தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
தமிழர் தலைவர் - 75
அடிமைகளாக குழந்தை
மூடநம்பிக்கை
தொண்டறம்
குமுறல்
தொலைந்து போ
கவிதை
சிறுகதை
நூல் மதிப்புரை
ஹாலிவுட் கலைவாணர்-10
கருத்துரிமை?
பயணம்
குறுங்கதை
சிறந்த நூலிலிருந்து
அணு அணுவாய் - 3
தமிழர்கள் மீதான
பெட்டிச் செய்திகள்

 

 

ஆசிரியர் பதில்கள்

கேள்வி: நாட்டின் வருங்காலமே இளைஞர்கள் கையில்தான் என்கிறார்கள். ஆனால், ஆராய்ந்து பார்த்தால் அது தவறு என்றல்லவா நினைக்கத் தோன்றுகிறது?
- மு. தமிழ்ப்பாண்டியன், வில்லிவாக்கம், சென்னை - 600 049
பதில்: தோன்றுகிறதாவது? அதுதான் அப்பட்டமான உண்மை. தந்தை பெரியார் அவர்களும் அறிஞர் அண்ணாவும் முதல்வர் கலைஞர் அவர்களும் இளைஞர்களைத்தானே முன்னிறுத்துகின்றனர்!

கேள்வி: தற்போதைய நடிகர்கள் ஒரு படத்தின் வசனத்தை வைத்து, தான் அடுத்த முதல்வர் என்று கூறி வருவது பற்றி தங்கள் கருத்து என்ன?
- அன்புமணி சுந்தரராசன், மதுரை - 20
பதில்: தமிழ்நாட்டின் இந்த அரசியல் வேடிக்கையை மற்ற மாநிலத்தவர் அசல் கேலிக்கூத்து என்று பரிகசிக்கிறார்கள்! மானம் போகிறது!

கேள்வி: கம்பன் - ஆரியனா, திராவிடனா?
- கோ. கலியபெருமாள், மன்னார்குடி
பதில்: கம்பன் - ஆரியக் கைக்கூலியான திராவிடன் என்பதை வெட்கத்துடன் கூறத்தான் வேண்டும்.

கேள்வி: தினம் ஒரு போராட்டம் அறிவிக்கின்றாரே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா?
- வீர. செல்வம், பூம்புகார்
பதில்: ஆம்! தினமும் போர் - -ஆட்டம். கோனேரிப் பட்டியில் உள்ள குப்பன் வீட்டுக்கு பின்புறம் உள்ள குட்டை வறண்டு விட்டது. அதை அரசு சட்டை செய்யவில்லை என்பதைக் கண்டித்துப் போர் - ஆட்டம் - இப்படி! இத்தியாதி!!

கேள்வி: மூடநம்பிக்கைகளை, குறை சொல்லக் கூடாது. அது அவர்கள் நம்பிக்கை அல்லது அய்தீகம், அதை மதிக்க வேண்டும் என்கிறார்களே. அதுபற்றி தங்கள் கருத்து யாது?
- ஜே.அய்.ஏ. காந்தி, எரும்பி
பதில்: அப்படியா! அந்த நிலை இருந்தால் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும், மருத்துவத் துறை மாறுதல்களும் வளர்ந்திருக்குமா?

கேள்வி: ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே எழுதிக் குவிக்கும் எழுத்தாளர்களை மட்டும் சில பத்திரிகைகள் தாங்கு தாங்குவென்று தலையில் வைத்து ஆடுவது ஏன்? அவர்களை திறமையான எழுத்தாளர்கள் என்று அடைமொழி வேறு கொடுக்கிறார்கள்! என்னவென்று சொல்ல?
- வி.ஆர். சங்கர், வடப்பாக்கம், சிதம்பரம்
பதில்: குறுகிய வட்டம் என்றால் கூடப் பரவாயில்லை வட்டத்திற்குள்ளே ஓர் குறுகிய வளையம்; அதற்குள்ளே, குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்களை, குவலயமே ஆள்பவர்கள் என்று வர்ணிப்பது அசல் பார்ப்பனீய விளம்பர வெளிச்ச வித்தை அவாளும், சிலர் கற்ற வித்தை!!

கேள்வி: கடவுள் நம்பிக்கைப் பிரச்சினையில் என் மனைவிக்கும் எனக்கும் தொடர் வாக்குவாதமாக உள்ளது. அறிவியல்பூர்வமாக தெளிவுபடுத்தினாலும் புரிந்துகொள்ள மறுக்கிறார். அப்படியே விட்டு விடலாமா?
- ஆ. பாக்கியசாமி, அகினேஸ்புரம், அரியலூர்
பதில்: இதற்காக உங்களது இல்வாழ்வின் இனிமை கெட்டுவிடக்கூடாது. கடிதோச்சி மெல்ல எறிக என்றபடி படிப்படியாக அவர்களைப் பக்குவப்படுத்துங்கள். நமது மாநாடுகளுக்கு, பகுத்தறிவு நிகழ்ச்சிகளுக்கு அழையுங்கள் முதலில்.

கேள்வி: ஆரியர்கள் நம் நாட்டிற்கு வராமல் இருந்திருந்தால்?
- வீ. உதயக்குமாரன், வீரன்வயல்
ஜாதியே வந்திருக்காது! சமூகநீதிப் போருக்கு அவசியமே ஏற்பட்டிருக்காது!

கேள்வி: சேதுக் கால்வாய்ப் பகுதியில் இருக்கும் மணல் திட்டுகளை இராமர் பாலம் என்று பார்ப்பனர்கள் சொல்கிறார்களே....! ஒன்றிரண்டு இடங்களில் தோண்டி ஆய்வு செய்தால், அது மணல் திட்டா பாலமா என்பது தெரிந்துவிடுமே! ஏன் இதைச் செய்ய நடுவண் அரசு முன் வரவில்லையே?
- கவிஞர் ம.வீரபாண்டியன், பழுவூர், நெல்லை மாவட்டம்
பதில்: மணல் திட்டு என்பது முடிந்த முடிவு. உச்ச நீதிமன்றத் தடையினால்தான் தவக்கம்; அத்தடை, நீங்கியபின் (அந்தக் குறிப்பிட்ட பணிக்கு மாத்திரம் தான் தடை) வேலைகள் மீண்டும் வேகமாகத் துவங்கி முடியும் என்கிறார் கப்பல் போக்குவரத்து அமைச்சர் மானமிகு மாண்புமிகு டி.ஆர். பாலு.

கேள்வி: மலேசியாவில் நடந்து கொண்டிருப்பது இனப் பிரச்சினையா? உரிமைப் பிரிச்சினையா?
- மு. தமிழ்ப்பாண்டியன், வில்லிவாக்கம், சென்னை - 600 049
பதில்: இரண்டும் இல்லை; இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. வின் தூண்டுதலில் அவர்களிடம் பயிற்சி பெற்று அங்கே திரும்பிய சில வேதவியாசர்களால் உருவாக்கிய இந்துத்துவா நுழைவுப் பிரச்சினை என்ற கருத்தும் இருக்கிறது.
தமிழர்கள் பிரச்சினையா, இந்துத்துவா பிரச்சினையா என்பது விரைவில் விளங்கி விடும்.