1929 பிப்ரவரி 17-18 செங்கற்பட்டு
தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு தீர்மானங்கள்
 |
சைமன் கமிஷன்
(1) இந்தியாவிலுள்ள பல வகுப்பாரின் உரிமைகளும் அபிப்பிராயங்களும் ஒன்றுக்கொன்று மாறாக இருப்பதால், இந்திய அரசியல் விசாரணைக் கமிஷனில் இந்த பல வகுப்புப் பிரதிநிதிகளையும் நியமிப்பது சாத்தியமல்ல வென்று இந்திய மந்திரி பார்லிமெண்டில் கூறியிருப் பதாலும், இந்தியர்களில் எல்லா சமூகத்தாருக்கும் நம்பிக்கை கொடுக்கக்கூடிய ஒருவரைச் சேர்க்க முடியாத நிலைமையால் நமது தேசம் இருக்கிற படியாலும், இந்திய அங்கத்தினர் நியமிக்கப்பட வில்லை யென்னும் காரணத்தைக் கொண்டு கமிஷனைப் பகிஷ்கரிப்பது நியாயம் அல்லவென்று இம்மகாநாடு கருதுகின்றது.
(2) பிரிட்டிஷ் பார்லிமெண்டார் இந்திய தேசத்தை ஆண்டு வருகிற உரிமையையும் இந்திய அரசாங்கத்தை நிர்வகித்து வருகிறதையும், இந்தத் தேசத்திலுள்ள எல்லா ராஜீயக் கட்சியும் ஏற்று அடங்கி ஒத்துழைத்து வருகிற இக்காலத்தில், அதே பார்லிமெண்டால் நியமிக்கப்பட்ட விசாரனைக் கமிஷன் முன் சாட்சியம் சொல்வது இந்தியரின் சுயமரியாதைக்கு விரோதமென்று சொல்லுதல் பொருத்தமுள்ளதல்லவென்று இம்மகாநாடு கருதுகின்றது.
(3)ஆகையால் சைமன் கமிஷனர் தீர்க்காலோ சனையின் பேரில் பார்லிமெண்டாருக்கு அனுப்பும் அறிக்கையில் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்களும் கொள்கைகளும் கூடிய சீக்கிரம் நிறைவேறுவதற்கு மார்க்கங்களைத் தேடுவார்களென இம்மகாநாடு எதிர் பார்க்கிறது.
ஜாதிபேதம்
(4) மக்கள் பிறவியினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற கொள்கையை இம்மகாநாடு அடியோடு மறுப்பதுடன் அதை ஆதரிக்கிற மதம், வேதம், சாஸ்திரம், புராணங்களை யெல்லாம் பொது ஜனங்கள் பின்பற்றக் கூடாதென்றும்,
(5) வருணாசிரமமென்ற கொடுமையான கட்டுப் பாட்டையும் சமுதாய முறையில் காணப்படும் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் முதலிய ஆட்சேபகர மான பிரிவுகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடாதென்றும்,
(6) மனித நாகரிகத்திற்கும், தேச முன்னேற்றத்திற்கும் தீண்டாமை என்பதை ஒழித்து எல்லாப் பொது ரஸ்தாக்கள், குளங்கள், கிணறுகள், பாடசாலைகள், சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள், கோவில்கள் முதலிய பொது ஸ்தாபனங்களைத் தட்டுத் தடங்கலின்றி அனுமதிக்கச் சகல சனங்களுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கிறது.
(7) இவைகள் நிறைவேறச் செய்யப்படும் பிரச்சாரமும் முயற்சியும் ஒரு சில சுயநல வகுப்பாரின் மத சம்பந்தமான பிடிவாதத்தினாலும் முட்டுக்கட்டையினாலும் போதிய அளவு சித்தி பெறாமலிருப்பதால், இதற்காக அரசாங்கச் சட்டம் அவசியம் என்று கருதுகிறபடியால், சட்ட சபைப்பிரதிநிதிகளும், சர்க்காரும் தக்க ஏற்பாடு செய்து பொது ஜன முயற்சிக்கு உதவிபுரிய வேண்டுமென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது.
ஜாதிப்பட்டமும் - குறியும்
(8) மக்கள் தங்கள் பெயர்களோடு ஜாதி அல்லது 4 வகுப்பைக் காட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பட்டங்களை விட்டு விட வேண்டுமென்ற இம்மகா நாடு பொது ஜனங்களைக் கேட்டுக் கொள்கிறது. (9) ஜாதி அல்லது சமயப் பிரிவுகளைக் காட்டும் குறிகளை யாரும் அணிந்து கொள்ளக் கூடாதென்று கேட்டுக் கொள்கிறது.
