தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
தமிழர் தலைவர் - 75
அடிமைகளாக குழந்தை
மூடநம்பிக்கை
தொண்டறம்
குமுறல்
தொலைந்து போ
கவிதை
சிறுகதை
நூல் மதிப்புரை
ஹாலிவுட் கலைவாணர்-10
கருத்துரிமை?
பயணம்
குறுங்கதை
சிறந்த நூலிலிருந்து
அணு அணுவாய் - 3
தமிழர்கள் மீதான
பெட்டிச் செய்திகள்

 

 

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

ஒருநாள், நிகுயனுக்கு பிரபல பிரெஞ்சு அறிஞர் ரூஸோ எழுதிய புத்தகத் தொகுப்பு ஒன்று கிடைத்தது. நிகுயன் அதை மிகவும் சிரமப்பட்டு படிக்க வேண்டியிருந்தது. பெரும்-பாலான பக்கங்கள் புரியவேயில்லை. ஆனால் அதன் பொதுவான கருத்தை, நிகுயனால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.
மனிதன் பிறக்கும்பொழுது சுதந்தரமான-வனாகப் பிறக்கிறான்; இருந்தும் எங்கும் விலங்கிடப்பட்ட நிலையிலேயே உள்ளான்; சுதந்திரத்-தைக் கைவிடுவதென்பது மனித கண்ணியத்-தைக் கைவிடுவதாகும், மனித உரிமை-களைக் கைவிடுவதாகும். சுதந்தர உணர்வு, சுதந்தர சிந்தனை, பாரம்பரிய விதிமுறைகளுக்கும், வறட்டுச் சூத்திரங்களுக்கும் எதிர்ப்பு, போர்க்-குணமிக்க நாத்திகவாதம் போன்ற அந்த நூலின் இழையோடிய கருத்துக்கள் நிகுயனை மிகவும் கவர்ந்தன. சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கங்களை எழுப்பிய அந்த நூல் நிகுயனை பெரும் தாக்கத்துக்காளாக்கியது.
சில கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டக்-காரர்களுடன் சேர்ந்து கொண்டனர். நிகுயன் அவர்களில் முன்நின்றார். வரிகளை ரத்து செய்யும்படி நமது நாட்டு மக்கள் பிரெஞ்சுக்-காரர்களைக் கேட்கிறார்கள். நமக்கு பிரெஞ்சு மொழி தெரிந்திருப்பதால் அவர்களுக்கு உதவவேண்டியது நம்முடைய கடமையாகும் என்று நிகுயன் தன் சக மாணவர்களிடம் கூறினார். அத்துடன் நிகுயனும் அவருடைய நண்பர்களும் அங்கு கூட்டம் கூட்ட-மாக உட்கார்ந்திருந்த மக்களிடம் போய் புரட்சிகரக் கவிதை-களைப் பாடியதோடு, விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தில் உறுதியாக இருக்க-வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்கள்.
பிரெஞ்சு அதிகாரிகள் எட்டு வயது நிரம்பிய பேரரசனை அனுப்பி, விவசாயி-களைக் கலைந்துபோகும்படி கூறச் செய்தனர். ஆனால், விவசாயிகள் யாரும் அதை ஏற்கத் தயாராக இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பிரெஞ்சு ஆளுநர், மூன்றாவது நாள் ஆயுதப் படைகளை அனுப்பி விவசாயிகளைக் கொன்று குவிக்கும்படி உத்தரவிட்டான். நிராயுதபாணியாக நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது பிரெஞ்சு சிப்பாய்கள் கண்மூடித்தனமாக சுட்டனர். கொல்லப்-பட்டவர்களுடைய உடல்கள் ஆற்று-நீரில் வீசியெறிப்பட்டன. விவசாயிகளுக்கும் பிரெஞ்சு சிப்பாய்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. கொதிப்படைந்த விவசாயிகள் பலர், பிரெஞ்சு சிப்பாய்கள் மீது தாவி அவர்களையும் இழுத்துக் கொண்டு தண்ணீருக்குள் மூழ்கினர். பல கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்-பட்டனர். ஆனால் நிகுயன் கைதாகாமல் தப்பி, தனது குடும்ப நண்பரொருவர் வீட்டில் அடைக்கலம் புகுந்தார்.

