ஆசிரியர் பதில்கள்

கேள்வி: வள்ளலார் கருத்துக்களும் பெரியார் கருத்துக்களும் எந்த வழியில் ஒருமிக்கின்றன?
- வீர.செல்வம், பூம்புகார்
பதில்: ஆறாம் திருமுறையில் வடலூர் வள்ளலார் கண்மூடிப் பழக்கமெலாம் மண்மூடிப் போக என்ற முறையில், தான் அடைந்த தெளிவு நிலைக்குப்பின் பாடிய அத்துணையிலும் பெரியார் குரலே கேட்-கின்றது. பெரியாரும் இராமலிங்கமும் என்ற நமது கழக வெளியீடு தெள்ளத் தெளிய விளக்குகின்றதே!
கேள்வி: அரசுப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வியைக் கற்கும் மாணவர்களுக்குத்தான் அரசுப் பணி என அரசாங்கம் சட்டம் கொண்டு வந்தால் என்ன?
- மு. தமிழ்ப்பாண்டியன், சென்னை - 49
பதில்: அப்படி ஒரு முரட்டுச் சட்டம் வந்தால் அது நீதிமன்றங்களில் அடிப்பட்டுப் போகும்! சமச்சீர்கல்வி முறை இதற்கு விடையளிக்கக்கூடும்.
கேள்வி: ஏழ்மையில் இருக்கும் உயர் ஜாதியினர்க்கும் - இடஒதுக்கீடு கிடைக்கச் செய்வோம் என்று உத்திரப்பிரதேசம் முதல்வர் மாயாவதி கூறுகிறாரே?
- ந. அதியமான் பரிதி, தருமபுரி - 1
பதில்: இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்ட மனுஅநீதியை ஒழிக்க வந்த மாமருந்து. வாக்குவங்கி அரசியலின் விநோதங்கள் இவை. ஏழைகளுக்கு என்றால் எல்லா ஜாதி ஏழைகளுக்கும் என்று அல்லவா கூறுவது நேர்மை?
கேள்வி: 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மதவாதக் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்காமல் தடுக்க மற்ற கட்சிகளுக்கு தாங்கள் கூறும் அறிவுரை?
- ஆர். ஜீவிதா, சே.பேட்டை
பதில்: காங்கிரஸ் இப்போதே ஒரு குறைந்தபட்ச வேலைத்திட்ட அடிப்படையில், கலைஞர் போன்ற மூத்த முதிர்ந்த அரசியல் ஞானிகளின் துணையோடு ஒரு பலமான மதச்சார்பற்ற கூட்டணியை வலிமையுடன் அமைக்கும் பணியைத் துவக்கிவிடவேண்டும். கூட்டணி ஆட்சிக்கு கூச்சப்படத் தேவை-யில்லை.
கேள்வி: நரவேட்டையில் நரேந்திரமோடி... ராஜபக்சே... போட்டி போட்டு காணும் பயன் என்ன?
- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில்: மதவெறி, பதவி வெறி, இனவெறியின் தற்காலிக வெற்றிகள்!
கேள்வி: இந்திய அரசியல் சட்டம் எந்தப் பிரிவில், மூடநம்பிக்கை ஒழித்து மக்கள் அறிவியல் மனப்பான்மை வளர்க்க வேண்டும் என்று சொல்கிற அதன் பகுதியை சுட்டிக் காட்டி வெளியிட வேண்டுகிறேன்.
- கவி. நெய்வத்தளி, க. தமிழ்மறை
பதில்: அடிப்படைக் கடமைகள் என்ற தலைப்பில் இந்திய அரசியல் சட்டத்தின் 51ஹ என்ற பிரிவு (Article) அதில் உள்ள எச் (H) பிரிவு It shall be the duty of every citizen of India (h) to develope scientific temper, humanism, and the spirit of inquiry and reform என்ற பகுதி. அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், ஏன் எதற்கென்று ஆராயும் அறிவு, சீர்திருத்தம் இவைகளை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வளர்ப்பது அடிப்படைக் கடமையாகும் என்று கூறுகிறது.
கேள்வி: குஜராத், இமாச்சல பிரதேசம் பா.ஜ.க,வின் வெற்றி எதை காட்டுகிறது?
- ச. ராம்மோகன், மாங்காடு
பதில்: காங்கிரசின் தவறான அணுகு-முறையால் கோட்டை விட்டதைக் காட்டுகிறது!
கேள்வி: காந்திகால சுதந்திரப் போராட்டம் - தனி ஈழம் கேட்டு பிரபாகரன் போராட்டம் - காஷ்மீர் ஹாஜிக் குழுத் தலைவர் யாசின் மாலிக் போராட்டம் - இவற்றின் வெவ்வேறு காலக் கட்டங்களின் வேற்றுமை ஒப்பீடுகள் கூறமுடியுமா?
- எஸ். சற்குணராஜ்
பதில்: மூன்றும் வெவ்வேறானவைகள். அவைப் பற்றி கேள்வி பதிலில் ஆய்வு நடத்திட இயலாது. தனிக் கட்டுரைகள் அல்லவா எழுதவேண்டும்.
கேள்வி: 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பாடத்திட்டத்தில் தந்தை பெரியாரின் கருத்துகளை வைத்தால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே!
- ந. ராஜசேகரன், ஆற்காடு
பதில்: அவசியம். தமிழக கல்வி அமைச்-சர்- கவனிக்க வேண்டிய செய்தி.
கேள்வி: முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அறிவித்துள்ள 95 அடியில் பெரியாருக்கு சிலை அமைக்கப்படும் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அச்சிலையைச் சுற்றிலும் அய்யாவின் பகுத்தறிவுக் கருத்துகள் இடம்பெற, நீங்கள் வலியுறுத்துவீர்களா?
- ராஜ. தமிழழகன், ஆற்காடு
பதில்: கலைஞர் எதையும் ஆழ்ந்து சிந்தித்து சிறப்புடன் செய்பவர் அவருக்கா தெரியாது? |