கலியாணம் முதலிய சடங்குகள்
(10)பெண்களின் கல்யாண வயது 16-க்கு மேற்பட்டிருக்க வேண்டுமென்றும், மனைவி புருஷன் இருவரில் ஒருவருக் கொருவர் ஒத்து வாழ இஷ்டமில்லாதபோது, தம்முடைய கல்யாண ஒப்பந்தத்தை ரத்து செய்துகொள்ள உரிமையிருக்க வேண்டுமென்றும், விதவைகள் மறு விவாகம் செய்துகொள் வதற்கு உதவி செய்ய வேண்டுமென்றும், கலியாணம் செய்துகொள்ள விரும்பும் ஆண்களும் பெண்களும் ஜாதி மத பேதமின்றி தங்கள் தங்கள் மனைவி கணவர்களை தேர்ந் தெடுத்துக்கொள்ள பூரண உரிமையளிக்கப்பட வேண்டு மென்றும், அதற்கேற்றவாறு, கல்யாணச் சட்டங்கள் திருத்தப் படவேண்டுமென்றும், கலியாணம் முதலிய சடங்குகள் சொற்பப் பணச் செலவில் நடத்தப்பட வேண்டுமென்றும், எக்காரணத்தை முன்னிட்டும் ஒரு நாளைக்கு மேலாவது, ஒரு விருந்துக்கு மேலாவது நடத்தக் கூடாதென்றும் தீர்மானிக்கிறது.
கல்வி
(11) கல்வி ஸ்தாபனங்களிலே தாய்ப் பாஷையும், பொதுப் பாஷையாக அரசாங்கப் பாஷையும் தவிர மற்ற பாஷைப் படிப்புக்காகப் பொதுப் பணத்தை உபயோகிக்கக் கூடா தென்றும்,
(12) பள்ளிக்குப் போகத் தக்க சிறுவர் சிறுமிகளுக்கு ஆரம்பக் கட்டாயக் கல்வி மாத்திரம் பொது நிதிகளிலிருந்து போதிக்கப்பட வேண்டுமென்றும்,
(13) உயர்தரக் கல்விக்குப் பொது நிதிகளைச் செலவழிக்கக் கூடாதென்றும், அப்படிச் செலவழிக்கப்பட வேண்டிய அவசிய மிருந்தால் வகுப்புவாரி விகிதப்படி மாணவர்களைத் தெரிந்தெடுத்துப் போதிக்க வேண்டுமென்றும், (14) மற்ற வகுப்புப் பிள்ளைகளுக்குச் சமமாகக் கல்வி அடைகிறவரையிலும், தீண்டாதவர்கள் என்று சொல்லப் படுகிற வகுப்பினரின் பிள்ளைகளுக்குப் பள்ளிக் கூடங்களில் புத்தகம் உண்டி, உடை முதலியவற்றை இலவசமாக அளிக்க வேண்டுமென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கிறது.
கோவில் மடம் முதலியன
(15) கடவுள் என்பதன் பேரால் கோவில்களிலாவது அல்லது வேறு இடங்களிலாவது ஒரு பைசாவாவது - ஒரு பைசா பெறும்படியான சாமானாவது செலவழிக்கக் கூடாதென்றும் வணங்குகிறவனுக்கும் வணங்கப் படுபவனுக்கும் மத்தியில் தரகனாவது துபாஷியாவது இருக்கக் கூடாதென்றும் இம்மகாநாடு கருதுகிறது.
(16) இனிமேல் புதிதாய் ஒரு கோவிலும் கட்டக்கூடா தென்றும், இப்போதிருக்கிற கோவில், மடம், சத்திரம், வேத பாடசாலை முதலியவைகளுக்காக விட்டிருக்கும் சொத்துக் களைக் கைத்தொழில், வியாபாரம், ஆராய்ச்சி முதலிய கல்விகளுக்காகவும் கைத்தொழிலுக்காகவும் செலவழிக்க முயற்சி செய்ய வேண்டுமாய்ப் பொதுஜனங்களை இம்மகாநாடு கேட்டுக்கொள்கிறது.
(17) கோவில்களில் உற்சவங்கள் முதலியன கொண்டாடுவதை நிறுத்திக் கொண்டு அவற்றிற்குப் பதிலாகப் பொது ஜன அறிவுவளர்ச்சி, ஆரோக்கியவளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி முதலியன சம்மந்தமான பொருட்காட்சிகளை நடத்தி மக்களுக்கு அறிவும் செல்வமும் ஏற்படச் செய்ய வேண்டுமாய் இம்மகாநாடு கேட்டுக் கொள்கிறது.
