தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
சுயமரியாதை இயக்கம்
1929 பிப்ரவரி 17-18
வரலாறு
சிறுகதை
ஹாலிவுட் கலை - 14
கவிதை
புதையல்
சிறந்த நூலிலிருந்து
கற்பனையும்
நூல் அறிமுகம்
1929 சுயமரியாதை
தமிழர்கள் மீதான்
சமூக அநீதி்
பெட்டிச் செய்திகள்

 

 

சிறுகதை

ஓற்றையடிப் பாதை

வானம் நட்சத்திரங்களால் புள்ளிக்-கோலம் போட்டிருந்தது. கோலத்தின் நடுவே குத்துவிளக்கு ஏற்றி வைத்தது போல, நடுவில் நிலா ஒளி பரப்பிக் கொண்டிருந்தது.
அந்த வானத்தை, அந்த நிலவை, அந்தக் கண் சிமிட்டி விளையாடும் விண்மீன்களை எத்-தனை முறை பார்த்தாலும் அலுப்பதேயில்லை சுசீலாவுக்கு.
சுசிலா - இரைந்து கூப்பிட்டாள் அத்தை.
பூந்தளிரின் இதழ்போல் மாடிப்படிகளில் இறங்கிவரும் மருகளின் அழகைப் பார்த்ததும் இரு கண்களும் அவளுக்குக் கலங்கின.
பாவி மகனுக்குக் கொடுத்து வைக்க-வில்லையே! என்று மனதிற்குள் அரற்றிய அலறலை மறைத்துக் கொண்டு, சுசீலா! உன் அம்மா வந்திருக்காங்க... போய்ப் பாரு! என்றாள் குழைவாக.
அவ்வளவுதான், அன்னம் மானானது. சுசீலாவின் நிதான நடை துள்ளல் ஓட்டமாக மாறியது.
புகை படிந்த மோனாலிசா ஓவியமாக நின்ற மகளைப் பார்த்தும், முதலில் சகுந்தலைக்கு உள்ளம் அழுத்தமாகப் பதைபதைத்தது.
என்னம்மா, பேசாம நிக்கிறே? என்று சுசீலாவின் குரல் கேட்டதும்தான் தாய் சுயநினைவுக்கு வந்தாள்.
ஒண்ணுமில்லையடியம்மா! சும்மாதான்... உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சா, அதான் வந்தேன்...! என்றபடியே மகளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள்...
அவன் முகத்தில் திலகம் இல்லை. கைகளில் வளைகள் இல்லை. காதும் வெறுமையாக இருந்தது. ஆனால், இதழ்களில் மட்டும் ஆழமாக விரிந்த புன்னகை. அந்த முகம் முழுவதையும் நிறைத்துக் கொண்டிருந்தது.
பாவி மனுசன், அவன் மட்டும் போய் சேரலே, இந்த இளம் வயசுல உன் பூவையும், பொட்டையுமே கூட எடுத்துக் கிட்டுப் போயிட்டான் என்று வழக்கம் போல் புலம்பினாள் சகுந்தலை.
ப்சி... அதை அதை விடும்மா!... திலகா, சாந்தி எல்லோரும் எப்படி இருக்காங்க? சாந்திக்கு பெண் குழந்தை பிறந்திருக்குமே? ஒருநாள் பார்க்க வரணும் என்றாள் சுசீலா ஆர்வமாக...
எல்லாரும் நல்லாந்தாண்டி இருக்காங்க.... நீதான் இப்பத் தனியா மொட்டை மரமா நிக்கறே?
போச்சு.. உன் புலம்பலை ஆரம்பிச்சிட்டியா? இங்கே அத்தை என்னை நல்லா கவனிச்சுக்-கிறாங்க... இரு... டீ கொண்டு வற்றேன் என்றபடி எழுந்து போன மகளையே பார்த்தபடி இருந்தாள் சகுந்தலை.
கல்யாணத்திற்கு முன்பு எப்படி இருப்பாள் சுசீலா? துள்ளி ஓடும் வெண்பனி முயல்போல... என்று நினைத்துக் கொண்டாள் தாய். திருமணமாகி மருமகனும் அவளை நன்றாக வைத்துக் கொள்ளவில்லை. திருமணமானபின்பு தலை நிறைய பூ, நெற்றி நிறைய திலகம் என்றிருப்பாளே ஒழிய முகம் நிறைய சிரிப்பாயிருப்பாள் என்று சொல்லமுடியாது.
