வடபுலம்
 |
சனாதன மதம், பார்ப்பன மதம் எனும் இந்து மதத்தில் பெண்கள் இழிபிறவிகளாகவே கருதப்படுகிறார்கள். அவர்களின் கீதை பாவயோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்கிறது. ஆனாலும் அந்தப் பெண்கள்தான் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இந்து மதத்தை காப்பாற்றி வருகிறார்கள். பெண்கள் கோயிலுக்கு வரலாம், வழிபடலாம், பூஜை புனஸ்காரங்களைச் செய்யலாம். ஆனால், மத ரீதியான மடங்களில் எந்தவித உயர்பதவிக்கும் வரமுடியாது. காரணம், அவர்களுக்கு சன்னியாச உரிமை இல்லை; அது ஆண்களுக்கு மட்டுமே உரியது. சாதுக்கள், சன்னியாசிகள் என்ற பெயரில் நிர்வாண சாமியார்கள், அலங்கார அருவருப்பான அழுக்கு மனிதர்-களாக வடபுலத்தில் காட்சிதரும் அத்தனை பேருமே ஆண்களாகவே இருப்பார்கள். அவர்களின் இச்சைகளுக்கு இணங்க பெண்கள் பயன்படலாம். அது தனியே திரைமறைவில் நடக்கும். அது பலமுறை அம்பலமான செய்தி-களும் வந்திருக்கின்றன.
இத்தகைய இந்து மதக் கூட்டமைப்பில் அப்போதைக்கப்போது, சில பெண் சாமி-யாரிணிகள் தலையெடுக்கிறார்கள். அவர்களும் தனியே மடங்களை உருவாக்கிக் கொள்-கிறார்கள். ஆனால் அவர்களை இந்துமதம் அங்கீகரிப்பதில்லை. அண்மையில் வடபுலத்தில் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
உத்தரகாண்ட் (உ.பி.) மாநிலத்தில் ஹரித்து-வாரில் உள்ளது மா யோக் ஷக்தி ஆஷ்ரம் (தாய் யோக சக்தி ஆசிரமம்) 81 வயது நிறைந்த மா யோக் ஷக்தி என்கிற பெண்மணி தான் இதன் தலைவியாம். உலகம் முழுவதும் இதற்கு பக்தர்கள் உண்டாம். இந்த மா யோக் ஷக்தி, அமெரிக்காவில் உள்ள இந்தியரான 71 வயது பெண்மணி சாது மா ஜோதீஷ்வரானந்த் சரஸ்வதி என்பவருக்கு 2007 டிசம்பர் 14இல் பார்வதியாச்சார்யா என்ற பட்டத்தை வழங்கியுள்ளார். இது சங்கராச்சார்யா பட்டத்-துக்கு நிகரானதாகக் கருதப்படுமாம். இதற்கு எதிர்ப்புக் கிளம்பித்தான் சர்ச்சை உண்டாகி-யுள்ளது. பட்டம் பெற்றவரும் சங்கராச்-சார்யார்களுக்கு உள்ளதைப்போல நான்கு பீடங்களை நிறுவுவேன் என்று கூறிவிட்டு அமெரிக்கா பறந்துவிட்டார். சங்கராச்சாரிகள் வைத்திருப்பதைப் போலவே ஒரு தண்டம், குவளை, மண்டலம் போன்ற பொருள்களும் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இந்தச் செயல்பாடுகளில் கோபம் கொண்ட சாதுக்கள் சங்கத்தினர் இது சனாதான தர்மத்துக்கு விரோதமானது, ஆசிரமத்தை மூடவேண்டும் என்று சாடி எதிர்ப்புத் தெரிவித்-துள்ளார். ஆனால் ஆசிரமத்தலைவி மா யோக் ஷக்தி, நம் நாட்டில் உள்ள சாதுக்கள் அவர்களுக்கு இணையாக எந்தப் பெண்-ணையும் வளரவிடுவதில்லை. அதை முறியடிக்கும் வகையில் ஒருவருக்காவது சங்கராச்சார்யாருக்கு இணையான பார்வதியாச்-சார்யா என்னும் பட்டத்தை தர சபதம் ஏற்றிருந்தேன். அது நிறைவேறிவிட்டது என்று கூறியுள்ளார்.
ஆன்மீகத்தில் பெண்கள் எவ்வளவு தூரம் வந்தாலும் அவர்களால் முழுமையான துறவி-யாக முடியாது. அவர்கள் இந்தப் பிறவியில் கடவுளை நினைத்து உருகி ஆண்களுக்கு வேலைகள் செய்து விட்டு, அடுத்த பிறவியில் ஆணாகப் பிறந்து துறவியாகலாம். இந்த நடைமுறையை உடைக்க நினைக்கும் சாதுக்கள் சனாதன தர்மத்துக்கு எதிரானவர்கள். அந்தப் பட்டத்துடன் அவர் கோயிலுக்குள் நுழைய முடியாது. சாதாரண பெண்ணாக வேண்டு-மானால் நுழையலாம் என்கிறார் அகில இந்திய அஹாடா பரிஷத்தின் செயல் தலைவர் மஹந்த் மித்ரு பிரகாஷ் என்பவர்.
பெண் என்பவள் ஆணுக்குப் பயன்படும் ஒரு போகப் பொருள்; குடும்பம் நடத்த, குழந்தைகளைப் பெற்றுப்போட, அவர்களை வளர்க்க மட்டுமே கடமைப்பட்டவள் என்பது-தான் இந்துமதச் சட்டம். இதற்கு மாற்றுச் சிந்தனை, மதக்கருத்துகளோடு உள்ளவர்-களிடம் உருவாகும்போதுகூட அது எதிர்க்கப்-பட்டே வந்துள்ளது என்பதற்கு இதுவே அண்மைக்கால உதாரணம். இந்துத்-துவா ஆட்சியைக் கொண்டுவருவோம் என்று கூறும் பா.ஜ.க. சங்பரிவார் அமைப்புகளில் பெண்-களும் உள்ளனர். அவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள், கடந்த மாதம் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை-யையும் பா.ஜ.க. கைவிட்டுவிட்டதாக அறிவித்து-விட்டது. இந்துமதம் இம்மி அளவு கூட பெண்களுக்கு எதிரான சிந்தனைகளை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. கல்வியிலும், பொருளாதாரத் துறையிலும் வளர்ந்துவரும் பெண்கள் பிற்போக்குத்தனமான இந்து மதக் கருத்துகளில் இருந்து விழித்துக் கொண்டால் மட்டுமே இழிவைச் சுமக்கும் வாழ்விலிருந்து விடுதலை பெறமுடியும்.
-மணிமகன் |