சிறுகதை
 |
பெரிய வீட்டிலிருந்து என்னைச் சாராயம் வாங்கிவரச் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாயிருந்தது பெரிய ஊட்டுக்குச் சாராயமா! அங்கதான் குடிக்கரவங்க யாரும் இல்லையே எனக்கு நானே ஆச்சரியப்பட்டுப் போனேன்.
அதுமட்டுமல்ல சாதாரணமாக ஊரில் என்னை எந்த வேலைக்கும் கூப்பிட மாட்டார்-கள் உதவாக்கர எதுக்கெடுத்தாலும் எவுத்-தாளம் பேசுவான் தண்ணியப் போட்டுக்கிட்டு தாறு மாறா ஔறுவான் இவையெல்லாம் ஊரில் எனக்குக் கிடைத்த பட்டங்கள் - அப்படிப்பட்ட என்னிடம், உனக்கு ரெண்டு கிளாஸ் பெரிய ஊட்டுக்கு ஒரு பாட்டல் என்று பெரிய வீட்டிலிருந்து வந்த சின்னையா பணம் கொடுத்தார் இந்த ஒப்பந்தம் உங்களுக்கு நியாயமாகக் கூடப்படலாம். ஆனால் நான் யாருக்கும் சாராயம் வாங்கிக் கொடுப்-பவனுமல்ல; அதன் பயனாய்க் கிடைக்கும் ஓசிச் சரக்கை உள்ளே தள்ளுபவனுமல்ல.
என்றாலும் கூட, இந்த முறை எனது பீனல் கோடில் திருத்தங்கள் கொண்டு வந்துள்ளேன். பெரிய வீட்டில் சாராயம் யாருக்கு எனத் தெரிந்து கொள்வதற்காக.
இரவு 12.00 மணி
ஓம்... ரீம்... கிரீம்... வம்... சங்... யங்... மந்திர உச்சாடனைகளுக்கு மத்தியில் புகைநடுவே அரிய மாவினால் செய்யப்பட்டு அலங்காரம் செய்து முறத்தில் ஒட்டப்பட்ட உருவத்தினருகில் நான் வாங்கி வந்த சாராயப்பாட்டல் தெரிந்தது.
அருகிலிருந்த சின்னையனை நிமிண்டி வெளியே இழுக்கப்பார்த்தேன். ஆனால் அவரோ கிசுகிசுப்பாய் என்ன? என்றார்.
ஏனுங்... சின்னய்யா சாராயம் யாருக்கு?
முனியப்பசாமிக்கு கிசுகிசுத்த குரலில் சொல்லிவிட்டு மீண்டும் மந்திரத்தைக் கவனிக்-கத் தொடங்கினார்.
அட முனியப்பசாமிக்கா.-.. நான் சாமிக்-கல்லவா சாராயம் வாங்கி வந்துள்ளேன். எனது பீனல் கோடில் நான் கொண்டு வந்த திருத்தம் அர்த்தமற்றதாகிவிட்டது.
ஊட்டு அய்யனய்யும் ஆத்தாளையும் தவர மத்தவங்க ஒரு பத்து நிமிஷம் வெளியே நில்லுங்க மந்திரம் சொன்னவர் சொன்னவு-டன் நான் சின்னய்யாவை இழுத்துக்கொண்டு பொடக்காளிக்கு ஓடினேன்.
ஏனுங்... சின்னய்யா என்ன இதெல்லாம்?
அது ஒண்ணுமில்ல தம்பி ஒரு வருஷமா பெரிய ஊட்டுல பிரச்சனைக்கு மேல பிரச்-சனய்ங்கிறது உனக்கு நல்லாவே தெரியும்.
ஆமா அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? நான் அவசரப்பட்டேன்.
சொல்லுவனல்ல பொறு வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டு ஆரம்பித்தார்.
அந்தப் பிரச்சினயத் தீர்க்கத்தான் மந்திர-வாதியக் கூட்டிக்கிட்டு வந்து இப்படி ஒரு ஏற்பாடு
மந்திரவாதியா அவரு அம்புலிமாமாவி-லிருந்தும்; விட்டலாச்சாரியார் படங்-களிலிருந்தும் - மந்தரவாதி என்றால் நீண்ட ஜடாமுடி, தாடி, கையில் எலும்புக்கூடு, கழுத்-தில் எலும்புமாலை என்று நான் அறிந்து வைத்திருந்த இலக்கணங்களில் எதற்கும் பொருந்தாமலிருந்தார் அவர்.
அவரின் தோற்றம் நவீன காலத்து நடுத்தர வயதுக்காரரைப் போலிருந்தாலும் சொன்ன மந்திரங்களும் செய்த செய்கைகளும் வேத-காலத்துக்கும் முற்பட்டவையாகவே எனக்கு தோன்றியன. பெரிய வீட்டுக் கதவு திறக்கப்-பட்டு மந்திரவாதி என எல்லோராலும் அழைக்கப்பட்டவர் எங்களை அழைத்தார்.
பூஜைல இருக்கற சாமான ஆளுக்-கொன்னா எடுத்துக்கங்க அடுத்துச் சுடுகாட்டு-க்குப் போகோனும் அவர் சொல்ல, இந்த இருட்டில் சுடுகாட்டுக்கா? என எவரும் யோசிக்கவில்லை. எல்லோரும் ஆளுக்-கொன்றாய் எடுத்துக் கொண்டார்கள். அரிசி-மாவினால் செய்யப்பட்ட உருவம் அடங்கிய முறத்தையும், சாராயப் பாட்டிலையும் சின்னய்யா என்கையில் திணித்தார்.
