ஜாதகம் பார்க்கவில்லை
நான் என் திருமணத்திற்கு ஜாதகம் பார்க்கவில்லை. ஆனால் நாங்கள் நல்ல நிலையிலேயே வாழ்கிறோம். அதே போல எங்களின் 18 நிறுவனங்களுக்கும் புதுக்கணக்கு என்பதாக இதுவரை நாங்கள் எழுதியது கிடையாது. கணக்கு நோட்டில் மஞ்சள்பூசி, உ போட்டு, ஓம் இலாபம் எழுதி, சாமி பெயர்களுக்கு ரூபாய் வரவு வைக்கும் எந்தச் செயலையும் நாங்கள் செய்தது கிடையாது. அதேபோல எனது 3 மகன்களும் தங்கள் தொழில்களில் இதுபோன்று செய்யவில்லை.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கு ரூ.1 கோடி
இறக்கும் தறுவாயில் நாம் எந்தச் சொத்தையும் எடுத்துச் செல்வது கிடையாது. அதனால் பிறரின் தேவைகளை முடிந்தளவு நான் நிவர்த்தி செய்து வைக்கிறேன். நான் கோவிலு க்கும், திராவிடர் கழகத்திற்கும் ஒரு சேர நன்கொடைகள் வழங்குவதாகக் கூறுகிறார்கள். இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் ஒரு கூட்டத்திலேயே நகைச் சுவையோடு குறிப்பிட்டார்கள். விகேயென் அவர்கள் சமயபுரம் கோவிலுக்கு நன்கொடை கொடுப்பார்கள். ஆனால் சமயம் வரும் போதெல்லாம் அவர் நன்கொடை கொடுப்பது நமக்குத்தான் எனக் கூறினார்.
இந்த ஆண்டின் ஜுன் மாதத்தில் நான், என் துணைவியார், என் 3 பிள்ளைகளும் ஆக அய்வரும் சேர்ந்து தலா 20 இலட்சம் வீதம் ரூ.1 கோடி ரூபாயை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கு கட்டட நிதியாக வழங்க உள்ளோம்.
அய்யாவின் நியாயத் தராசு!
1970ஆம் ஆண்டு திண்டுக்கல் நகராட்சிக்கு தேர்தல். கடும் போட்டி. 15வது வார்டு கலகலத்தது. அனல் பறக்கும் பிரச்சாரம். காங்கிரஸ் சார்பில் எஸ்.பி.பரதன். மொத்த பழவியாபாரத்தில் கொடிகட்டி பறந்தவர். தினம் அய்ம்பதுக்கும் குறையாது லாரிகள் சரக்கை ஏற்றும்; இறக்கும்.
எதிர்த்து நின்றவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி. திராவிடர் கழக பிரமுகர். பணவசதி இல்லா எளிய தொண்டர். வார்டு மக்களின் அரவணைப்பு உண்டு. திராவிடர் கழகத்தவர் தேர்தலில் ஈடுபடக் கூடாது என்ற ஆணை இருந்ததால் கழகத்த லிருந்து விலகி தேர்தலில் குதித்தார். தி.மு.க. இவரை ஆதரித்தது.
எஸ்.பி.பரதன் பார்த்தார். அய்யாவை எப்படியும் தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்து வந்து கிருஷ்ணமூர்த்தி கட்டியிருக்கும் கோட்டையை தகர்க்க திட்டமிட்டார். பெரிய பொதுக் கூட்ட அலங்கார மேடை; ஆளுயர விளம்பரத் தட்டிகள். பெரியாருக்கு பேன்ட் முழக்கத்துடன் ஆடம்பர வரவேற்பு. அய்யாவுக்கு எடைக்கு எடை பழங்கள் தந்து மரியாதை. இப்படி அசத்தினார் காங்கிரஸ் வேட்பாளர்.
