கவிதை
ராமனை விட்டுவிடுங்கள்
ராமரைக் கேலி செய்யாதீர்கள்
அவன் முகத்தைப் பாருங்கள்
மிருதுவான காலைப் பொழுதைப்
போலிருக்கிறது.
அவருக்கு எந்த அரசியலும் தெரியாது.
அவரின் சம்மதமின்றி
பால்ய விவாகம் செய்துவிட்டீர்கள்.
உங்கள் விருப்பப்படியே
பதினான்கு ஆண்டுகள்
காடுகளில் அலைய விட்டீர்கள்
சாத்திரங்களின் ஆணைப்படி
சம்பூகனை கொல்லச் சொன்னீர்கள்.
நீங்கள் சந்தேகப்படுவீர்களென்று
சீதையைத் தீக்குளிக்கச் சொன்னான்.
அவன் செய்த தவறுதான் என்ன?
இராவணன் அரக்கனென்று சொல்லி
அவன் நகரை எரிக்கச் சொன்னீர்கள்.
எல்லாக் கடவுள்களைப் போல் தேவர்களைக் காப்பாற்றவும்
அசுரர்களைக் கொல்வதற்காகவும்தான்
அவதரித்தான்.
அசுரர்கள்
வெல்ல முடியாதவர்களாகி விடுவார்களென்றும்
தமிழ்நாட்டில்
ஆட்சி அமைப்பார்களென்றும் ராமனுக்குத் தெரியாது
உங்கள் சட்டம் சொல்லலாம் பால்ய விவாகம் தவறென்று.
உங்கள் சட்டம் தண்டிக்கலாம்
சம்பூகனை தர்மப்படி கொலை செய்ததாக.
அவன் செய்ததெல்லாம்
மதங்களின் ஆணைப் படியே
இவனை விட்டுவிடுங்கள்
அவன் சத்திரிய உடலில்
பார்ப்பன மூளையைச் செருகிவிட்டீர்கள்.
உங்கள் நரித்தனம்
இன்றைக்கும் வேலை செய்கிறது.
சூத்திர உடல்களிலும்
பார்ப்பன மூளைகளிருக்கின்றன.
சூத்திரர்கள்
உங்கள் குரல்களாயிருக்கிறார்கள்
உங்கள் ஆணைப்படியே உறவைக் கொல்கிறார்கள்.
விட்டுவிடுங்கள் சூத்திரர்களை
விட்டுவிடுங்கள் ராமனை
இனியாவது - அவன்
மனைவியோடு சேர்ந்து வாழட்டும்.
புதுப்பாக்கள்
ஊரே சிரிச்சது சாமிய பார்த்து...
பள்ளத்து தெருவுல
மண்ணுலயும்
கரும்பு தோகையிலயும்
எறவானம் இடிக்கிற
வூடுதான் ஊரெல்லாம்...
காளியாத்தாவுக்கு
சனமெல்லாம் திரண்டு
கல் வூடு கட்டினோம்
கையில சாட்டை
தலையில கரகம்
நாக்கு கடிச்சி
பெருமாள் தாத்தா
சாமி வந்து ஆடுவாரு...
அருள் வந்து உக்கிரமா
ஆடும்போது
விலகின வேட்டி சந்துல
பின்னால குண்டூசியால
குத்திட்டாரு சுப்ர மாமா
ஙோத்தா தேவிடியா பசங்களா
இனிமே மயிறுலகூட
சாமியாட வரமாட்டேன்னு
கரகத்தை போட்டுட்டு
ஓடிடுச்சி சாமி...
ஊரே சிரிச்சது சாமிய பார்த்து...
- முருக சிவகுமார், சென்னை
பெண்ணின் மனக்குமுறல்
அழகிய மலராய்ப் பூத்தேன் மண்ணில்
காட்சிப் பொருளாய் ஆனேன் பலமாந்தர்கள் கண்ணில்
கரும்பாய்த் தெரிந்தேன் பலரின் நெஞ்சில்
நெருப்பாய் எரிகிறேன் என்னில்!
- எஸ். மகேஷ் பிரியா, சென்னை - 21
தோல்வி
சிறகுகள் எரிந்தாலும் சூரியனை
நோக்கிப் பறக்கும் பறவையே
உன் சிறகு போல் என் மனச் சிறகு இல்லாததால்
இன்று மண்ணில் விழுகிறேன்
உயிரில்லாத பிணமாய்!
- எஸ். ராஜேசு, சென்னை - 21
வாஸ்துப்படி...
பெயரை மாற்றினான்;
அதிர்ஷ்டக்கல்
மோதிரம் மாட்டினான்!
வாஸ்துப்படி
வாசலை மாற்றினான்;
வாஸ்து மரம் நட்டான்!
மூலையிலே
மீன்தொட்டி வைத்தான்;
வாஸ்துமீன் வளர்த்தான்!
இத்தனைக்குப் பிறகும்
முன்னேற்றமின்றி
மீண்டும் சோதிடரைப் பார்த்தான்;
நீங்க சுகப்பிரசவமா?
வாஸ்துப்படி
வயிற்று வழி பொறந்திருக்கணும்!
- வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்
புதுப்பாக்கள்
தீச்சொட்டுகள்
நெரிசல் பேருந்து
இடுப்பில் குழந்தை
இருக்கைகளில் பிணங்கள்
தீராதத் தேடல்
எந்தப் பூவிலுமில்லை
தோழமை வாசம்
கசாப்புக் கடையில்
எதற்குத் தொங்குகின்றன
கருணைத் தெய்வங்கள்?
தொலைந்து போனது
அசல் வாழ்க்கை
உதாரணம் சொல்லியே.
பள்ளிக்கு விடுமுறை
சத்துணவு இல்லை
பசியில் காகங்கள்
அடுக்கிய குழந்தைகளின்
கண்ணீரில் நனைந்திருக்குமோ
நமத்தத் தீக்குச்சிகள்
வன்முறையாளன் மனைவி
பிரசவ அறை
கத்தியைத் தீட்டும் மருத்துவர்
போதிய மருந்து
காயமேதும் இல்லை
இயல்பாய் பறக்கும் பட்டாம்பூச்சி
ஊன்றிய விதை
அரும்புகளுக்காக காத்திருப்பில்
புரியும் கர்ப்பிணி தாகம்.
கருங்கல் உறுதி
கொத்தனார் வியர்வைக்கு
ஆணி இறங்காத சுவர்
இட ஒதுக்கீடு வேண்டாம் வாருங்கள் எல்லோரும்
சம்பந்திகள் ஆயிடுவோம்.
- மா. மீனாசுந்தர், மன்னார்குடி
அருள்வாக்கு
வேப்பிலை மேயும்
ஆடு
சொல்வதில்லை
அருள்வாக்கு
தீட்டு
பாத்தவர்கள்
காத்திருந்து
வாங்கினார்கள்
கூட்டுறவுப் பால்
- த.வே. விக்கிரமாதித்தன், செய்யாறு

|