ஹாலிவுட் கலைவாணர் - 14
 |
தி கிரேட் டிக்டேடர் படம் ஒருவாறு போனது. என்றாலும் தொல்லைகளும் துயரங்-களும் அவரை விட்டுப் போகவில்லை. அவர் கம்யூனிஸ்ட் என்று கூறப்பட்டார். மனித நேயம் மிக்க அவர், ஏழைகள் பால் நேசம் கொண்டிருந்தார் என்ற காரணத்தால் அமெரிக்க முதலாளிவர்க்கம் அப்படிக் கதை-கட்டி விட்டிருக்கலாம். கோடி கோடியாகச் சம்பாதித்த சாப்ளின் அதற்குக் காரணமான அமெரிக்க நாட்டுக்காரர் அல்ல, இங்கிலாந்துக்-காரர். அமெரிக்காவில் இருப்பவர்கள் எல்லாருமே, செவ்விந்தியர்களைத் தவிர, வேறு நாட்டுக்காரர்கள் தாமே! ஆனால், அவர்க-ளெல்லாம் அந்நாட்டுக் குடிமக்கள். சார்லி சாப்ளின் அமெரிக்கக் குடிமகன் அல்ல. குடிம-கனாக விரும்பியவரும் அல்ல. இது அமெரிக்கர்-களின் அய்யத்தை அதிகப்படுத்தியது.
இந்தச்சூழ்நிலைகளில் அவர் அடுத்த சினிமா எடுப்பதைப் பற்றியே சிந்திக்கவில்லை. இரண்டாம் உலகப் பெரும் போர் 1939 முதல் 1945 முதல் நடந்ததும் ஒரு காரணம். அமெரிக்கா போரில் சம்பந்தப்படவில்லை-யென்றாலும் உலகின் மற்ற நாடுகள் ஈடுபட்டிருந்-தனவே! இதனாலும் தாமதம். ஒருவழியாக 1947இல் இவரது அடுத்த படம் வந்தது. அது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்-படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட படம்.
இரண்டாம் உலகப் போரினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட நாடு ஃபிரான்ஸ். கலை, இசை, நாகரிகம் என மனித குலத்தின் மென்மையான, அழகான பக்கங்களின் எடுத்துக்-காட்டான அந்த நாடு இட்லரின் நாஜிப படைகளால் மிக மோசமாகத் தாக்கப்பட்டது. கலைப் பொருள்கள் கடத்தப்பட்டன; முடியாதவை அழிக்கப்--பட்டன. போர்ப்படைகளை எதிர்த்துப் போரிட்டதால் உயிரிழந்த வீரர்கள் தொகை நூற்றுக் கணக்கில் தொடங்கி ஆயிரக்கணக்கில் மடியத் தொடங்கிவிட்டது. பிணங்களை அப்புறப்படுத்தக் கூட ஆள்கள் இல்லை. வெடிகுண்டுத் தாக்குதல்-களில் இறந்த ஆண்களும் பெண்-களும் வீதிகளெங்கும் இறந்து கிடந்தனர்.
அந்தச் சூழ்நிலையிலும் ஒரு காசனோவா கிளம்பினான். ஹென்றி லான்ட்ரு என்று பெயர். நடுத்தர வயது ஆள். 40 வயதிருக்கும். வழுக்கைத் தலையன். தொப்பை, விசித்திரமான உரு. ஆனாலும் அவன் கண்களில் ஒரு கவர்ச்சி; கன்னியரைக் கவர்ந்திழுக்கும் காந்தப் பார்வை என்று பலரும் கூறினார்கள்.
உண்மையாக இருக்கலாம். பல பெண்கள் இவனிடம் ஆட்பட்டார்கள். இவனைத் திருமணம் செய்து கொண்டு கொஞ்சகாலமே வாழ்ந்தாலும் சரி என்று எண்ணி வந்த பெண்கள் ஏராளம். ஒரு நாளாவது இவனோடு வாழ்ந்தால் கூடப் போதும் என ஏங்கியவர்-களும் ஏராளம். தாங்கள் எண்ணியதை அடைய அவர்களுக்கு அதிகச் சிரமம் ஏதும் ஏற்பட்ட-தில்லை. அவனும் மறுப்பு கூறாதவன். அதை-விட முக்கியமானது அவனின் மனைவியும் இதற்கு மறுப்பு ஏதுவும் கூறவில்லை.

ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம், கணவனும் மனைவியுமாகச் சேர்ந்தே, ஆசைப்-படும் கன்னியர்களை விருந்தாக்கி மகிழ்ந்-தார்கள். வலையில் சிக்கிய சிங்காரிகளை ஹென்றி லான்ட்ரு திருமணம் செய்து கொள்-வான். தேனிலவுக்குக் கூட்டிச் செல்-வான்! அதுதானே அந்தப் பெண்களுக்கு வேண்டும். அதைக் கொடுப்பான். பிறகு அவனும் அவன் மனைவியும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கொன்று விடுவார்கள். காசு, நகைகளைப் பறித்துக் கொள்வார்கள். சொத்து இருந்தால் அதைத் தேனிலவின்பாதே தம் பெயருக்கு எழுதி வாங்கி விட்டுப் பிறகு தீர்த்துக் கட்டி விடுவார்கள். பிணத்தைப் புதைப்பது ஒன்றும் பெரிய வேலையல்ல. பிணத்தைத் தெருவில் வீசி எறிந்து விடுவார்கள். வெடி குண்டினால் பாதிக்கப்பட்டு எரிந்து கொண்டிருக்கும் இடத்திற்குப் போய் பிணத்தைச் சிதையில் போட்டுவிடுவான்.
