கவிதை
எதிர்பாராமல்
வாஸ்து பார்த்து
கட்டிய வீடு நில நடுக்கத்தில்
நொறுங்கிப் போனது!
பொருத்தம் பார்த்து
பார்ப்பான் செய்த திருமணம்
மணமுறிவில் முடிந்தது!!
வாழ்வைச் சீரழிக்கும்
தலைவர்கள் ஒப்பந்தம்
மக்களால் ஏற்கப்படவில்லை!!!
புதிய தொழிற்சாலைகளில்
சாதி... மதங்கள்... தகர்ந்து
நன்மைகள் பல நடக்கிறது
எதையும் எதிர்பாராமல்...
- செந்தமிழியன், காந்திநகர், புதுச்சேரி-9
அவர்கள் நம்புவதில்லை
அவர்கள்
கடவுளை நம்புவதில்லை
கடவுள் இல்லை என்பது
அவர்களுக்குத் தெரியும்
எச்சில் தெறிக்க
உச்சரிக்கும் மந்திரத்தால்
கொச்சைப்படுத்தினாலும்
கோபம் வராத கடவுள்பற்றி
பயமேதும் இல்லை
அவர்களுக்கு
கடவுள்
ஒரு நாளும் வரமாட்டார்
ஆகையால்
அவர்கள் கையேந்துவதில்லை
கடவுளிடம் தட்சணை போடுங்கோ
மனிதர்களிடம்தான்
தட்டேந்திக் கேட்பார்கள்
ஏனெனில்
அவர்கள் கடவுளை நம்புவதில்லை
- நந்தவனம் சந்திரசேகரன், திருச்சி -13
புதுப்பாக்கள்
சுருங்கல்
புறா மூலம் தூது,
ஆட்கள் மூலம் தூது,
தபால்,
தரைவழி தொலைபேசி,
கையடக்க அலைபேசி,
உலகம் சுருங்கிவிட்டது
மனித மனங்களைப்போல...!
பிரதிபலிப்பு
மேலதிகாரியிடம்
வாங்கிய வசவு
கொட்டி வைக்கும்
குதிர் - மனைவி
அக்கரைக்கு...
இறந்தவன் சொன்னான்
இன்னும் சில காலம்
வாழ்ந்திருக்கலாமென,
வாழ்பவன் சொல்கிறான்
இந்த உலகில்
வாழ்வதற்கு
செத்துவிடலாமென...!
மதச்சண்டையில்
மனிதர்கள்
மரித்தனர்,
கடவுள் மட்டும்
உயிரோடு...!
ஊமையும் பேசினான்
புல்லாங்குழல்
வழியாக...!
திருடித்தின்பதற்கும்
வரிசை,
வரிசையாய்
எறும்புகள்
எப்போதும்
சிரித்துக்கொண்டே
உயிரைவிடுகின்றன
பூக்கள்
காலை ஒடித்து
நல்லவனா
எனப்பார்த்தனர்
வெண்டைக்காய்களை
ஊழல்
ராமர் பாலம்
உண்மையெனில்
புராணகாலத்திலேயே
ராமர் பாலத்தில்
ஊழல் நடந்துவிட்டதா?
பாலம் இருந்ததற்கான
சுவடுகளேயின்றி வெறும்
மணல் திட்டுகளே
இப்போது இருக்கின்றன - எனில்
ஊழலில் ஈடுபட்டவன்
யார்?
ராமனா? அனுமானா?
அறிவு என்ன விலை?
திரையரங்குகளில்
அலைமோதும் கூட்டம்,
பூங்காக்களில்
நிறைந்த கூட்டம்.
தொலைக்காட்சி எதிரே
ஒட்டு மொத்த குடும்பம்,
விளையாட்டுத் திடலில்
வீரர்களின் கூட்டம்,
மதுபானக் கடையினிலே
கட்டுக்கடங்காக் கூட்டம்
திரும்பிய திசையெங்கும்
கூட்டம் தவிர்த்து
நூலகம் சென்றால்
வெறிச் சோடிக்கிடக்கின்றது
அமைதியாய் அந்த
அறிவுக்கூடம்.
|