சிறுகதை
 |
குமாஸ்தா சுந்தரம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும், என்னாங்க கலா கடிதம் போட்டிருக்கானு சொல்லியபடியே கடிதத்தை நீட்டினாள் மனைவி சிவகாமி.
என்ன எழுதியிருக்கா?னுக் கேட்டபடி அதை வாங்கிக் கொண்டார்.
ரூபாய் அய்ந்தாயிரம் வேணும்னு கேட்டு எழுதியிருக்கா என்று சிவகாமி சொன்னதும் சுந்தரத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இரண்டு மாசத்துக்கு முன்னாலதானே தொழில் நடத்தனும்னு பத்தாயிரம் ரூபா கொடுத்தோம், இன்னும் அய்ந்தாயிரம்னா பணம் என்ன அச்சா அடிக்கிறோம் கேட்க, கேட்க கொடுத்திட்டிருக்க. கலாவை இவனுக்குப் போய் கட்டிக் கொடுத்தோம் பாரு அது நம்மதப்புதான். கல்யாணத்துக்கு முன்னால அங்க வேலை செய்றேன், இங்கே வேலை செய்றேன் இவ்வளவு சம்பளம்னு பொய் சால்லி கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு அப்புறம் வரதட்சணை பத்தாது, தொழில் நஷ்டம், வேலையில்லையினு சொல்லி பெண்டாட்டியை அடிச்சிப் பிடிச்சு வீட்டிற்கு அனுப்பி பணம் பறிக்கிறான். அவன் இந்தப் பிழைப்பு பிழைக்கிறதெவிட... த்... தூனு கோபத்தில் காறி உமிழ்ந்தவர், சட்டையைக் கழற்றி ஆணியில் தொங்க விட்டு விட்டு திண்ணையில் கிடந்த செயரில் சாய்ந்து பெருமூச்சு விட்டார்.
சுந்தரத்திற்கு மூன்று பெண் மக்கள். மூத்த மகள் கலாவிற்கு போன வருடம்தான் திருமணம் முடிந்தது. திருமணத்தை நடத்தி முடிப்பதற்குள் எத்தனை அவஸ்தையை அனுபவித்தார் என்பது அவருக்குத்தான் தெரியும்.
அவளைப் பெண் பார்க்க வருபவர்கள் அனைவருமே, நகை எவ்வளவு? பணம் எவ்வளவுனு? கேட்டுட்டுப் போறதோடு சரி, ஒரு பதிலும் வராது. கிடைக்கிற வருமானத்தில் குடும்பம் நடத்துவதே கஷ்டம். இந்த நிலைமையில் வரதட்சணை எப்படி கொடுக்க முடியும்.
நல்ல பையன் சொந்தமாக டீக்கடைப் போட்டுருக்கான். உங்களால் செய்ய முடிந்ததை செய்தால் போதும் என்று தேடி வந்த ஆலோ-சனையை கேட்டு சரின்னு சொல்ல, திருமணம் முடிந்த பிறகுதான் தெரிந்தது மாப்பிள்ளை டீக்கடையில் வேலை செய்பவர் என்பது. ஒழுங்கா வேலைக்கு செல்லாததால் இப்போது அந்த வேலையும் இல்லை. செலவுக்கு எந்த வழியிலாவது மாமனாரிடமிருந்து பணம் கறந்து விடுவான்.
திருமணம் செய்து கொடுத்த மகளைப் பற்றிக் கவலைப்படவா? திருமணத்திற்காகக் காத்திருக்கும் மகள்களைப் பற்றி கவலைப்-படவா?
கையில் இருந்த கடிதத்தைப் படிக்க விரும்பாமல் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்து விட்டு, மனைவியை அழைத்தார்.
காமாட்சிக்கு மாப்பிள்ளை தரம் வந்திருக்-குனு புரோக்கர் கண்ணன் சொன்னான் - நான் அவனைப் போய்ப் பார்த்துட்டு வாரேன்னு சொல்லி விட்டுக் கிளம்பினார்.
அடடா... யாரு! நம்ம குமாஸ்தாவா, வாங்க வாங்க, உட்காருங்கனு வரவேற்ற கண்ணன் சுந்தரத்தின் வாடிப்போன முகத்தைப் பார்த்ததும், கவலையை விடுங்கண்ணே... நான் சொன்ன அந்த உத்தியோகம் பாக்குற பையனை முடிச்சிடலாமா பெண்ணைப் பற்றி சொன்னதும் சரின்னுட்டாங்க இனி உங்க முடிவுதான்னு கேட்டபடியே பதிலுக்காக சுந்தரத்தின் முகத்தைப் பார்த்தார்.
பையன் எப்படினு சுந்தரம் இழுக்கவும்...
