சுயமரியாதை இயக்கம்
ஓரு வரலாற்றின் வெற்றி
 |
இந்த உலகத்திலுள்ள எல்லா அதிசயங்-களையும் கொண்டு வந்துபோட்டு, ஏடு ஏடாய்ப் புரட்டிப் பார்த்தாலும் அழகும், பொருளும், சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய சுயமரியாதை என்கிற வார்த்தைக்கு மேலான-தாகவோ, ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
தந்தை பெரியார் அவர்களின் பொன்மொழி இது (குடிஅரசு, 1.6.1930). 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை பெரியார், அரசியல் விடுதலையைவிட சமுதாய விடுதலையே முதன்மையானது என முழங்கினார்.
அதற்கு முன் காங்கிரசில் இருந்தபோது சுயராஜ்யம் பற்றி பேசிக் கொண்டிருந்த அவர், சுயமரியாதை பற்றிப் பேசத் தொடங்கினார். எந்த ராஜ்யமாகவாவது இருந்து விட்டுப் போகட்டும் - முதலில் மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும் என்ற அவரது குரலே சென்ற 20ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை உலுக்கியது. 20ஆம் நூற்றாண்டின் தமிழக அரசியல், சமுதாய வரலாற்றில் இதனாலேயே பெரியார் தவிர்க்க முடியாதவரானார்.
ஆயிரம் ஆண்டுக் கால அடிமைத் தனங்-களை ஒழித்திட, சில பத்து ஆண்டுகளில் - சுயமரியாதை இயக்கம், அதனைத் தொடர்ந்து திராவிடர் கழகம் கண்ட களங்கள் பெரு வெற்றியைத் தந்தன. திராவிடச் சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற மக்களைப் போல மானமும் அறிவும் உள்ள மக்களாக ஆக்கும் பணியை மேற்கொண்டுள்ளேன் என்று தன்னைப் பற்றிய தன்னிலை விளக்கம் அளிக்கும் போது,- இந்தப் பணி செய்ய வேறு யாரும் முன்வராததனால் என்ற ஒரு வரியையும் பெரியார் அதில் சேர்த்திருப்பார்.
கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். பெரியாரும் இந்தப் பணியைச் செய்ய முன் வராமல் இருந்திருந்தால் இன்றைய நம் நிலைமை என்ன? அந்த மாமனிதனின் அறிவு; துணிச்சல்; போர்க்குணம்; ஆளுமை எல்லாம் கோடானுகோடி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்-பட்ட மக்களை மனிதர்களாக வாழவைத்துக் கொண்டிருக்கிறது அல்லவா!
இன்றைக்கு 83 ஆண்டுகளுக்கு முன்னால் 1925இல் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றத்-திற்குப் பிறகு, தொடர்ப் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்த பெரியார், 1929 பிப்ரவரி 17, 18 தேதிகளில், செங்கற்பட்டில் முதலாவது தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாட்டைக் கூட்டினார். அது இந்திய விடுதலைப் போராட்ட காலக்கட்டம். அந்தக் காலக்கட்டத்தில் தமிழக அரசியல், சமுதாய வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக அந்த மாநாடு நடந்தது. மாநாட்டின் தலைவராக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ. சவுந்திர பாண்டியனார் பொறுப்பு வகித்தார். மாநாட்டின் துணைத் தலைவர் தந்தை பெரியார்.
