கவிதை

வாழ்க தமிழ்
புதுசு புதுசா முளைக்குதப்பா சாமிக
பொங்க வைக்க கிளம்புதப்பா மாமிக
விதவிதமா படையலுக மணக்குது நெஞ்சு
விடிவு காலம் இல்லையேனு கனக்குது!
- புதுசு
நேத்து படுத்த கல்ல பாரு எழுந்து நிக்குது
நெற்றி நிறைய சந்தனத்த பூசிக் கொள்ளுது
பூத்து நாளு ஆன பின்னும் கலங்கி நிக்கிறா ஒரு
பூவுவச்சு பொட்டு வைக்க யாரு நிக்கிறா
- புதுசு
வாடகைக்கு வீடு தேடி வறியவர் கூட்டம்
வாழ்க்கைதனை கழிக்குதுங்க இப்படி நாளும்
மாடனுக்கும், கருப்பனுக்கும் தினமொரு கோயில்
மனசு இப்படி கருகுதுங்க மடத்தனத் தீயில்
- புதுசு
நொண்டிகளா பிறந்து ஒரு லாபமில்லேங்க
நோஞ்சான்கள் நமக்கு இப்ப தேவையில்லேங்க
உண்டியலா பிறப்பதற்கு யோகம் வேணுங்க
உயர்கருத்தை அதுக்குள்ள போட வேணுங்க
- புதுசு
நேர்த்திக்கடன் என்று சொல்ல ஆட்ட வெட்டுற
நித்தம் ஒரு சாமிக்குமே மொட்ட போடுற
பூர்த்தி எதுவும் ஆகலேனு புலம்பி நிக்கிற உன்
புத்திதெளிய மருந்திருந்தும் வழுக்கப்பாக்குற,
- புதுசு
திருநீறை நெற்றியில பூசிக்கொள்ளுற, ஒரு
திருடனைப் போல் சாமியாவும் பூட்டி வைக்கிற
அருள்வாக்கு எனச் சொல்லி ஆளை கூட்டுற
அம்மன் பேரச் சொல்லிக்கிட்டு ஊரை ஏய்க்கிற
- புதுசு
உழைக்காம உயர்வில்லே தெரிஞ்சு நடந்துக்க
ஊருச்சாமி பூஜைகளை நிறுத்தி வச்சுக்க
மழைக்காலம் பாத்து நீயும் விதைய விதைச்சுக்க
மலைக்காம உன்னை நம்பி புரிஞ்சு நடந்துக்க!
- ஆல. தமிழ்ப்பித்தன், புனல்வேலி, பொட்டல்பட்டி
தமிழ்
இலங்கையில்
தமிழ் கதைக்கப்படுகிறது
இங்கிலாந்தில்
ஆங்கிலம் பேசப்படுகிறது
தமிழகத்தில்
இரண்டும் கலக்கப்பட்டு
வாந்தியெடுக்கப்படுகிறது
மீதம்
காக்கையின்
எச்சத்தில்
மிச்சமாய்
பழையகட்டடத்தின் பிளந்த இடுக்கில்
வளர்ந்த தளிர்....!
பாவம் மனிதன்
மதச் சண்டையில்
மனிதர்கள் மரித்தனர்,
கடவுள் மட்டும்
எப்போதும் உயிரோடு.
ரொம்ப தேவை
முக்கி, முக்கி
புள்ள பெத்தா,
கொழந்த
நல்லபடியா பிறந்துச்சான்னு
கேட்டவங்களை விட,
கொழந்த
நல்ல கலரான்னு
கேட்டவங்களே அதிகம்...!
கலரை கட்டிப்பிடிக்கும்
கடன்காரப் பயலுக...!
வேதனை
பல்லக்கில் வரும்
அம்மனை - ஊரே
பரவசத்துடன்
கொண்டாடி மகிழ்ந்தது!
ஆனால்
பல்லக்குத் தூக்கிகளுக்கு
மட்டுமே தெரியும்
அவர்களின்
கைவலியும், தோள் வலியும்!
காரணகர்த்தா
கோவில் திருவிழாவில்
சாதிச்சண்டை பெரிதாகி
ஊரே ரெண்டுபட்டு,
இழுத்துச் சாத்தி
சிறை வைத்தனர்
கடவுளை...!
- இரா. கமலக்கண்ணன், சித்தோடு
நாளைய பிணம்?
எரிகிற வீட்டில் பிடுங்கினது
லாபமாம்... பழமொழி!
பிதாமகனுக்கு அதுவே
வேதமானது...
வெராட்டிக்கு முப்பது
மரத்தூள் கட்டைக்கு நூறு
வைக்கோல், களிமண் அறுபது,
வெட்டுக்கூலி, தட்டுக்கூலி,
தண்ணீர்... ஆ! தண்ணீர்
மொத்தமா ஆயிரமாச்சு!!
தலை சொறிந்து, பல்லிளித்து,
பணத்தை பெற்றுக்கொண்டு
ஓடினான் டாஸ்மாக் நோக்கி
நாளைய பிணம்...
- சிந்தாபாஸ், முத்தரசநல்லூர்
எச்சரிக்கை
கிராமத்துச்
சிட்டுக் குருவிகளே!
சந்ததிகள்
பிழைக்க வேண்டுமானால்
இடம் மாறி ஓடிவிடுங்கள்
பாழாய்ப் போன
விவசாய முறையால்
பயிரெல்லாம்
விஷம்
காரணம் இதுவா?
சாணி நீரை
தெளிக்க முடியாத
சிமெண்ட் தெருக்களே
இன்றைய
கிராமங்களில்,
மனிதர்களிடமிருந்து
மாடுகளை
விரட்டிக் கொண்டு
இருக்கிறதோ?
- மு. தமிழ்ப்பாண்டியன், சென்னை - 49
சிநேகிதம்
சிந்தனைகளின் சில்லிப்புகளில்
சிங்காரித்து விட்டு
அலங்காரத்துடன் ஆழ்மனத்தினுள்
அமர்ந்து விடுகிறது
சிநேகிதம்
யாரும் பார்ப்பதற்குள்ளாகவே...!
நெடிய பயணங்களில்
சிநேகிதம்
சிந்திப்பதில்லை
வாய்விட்டுச் சிரிப்பதற்கு...
பிரிவுக்கு மட்டுமே
கண்ணீரின் ஆழம்
தெரிவது போல...
மறைந்திருக்கின்ற
சந்தியா காலத்து
அந்தி மேகத்தின்
தூறல்களின் ஈரப்பதம்
சற்று யோசிக்க
விடுவதில்லை
சந்தர்ப்பங்களின் கூறுகள்...!
- மு. அழகர், பெரிய குளம்
|