வரவேற்கிறேன்
தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
தமிழர் தலைவர் - 75
நினைவுகள்
கவிதை
ஹாலிவுட் கலைவாணர் - 9
சிறுகதை
நினைவலையில் சில
நீதி கெட்டது யாரால் ?
அனு வனுவாய் - 2
சமூக (அ) நீதி
சாரங் கபாணியும்
மருத்துவம்
ஓப்படைத்துலிட்டேன் !
புதிய தொடர்
நமது ஆசிரியர்

 

 

கவிதை

ஒற்றை ரோஜா உன் காலடியில்...!


அய்யிரண்டு வயதுக்குள்!
ஆரம்பக்கல்வி பயில்
அதிகாலை பருவம்
பேரோடும் ஆசானால்
பெருமைமிகு அறிமுகம்
பெரியாரின் ஆத்திச்சூடி
பகுத்தறிவுப் பாலூட்டிய
திராவிடத்து
திருஞானசம்பந்தன் நீ!

தொண்டு கிழம் போட்ட
தொலைதூரப் பாட்டையில்
பவுர்ணமி நிலவாய்
பகுத்தறிவு ஒளிவீசும்
தொண்டறச் செம்மல் நீ!
புவியின் சுழற்சிக்கு
இணையாய்ச் சுழலும்
சாட்டிலைட்டாய்...
சாதியொழிப்புச் சமர்புரிய
பாரில் வலம் வரும்
பகுத்தறிவு எந்திரம் நீ!

பெண் விடுதலைக்கு
பெருந்தடையென்றால்
கருப்பையைக் கூட
கழற்றியெறியச் சொன்ன
ஒப்புவமையில்லா
உலகு தொழும் தலைவர்
வழியில் நடை பயிலும்
ஒளிவு மறைவில்லா
பெண்ணுரிமை பேணும்
பெருமைமிகு ஆண் நீ!

வகுப்புரிமைப் பயிர் வாடாமல்
செழித்திருக்க
கண்விழித்துக் காவல் காக்கும்
கருப்புடை தரித்த இயக்கம்
காவலை மீறி கண்ணமிட
ஆலவட்டமிடும் ஆரியமாடுகள்
உச்ச நீதி மன்றில் கூடும்
ஓநாய்களின் சதிக்குழந்தை
உருபெருமுன்னமேயே
குறைப்பிரவசமாக்கி
சிவகாசிச் சீனிவெடியாய்
சிதறியோடச் செய்யும்
பார்ப்பனக் கருவறையில்
பாயும் ஏவுகணை நீ!

மனித நேயம் தழைக்க மதவெறியை மாய்க்க
மானுடம் விரும்பும் மனிதவெடிகுண்டு நீ!

முக்கால் நூற்றாண்டின்
முகவரி ஆனவனே!
புரட்சிக்கவியாயிருந்தால்
யாயிரம் ஆயிரம்
பாடியிருப்பேன்!
உணர்ச்சிக்கவியாயிருந்தால்
கவிதைப் பூச்சரம்
சூடியிருப்பேன்!
எளியவன்
என் காணிக்கை...
ஒற்றை ரோஜாவை
உன் காலடியில்!


தீக்கடைக்கோல்

கவிமாமணி வெற்றிப்பேரொளி திருக்குவளை
விண்மணிச் சூட்டில் வேர்க்கும் மேனியர்
மண்மணி விளைத்து மாபசி தவிர்ப்போர்
தொட்டால் தீட்டென தூர நிறுத்தும்
முட்டாள் தனத்தை மூட்டைக் கட்டுநீ!

தென்னா டுடையோர் திருவாய்த் தமிழை
முன்னாள் பிறந்த முதுமொழித் தேனை
நீச மொழியென நிந்தை புரிந்தோர்
வேசம் கலைத்துநீ விரட்டு வெளியே!

கட்டிய கோவில் கருவறைக் குள்ளே
திட்டம் போட்டுத் தமிழரைத் தடுத்தோர்
கருவறை யாட்சியைக் காலால் மிதித்தெழு!
தருப்பைப் புல்லின் தாண்டவம் அடக்குநீ!

சூத்திரர் அரசினை சூழ்ச்சியால் கவிழ்க்க
ஆத்திரங் கொண்டோர் அடிமடி பிடித்திழு!
கோத்திரம் சொல்லி கொண்டையோடு; தாம்
மாத்திரம் உயர்வெனும் மரபினைத் தகர்த்தடு!

சாதிப் பிரிவினை ஊதிப் பெருக்கும்
சூதைப் புறங்காண்! தீமத வெறியழி!
செம்மொழிச் செம்மல் செல்வழி பின்தொடர்
நம்மினத் தளபதி நல்வீர மணியொலி!

சுக்கு நூறென சூத்திர எழுச்சியை
முக்கி யுடைத்திடும் முனைப்பின் முனைமுறி
கூட இருந்தே குழிபறித் தோடும்
வேடந் தாங்கிகள் விஷமம் கண்டுணர்!

மிழற்றும் கிள்ளை மென்குரல் பாட்டால்
உழற்றும் தென்திசை உதிரம் துடைத்திடு!
தீக்கடைக் கோலாய்த் திரள்நீ
பூக்கும் பெரியார் புரட்சிப் புவியே!


புதுப்பாக்கள்

மினிக் கவிதை
எண்ணிக்கை அதிகம்
நம்பிக்கை குறைவு சாமிகள்!