(18)(அ) இனிமேல் சர்க்கார் தர்க்காஸ்து நிலம் கொடுப்ப தெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் என்பவர்களுக்கும், மற்றும் தங்களுக்கு நிலமில்லாதவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டு மென்றும், அதிலும் இப்போது தீண்டாதார் எனப்படுவோருக்கு விசேட சலுகை காட்டி நிலங்களைப் பண்படுத்திப் பயிர் செய்யப் பண உதவி செய்ய வேண்டுமென்றும், (ஆ) தீண்டாதார்க்கு உத்தியோ கங்களில் முதல் உரிமை கொடுக்க வேண்டு மென்றும், (இ) மற்றைய வகுப்பு சிறுவர் சிறுமிகளின் அந்தஸ்தைப் பெறும் வரைக்கும் தீண்டப்படாதார் என்று சொல்லப்படுபவர்களின் சிறுமிகளுக்குப் பள்ளிக் கூடங்களில் புத்தகம், உடை, உண்டி முதலியனவற்றை இலவசமாய் அளிக்க வேண்டுமென்றும் இம்மகாநாடு கேட்டுக் கொள்ளுகிறது (19) மூட நம்பிக்கைகளையுடைய எந்தப் புஸ்தகங் களையும் பாடப்புத்தக மாகப் பள்ளிக் கூடங்களில் வைக்கக் கூடாது என்றும், உபாத்தியாயர்களைப் பயிற்சிக்கும் பள்ளிக் கூடங்களிலும் மூட நம்பிக்கையுள்ள பாடங்களைக் கற்பிக்கக் கூடாதென்கிற நிபந்தனை விதிக்க வேண்டு மென்றும், பகுத்தறிவு, தன் முயற்சி ஆராய்ச்சி முதலியவை களுக்கு அனுகூலமான விஷயங் களையே பாடமாக வைக்க வேண்டுமென்றும், டெக்ஸ்ட்புக் கமிட்டியாரும் அறிவையும் தன் முயற்சியையும் உண்டாக்கக் கூடிய புத்தகங்களையே சிபார்சு செய்யவேண்டுமென்றும் இம் மகாநாடு கேட்டுக் கொள்ளுகிறது
பெண்கள் சமத்துவம்.
(20) (அ) பெண்களுக்கு ஆண்களைப் போலவே சமமாகச் சொத்துரிமைகளும் வாரிசுப் பாத்தியதைகளும் கொடுக்கப்பட வேண்டுமென்றும்,
(ஆ) பெண்களும் ஆண்களைப் போலவே எந்தத் தொழிலையும் மேற்கொண்டு நடத்தி வருவதற்கு அவர்களுக்குச் சம உரிமையும் அவகாசமும் கொடுக்கப்பட வேண்டுமென்றும்,
(இ) பள்ளிக்கூட உபாத்தியாயர்கள் வேலையில் பெண்களே அதிகமாக நியமிக்கப்படுவதற்குத் தக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், ஆரம்பக் கல்வி கற்றுக் கொடுக்கும் உபாத்தியாயர் வேலைக்குப் பெண்களையே நியமிக்க வேண்டுமென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கிறது.