பெரியார் அவர்கள் திண்டுக்கல் வந்ததும் தன் பால்ய நண்பரும் ஈரோட்டை சார்ந்தவராக இருப்பினும், தற்சமயம் வணிகம் நிமித்தம் திண்டுக்கல்லுக்கு குடியேறி விட்ட கருப்பண்ண முதலியாரை அழைத்து வரச் சொல்லி, ஒரு அறையில் அரை மணி நேரம் அவரிடம் தனித்தே உரையாடினார். பிறகே, பொதுக் கூட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
அய்யா மேடை ஏறியதும் வேறு யாரையும் பேச அனுமதிக்கவில்லை. அவரே பேச எழுந்தார். யார் யார் எதுக்கு போக வேணுமோ அதுக்கு போக வேணும். கவுன்சிலர் வேலை என்பது கல்லாப் பெட்டி வேலை இல்லை. தினமும் வீடு தவறாமல் ஏறி இறங்க வேணும்; சாக்கடை சுத்தம் செய்தாங்களா? கொசு தொல்லை உண்டா? வார்டு ரோடு குண்டும் குழியுமா இல்லாமே இருக்கா? இப்படி கண்லே விளக்கெண்ணெய் விட்டு பார்க்க வேணும். இதை யார் செய்வாங்களோ அந்த ஆளுக்கு உங்கள் வோட் - ரத்தினச் சுருக்கமாக பேசிவிட்டு மேடையை விடடு இறங்கினார் பெரியார்.
தேர்தல் முடிவை கேட்கவா வேணும்! கிருஷ்ணமூர்த்தி அமோகமாக வென்றார். தோற்றத் திலும் பரதனுக்கு வருத்தமில்லை. முன்னைவிட தன் பழவியாபாரத்தை கவனமுடன் செய்து உயர்ந்தார். பெரியாரின் வாக்கு இருவருக்குமே ஏற்றம் தந்தது.
- சந்தனத் தேவன்
வேம்பும் மஞ்சளும்
வேலம்மாள் காலில் வேனல்கட்டி, வீக்கமும் வலியுமாக இருந்ததில் அவளுக்கு வேதனை. பக்கத்து வீட்டு பார்வதி பார்த்து விட்டுச் சொன்னாள்.
அக்கா! இது ஒத்தம்மை போல் தெரிகிறது எதுக்கும் சாமியாடி சுந்தரத்துகிட்ட காட்டு என்றாள்! ஆமாம்! எனக்கும் சந்தேகம்தான். அதனாலதான் ஊசி போடாம இருக்கேன் என்றாள் வேலம்மாள்.
சாமியாடி சுந்தரத்திடம் வேனல் கட்டிக்கு மந்திரிக்கச் சென்றாள். அவனும் வாங்கிய காசுக்கு வேப்பிலையால் மந்திரித்து விட்டு யம்மா! ஒத்தம்மை தான் இது! வேப்பிலையும் மஞ்சளையும் அரைத்து பத்துப்போடு ரெண்டு நாள்ல சரியாயிடும் என்றான்.
இரண்டு நாளில் வீக்கமும் குறைந்தது. வேதனையும் ஓய்ந்தது வேலம்மாளுக்கு. நலம் விசாரிக்க வந்த பார்வதி நான் சொன்னது மாதிரி சரியாயிருச்சு பாத்தியா என்றாள்!
நோய்குணமானது எதனாலே? மந்திரத்தாலா? வேனல்கட்டியின் மீது போட்ட வேம்பு மஞ்சள் மருந்தினாலா?
- வைகறைதாசன்
உலகம் முழுவதும் 110 பத்திரிகையாளர்கள் கொலை!
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அடங்கிய தன்னாட்சி அமைப்பு ஒன்று பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வு முடிவின்படி பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளில் முதன்மை நாடாக இராக் உள்ளது. இந்த ஆண்டு மட்டும் இங்கு 50 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2003ஆம் ஆண்டில் இராக்கில் போர் தொடங்கியதிலிருந்து இன்று வரை மொத்தம் 250 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இரண்டாவது நாடு சோமாலியா.
மூன்றாவதாக வரும் நாடு இலங்கை. கடந்த ஆண்டில் இலங்கையில் 4 பத்திரிகைகயாளர்களும், இந்த ஆண்டில் 7 பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
நாலாவதாக வரும் நாடு பாகிஸ்தான். இந்த ஆண்டில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
காங்கோ, எரித்ரியா, குவாடி, மாலா ஆகிய நான்கு நாடுகள் அய்ந்தாவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது இடங்களில் வருகின்றன. இந்தயா ஒன்பதாவது இடத்தில் வருகிறது. இந்த நாடுகளில் எல்லாம் 2 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 96.
இந்த ஆண்டு உலகம் முழுவதும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 110.
கொடுமை... கொடுமை... கொடுமை... கொடுமைகளுக்கெல்லாம் பெருங்கொடுமை!
- நன்றி: thavaram.blogspot.com
|