அடுத்த நாள் காலையில் நிகுயன் வழக்கம்-போல் கல்லூரிக்குப் போனார். அவர் போய்ச் சேர்ந்த சிறிது நேரத்துக்குள் ஒரு பிரெஞ்சு அதிகாரியும் சில சிப்பாய்களும் அந்தக் கல்லூரியின் நிர்வாகியும், நிகுயனுடைய வகுப்-பறைக்குள் வந்தனர். உயரமான, கறுத்த நிறமுள்ள பையனை நாங்கள் தேடுகிறோம். அவனை உடனடியாக இந்தக் கல்லூரியிலிருந்து வெளி-யேற்ற வேண்டும் என்று அந்தப் பிரெஞ்சு அதிகாரி கூறினார்.
நிகுயன் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்-பட்டார். கல்லூரியில் இருந்து வெளியே வந்த நிகுயன், சில நிமிட நேரம் தன் எதிர்காலத்தைக் குறித்து யோசித்தார். மக்களோடு மக்களாக வாழ்வது, அவர்களுடைய நலனுக்காகப் பாடு-படுவது என்ற உறுதியான முடிவுக்கு அவர் வந்தார். முதலில் நாட்டைச் சுற்றிப் பார்ப்பது, மக்களோடு பழகுவது, அனுபவம் பெறுவது என்று முடிவு செய்தார். உடனே நாட்டின் தெற்குப் பகுதியை நோக்கி தென் சீனக் கடற்-கரையோரத்தில் நடைபோடத் தொடங்கினார்.
1919, டிச. 30ஆம் தேதி அதிகாலை இரண்டரை மணிக்கு பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, தன்னுடைய முதல் மாநாட்டைத் (காங்கிரசை) தொடங்கியது. அந்தச் சில நிமிடங்கள் பிரெஞ்சுத் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு மட்டுமல்ல, வியத்னாமிய தேசிய விடுதலை இயக்கத்தில் லெனினிய பதாகையை உயர்த்திப் பிடித்த முதல் வியத்னாமிய கம்யூனிஸ்டான ஹோ-சி-மின் என்ற நிகுயனின் வாழ்விலும் மகத்தான நிமிடங்-களாகும்.
நிகுயன் விரைவிலேயே பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் பிரபலமான உறுப்பினர்களுள் ஒருவராக மாறினார். கட்சியின் மத்திய கமிட்டி அலுவலகத்துக்கு தொடர்ந்து போய்வர ஆரம்பித்தார். சோவியத் ரஷ்யா மீது பிரெஞ்சு அரசாங்கம் விதித்துள்ள பொருளாதார முற்றுகையை வாபஸ் வாங்க வேண்டுமென்றும், அதனுடன் ராஜ்ஜிய உறவுகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி-யின் காலனி நாடுகள் குறித்த குழுவின் உறுப்பினராக நியமிக்-கப்-பட்ட நிகுயன், அதன் இந்தோ-சைனா பிரிவுக்கு பொறுப்-பேற்றுக் கொண்டார். அல்ஜீரியா, டுனீசியா, மடகாஸ்கர் போன்ற பிரெஞ்சுக் காலனிகளிலிருந்து வரும் முற்போக்கான இளைஞர்-களை அங்கே சந்தித்துப் பேசிய நிகுயன், 1921 ஜூலை மாதத்தில் காலனி நாடுகள் சங்கம் (ஐவேநச ஊடிடடியைட ருடி) என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் நிர்வாகக் குழுவுக்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிகுயனின் யோசனைப்படி காலனி நாடுகளின் சங்கம் லே பரியா (டுந ஞயசயை) என்ற பத்திரிகையை வெளியிட்டது. இந்தப் பத்திரிகையை நடத்து-வதற்கு உதவி புரியும்படி, சர்வதேச முற்போக்கு எழுத்தாளர் கழகத்தின் தலைவராயிருந்த ஹென்றி பார்புஸேயிடம் நிகுயன் வேண்டுகோள் விடுத்தார். அனதோ பிரான்ஸ், பெர்னாட்ஷா, அப்டன் சிங்க்லேர், ரவீந்திரநாத் தாகூர் போன்ற உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இந்தக் கழகத்தின் உறுப்பினராவார்கள். நிகுயனின் வேண்டுகோளுக்கிசைந்து பார்புஸ்ஸே, தனது கட்டடத்தின் ஓர் அறையை இந்தப் பத்திரிகைக்-காக ஒதுக்கிக் கொடுத்தார்.
