கவிதை
கறுப்பே அடையாளம்
தமிழர் திருநாளே.
இந்த முறையும்
நம்பிக்கையோடு வருகிறாய்
வெறுங்கையோடு
அனுப்பப் போவதில்லை.
கைகளில் பழைய
மொந்தைகளிருக்கின்றன.
சாதியின் இளவரசர்கள்
தமிழர் தெருக்களில்
ஆயிரம் குதிரைகள் பூட்டிய
ரதத்தை செலுத்துகிறார்கள்.
முந்தைய சபதங்களை
இலையுதிர் காலங்கள்
கொண்டு போய்விட்டது
ஏளனப் பார்வையோடு.
வடக்கு திசைகளிலிருந்து
வரும உத்தரவுகள்
இந்த வருடத்திலும்
நம் நதிகளை மீட்கவில்லை
ஜனநாயகத்தின் காலங்களில்
தேர்தல்கள் முளைக்கின்ற போதெல்லாம்
தமிழர்கள் பிரிந்து போகிறார்கள்
இந்தப் புத்தாண்டு கவிதையிலும்
ஓரம் நசுங்கிய
ஒன்றிணைக்கும் வரிகள்
வந்து சேர்க்கின்றன
கதைகளில் அற்புதங்கள்
நிகழ்த்தும் கடவுள்கள்
இப்பொழுதும்
வந்து போகிறார்கள்
எதற்கும் அடிமையாகும்
தமிழர்களை மீட்டெடுக்கும்
அறிவுப்படகுகள் செலுத்தும்
கறுப்புச் சட்டைகள் நம்பிக்கையோடிருக்கின்றார்கள்.
கறுப்பை எதிர்க்கும்
காவி நிறங்கள்
மீண்டும் தென்படுகின்றன
கோடு கிழிக்கும்
பிரிவின் கைகள் நீளுகின்றன.
தமிழர் திருநாள் சித்திரங்களை
மெதுவாக இழுத்துச் செல்கின்றன
நவீனத்தின் எறும்புகள்.
எப்பொழுதும் போலவே
நம்பிக்கையோடிருக்கின்றேன்.
பெயர் மாற்றிக் கொள்ளாத
கிராமங்களில்
உடைமாற்றிக் கொள்ளாத
பண்பாடுகளில் பார்க்க முடிகிறது
பொங்கலின் அடையாளத்தை.
நகரங்களின் பொங்கலை
சம்பிரதாயங்கள் திருடிச் செல்கின்றன.
தமிழர் திருநாள் விழா
கடவுளில்லாத திருவிழா.
இயற்கையின் பிறந்த நாள் விழா.
பொங்கலை வரவேற்கும்
தெருக்களில் -
இனி அறிவின் கொத்துக்கள் பூக்கட்டும்.
கறுப்பு நிறமணிந்த
கறுப்புகள் தமிழனை அடையாளப்படுத்தட்டும்
நம் இல்லங்களில் -
தமிழ் மொழியே முகமாக இருக்கட்டும்.
புதுப்பாக்கள்
பாவப்பட்டவர்கள்
எத்தனை தலைவர்கள்
ஆதரித்துப் பேசுகிறார்கள்!
எத்தனை எழுத்தாளர்கள்
அக்கறையாக எழுதுகிறார்கள்!
எத்தனை பேச்சாளர்கள்
அனுசரணையாகப் பேசுகிறார்கள்!
- என்ன பிரோஜனம்?
இரட்டை டம்ளர்கள் இன்னும்!
ட்யூன்
பின் வாங்கும் காருக்கு
பொருத்தம் தா()னா!
வந்தே மாதரம் ட்யூன்.
அ. யாழினிபர்வதம், சென்னை - 78
நாட்டு நடப்பு
கும்பிடப் போன
தெய்வம்
குறுக்கே வந்தது,
கடத்தல்காரன்
கையில்
சாமி (?) சிலையாக!
பறக்கும் பறவையின்
விரலிடுக்கில் புல்லாங்குழல்!
ஓ... கிருஷ்ணப் பருந்து
மரக்கிளையிலும்
மனித இதயமா?
ஓ... வாழைப் பூ!