புகாரும் கிடையாது. தடயமும் கிடையாது. விசாரிக்கக் காவல் துறையும் கிடையாது. அவனவனும் எந்தக் குற்றமும் செய்யலாம். கேட்பார் மேய்ப்பார் கிடையாது. அந்த வகை-யில் ஹென்றி லான்ட்ரு சந்தித்து உறவு கொண்டு, கொலை செய்து, கொளுத்திப் போட்டது வரைக்குமே சுமார் 400 பெண்கள் இருக்கலாம் என்கிறார்கள். தங்கையை, அக்காளை, மைத்துனியை, அத்தையைக் காணோம் என்று பலபேர் புகார் கூறினார்-களாம். காவல்துறை கண்டு கொள்ள-வேயில்லை. அவர்களின் உயிர்களே ஊசலாடிக் கொண்டு இந்தபோது, யார் செத்தால் அவர்-களுக்கென்ன? என்கிற தன்மையில் அரசு இல்லாத அரசு (அராஜகம்) கோலோச்சியது.
ஒருநாள், ஒரு பெண்ணைச் சந்திக்கிறான் லான்ட்ரு. அவளுக்கு 30 வயதிருக்கலாம். அவளை அழைத்துக் கொண்டு லாட்ஜூக்குப் போனான். எதற்காகப் போனார்களோ, அதுவும் நடந்து முடிந்தது. மறுநாள் திருமணம் செய்து கொள்வதாகப் பேசிக் கொண்டார்கள். ஆனாலும் அந்தப் பெண்ணின் மனதில் ஏதோ பொறி தட்டியது. சந்தேகம் துளிர் விட்டது. விடிவதற்குள்ளாகவே அறையை விட்டு வெளியே ஓடிவிட்டாள். தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இடுப்புக்கு மேலே எதையும் அணிந்திருக்கவில்லை என்பதைக் கூடக் கவனிக்காமல் ஓடிவிட்டாள்.
சில நாள்கள் கழித்து... லான்ட்ரு மற்றொரு சிட்டைப் பிடித்து அணைத்துக் கொண்டே வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தான். ஒரு கடையிலிருந்து வெளியே வந்த அந்தப் பெண் இந்த ஜோடியைப் பார்த்துவிட்டாள். உடனே பிடி, பிடி என்று கூச்சல் போட்டுக் கொண்டே அவனைப் பிடிக்க ஓடினாள். அவளைப் பார்த்துவிட்ட லான்ட்ரூ ஓடத் தொடங்கினான். ஆனாலும் காவலர்கள் துரத்திச் சென்று கைது செய்து விட்டார்கள்.
ஹென்றி லான்ட்ரூ மீது வழக்கு பதிவாகி வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட்டான். வழக்கு விசாரணையைப் பார்க்க ஏகக் கூட்டம். விசாரணை முடிந்து மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவன் சாகடிக்கப்பட்டான். ஆனால் அவனது இழிந்த புகழ் நின்று விட்டது. இவனைப் பற்றியும் நிறைய கட்டு-ரைகள், கதைகள் எழுதப்பட்டன. ஃபிரான்சு நாட்டில் ஒரு சினிமாகூட அவனைப் பற்றி எடுத்தார்கள்.
இவனைப் பற்றி ஏன் சினிமா எடுக்கக் கூடாது என்கிற எண்ணம் இரண்டு பேருக்கு ஹாலிவுட்டில் ஏற்பட்டது. திரைப்பட உலக மேதை என்று புகழப்பட்ட ஆர்ஸன்வெல்ஸ் அவர்களில் ஒருவர் இன்னொருவர் அக்காலத்-தைய சூப்பர் ஸ்டார் ஜான் பேரிமோர். இவர்களில் ஆர்ஸன் வெல்ஸ் முனைப்பாகப் படம் தயாரிக்க ஈடுபட்டார். ஆனாலும் பல்வேறு தடைகள் ஏற்பட்டதால், எண்ணத்-தைக் கைவிட்டு விட்டார்.
இருப்பினும் வெல்ஸ் இந்தக் கதையைப் பற்றித் தம் நண்பரான சார்லி சாப்ளினுடன் கலந்து பேசினார். நம் ஊர்த் தயாரிப்பாளர்-களிடம் இதுபோலக் கூறினால் என்ன நடக்கும்? சொன்னவரை முந்திக்கொண்டு கேட்டவர் படம் எடுத்துப் பேர் வாங்கிக் கொள்வார். அப்பேர்ப்பட்ட பொறாமை உணர்வு அவர்களிடம் இருந்ததில்லை. எனவே, இதனைப் படமாக்குவது பற்றி சாப்ளின் சிந்தித்தார். இரண்டு ஆண்டுக்காலம் யோசித்து, திரைக்கதையை எழுதி, திருத்தி எழுதி, மாற்றி எழுத மான்சியர் வேர்தா எனத் தலைப்-பிட்டார். மிஸ்டர் வேர்தா என்று வைத்துக் கொள்ளலாம்.