என்ன யோசிக்கிறீங்க பொண்ணுக்கு ஒருகால் ஊனம், இந்த நிலைமையில் மாப்-பிள்ளை தேடினா பணத்தை கட்டுக்கட்டா இடுப்புல கட்டி வச்சிட்டுத்தான் தேடனும். வாறவன் எவனாவது குமாஸ்தா நேர்மை-யானவறா, நல்லவரா, அவரோடு பொண் எப்படின்னு கேட்டுட்டா வாறான். வசதி எப்படி வாய்ப்பு எப்படியிருக்குனுல்லா கேட்டுட்டு வாரானுவ அதுனாலதான் சொல்லு-கிறேன். இந்த இடத்தை யோசிக்காம சம்மதிச்சுருங்க.
பையனுக்கு அரசாங்க வேலை, முதல் மனைவியின் நடத்தை சரியில்லாமையால் விவாகரத்து செய்துட்டான். இரண்டு பிள்ளை-கள் தகப்பன்கிட்ட தான் வளருது. உங்க மகா இரண்டாம் தாரமா அவனுக்கு வாக்கப்பட்டா, மகாராணிபோல வாழுவா, எல்லாவகையிலும் உங்களுக்கு உதவியா இருக்கும். என்ன சொல்றீங்க?
குடும்பச் சூழ்நிலை மனதில் சுழல சம்மதம் என்பதுபோல தலையாட்டிவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டார்.
உணவைப் பரிமாறிக் கொண்டே சிவகாமி கேட்டாள் போயிட்டு வந்த காரியம் என்னாச்சி? பிள்ளைகள் தூங்கி விட்டார்-களா? என்று கேட்டார் கண்களைச் சுழல-விட்ட சுந்தரம்.
அந்த உத்தியோகம் பாக்குற பையனுக்குத் தான் பேசியிருக்கேன். காமாட்சியை பெண் பார்த்துட்டு போறவங்கயெல்லாம் வேண்டாம்-மினு சொன்னதுனால அவளுக்கு எதிலுமே நாட்டம் இல்லாதது போல கொஞ்ச-நாளாயிருக்கா! அதுனால இனியும் தாமதிக்-கக்கூடாதுனு குனிந்த தலை நிமிராமலேயே சொன்னார்.
அதற்கு மேல் சிவகாமி எதுவும் கேட்க-வில்லை; பாத்திரங்களையெல்லாம் கழுவி சுத்தம் செய்து விட்டு தூங்கச் சென்றாள்.
காலையில் சுந்தரம் வேலைக்கு போனபிறகு சந்தையில் காய்கறிகளை வாங்கி வந்து தரையில் கொட்டி வைத்து விட்டு காமாட்சினு குரல் கொடுத்தாள் சிவகாமி.
அழைத்தும் வராததால் சிவகாமி கோபத்து-டன் வந்து பார்த்தாள். இளையமகன் மட்டும் நல்ல தூக்கத்திலிருந்தாள். காமாட்சி எங்கடிப்-போனானு போட்ட சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்த இளையமகள்,
அக்கா இங்கே எங்கியாவதுதான் இருப்பா, அதுக்கு நீயேம்மா இப்படிக் கத்துறே கேட்டுக் கொண்டே கொட்டாவி விட்டாள்.
சிவகாமி ஓடிச் சென்று பக்கத்து வீட்டில் பார்த்தாள் அங்கேயும் இல்லை, தெருவில் பழக்கமான வீடுகளிளெல்லாம் கேட்டுப் பார்த்தாள். இங்கே வரவில்லையெனச் சொன்னதும் அவளுக்கு பதற்றமாகிவிட்டது.
திண்ணையில் வந்து உட்காந்தவள் என்ன நினைத்தாளோ ஓ வென ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள். வீட்டின் முன், கூட்டம் கூடிவிட்டது - சுந்தரம் மகள் காமாட்சியை காணலயமாம்னு பேசிக் கொண்டார்கள்.
அப்போது முதுகில் பையை சுமந்தவாறே பள்ளிக் கூடத்திலிருந்து வீட்டிற்கு திரும்பிய சிறுவன் அம்மா... நம்ம வீட்டுக்கு பால் பாக்கெட் போடுவாருல்லா அவருக்கும் காமாட்சி அக்காவுக்கும் கல்யாணம் ஆயிட்டு-தாம்மா, இரண்டு பேரும் காரில் ஒண்ணாப் போனதைப் பார்த்தேம்மானு சொல்லவும்.
சுந்தரத்தின் மகள் காமாட்சி. பால்கார-னோட ஓடிட்டாங்கிற விஷயம் ஊர் முழுக்கப் பரவியது.
தெருவில் கடை நடத்திக் கொண்டிருக்கும் செல்லையா - தன் சாதிக்காரர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டிக் கொண்டிருந்தான்.
