ஆசிரியர் பதில்கள்
 |
கேள்வி: இந்தியாவில் தந்தை பெரியார் மட்டுமே, இந்திய சுதந்திர நாளை துக்க தினமாகக் கடைப்பிடித்தார் என்று அறிகிறோம். ஆனால் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டு, வெற்றியை ஈட்டித் தந்த அண்ணல் காந்தியடிகளும், அந்நாளை (1947 ஆகஸ்ட் 15) துக்க நாளாக கடைப்பிடித்தார் என்றும், அன்றைய தினம் தலைநகரில் இல்லாமல் தவிர்த்ததாகவும், நிருபர்கள் சந்தித்து, வாழ்த்துச் செய்தியாவது தாருங்கள், என்றபோது எனது மனம் இடம் தரவில்லை - மன்னியுங்கள் என்று கூறியதாகவும் ஒரு செய்தியை -கட்டுரை ஒன்றில் மானமிகு இரா.செழியன் கூறியுள்ளார்கள். இதுபற்றி தங்கள் கருத்து என்ன?
- மா.கலியபெருமாள், தலையாமங்கலம், ஒரத்தநாடு
பதில்: இது முழுக்க முழுக்க உண்மை. காந்தியாருக்கு மிகுந்தமன வேதனை ஏற்பட்டுத்தான் காங்கிரசையே கலைத்து விடுங்கள் என்று காந்தியார் கூறினாரே!
கேள்வி: குறி, ஜோசியம், யாகம், வழிபாடு என தந்தையும், மகனும் (தேவகவுடா, குமாரசாமி) இணைந்து நடத்தி, நியூமராலாஜி படி எதியூரப்பா, எடியூரப்பாவாக மாறி கர்நாடகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தவர்கள் எட்டு நாளில் பரிதாப நிலைக்கு போனது பற்றி?
- மன்னை சித்து, மன்னார்குடி
பதில்: இப்படிப்பட்ட ஜென்மங்கள் மீண்டும் மூடநம்பிக்கை என்ற சேற்றில் விழுந்து புரளவே இருப்பார்கள்?
கேள்வி: சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஆதரிக்க முனைந்தவர்கள் எல்லாருமே நந்திகிராம் சீரழிவுக்குக் காரணமானவர்கள். படிப்பு வேறு, விவசாயம் வேறு என்பதை உணராததால்தானே இந்த விபரீத நிகழ்வு?
- மு. தமிழ்ப்பாண்டியன், வில்லிவாக்கம்
பதில்: வளர்ச்சியையும், வேளாண்மை, வேலை வாய்ப்புகள் இவைகளை சம எடையில் வைத்துப் பார்க்காத சாய்ந்த தராசுகளாக அவர்களில் பலர் நடந்து கொண்டதால் ஏற்பட்ட விளைவுகள் இது.
கேள்வி: வேலூரில் சாமியார் ஒருவர் (ஓம்சக்தி நாராயணி) புதிதாக 300 கோடி மதிப்பில் கட்டியுள்ள தங்கத்தால் ஆன கோயில் கோபுரத்திற்கு பிரபல அரசியல் புரோக்கர் சுப்பிரமணிசாமி உதவி (ஏற்பாடு) செய்துள்ளாராமே - இது குறித்து தங்கள் கருத்து என்ன?
- ஓவியர் மா.சுந்தரபிரபாகரன், உத்திரமேரூர்
பதில்: சுப்ரமணியசாமி என்ற அரசியல் தரகர் எதையும் செய்வார்? செய்யாமலேயே செய்தததாகவும் புருடா விட்டுக்கொண்டே வாழும் அகா, சுஜா பேர்வழி அல்லவா?
கேள்வி: எண்ணாயிரம் சமணர்கள் சுண்ணாம்பு காளவாயிலிட்டுப் படுகொலை செய்யப்பட்டது ஏன்? எந்த மதத்தினர் படுகொலை செய்தார்கள்?
- வீ.மு. சின்னத்தம்பி, தாப்பக்கரடு, காங்கேயம்
பதில்: சகிப்புத்தன்மைக்கு பேர் போனது எங்கள் இந்து சனாதன பார்ப்பன வைதீக மதம் என்று தம்பட்டம் அடிக்கும் சைவர்கள் (ஒரு பிரிவு) 8000 சமணர்களை தூக்கிலும் கொடுமையாக கழுவிலேற்றிக் கொன்றார்கள்.
கேள்வி: சங்க இலக்கியத்தில் தமிழ் வளர்த்த அவ்வையாரும், புராண கதைகளில் - சிவனையும், முருகனையும், மற்றும் அந்தக் கடவுள்களின் குடும்பத்தைப் போற்றிப்பாடி உலா வரும் அவ்வையாரும் ஒன்றா? இதில் எது உண்மை?
- கே.உத்தமன், சென்னை - 12
பதில்: அடியேனைக் கேட்பதைவிட, தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வாளர்களைக் கேட்கவேண்டிய கேள்வி இது!
கேள்வி: வெகு மக்களிடம் ஒரு கருத்துச் சென்று சேர்வது மக்களின் மன வளத்தைப் பொறுத்ததா அல்லது கருத்தினைக் கொண்டு சேர்ப்போரின் அணுகுமுறையைப் பொறுத்ததா?
- வடகாடு கரு. காளிமுத்து
பதில்: இரண்டையும் பொறுத்தது. இரண்டும் சரியானபடி அமைந்தால் வெற்றி நிச்சயம்!
கேள்வி: கடவுள் இல்லை என்பதற்கான விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஆதாரம் உண்டா?
- வீ.சிவசங்கர், கள்ளக்குறிச்சி
பதில்: தந்தை பெரியார் டாக்டர் கோவூர், துவங்கி, அன்றைய டார்வின் மற்றும் மரபு அணு விஞ்ஞானிகள் கீரிக் போன்றவர்கள் அறிவியல்ரீதியாக இதனை அம்பலப்படுத்தியுள்ளனரே!
கேள்வி: முதியோர்கள் - இளைஞர்களுக்கு இடம் விடவேண்டும் என்று கலைஞர் கூறுகின்றார்? முதியவர்களிடம்தானே அனுபவம் உள்ளது?
- வீர.செல்வம், பூம்புகார்
பதில்: அனுபவம் முதியோர்களிடம் உள்ளது என்பது உண்மை என்றாலும், செயல்படுத்தும் ஆற்றல், துணிவு இளையோர்களிடம் தானே அதிகம் இருக்கிறது. முதியோர்கள் அனுபவம், இளையோரின் ஆற்றலுக்கு வழிவிட்டு ஊக்கப்படுத்த முன்வரவேண்டும்.
கேள்வி: மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும். சந்தனக்காடு நாடகம் பார்ப்பீர்களா?
- எம்.சண்முகம், கொங்கணாபுரம்
பதில்: வாய்ப்பில்லையே. அந்நேரத்தில் பல்வேறு முக்கிய பணிகள் குறுக்கிட்டு விடுகின்றனவே.
|