பன்னு கேக்குறீங்களா? இந்தப் பிரச்சினையைத் தூக்கிக்கிட்டு ஒரு காந்தீயவாதி கிளம்பி உச்ச நீதிமன்றக் கதவைத் தட்டியிருக்காரு. பள்ளிக் கூடத்தில ஜாதி கேக்குறதுதான் ஜாதிக்குக் காரணம்னு இவர் பேசினதைக் கேட்ட நீதிபதி... பாவம்... அத்தனைப் பேருக்கும் முன்னாடி எப்படித்-தான் சிரிச்சிருப்பாரோ?
சரின்னு கேட்ட நீதிபதி... இட ஒதுக்கீடு மற்றும் இன்ன பிற விசயங்களுக்காகத்தான் பள்ளிக்கூடத்தில ஜாதி கேக்குறாங்க. யாராரு போட வேணாம்னு நெனைக்கிறீங்களோ அவங்களெல்லாம் கட்டாயம் குடுக்கணும்னு அவசியமில்லை. அப்படி ஆளுகள்லாம் பொதுப் போட்டிக்குப் போயிடுங்கன்னு ரெண்டு குட்டு குட்டி மனுவை தள்ளுபடி பண்ணிட்டாரு. அதனால இதை ஏதோ குழப்ப கேஸ்னு நினைச்சுடாதீங்க.
அதோட கிடக்காத, கா. வாதி, சாதியே குறிப்பிட விரும்பாதவர்களை காந்தி ஜாதின்னு சொல்லணும்னு திரும்பவும் போகப் போறாராம். இதுக்கு சில இந்து அமைப்புகள் ஆதரவாம். காந்தின்னா இந்துத்துவாக்களுக்கு ஆகாதே! அதுனால என்ன? பிராண்ட் நேம் வேறயா இருந்தாலும் சரக்கு ஒன்றுதானேன்னு விட்டுட்டாங்க போலிருக்கு.
இட ஒதுக்கீடு வழங்குவதால்தான் இந்தியாவில் ஜாதி முறை இன்னும் இருக்கிறது அப்படின்னு இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் தரப்பிலிருந்து எப்பவும் ஒரு குரல் வருமே... அதே குரல் வேற தொண்டையிலிருந்து வருவது அவ்வளவுதான்... அதனால தான் அந்த ஆதரவு.
|