சாரங்கபாணியும் தமிழர் தலைவரும்!
 |
தமிழர் தலைவரின் 75ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, மிகுந்த எழுச்சியோடு கொண்டாடி மகிழப்படுகிறது! கடந்து வந்த தமிழர் தலைவரின் 75 ஆண்டுகளை நினைத்துப் பார்க்கும்போது பெரும் வியப்பாக, சில நேரங்களில் ஒன்றுமே புரியாமல் போகிறது? நமக்கு!
அதாவது நினைத்துப் பார்க்கவே முடியாத அல்லது வெறுமனே சிந்தித்துப் பார்ப்பதற்குக் கூட, சிரமப்படுகிற நிலையில்தான் நாம் இருக்கிறோம். ஆனால் அப்படியான அசாதாரண வாழ்வை, அற்புதமாக வாழ்ந்து சாதித்திருக்கிறார் நம் தலைவர்!
கடலூரிலே சாரங்கபாணியாக,
தமிழ்நாட்டு மக்களுக்கு 10 வயதுச் சிறுவனாக,
பின்னர்
இளைஞராக, வழக்கறிஞராக வாழ்வைத் தொடர்கிறார்.
தொடர்ந்து, உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலையின் ஆசிரியராகப் புதுப் பொலிவு பெறுகிறார். அதுமட்டுமா? தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் சுயமரியாதை இயக்கத்தின் பொதுச் செயலாளராகப் பரிணமிக்கிறார்!
பின்னர் தளபதியாக, தமிழர் தலைவராக, திராவிடர் கழகத் தலைவராகவும் உச்ச நிலை அடைகிறார்!
அன்றைக்கு சிறுவன் சாரங்கபாணியோடு பழகியவர்கள் இன்னும் இருக்கிறார்கள். மாணவர் பருவத்து வீரமணியோடு பழகியவர்கள் இருக்கிறார்கள். அனைவரின் அன்பையும் இன்றுவரை பெற்றிருக்கிறார் என்பதுதான் இவரின் தனிச்சிறப்பு!
இந்த உயரிய வாழ்க்கையை எல்லோரும் பெற்றுவிட முடியாது. அதற்கு கடும் உழைப்பு வேண்டும். வார்த்தைகளால் எழுதிவிட முடியாத உழைப்பு அது! அது இருந்ததால் தான் உயர் நமக்குத் தலைவர்!
65 ஆண்டுகளாக களத்திலே நிற்கிறார். தொடர் போராட்டம்தான் அவர் வாழ்க்கை. இதுவரை அவரிடம் சோர்வையோ, சலிப்பையோ யாரும் கண்டிருக்க முடியாது.
உயர்ந்த உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பது
வெற்றியன்று; போராட்டமே!
எனும் தத்துவத்திற்கு இணையானவர் நம் தலைவர்!
இப்படிப்பட்ட தலைவருக்குத் தான் இன்று விழா எடுக்கிறோம். ஆனாலும் தோழர்களே! சாரங்கபாணியை தமிழர் தலைவராக உயர்த்திப் பிடித்தது எது தெரியுமா?
அவரின் பண்பு!
அந்தப் பணிவு ஒன்றுதான் சாரங்கபாணியை தமிழர் தலைவராக உயர்த்திப் பிடித்திருக்கிறது!
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகிய சான்றோர்களோடு பழகியவர். அவர்களோடு இயங்கியப் பெருமைக்குரியவர்! தமிழ்நாட்டின் தலைவர்கள் அனைவரோடும் தோழமை கொண்டவர்.
இன்றைக்கும்கூட, எத்தனையோ குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், முதலமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு நிர்வாகிகள், உலகத் தலைவர்கள் என அவரின் எல்லை விரிந்து, பரந்தது!
ஆனாலும் நம் தலைவர் இயல்பாகத்தான் இருப்பார்! சிலர் தோற்றங்களில் இயல்பை காட்ட முயல்வதுண்டு. ஆனால் அது நிரந்தரமாகாது; வெற்றியும் தராது!
குடியரசுத் தலைவரை, பிரதமரை காலையில் சந்திப்பார் நம் தலைவர். மாலையில் மன்னார்குடியில் தோழர்களோடு பேசிக் கொண்டிருப்பார்.