அரிசிமாவானாலும், உருவத்தின் கோரம் கருதி யாரும் அதைக் கையில் தொடவில்லை போலும் குடிகாரனான என்னிடமே சாராயப்-பாட்டில் இருப்பது பொருத்தம் எனச் சின்னய்யா நினைத்திருக்கக்கூடும். ஆகக்கூடி சுடுகாட்டுக்குச் சென்ற ஒன்பதுபேரில் என் கையில் மட்டுமே இரண்டு பொருட்கள்.
ஹோம்லின் நகரத்து எலிகள் பேக்பைப்பர் பின்னால் சென்றது போல் நாங்கள் மந்திர-வாதியின் பின்னால் சென்றோம்.
சுடுகாட்டு முக்கு திரும்பும் இடத்தில் இருக்கும் வேலாமரத்தின் உச்சியிலிருந்து சரசர... சரசர... என்ற சத்தம்! அதன்பின் யாரும் ஒரு அடிகூட எடுத்து வைக்கவில்லை. மந்திர-வாதி மட்டும் ஒரு அடி முன்னாடி சென்று
எல்லோரும் அப்படியே அசையாம நில்லுங்க வேலா மரத்துல முனி இருந்துக்கிட்டு நம்மளத் தடுக்குது என்றவாறே தன்கைப்-பையில் இருந்த திருநீற்றுப்பையிலிருந்து விபூதியை எடுத்து மரத்தை நோக்கி வீசினார். விபூதி துகள்களாய்ப் பறந்து எங்களின் மீதே விழுந்தது.
பார்த்திங்களா... முனி தின்னூர ஏத்துக்-கமாட்டேங்குது என்றார்.
வேலாமர உச்சியை பார்த்தேன், கும்-மிருட்டில் ஒன்றுமே தெரியவில்லை எனக்கு. மந்திரவாதி இரண்டாவது முறையாக வீசத் தயாரானார். இம்முறை விபூதியை வாயருகே வைத்து ஏதோ முணுமுணுதார். நான் அருகே நின்றுகொண்டிருந்த சின்னய்யாவிடம் மெல்லிய குரலில்,
சின்னய்யா மரத்துல மட்ட கிட்ட மாட்டியிருக்கும். அதான் அந்தச் சரசர சத்தம். அதோடல்ல ஆடிக்காத்துல தின்னூர மேக்க வீசுனா கெழக்க நிக்குற நம்ம மேலதா விழும் இவம் பித்தலாட்டம் பண்ணி நம்மளப் பயப்படுத்தறான் என்றேன்.
இந்த எகத்தாளத்துக்குத்தான் ஒருபய உன்னய எங்கயுங் கூப்படறதில்ல ஏதாச்சும் துப்பாப் பேசுனா மந்திரவாதி கட்டு கட்டிரபோறார் ஜாக்கிரதை கோபத்துடன் எச்சரித்தார் சின்னய்யா.
தன் மடைமைகளையும் குறைகளையும் உணர்ந்து திருந்தாமல் அடுத்தவர் மீதோ அடுத்தவைகள் மீதோ பழி போட்டுத்தப்பிக்கும் மனிதர்கள் இருக்கும் வரை என் போன்ற ஜடப் பொருளுக்கெல்லாம் ராஜ மரியாதை கிடைக்-கும் முறத்திலிருந்த உருவம் என்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது.
வஞ்சனைப் பேய்களென்பார்; அந்த மரத்திலென்பார்; இந்த முறத்திலென்பார் எனக்குள் ஏனோ ஜாமத்தில் பாரதி வந்து போனார்.
இதற்குள் ஏழெட்டு முறை விபூதியை வீசி எங்களைச் சாம்பலில் புரண்ட கழுதை போலாக்கினார் மந்திரவாதி.
அதுவரை பொறுத்திருந்த நான் பொங்கி-யெழத் தயாரானேன். போர்க்களத்தில் முன் செல்லும் நெப்போலியன் போல (ச்சே... உதாரணத்துக்கூட எனக்கு பிராண்ட் பெயர்-களே கிடைக்கின்றன). மந்திரவாதிகளையும் மீறி வேலா மரத்தின் கீழே சென்று மேலே அண்ணாந்து பார்த்தேன். பனை ஓலை ஒன்று வேலா மரத்தில் சிக்கிக் காற்றுக்கு உரசியதால் ஏற்பட்ட சத்தம்தான் அந்தச் சரசர... சரசர... சத்தம்! ஓலையை கீழே பிடித்து இழுத்தேன். அது விழுந்துவிட்டது; சத்தமும் நின்று-விட்டது. இருட்டாயிருப்பதால் நான் ஓலை-யைப் பிடித்து இழுத்தது யாருக்கும் தெரியாது போய்ச் சொன்னாலும் யாரும் நம்பப் போவதில்லை.
எதுவும் யோசிக்காமல் சாரயப்பாட்லைத் திறந்தேன் வாயில் வைத்துக் கவிழ்த்தேன். சைட்-டிஷ்ஷாக முறத்திலிருந்த அரிசிமாவுப் பொம்மையைப் பிய்த்து வாயில் போட்டுக் கொண்டேன். சரியாய் அய்ந்தே நிமிடத்தில் சாராயப் பாட்டிலும் முறத்திலிருந்த உருவமும் காலியாகி விட்டது. பாட்டியலையும் முறத்தையும் வீசிவிட்டு நடந்தேன்.
சின்னயா தான் பதறிக் கொண்டு முன்னாடி வந்து
ஏந் தம்பி என்னாச்சு என்றார்.
முனி போயிருச்சு என்றேன்.
சாராயமும், மொறமும் எங்கே? மந்திர-வாதி மிரட்டலாய்க் கேட்டார்.
போவும்போது முனி சும்மா போவுல அத ரெண்டயும் வாங்கிட்டுப் போயிருச்சு! என்றவாறு நடக்கத் தொடங்கினேன். |