 |
தமிழகம் முழுவதுமிருந்து தலைவர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். அன்றைய திராவிடன் இதழ் வெளியிட்ட செய்திகளில் தலைவர்கள், பொறுப்பாளர்களின் பெயருடன் அவர்களது ஜாதிப் பட்டங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த மாநாட்டில் கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானம், மக்கள் தங்கள் பெயர்களோடு ஜாதி அல்லது வகுப்பைக் காட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பட்டங்களை விட்டுவிட வேண்டுமென்று பொது ஜனங்களை இம்மாகாநாடு கேட்டுக் கொள்கிறது என்கிறது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியவுடன் அந்த மாநாட்டிற்குப் பிறகு எல்லாத் தலைவர்களும் தன் பெயருக்குப் பின்னால் உள்ள ஜாதிப் பட்டத்தை விடுவித்து விட்டார்கள். இந்த மாற்றம் நிகழ்ந்து 80 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்படி ஒரு இயக்கம் தமிழகம் தவிர மற்ற இந்தியப் பகுதிகளில் இல்லாததால் இன்று நாயுடுவும், யாதவ்வும், கவுடாவும், ராவ்களும் தான் அரசியல் தலைவர்களாக அங்கெல்லாம் உள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த மாற்றம் மட்டுமல்ல; இன்றைக்கு நமது சமுதாயம் பெற்றுள்ள பல மாறுதல்களுக்கு அடிகோலியது 1929இல் நடை-பெற்ற முதலாவது சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்கள்-தான். (தீர்மானங்கள் தனியே காண்க)
மக்களைப் பிரிக்கும் மதம், வேதம், புராணம், சாஸ்திரம் போன்றவைகளை மக்கள் பின்பற்றக் கூடாது, வருணாசிரம தர்மத்தை எதிர்த்தல், தீண்டாமையை எதிர்த்தல், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை, பெண்களுக்குச் சொத்துரிமை, கல்வி உரிமை, கல்வி கற்பிப்பதில் பெண்களையே ஆசிரியர்-களாக நியமித்தல், தாழ்த்தப்-பட்ட மக்களுக்கு - புத்தகம், உடை, உணவுடன் இலவசக் கல்வி, இலவச நிலம், கல்வியில் மூட-நம்-பிக்கை அகற்றப்பட்ட பாடங்கள், இப்படி ஒவ்வொரு தீர்மானமும் கடந்த நூற்றாண்டின் சமூக மாறுதல்களுக்கு அடித்தளமாக விளங்குகின்றன.
திராவிடர் கழகத்தின் போராட்டங்களாலும் மக்கள் மத்தியில் அவ்வியக்கம் மேற்கொண்ட இயக்கப் பிரச்சாரங்களாலும் மக்கள் மனங்-களில் பழமை எண்ணங்களை விடுவித்து சமத்துவச் சமுதாயம் அமைய சம உரிமை உணர்வுகளை வளர்த்த. திராவிட இயக்கத்தின் அரசியல் வீச்சான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் அறிஞர் அண்ணாவின் காலத்தில் - இந்த மாநாட்டின் ஒரு தீர்மானமான இரு மொழிக் கொள்கையுடன், சுயமரியாதைத் திருமணச் சட்டம், தமிழ்நாடு பெயர் சூட்டல் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன.

அதன்பின்னர் மானமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் இந்த மாநாட்டின் பல தீர்மானங்-களை நடைமுறைப்படுத்தினார். குறிப்பாக-பெண்-களுக்குச் சொத்துரிமை, ஆரம்பப் பள்ளிகளில் பெண்களே ஆசிரியர்கள், ஆதிதிராவிடர்-களுக்கு இலவச நிலம் - இப்படி பல செயல்-பாடுகள் ஆக்கம் பெற்றன.
அரசியல் கட்சிகள் ஆட்சியைப் பிடிப்பது - மாநில நிர்வாகத்தின் வரவு செலவுகளைப் பார்ப்பதற்கு மட்டுமல்ல; சமூக மாற்றத்திற்கும் அது பாடுபடவேண்டும். அதைத்தான் தி.மு.க. அரசும் செய்தது; செய்து வருகிறது. ஆளுங்-கட்சியை எதிர்த்து ஏதாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதிகளோடு இயங்கிக் கொண்டிருக்கும் கட்சிகள் கூட, நிர்வாக ரீதியான குற்றச்-சாட்டுகளையும் தனி நபர் தாக்குதல்களையும், தனி நபருக்கு எதிரான அரசியலையும் முன் வைக்க முடிகிறதே தவிர (அதற்கும் அன்றாடம் முதல்வர் கலைஞர் புள்ளி விவரங்களுடன் அளிக்கும் மறுக்க முடியாத பதில்கள் தனி) கொள்கை ரீதியான நடவடிக்கைகளை எதிர்க்க முடிவதில்லை. அண்மையில் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக முதல்வர் கலைஞர் அறிவித்தவுடன் பா.