என்ன, எதுக்கெடுத்தாலும் சிரிச்சிக்-கிட்டிருக்கே? குடும்பப் பெண்ணாய் லட்சண-மாய் நடத்துக்கக் கத்துக்கோ என்றாள் அவள் கணவன். திருமணமான முதல் நாளே.
அன்றிலிருந்தே அவள் சிரிப்பு உள்ளுக்குள் உறைந்து போய்விட்டது.
இப்படி வாழும் போதும் மகளைப் பாடுபடுத்தியவன், இறந்த பின்னும் அவளைக் கதியற்று ஆக்கிவிட்டானே... என்று மருமகனை மனதாரத் திட்டினாள் சகுந்தலை.
இப்போதும் ஒரு வழி இருக்கிறது. நான் வணங்கும் கதிர்வேல் முருகனின் அருளால் அவளுக்கும் ஒரு விழ பிறக்கும் என்று தோன்றுகிறது அம்மாவுக்கு.
ஆனால், மகள் என்ன சொல்வாளோ?
என்னம்மா, டீயை அப்படியே வச்சிருக்கே? ஆறிப் போகப் போகுது என்ற சுசீலாவின் குரல் கேட்டு நினைவுக்குத் திரும்பினாள் சகுந்தலை.
ஒண்ணுமில்லே சுசீ, நீயும் எத்தனை நாளுக்கு இப்படியே தனியா இருக்கப் போறே? அதனால்... என்று நிறுத்-தினாள்.
அதனாலே... என்னம்மா? என்றாள் சுசீலா ஏளனமாக... ஒண்ணு-மில்லேம்மா! உனக்கு அப்படி ஒண்ணும் வயசாகிப் போயிடலே... நெய்வேலியிலே ஒரு பையன்... ரத்ன-வேலு, அவனை உனக்கு என்று முடிக்கவில்லை சகுந்தலை.
பொங்கி எழுந்து-விட்டாள் சுசீலா.
நிறுத்தம்மா! என் புகுந்த வீட்டிலேயே வந்து நின்னுக்கிட்டு, எனக்கு இன்னொரு கல்-யாணம் பேசுறியே, என்ன துணிச்சல் உனக்கு? முதல்லே வெளியே போ, என்று கூறிவிட்டாள் அவள்.
சுசீலா, நான் சொல்றதை... என்று தயக்கத்-துடன் பேச்சை இழுத்தாள் சகுந்தலா மறு-படியும்.
நாலு மணிக்கு பஸ் இருக்குதும்மா! முதல்ல உன் வீடுபோய் சேரு! என்றாள் சுசீலா கோபமாக.
அதற்குமேல் அங்கு நிற்கவில்லை சகுந்தலை.
உள்ளே நின்று அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சுசீலாவின் அத்தைக்கு, மனமெல்லாம் பொங்கிப் பூத்திருந்தது.
என் மகள் மீதுதான் சுசீலாவுக்கு எத்தனை பிரியம்? அவன் அவளை நன்றாக வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் கூட, அவன் இறந்த பிறகும் கூட, இன்னொருவனை மணந்து-கொள்ள மறுக்கிறாளே? என்று பெருமைப்-பட்டாள் மாமியார்.
ஆனால், அடுத்த அறையிலிருந்த சுசீலாவின் எண்ணம் வேறாக இருந்தது. நல்லவேளை! ஒரு பெரிய சுழவிலிருந்து விடுபட்டோம் என்று நிம்மதியாக மூச்சுவிட்டாள்.
பிறந்தது முதலே அப்பாவின் கட்டுப்பாடு -அவர் இறந்த பிறகு இரு அண்ணன்களின் கடுமையான கண்டிப்பு - திருமணத்திற்குப் பிறகு தாலி கட்டியவனின் தடை - இப்படியே ஆணாதிக்கப் பாதையில் நடந்து நடந்து கால்கள் சோர்ந்துவிட்டன.
இனிமேல் இன்னொருவனை மணமுடித்து, அவனுக்கும் அடங்கிப்போய், அப்புறம் வயதாகி விட்டால் மகனுக்குப் பயந்து... வேண்டவே வேண்டாம்!
இந்த ஒற்றையடிப் பாதை தனியானதுதான்... ஆனாலும் சுகமானது. நிம்மதியானது என்று எண்ணமிட்ட சுசீலாவின் நெஞ்சம் மெல்லிய பெருமூச்சை உதிர்த்தது.
ஏ சிற்றிதழிலிருந்து...