சாப்ளினின் வேர்தா ஒரு வங்கி எழுத்தர். ஹென்றி லாட்ரூ போலப் பகட்டான உடை அணிந்து பணக்காரப் பெண்-களைக் கவர்ந்து, கல்யாணம் செய்து கொண்டு பின் கொலை செய்து விடும் குணம் உள்ளவன். அவனது ஆடம்பர வாழ்க்-கைக்-குப் பணம் வேண்டும். பெண்-களைக் கொலை செய்தவன் மூலம் பணம் அவனுக்குக் கிடைக்கிறது. அதில் தவறு ஏதும் கிடை-யாது என்பது அவன் கொள்கை.
இதை ஒரு காட்சியின் மூலம் இப்படத்தில் சாப்ளின் காட்டினார். தன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள ரோஜாச் செடிகளைக் கத்திரிக்கோலால் வாடிப்போன பூக்களையும் முற்றிப் பழுத்த இலைகளையும் வெட்டிக் கொண்டிருப்பான் வேர்தா. அதே நேரத்தில் அவன் வீட்டுப் புகைக் கூண்டின் வழியாகச் சுருள் சுருளாகப் புகை வந்து கொண்டிருக்கும். எரிந்து கொண்டிருக்கும் மனைவியின் பிணம் புகைக்குக் காரணம். முற்றிப்போன இலையுடன் வாடிப்போன பூவும் வெட்டி எறியப்படுவது போலவேதான் மனைவியை எரிப்பதும் என்று காட்டுவார். பல விமர்சகர்களை அந்தக் காலத்தில் கவர்ந்த காட்சியாகும் இது.
பல கொலைகளைச் செய்த வேர்தா கடைசியில் பிடிபட்டுத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுச்சாகிறான். சாவதற்கு முன் ஒரு பேட்டி தருகிறான். இரண்டு தனி நபர்களுக்குள் சண்டை, உலகப் போர் இரண்டுமே ஒன்று-தான். ஒருவனைக் கொன்றால் அவன் கொலைக்காரன். பலரைக் குண்டு பேட்டுச் சாகடித்தால் அவன் சரித்திர நாயகன். இது என்ன நியாயம்? இரண்டு பேருடைய எண்ணங்-களும் ஒன்றுதான். செயலும் ஒன்றுதான். பிணங்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்-பதால் அவன் போர் வீரனா? என்கிற ரீதியில் பேட்டி கொடுத்தான். உண்மைதானே!
மனிதர்களின் கெட்ட குணங்களை இந்தப்-படம் உயர்வாகக் காட்டுகிறது எனக்கூறி கத்தோலிக்கர்கள் படத்தை எதிர்த்தார்கள். பல நாடுகளில் இந்தப் படத்திற்குத் தடை மீறித் திரையிட்ட அரங்குகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கொடூரக் கொலைகார எண்ணத்திற்குக் காரணம் யார்? ஆண்டவன் ஒன்றாகத்தானே படைத்தான்? ஏன் ஒருவன் கொலைகாரனாகவும் ஒருவன் கொலை செய்யப்படுபவனாகவும் ஆனான்? இதற்கு யார் காரணம்? டீசபை டிக நுஎடை யார், எது? என்கிற கேள்வியை கி.மு. 400இல் கேட்டார் எபிகூரஸ் (நுயீஉரசளநள) என்ற கிரேக்க அறிஞர்! இதுவரை இதற்கு யாரும் பதில் கூறவில்லை. அவனின்றி அணுவும் அசையாது என்றால், கொலைக்கும் கடவுள் தானே காரணம்?
திரைப்பட வல்லுநர்கள் கருத்து வேறு விதமானது. சாப்ளின் எடுத்த படங்களிலேயே இதைத்தான் சிறந்த படம் என்கிறார்கள்.
பெண்களைக் கவர்பவர், கம்யூனிஸ்ட், கோடி கோடியாகச் சம்பாதித்துவிட்டவர், அமெரிக்கக் குடியுரிமை பெறாமல் தொடர்ந்து பிரிட்டிஷ் குடிமகனாகவே இருப்பது எனப் பலவகைக் குற்றச்சாற்றுகளுக்கு அவர் ஆளாக்கப்பட்டார். சாப்ளினே வெளியேறு என்ற சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு அவர் படம் காண்பிக்கப்படும் அரங்குகளின் முன்னால் ஒட்டப்பட்டன. அரங்குகளின் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படடன. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் வருமான வரி கட்டவில்லை என்று அதிகாரிகள் தொல்லை கொடுத்தனர். இவை சாப்ளினை எப்படிப் பாதித்தன?
- தொடரும்
|