நிகுயனை ஆசிரியராகக் கொண்ட இந்தப் பத்திரிகையின் முதல் இதழ் 1922, ஏப்ரல் 1ஆம் தேதியன்று வெளியானது. அது பிரெஞ்ச், அரபி, சீனம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியானது. நிகுயனின் எழுத்தும் பெயரும் மிகவும் பிரபலமாயின. இதைத் தொடர்ந்து பிரெஞ்சுப் போலீஸ், நிகுயனை இரவும் பகலும் தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்தது. பிரெஞ்சு அரசாங்-கத்தின் காலனி நாடுகளுக்கான அமைச்சரகம், இந்தப் பத்திரிகை தேசத்து-ரோகமான பத்திரிகை என்று கூறி, அதன் காலனி நாடுகளுக்-குள் இது போவதைத் தடை செய்தது.
அகிலத்தின் தலைமைக் குழு நிர்வாகிகளுள் ஒருவரான மனுல்ஸ்கி, நிகுயனுடன் விவாதம் நடத்தினார். நிகுயன் தன் திட்டத்தை அவரிடம் வெளிப்-படுத்தினார். இந்தோ-சைனாவில் போல்ஷ்விக் வகைப்-பட்ட கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அதற்கான புறச் சூழ்நிலையும் அங்கே உள்ளது என்று நிகுயன் கூறினார். வியத்-னாமிய தொழிலாளி வர்க்கம் பலமடைந்து வருகிறது. பல தேசபக்தர்கள் நாட்டை விட்டுப் போய் காண்டன், ஷாங்காய், ஹாங்காங், மக்கோவா போன்ற தெற்கு சீனப் பகுதிகளில் குடியேறியுள்ள-னர் என்று கூறிய நிகுயன், அவர்களிடையே புரட்சிகரப்பணி செய்ய வேண்டியது தன்னுடைய கடமையாகும் என்று கூறினார். ஏனென்றால், இந்தோ-சைனாவில் உருவாகவிருக்கின்ற கம்யூனிஸ்ட் கட்சியின் கருவாக அவர்கள்தான் விளங்குவார்கள் என்றும் நிகுயன் உறுதியாகக் கூறினார்.
நிகுயன் கூறிய அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த மனுல்ஸ்கி, அகிலத்தின் நிர்வாகக் குழு நிகுயனின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ளதென்றும், அவரை அகிலத்தின் தூரக் கிழக்கத்தியச் செயற்குழுவுக்கு முழு அதிகாரமும் படைத்தவராக நியமிக்கிற-தென்றும் கூறினார். தன்னுடைய நாட்டு மக்களை அணிதிரட்டி இந்தோ-சைனாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவதற்கான தயாரிப்பைச் செய்வது தான் நிகுயனின் பிரதான வேலை என்று கூறிய மனுல்ஸ்கி, உங்களுடைய அறிவையும் அனுபவத்-தையும் வைத்துப் பார்க்கும்பொழுது, இதர தென்கிழக்கு ஆசிய நாடுகளிலுள்ள புரட்சிக்காரர்-களுக்கும் உதவி செய்ய உங்களால் முடிந்த-தனைத்தையும் செய்வீர்கள் என நிர்வாகக் குழு நம்புகின்றது என்று கூறினார்.
நிகுயனுடைய ரகசிய இருப்பிடம் குறித்து மன்னனுடைய ரகசிய போலீஸ் அறிய முடிய-வில்லை. ஆனால், எந்தப் பகுதியிலிருந்து அவர் செயல்படுகிறார் என்பதை அதனால் யூகிக்க முடிந்தது. நிகுயன் இருந்த பகுதி முழுவதையும் போலீஸ் சுற்றிவளைக்கத் தொடங்கியது. எனவே, நிகுயனை பாதுகாப்பாக வேறு இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. அதை எப்படிச் செய்வதென்று யாருக்கும் புரியவில்லை. அதற்கும் நிகுயனே வழி சொன்னார். வியத்னாமிய கிராமங்களில் உள்ள பேயோட்டி நோய் குணமாக்கும் மந்திரவாதிகள் போல உடையணிந்து, ஒரு பெட்டியில் வாத்து இறகு, சாம்பிராணி, பேயோட்டுவது சம்பந்தமான சில பழைய புத்தகங்களை எடுத்துக் கொண்டு, தனக்கு வழிகாட்டுபவரை தனது சிஷ்யனாக வைத்துக் கொண்டு, தனது புதிய ரகசிய இருப்பிடத்துக்கு அவர் வந்து சேர்ந்தார்.