கருத்தறுபட்டு மனிதர்கள்
கழுத்தறுபட்டு உயிர்கள் கோவிலில்!

வள்ளி தெய்வானைக்கு திருமணங்கள்
வந்து வணங்குவோருக்குள் விவாகரத்துகள்!
- ஆல. தமிழ்ப்பித்தன், பொட்டல்பட்டி

கடவுள் - பக்தன்
கடவுள் கற்பனை
பக்தன் நிஜம்
கற்பனை உண்ணுகின்றது
நிஜம் பசியோடிருக்கின்றது
கற்பனை உறங்குகின்றது
நிஜம் விழித்திருக்கின்றது
கற்பனை வாழ்கின்றது
நிஜம் சாகின்றது
கல்லை கடவுளாக்கும்
காட்டுமிராண்டிகளே
மண்ணை மகேசனாக்கும்
மண்ணாங்கட்டிகளே
மனிதனை
சவமாக அல்லவா?
மாற்றிவிட்டீர்கள்!
கடவுளை மற
மனிதனை நினை
எனும் கொள்கையை
கொளுத்தி
கடவுளே வாழி
மனிதனே ஒழி
எனும் கொள்கைக்கு
அல்லவா? தீபமேற்றுகிறீர்கள்
கிட்டாத ஆண்டவனோடு
விடுதலையாகி
கிட்டுகின்ற மனிதனோடு
சிறையாகிக் கொள்வோம்
மனிதநேயத்துடன்!
- வீ.சிவசங்கர், கள்ளக்குறிச்சி

தமிழா! நீ... இளிச்சவாயானா?

ஊருக்குள்ளே சாமிக்கெல்லாம்
உண்டியல் நெறையுது... இங்கே
ஊத்திக்குடிக்கக் கஞ்சியில்லே
உழைச்ச வயிறு காயுது.

உச்சிமேலே உச்சிதாண்டி
கோபுரங்கள் உயருது... மக்க
குச்சிவீடும் கூரைவிழுந்து
குழாயடியைத் தேடுது.

பட்டுச்சேலை பகட்டுலதா(சாமி)
பல்லக்குல ஏறுது.... தெனம்
ஒட்டுப்போட்டக் கோவணத்தில்
சனங்கப் பொழப்பு ஓடுது.

அரசமரமும் ஆலமரமும்
வருசம் சோடி சேருது... பொண்ணு
நரைச்சுப்போன வயசுவந்தும்
புருசனத்தாந் தேடுது.

அண்டை நாடு அண்டம்தாண்டி
ஆகாசத்தைக் கிழிக்குது... இங்கே
குண்டுச்சட்டியில் குதிரையோட்டிக்
கும்புட்டுட்டுக் கெடக்குது.

மாடுபோட்ட சாணிக்கெல்லாம்
மரியாதை கெடைக்குது... அட
மனுசனுக்கு மனுசனிங்கே
மதில் சுவரு மறைக்குது.

பூமிதேய உழைக்கிறவன்
புழுதியிலே கெடக்குறான்... தெனம்
சாமிக்கதையப் படிப்பவனோ
பன்னீருல குளிக்குறான்

நேத்துவரைக்கும் புதுசு எல்லாம்
இன்னிக்குப் பழசு ஆச்சு... இப்போ
புதுசு புதுசா சாமிவந்து
புத்திக் கொழம்பிப்போச்சு.

சாமிவந்த பிறகுதானே
சாதிசமயம் பொறந்தது... அட
சேர்ந்து திரிஞ்ச சனங்களெல்லா
சேத்துக்குள்ளே விழுந்தது.

சேர்த்துவக்கற சாமிஒண்ணு
நேத்து வரைக்கும் உண்டா?... அட
வாத்து மடையன் ஆகிப்போயும்
வருத்தம் துளியும் உண்டா?

புத்தியிலே தெளிவிருந்தா
புகுந்திடுமா சாமி... இதைப்
புரிஞ்சுக்கிட்டு உழைச்சுப்பாரு
பூத்துக்குலுங்கும் பூமி.

பெரியாரு சொன்னதெல்லா
புளிச்சுப் போன மாவா... இதைப்
புரியாம இருந்துபுட்டா
நீ.. இளச்சவாயன் ஆமா!
- கவிஞர் வதம்பை சந்திரசேகரன், ஆசிரியர், கேத்தனூர், திருப்பூர் வட்டம்

தீண்டாமை

காலம்... காலமாக
மேடை எங்கும்
வாய்கிழியப் பேசிவிட்டு...
இரவு படுக்கையில்
எவருடனோ புணர்ந்த களிப்பில்
தற்கொலை செய்துகொள்கிறது!

 

விளிம்பைத் தேடி!

எவனோ ஒருவன்
சொல்லிவிட்டு சென்று விட்டான்
இந்தியா ஒரு விவசாய நாடு
என்று... அன்று...
ஆனால்... இன்று...
உலக நாடுகளின்
கழிப்பறையாகவும்..
குப்பைகளின் கூடாரமாகவும்...
மண்ணை மலடாக்கும்
நாசவேலைகளும்...
மக்களை அழித்தொழிக்கும்
அணுவுலைக் கூடங்களும்..
வரிசையாக அழிவின்
விளிம்பைத் தேடி!
அரசியல்வாதிகளின் முதுகில்
சவாரி செய்கிறது
பன்னாட்டுப் பொருளாதாரம்!
- செந்தமிழினியன், புதுச்சேரி - 9