சூட்சமம்
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக்
காணலாம்
என்ற உயர்ந்த
நோக்கத்தில்தான்
மக்களை எல்லாம்
ஏழைகளாகவே
வைத்திருக்கிறார்களோ
அரசியல்வாதிகள்?
மு. தமிழ்ப்பாண்டியன், சென்னை - 49
எனக்குப் புரியவேயில்லை
ஆடிமாசம் காளியாத்தா கோயிலுக்கு
ரெண்டு ஆடு, மாடு, கோழி
உசுரோட தோலுரிச்சாங்க
அதுங்க துடிச்ச துடிப்பபாத்து
எனக்கு வலிப்பு வந்துச்சி,
அல்லாத்தையும் அப்படியே வுட்டுட்டு
என்ன மட்டும்
பூசாரிகிட்ட தூக்கின்னு போணாங்க
ஆத்தா எம்மவன காப்பாத்து
அடுத்த ஆடிமாசம்
நாலு ஆடு, மாடு, கோழி
பொலி போடறேன்னு
அப்பா வேண்டிக்கினாரு
எனக்கு மனசு
உட்டு போச்சு
நம்மால, பேசத்தெரியாத
ஆடு, மாடெல்லாம்
யேன் சாவனும்
அதனால
என்னுசுர இப்பியே
காவு வாங்கிக்கின்னு
ஆத்தாகிட்ட வேண்டிகினேன்!
அல்லாத்துக்கும்
வேடிக்கை பாத்துனு இருந்த
காளியாத்தா
ஒரு வார்த்தகூட பேசல!
- த.வே. விக்கிரமாதித்தன், செய்யாறு
இராம நாடகம்
நீ சிரித்ததில்லை
பட்டம் சூடிய நேரத்திலும்
உன் வாழ்க்கை துன்பத் தொடர்கதை
தம் வாழ்க்கை மேம்பட
உன் ஜாதகம் பூசிப்பர்
வேடிக்கை மனிதர்கள்
நீ மெலியன்
பழைய காலண்டர்களில்
பார்த்திருக்கிறோம்
மதவெறிக் கட்சி
பேனர்களில் மட்டும் நீ
ஆர்னால்டு சுவாச்சனேகர்
என்ன, கொஞ்சம்
பெயிண்ட் செலவு அதிகம்
தசரதன்
காமவெறியன் என்று
அரண்மனைவாசிகள்
தெரிவிக்கின்றனர்.
அறுபதினாயிரம்
மனைவியர் பெயரை
நினைவு கொள்ளவும்
அவனால் முடியுமா?
அதைத்தவிர வேறெதற்கும்
அவனுக்கு
நேரம் இருக்குமா?
பெயர் தெரிந்த
மனைவியர் மூவரும்
அறுபதினாயிரத்துள்
அடக்கமா? அதிகமா?
போகத்தில் பிறப்பவர்
புத்திரர். நீயோ
யாகத்தில் பிறந்தது
விசித்திரம்.
பரிகாரம் என்றும்
பாயசம் என்றும்
காவிச் சுவடிகள்
பலபடப் பேசும்
திரேதாயுக விஞ்ஞானம்
நமக்குத்
தெளிவாகவில்லை.
இளமையில் கொல்
என விசுவாமித்திரர் கற்பித்த வழியில்
தாடகை உனக்கு
முதற் பலியானாள்
உன் கொலைப்பணி தொடர்ந்தது.
வளைக்கச் சொன்ன
வில்லை உடைக்கிறாய்
கொலை சலித்துப் போனதால்
ஆயுதத்தை முறித்தாயா?
விளையாட்டுத் துணைக்கெனப்
பிடிக்கச் சொன்ன
பொன்மானை வதைக்கிறாய்
உன்னைவிட்டு அவள் மானுடன் ஆடல்
உனக்குப் பிடித்திருக்காது
நீ சென்ற வழியெலாம்
பிணங்கள் விழுந்தன
பாதம் ஏந்திய பாதுகை
அயோத்தி அரியணையை அலங்கரித்தது.
நீ நடந்து சென்ற
நெடிய பாதையையும்
சுருட்டி எடுத்துப்
பரணில் வைத்துப்
பத்திரப்படுத்தலாம்!