கீழ்ச் சாதிப் பயலுக்கு இவ்வளவு திமிராப் போச்சா? நம்ம சாதிக்கு இது எவ்வளவு அவமானம். சுந்தரம் அப்பாவியான மனுஷன். இந்நேரம் வேறையாராவதா இருந்தா வெட்டு ஒண்ணு, துண்டு இரண்டுதான். சாதிக் கலவரம் வெடிச்சிராதா? இப்படித்தான் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாலனு செல்லையா தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தான். அவனைச் சுற்றி ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது.
விஷயத்தை வருகிற வழியிலே கேள்விப்-பட்டு வீட்டுக்கு வந்த சுந்தரம் அழுது கதறிக் கொண்டிருந்த மனைவி மகளை ஆறுதல்-படுத்திக் கொண்டிருக்கும் போது, கடை முன் நின்ற கூட்டம் செல்லையாவின் தலைமையில் ஆவேசமாக வந்து கொண்டிருந்தது.
சுந்தரண்ணே கவலைப்படாதீங்க, நாங்க இருக்கோம். நம்ம சாதி சனதுக்கு ஒண்ணு வந்தா பார்த்துட்டு இருந்துருவோமா, இத சும்மா விட்டுடக் கூடாதுண்ணே. போலீசுல சொல்லி பயல இரண்டு தட்டு தட்டினாதான் சரிப்படும். இனிமேலும் இப்படி ஒரு சம்பவம் நடக்கப்படாது. நம்ம சாதியென்ன? அவன் சாதியென்ன? எனக்கு வர்ற கோபத்துல என்று பல்லை கடித்தான் செல்லையா.
வெந்த புண்ணில் யாரோ ஈட்டியைப் பாய்ச்சுவது போன்ற உணர்வு சுந்தரத்திற்கு ஆத்திரப்படுவதோ, அவசரப்படுவதோ மகளின் வாழ்க்கையை வீணாக்கி விடும்மே.
சுந்தரம் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தார்.
சுந்தரத்துக்கப் பிள்ளையா இப்படினு என்றார் கூட்டத்திலிருந்த ஒரு முதியவர்.
உம் பொண்ணு நம்ம சாதிகாரங்களை தலை குனிய வச்சிட்டா என்றான் ஒருவன் மீசையை முறுக்கிக்கொண்டே.
அவன்தான் கூப்பிட்டானா, இவளுக்கு புத்தியெங்கே போச்சி என்றான் இன்-னொருவன்.
பொறுமையை இழந்த சுந்தரம் எனக்க மக இந்நேரம் எங்கே இருக்காளோனு நாங்க பரிதவிச்சிட்டு இருக்கோம். இந்த நிலைமையில் ஆளாளுக்குப் பேசி மனசை இன்னும் நோகடிக்கிறேங்களேனு சொன்னதும்.
யோய் இன்னும்மா, உம் மகளை நம்புறேரு என்றான் செல்லையா. அவன் இப்படி கேட்டதும் சுந்தரத்திற்கு கோபம் தலைக்-கேறியது, நாடி நரம்புகள் துடிக்க கூட்டத்தை ஒரு கணம் பார்த்துக் கொண்டு.
செல்லையா சாதி, சாதிங்கிறேயே விபத்துல இடுப்பு எலும்பு ஒடிஞ்சி படுக்கையில கிடக்குற உன் பொஞ்சாதிக்கு உதவி செய்ய வந்த பொன்னுத்தாயை, அவமாப்பிள்ளை கிட்டேருந்து பிரிச்சு நிரந்தரம்மா உன் கூடவே வச்சிருக்கியே அவ என்ன சாதியினு கேட்டுட்டா நீ வச்சுகிட்டே?
இன்னா, இந்த லெட்சுமி இவ மகளுக்கு பிரசவ நேரத்துல ரெத்தம் தேவைப்பட்டது, அந்த ரெத்தம் அந்தச் சாதிக்காரனுங்க ரத்தமினு கேட்டுட்டா அடைச்சாங்க இல்லையே?
அதேபோலத்தான் காமாட்சியோட வாழ்க்கையை காமாட்சியே தேடிக்கிட்டா. அதுல நம்ம இப்பம் சொல்றதுக்கு எதுவு-மில்லை.
அவளோட உடல் ஊனத்தைக் காட்டி, வரதட்சணை பேசி அலைக்கழிச்சது, நீ இப்பம் சொன்னியே நம்ம சாதி, நம்ம சாதினு அந்த நம்ம சாதிதான் என்றவாறே வேட்டியைத் தூக்கி மடித்துக் கட்டிக் கொண்டு திண்ணைப் படியில் இறங்கிவர... கூட்டம் திகைத்துப் போய் நின்றது! |