கவிதை
கருப்புச் சாவி
மூடப்பட்டிருக்கும்
கதவுகளைத் திறப்பதற்கு,
திறவுகோல் தேவைப்படுவதைப்போல,
மூடநம்பிக்கைகளின் மூளைகளை
திறப்பதற்கு,
அறிவுக் கோல்கள் தேவைப்படுகின்றன
ஆண்டவனைப் பாடிய அருணகிரி நாதர்
அலகு குத்தி ஆடவில்லை!
இறை மறை கண்ட தாயுமானவர்
மண் சோறு சாப்பிட்டதில்லை!
பக்தி தமிழ் பரப்பிய பன்னிரு ஆழ்வார்கள்,
பாற்காவடி, பன்னீர்க் காவடிகள்
எடுக்கவில்லை!
தேவாரம் பாடிய திருநாவுக்கரசர்,
தீ மிதிக்கவில்லை!
திருமாலைப் பாடிய திருமங்கையாழ்வார்,
தெருப்பிச்சை எடுக்கவில்லை!
சிவபுராணம் தந்த அப்பர், சுந்தரர்கள்
அருள்வந்து ஆடியதில்லை!
பராசக்தியை பாடிய பாரதியும்
பட்டினிப் போர் இருந்ததில்லை.
பத்து வேளை பூசை செய்யும்
பார்ப்பனனும்,
கி(கெ)டா வெட்டி கண்டதில்லை!
எல்லாம் ஒரு சம்பிராதயம் என,
சோம்பேறி வாழ்க்கைக்கு தூபம் போடும்
பக்தி மான்களின்
மூடநம்பிக்கைகளை முறியடிக்கவும்,
முச்சந்திகளின் முனைகளில்,
மூளைகளை மழுங்கடிக்கும்
குறி சொல்வோரை ஒடுக்கவும்,
தேவை ஒரு திறவு கோல்
அது,
பகுத்தறிவுக் கோல் என்னும்
கருப்புச்சாவி!

தினமும்
கையால்
பீ கழுவும், நீங்களும்
பீ அள்ளுபவர்கள் தான்
நாங்கள் தொட்டால்
மட்டும்
எப்படி வரும் தீட்டு
- த.வே. விக்கிரமாதித்தன், செய்யாறு
குறைகள் குறைய..?
பத்தாயிரம் தெய்வங்கள் இங்கே
பற்றாக்குறைகளோ
பலகோடி...
பரிகாரம் வேண்டி தினம்
மக்கள் கூட்டம்,
அழுது, புலம்பி, தொழுது,
குறைகள் மட்டும் நீண்டன குறையவில்லை சிவ சிவா...
- சிந்தாபாஸ், முத்தரசநல்லூர்
எதிரி
எலிக்குப் பூனை
பூனைக்கு நாய்
மனிதனுக்கு கடவுள், மதம்
- சு. சண்முகசுந்தரம், கருத்தனேந்தல்
ஓரவஞ்சனை
அகலிகையை
வகைதவறிப் புணர்ந்த
இந்திரனுக்கு -
ஆயிரம் யோனிக்கண்கள்
அவன்மட்டும் அறிவதாய்.
அகலிகைக்கோ - கருங்கற்
சிலையாகும் அவலம்.
சாபத்தில்கூட
பெண்ணியத்திற்குக்
கண்ணியக் குறைவே!
கவுதமரின் ஓரவஞ்சகம்
- அறிவரசன், திருலோக்கி
தண்டனையோ?
கோலாகலமாக...
நாற்பத்தி ஏழுவகை...
அபிஷேகங்கள்!
தஞ்சை பெருவுடையாருக்கு!!
ஆனால்...
கோயிலைக் கட்டிய
இராச இராசனோ...
வெயிலில் காய்ந்து
மழையில் நனைந்து
அனாதைபோல்... வெளியில்!
பார்ப்பனியத்தை ஆதரித்ததற்கு
தண்டனையோ?
- நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பேச்சாளன்
பெண்ணினத்திற்கு
குரல் கொடுத்து
முழக்க மிட்டான்
பேச்சாளன்
கருத்தை வழிமொழிந்து
கூட்டமே
கரவோசை எழுப்பின.
அவனின்
மனைவியின்
கரங்கள் தவிர.
தாமரை
கட்டடக் கலையை அழித்தன
காவியுடைகள்
பாபர் மசூதி இடிப்பு
கலவர நீரில்
வளர்கிறது
தாமரை
குமட்டவில்லை
மலம் தின்னச் சொன்ன
மனிதனுக்கு
தமிழ் மட்டுமல்ல
தமிழினமும் மெல்லச் சாகிறது
ஈழப்படுகொலை
மாறாத (ஏ)மாற்றம்
விளை நிலம்
விலை நிலமானது.
கலப்பையைப் பிடித்த விவசாயி
கரண்டியைப் பிடித்துக் கொத்தனாரானான்
களையெடுத்தப் பெண்டீர்
கலவையைத் தூக்கும் சித்தாளானாள்
வேலை வாங்கிய பண்ணைக்காரன்
வீட்டிற்குச் சொந்தக்காரனானான்.
தொழில்தான் மாறியது
தோளின் சுமைகள் இறங்கவில்லை
விளை நிலமும்
விலை நிலமும்
வினை நிலமானது.
தலைமை
ஊர் ஊராய் பொண்ணுப் பார்க்க
ஒன்றும் அமையவில்லை
கடைசியில்
அத்தைப் பொண்ணையே
தலைமை தாங்கி
திருமணத்தை முடித்து வைத்து
ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும்
முப்பந்தைந்து பவுன் நகையும்
- சு. சண்முக சுந்தரம், கருத்தனேந்தல்

நான் ஆடியபோது
ரசித்தவனோடு ரசித்து
தேவரடியா என்றாய்...
உன் பெண்டிர்
விரல் சுட்டி
தேகம் குலுக்கியதை
பரதம் என்றாய்...
நீ பெருமையாக
உணரும் தேவரடியா
நாட்டியத்தை - நான்
ஆடியபோது தேவகலை
உனக்கு வராதென்றாய்....
களையெடுத்து அறுப்பறுத்து போர் அடிக்கும்
எனதுடலின் நெளிவு
சுளிவு அசைவை
நீ பாதம் நக்கி
கற்ற குரு நடராசன்
ஒருபோதும் தரவில்லை...
சுற்றிலும் கசடுகளை
சுத்தப்படுத்தும்
எறவானத்து - என்
துடைப்பக்கட்டையே மேல்
என்னை ஒதுக்கும்
உன் குருவைவிட...
- முருக சிவகுமார், சென்னை |