உன் கதை எழுதிய
உன் காலத்து வால்மீகியை
உச்சிமேற்கொள்பவர்
அவர் வழிவந்த
வால்மீகியரை
இழிந்த சாதியரென
இன்று கொல்கின்றனர்
அவர்கள் குடில்கள்
எரிபடுகின்றன.
சம்பூக வதைகள்
முடிவதேயில்லையா?
நிற்பதுவே நடப்பதுவே
பறப்பதுவே என
எல்லாம் முடிந்த உனக்குக்
கடல் கடக்கப்
பாலம் தேவையா?
இரண்டே அடிகளில்
மண்ணையும் விண்ணையும்
தாண்டியவன் நீ.
உனக்கேன் அணைக்கட்டு?
அதற்கேன் அணில் தொண்டு?
தமிழர் இல்முன்
ஆடிய அணில்களில்
ஒன்றுமட்டுமே உனக்கு
உதவி செய்தது.
அதனால்
மற்றனைத்தையும் நீதான்
எலிகளாய்ச் சபித்தாயா?
மலைப் பாறைகள் அடுக்கிக் கட்டுக என்றாய்
அணில் விரல்களுக்கு
அது சாத்தியமா?
அடுக்கிவைத்து எதுவும்
இலட்சம் ஆண்டுகள்
நிலைக்கமுடியுமா?
இலட்சம் ஆண்டுகள் முன்னர்
நீண்டர்தால் அமானுடங்கள்தாமே
இருந்தன!
குரங்குகள் அடுக்கியதால்
குலைந்து போய்விட்டதா?
நாளும் தோற்கும்
ஏமாளி மக்கள்
ராம ஜெயம் எழுதி
நாள் கழிக்கின்றனர்
நீயோ படுத்துக்கொண்டேயிருக்கிறாய் எங்கள்
சுப்ரபாதங்கள் கேட்டும்
நீ சரயுவில் முடிந்துவிட்டாலும்
உன் அம்புகள்
ஓய்வதாயில்லை
புதைக்கப்பட்ட பின்னும்
எழுந்து நடக்கும்
டிரகூலா போல் அவை
கொலைத் தொழில் தொடர்கின்றன.
ரகுபதி ராமில் தொடங்கி
ஹே ராமில் முடிந்த
காந்தியைக் கொன்றது
நாதுராம பாணம்!
எழுந்திருக்க முடியாத
கணபதி கையிலும்
ஏ.கே. நாற்பத்தேழு
எல்லாம்
ராமக்கட்சி உபயம்!
தூணிலும் துரும்பிலும்
நாரணன் இருந்தால்
கொடிகட்ட முடியுமா?
பல்குத்த முடியுமா?
நாமம் போட்டதும்
மூளைக்கு ஓய்வா?
நாற்காலியில் இவரை
அனுமதிக்கலாமா?
உலகம் உருண்டை
என்ற உண்மையை
அன்றைய போப்புகள்
சிறையில் அடைத்தனர்.
உண்மைதான் உண்மை.
நம்பிக்கைகளில்
பொய்களும் உள்ளன.
உத்தரகாண்டத்து
ராமன் அழுதான்
உண்மையைவிடவும்
நம்பிக்கையை
மதிக்கவேண்டியுள்ளதே என.
ஊரார் நம்பிய
ஒரு பொய்யால் அவன்
சீதையை
விலக்க நேர்ந்தது.
உண்மையை மட்டுமே
மதிக்கும் காலம்
வர இன்னும் எத்தனை
யுகங்கள் ஆகும்?
உன் இலக்கிய நெடுங்கதை
பட்டிமன்றங்களில்
சுவைக்க உதவும்.
புவியியல், வரலாறு
- இவற்றில் உன்னை
மயிலிறகுபோல
வைப்பது சரியா?
கடலினைத் தாவும்
குரங்கு - கற்பனை
காசியில் படித்த
பாரதி கூற்று இது.
மூளையைக் காத்து
வளர்க்கும் தலையில்
வேதாந்தகர்கள்
தாடி ரோமம் மட்டுமே
வளர்ப்பது முறையா? |