ஜ.க. அதை வரவேற்கிறது. வரவேற்க வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் பா.ஜ.க.வுக்கு. எதிர்த்தால் தமிழ்-நாட்டில் வாக்குப் பெறமுடியாது. இதேபோல இட ஒதுக்கீடு கொள்கையையும் இந்திய அளவிலேயே ஆதரிக்க வேண்டிய அவசியம் அனைத்து இயக்கங்களுக்கும் ஏற்பட்டு விட்டது. சமூக நீதி இலட்சியங்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட திராவிடர் இயக்கத்தின் வெற்றி இந்திய அரசியல் வரலாற்றில் தனித்த இடம் பெற்றுள்ள இந்தக் காலகட்டத்தில் - இந்தியத் துணைக் கண்டத்தின் முழுமைக்கு-மான முன்னோடியான திராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கைகள் வழிகாட்டியாக விளங்குகின்றன. ஆற்றாமையினாலும், முக்கால் நூற்றாண்டைக் கடந்தும் இன்னும் வீச்சோடு இயங்குகிறதே என்ற வயிற்றெரிச்சலாலும், திராவிட இயக்கம் என்ன செய்து விட்டது என்று எழுதுவோர், பேசுவோர். 1929 முதலாவது சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானத்தைப் படித்துவிட்டு, இன்றைய சமூக மாற்றத்தை கொஞ்சம் நம் நினைவின் முன் நிறுத்தினால் அந்த வரலாற்றின் வெற்றியை உணர முடியும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இன்றைய தன்மான வாழ்க்கைக்கு பெரியாரும் அவரது தொண்டர்களும் பட்ட பாடுகள் கொஞ்-சநஞ்சமல்ல என்பதை இன்றைய இளைய தலைமுறை உணர வேண்டும். கேளிக்கை-களிலும், பொழுது போக்குகளிலும் காலங்-கழிக்கும் நம் இளைய தலைமுறை கொஞ்சம் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதும், படிப்பதும் காலத்தின் தேவை என்பதை உணர வேண்டும். இதனைக் கற்பிக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது. இல்லையேல் லட்சியமற்ற சினிமாக்காரர்களை நோக்கி இளைஞர்கள் ஈர்க்கப்படும் அபாயமும் உள்ளது. அரசியலில் ஈடுபட்டால் தனது சொந்த வாழ்வை உயர்த்திக் கொள்ளலாம் என்ற சமூக நோக்கற்ற வழிகளையே சினிமாக்களில் இருந்து வந்த அரசியல்வாதிகள் காட்டிக் கொண்டிருக்-கிறார்கள். அவர்களின் பின்னே செல்லும் இளைஞர்கள் அறிய வேண்டிய வரலாறு 1929ஆம் ஆண்டு நடந்த முதலாவது சுயமரியாதை மாநாட்டின் தீர்மானங்களும் செய்திகளும் தான். 1929இல் மாநாடு நடந்த அதே செங்கல்பட்டு நகரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் 2008 பிப்ரவரி 18இல் நடத்தப்படும் 80ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் மானமிகு மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் வரலாற்றுக் கல்வெட்டைத் திறந்து வைத்து தி.க. தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் உரையாற்றவுள்ளார்.

அந்த மாநாட்டினை-யொட்டி இரண்டு வரலாற்றுப் பெட்டகங்கள் நூல்களாகவும் வெளிவந்துள்ளன.
பல்வேறு சமூக மாற்றங்களையும், அரசியல் மாற்றங்களையும் கண்ட திராவிட இயக்கத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கு அத்தனை கருத்துரு-வாக்-கங்களையும் தரும் தகுதிமிக்க தலைவர்-களாக முதல்வர் கலைஞர் அவர்களும், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும் நமக்கு வாய்த்திருக்கிறார்கள்.
புதிய உலகின் போக்குகளை உள்வாங்கி இன்னும் எட்ட வேண்டிய இலட்சிங்களை அடைய அடுத்த தலைமுறைக்கும் கொள்கைப் பாடங்களைப் பயிற்றுவித்துவரும் முதல்வர் கலைஞர், தமிழர் தலைவர் கிவீரமணி ஆகியோரின் அடியொற்றி வரவேண்டிய கடமை இன்றைய தமிழின இளைஞர்களுக்கு உள்ளது. நடந்து வந்த வரலாற்றுப் பாதையைத் திரும்பிப் பார்த்து, இனி செல்ல வேண்டிய இலட்சியப் பாதையைக் கடக்க இந்த மாநாடு வழிகாட்டும்.
|