1941 ஜூன் மாதத்தில், தனது நாட்டு மக்களுக்கு நிகுயன் ஒரு வேண்டுகோள் விடுத்தார். தேசிய விடுதலைக்காக அவர்கள் ஆயுதமேந்த வேண்டு-மென அவர் அறைகூவல் விடுத்தார். ஜப்பானியர்-களையும் பிரெஞ்சுக்காரர்களையும் தூக்கி எறிக என்று அவர் எழுதிய வேண்டுகோள் பிரசுரம், நகரங்களிலும் கிராமங்களிலும் வீடுவீடாகப் பரவியது.
1957ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதியன்று ஹோ-சி-மின் தன்னுடைய சொந்தக் கிராமத்துக்கு விஜயம் செய்தார். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தனது நாட்டின் விடுதலைக்கு வழிதேடி உலகப் பயணம் மேற்கொண்ட அவர், நாட்டின் தலைவனாக இப்பொழுது தனது கிராமத்துக்குள் நுழைந்தார். கிராம மக்கள் மகிழ்ச்சிப் பரவசத்தினால் கண்ணீர் வடித்தனர்.
மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்த அந்தக் கூட்டத்தில் ஹோ-சி-மின் அமைதியாகக் கூறினார்:
அய்ம்பதாண்டுகளுக்கும் மேலாக வெகு தூரத்திலிருந்த நான் இந்த மாநிலத்தின் மகன், முதன் முறையாக பிறந்த மாநிலத்துக்கு இன்றுதான் வந்துள்ளேன். பிறந்த மண் மீதுள்ள பாசத்தினால் எனது இதயம் கனக்கிறது. அந்த அய்ம்பதாண்டுகள் ஆழமான உணர்வுகளால் நிரம்பியிருந்தன. தனது கிராமத்திலிருந்து நீங்கி வெகு தொலைவிலிருந்த மனிதன், திரும்பி வந்தபொழுது மகிழ்ச்சினையும் சோர்வையும் அடைவான். ஆனால், நான் சோர்வடையவில்லை. மகிழ்ச்சியையே அடைகிறேன். ஏனென்றால் நான் இங்கிருந்து சென்றபொழுது காலனி ஆதிக்க ஆட்சியிலிருந்தோம். இன்று நமது தலைவிதியை நாமே தீர்மானிக்கும் சுதந்தர நாட்டின் குடிமக்களாக உள்ளோம்.
1966ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி ஜெனீவா உடன்படிக்கைத் தினம் வடக்கு வியத்னாமில் கொண்டாடப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரும் ஹோ-சி-மின்னின் உரையைக் கேட்க ஆங்காங்கே வானொலி முன்பு குழுமியிருந்தனர். அன்று மட்டும் 50க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்கள், ஹனாயின் நகர்ப்புற பகுதிகள்மீது குண்டுகளை வீசிக் கொண்டிருந்தன. நகரம் முழுவதிலும் வெடி-மருந்து வாடை காற்றில் பரவிக் கொண்டிருந்தது. காடுகளிலிருந்த கொரில்லாப் படையினர், பேட்டரி ரேடியோக்களின் மூலம் ஹோ-சி-மின் பேச்கைக் கேட்டனர். தென் வியத்னாமில் இருந்த போராளிகள், ரகசியமாக வானொலி மூலம் அவர் பேச்சைக் கேட்டனர் ஹோ-சி-மின் முழங்கினார்:
அமெரிக்காவுடனான இந்த யுத்தம் அய்ந்தாண்டுகள், பத்தாண்டுகள், இருபதாண்டு-கள், அதற்கும் மேலும்கூட நீடிக்கலாம். ஹனாய், ஹைபாங் நகரங்களும், இதர நகரங்களும், நிறுவனங்களும் அழிக்கப்படலாம். ஆனால், வியத்னாமிய மக்களைப் பணிய வைக்க முடியாது, சுதந்தரத்தையும் விடுதலையையும் காட்டிலும் அரிய பொருள் வேறொன்றும் கிடையாது. ஒருமுறை வெற்றி பெற்று விட்டால், நமது மக்கள் தங்களுடைய நாட்டை மீண்டும் கட்டிவிடு-வார்கள். முன்பிருந்ததைவிட வளமிக்கதாகவும் அழகானதாகவும் மாற்றிவிடுவார்கள்.
ஆசிரியர்: என். ராமகிருஷ்ணன், ரூ. 70, பக்கம் 144 கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 18