இவ்விரண்டு சந்திப்புகளின் உரை பொருள் வேறு. ஆனால் தன்மை ஒன்றுதான்! இவற்றை எல்லோரிடமும் கண்டுவிட முடியாது.
ஏதாவது ஒரு கட்சியின், வட்டப் பொறுப்பாளரின் நடவடிக்கைகளை நாம் பார்த்திருப்போம். தினமும் நிறைய வகை மனிதர்களை சந்தித்து வருகிறோம். ஒரு கல்லூரி முதல்வரைச் சந்திக்க கால் கடுக்க நிற்க வேண்டும். சிரமப்பட்டு உள்ளே சென்றால், அறையின் தோற்றம் நம்மை அச்சம் கொள்ள வைக்கிறது. அவரின் மிடுக்கான பேச்சு நம்மை மிரள வைக்கிறது. ஏதோ தவறு செய்தவர்களைப் போல குழைந்து பேச வேண்டியிருக்கிறது.
இன்னும் சுருக்கமாக, தனக்கு கீழே நான்கு பேரை வேலை வாங்குகிற, எந்த ஒருவரையும் எடுத்துக் கொள்ளுங்கள், சொல்ல வருகின்ற யதார்த்தம் புரியும்! இங்கே சொல்வது பெரும்பான்மை கணக்கு.
இப்படியான நிகழ்கால சமூகத்தில்தான் நம் தலைவரோடும் வாழ்கிறோம். மீண்டும் நினைவில் கொள்ளுங்கள்.
திராவிடர் கழகத் தலைவராக, 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நிர்வாகியாக, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளராக, பல்கலைக் கழக வேந்தராக, விடுதலை பத்திரிகையின் ஆசிரியராக... இப்படியாக இன்னும் பல!
மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு பொறுப்பின் கீழும் ஆயிரக்கணக்கான பணிகள் இருக்கின்றன. இதில் ஏதுவது ஒரு பணியை நம் தலைவர் யாரிடமாவது ஒப்படைப்பார். அந்த ஒரு பணி செய்கிறவரை பல நேரங்களில் நாம் எளிதில் அணுகிவிடமுடியாது.
அதற்காக அவர்களை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. எடுத்துக்கொண்ட பணிகளில் பலவேறு சிரமங்கள், பிரச்சினைகள் இருக்கும். ஆனாலும் அவர்களின் இயல்புகள் மாறியிருக்கும்.
மீண்டும் தமிழர் தலைவரிடம் வாருங்கள்!
பொது நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள், பயணங்கள், தலைவர்களின் சந்திப்புகள், பத்திரிகை தொடர்புகள், வெளிநாட்டு நிகழ்ச்சிகள், கணக்கற்ற வாசிப்புகள், எழுதிக் குவிக்கும் படைப்புகள், மலை போல் குவிந்திருக்கும் நிர்வாகக் கவனிப்புகள் என.. நமக்கு எழுதுவதற்கே மலைப்பாக இருக்கிறது.
இவ்வளவு இருந்தும் நம் தலைவரிடம் ஒரு பரபரப்போ, ஒரு சோர்வோ, ஒரு சலிப்போ, நேரமே இல்லை என்கிற முணுமுணுப்போ, தன் முனைப்போ, அதிகாரத் தன்மையோ, பதவிப் பெருமையோ... இதில் ஏதாவது ஒன்றை யாராவது கண்டதுண்டா?
பெரியார் கல்வி நிறுவனங்களின் பிரமிக்க வைக்கும் அசுர வளர்ச்சி - தமிழர் தலைவரின் உழைப்பால், நிர்வாகத் திறமையால் தமிழர்களுக்குக் கிடைத்த அற்புதக் கொடை அல்லவா? தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை அசர வைத்ததும் இதுதானே!
இப்படியான தலைவருக்கு விழா என்றால் அதன் மகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏது?
வரலாற்றில் இப்படியான தலைவர்கள் வாழ்ந்ததாக வாசித்திருக்கிறோம்! ஆனால் அந்த வரலாறோடு இப்போது இணைந்து வாழ்கிறோம்!
|