பகுத்தறிவுக்கு விரோதமானவை
(21)நூலாசிரியர்கள், நாடகாசிரியர்கள், நடிகர்கள், நாடக நிலையச் சொந்தக்காரர், சினிமா படக்காட்சிக்காரர் முதலியோர் பகுத்தறிவுக்கும் நியாய நேர்மைக்கும் எதிரிடையானதும், சுய நம்பிக்கையையும் சுயமரியாதையையும் குன்றச் செய்வதும் அல்லது தவறானதும் பகுத்தறிவுக்கு மாறானதுமான மதக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதுமான நகல்களையும், கதைகளையும், நாடகங்களையும் எழுதவோ படிக்கவோ ஆதரிக்கவோ கூடாதென்றும் இம் மகாநாடு தீர்மானிக்கின்றது
ஹோட்டல்களில் ஜாதி வித்தியாசம்
(22)(அ) வகுப்பு பேதம் காண்பிக்கப்படுகிற எல்லா ஹோட்டல் களையும், காப்பிக் கிளப்புகளையும் இந்த மகாநாடு கண்டிப்பதுடன், இவ்வித விஷமத்தனமான பேதங்களுள்ள ஹோட்டல்களையும் காப்பி கிளப்புகளையும் இந்த மகாநாடு கண்டிப்பதுடன், இவ்வித விஷமத்தனமான பேதங்களுள்ள ஹோட்டல்களுக்கும் காப்பி கிளப்புகளுக்கும் அவ்வவ்விடத் திலுள்ள அதிகாரிகள் லைசென்ஸ் கொடுக்கக்கூடாதென்றும் கேட்டுக் கொள்கிறது. (ஆ) ரயில்வே அதிகாரிகள் தங்கள் வசத்திலும் மேற்பார்வையிலும் உள்ள சாப்பாட்டுச் சாலைகளிலும் சிற்றுண்டிச் சாலைகளிலும், ஜாதி, மதம், வகுப்பு, நிறம் முதலியவற்றைப் பொறுத்து எவ்வகையிலும் வேற்றுமை யாகப் பிரயாணிகளைப் பாராட்டாமலிருப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனே கைக்கொள்ளுமாறும், இவ் விழிவான வேற்றுமையை ஒழிக்க ரயில்வே ஆலோசனைக் கமிட்டியினர்களும் இந்திய சட்டசபை மெம்பர்களும் ஏற்பாடுகள் செய்யுமாறும் இம்மகாநாடு கேட்டுக் கொள்கிறது
சித்த வைத்தியத்திற்கு ஆதரவு
(23) தஞ்சை ஜில்லா போர்டு சித்த வைத்தியத்தை ஆதரிக்க வேண்டியது என்றும், பரம்பரை சித்த வைத்தியர்களைத் தாலுகா, ஜில்லா போர்டு களில் நியமிக்க வேண்டுமென்றும், ஸ்தல அதிகாரிகளைக் கேட்டுக் கொள்ளுகின்றது
தொழிலாளர் துன்பம்
(24)நம்முடைய நாட்டின் முன்னேற்றத்திற்குத் தொழிலாளர்களுடைய முன்னேற்றமும் அவசியமான படியால் - அவரவர்களின் வேலைக்குத் தகுந்த படியும் - அவர்கள் சுகமாக வாழ்வதற்கு வேண்டிய அளவு கூலி கொடுப்பதோடு, ஒவ்வொரு தொழிலும் கிடைக்கும் லாபத்தில் அந்தந்த தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர் களுக்கு நியாயமான பங்கு கொடுக்க வேண்டுமென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கிறதுதென் இந்திய ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் அரசாங்கத்தார் நடுநிலைமை வகிக்காததற்காக அவர்களைக் கண்டிப் பதுடன், அநியாயமாய்த் துன்பப்பட நேர்ந்த தொழிலாளர் களிடம் இம்காநாடு அனுதாபம் காட்டுகிறது.
தேகாப்பியாசத்தின் அவசியம்
(25)இளைஞர்களுக்குத் தேகப்பயிற்சிக்குரிய சாதனங்கள் அளப்பது அவசியமென இம்மகாநாடு கருதுகின்றது
சுயமரியாதைப் பிரச்சாரம்
(26)சுயமரியாதை இயக்கத்தைப் பரவச் செய்யவும், அதன் லட்சியங்களை அடைவதற்குரிய பிரச்சாரம் புரியவும் நிலைபெற்ற ஒரு கமிட்டியும் அக்கமிட்டியின் கீழ்ப் பிரச்சாரத் தொண்டர்களும், இதற்கு வேண்டிய பொருளும் அமைக்கப்படுவது அத்யாவசிய மென இம்மகாநாடு கருதுவதுடன், சுயமரியாதை இயக்கத்தின், கொள்கை களையும் லட்சியங்களையும் கொள்பவர்களையே சட்ட சபைகள், ஸ்தல ஸ்தாபனங்கள் முதலியவற்றிற்கு தேர்ந்தெடுத்து அனுப்புவதற்குச் சுயமரியாதைத் தொண்டர்கள் உதவி செய்யும்படி இம்மகாநாடு கேட்டுக் கொள்ளுகிறது
ராமசாமிப் பெரியாருக்கு நன்றி
(27)சமூக முன்னேற்றத்திற்கும் சமூக விடுதலைக் கும் சுயமரியாதை இயக்கக் கர்த்தாவாகிய திரு.ஈ.வெ. ராமசாமிப் பெரியார் அவர்கள் ஆற்றியுள்ள பெரும் பணிக்கு நன்றி பாராட்டுவதுடன், அவர்கள் இவ்வியக்கத்தில் தலைமை வகித்து நடத்துவதில் அவர்கள் பால் தங்களுக்குப் பூர்ண நம்பிக்கையுண் டென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கின்றது. |