புதையல்

காவடி என்றதும் குறிப்பாகவும் சிறப்பாகவும் முருகன் குடி கொண்டிருக்கும் தலங்-களிலும் இன்ன பிற கோவில்களிலும் ஆண்டவனின் அடியவர்கள் தூக்கும் காவடி-கள் நம் கண்முன்னே தோன்றும் காட்சியாகும். காவடிகளில்தான் எத்தனை வகைகள். பால்காவடி, பன்னீர்க் காவடி, இளநீர்க் காவடி, வேப்பிலைக் காவடி, வேல்காவடி, வண்டிக் காவடி, கலப்பால் காவடி, மச்சக்காவடி, பாடைக்காவடி, சென்மக்காவடி என பல வகையினவாம்.
காவடியின் அமைப்பு அனைவரும் அறிந்த ஒன்றாகும். காவடித் தண்டின் இரு புறத்தி-லிருந்தும் மேல் நோக்கி அரை வட்ட வடிவில் மூங்கில் பிளாச்சுகள் வளைக்கப்பெற்று, அதன்மேல் தென்னங்குருத்தாலும் வெட்டி வேராலும் போர்த்தபெற்று, மயில்தூவி கட்டி, அழகுறத் தோற்றமுறுமாறு செய்வர். சிறிய அளவிலான செம்புகளில் பாலை நிரப்பி, வாய்ப் பகுதியைக் கட்டி, காவடித் தண்டின் இரண்டு இறுதி நுனிப் பகுதிகளின் கீழ்புறத்தில் பிணைத்துத் தோளில் சுமப்பது பால் காவடி-யாகும். இவ்வாறே பன்னீரையும் இளநீரையும் வேப்பிலையையும் காவடித் தண்டின் இருமருங்கிலும் கட்டி சுமப்பதால் அவற்றின் பேரால் அதனதன் பெயர் அமைவதாயிற்று.
காவடியின் வகைகளைக் காண்பது மட்டும் கட்டுரையின் நேக்கமன்று. காவடி எனும் சொல்லின் தோற்றம் குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் தலையாய நோக்கமாகும்.
அதியமானிடம் பரிசில் பெற்றுச் செல்லும் அவ்வையார், வழியில் தம் சுற்றத்தோடு வறிய நிலையில் தங்கியிருந்த விறலியைக் காண்கிறார். (விறலி ஆடுமகள், நடனமாது) அவ்வையைக் கண்ட விறலி, தானும்தன் சுற்றமும் அடைந்-துள்ள வறுமையைக் கூறி வருந்துகின்றாள். காவடியின் ஒரு புறம் பதலை எனும் தோற்-கருவியும், மறுபுறம் சிறுமுழாவும், தொங்க-விடப்பட்டுள்ள உறியில் கவிழ்த்து வைக்கப்-பெற்ற உண்கலமாகிய மண்டையை (ஏனம், பாத்திரம்) உணவிட்டு மலர்த்தி வைப்பார் யார்? என வருந்திக் கேட்கின்றான். இதனை
ஒருதலைப் பதலைதூங்க ஒருதலைத்
தூம்பகச் சிறுமுழாத்தூங்கத் தூக்கிக்
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரென
-புறநானூறு 103
எனும் பாடலில் காணலாம். இதில், காவடி எனும் சொல் இல்லையெனினும் விறலி எனும் நடனமாதால் சுமக்கப்படும் ஒரு பொருளின் இரு பகுதிகளிலும் இரண்டு பொருள்கள் கீழ்நோக்கித் தொங்குவதும், ஒன்றில் பதலை எனும் ஒரு புறத்தோற் கருவியும் மற்றொன்றில் சிறு முழாவும் இடப்பட்டு, அவற்றோடு உணவற்ற பாத்திரமாகிய மண்டை கவிழ்க்கப்-பட்ட நிலையில் உள்ளமையும் நம் கண் முன்னே தோன்றும் காட்சியாகும். இனி அடுத்து வரும் பாடல்களில் காவடியின் வளர்ச்சியைக் காணலாம்.
சேர மன்னன் ஆளுகைக்குட்பட்ட நாஞ்சில் நாட்டை வள்ளுவன் என்னும் சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் ஒரு சிறந்த வள்ளல். அவ்வள்ளலிடம் மருதனிள நாகனார் என்னும் புலவர் பரிசில் பெறும் பொருட்டு செல்கிறார். அவருடன் சிறிதளவே தலைமுடியுடைய இளைஞர்கள், தோளில் வடு ஏற்படுமாறு பொருட்-களைச் சுமந்து சென்றதாகக் குறிப்பிடுகின்றனர். இச்செய்தியைச்
சுவலழுந்தப் பலகாய
சில்லோதிப் பல்லிளைஞர்
-புறநானூறு 139

எனும் பாடலாலறியலாம். இதில், காவடி எங்கே உள்ளதென்பது கற்பார் கவலையாக இருக்கலாம். காய எனில் சுமந்த என்பதாம். கா எனில் காத்தல், சோலை, சுமத்தல் எனப் பொருள்படும். இவண் கா எனில் சுமத்தலைக் குறிப்பதாகும். பலகாய எனும் தொடர் பல பொருட்களையும் சுமந்த எனும் பொருளை உணர்த்துவதாகும். சுமத்தலுக்குப் பயன்படும் காவடியின் தொடக்-கமாகிய அஃதாவது முதனிலையாகி கா எனுஞ் சொல் இப்பாடலில் உள்ளமை காண்க.
இளங்கோவடிகள் காட்டும் காவுதடி வருமாறு, ஆட்டுக் குட்டியையும், கோடரியையும் சுமந்த தோளில் உறிகட்டிய காவையுமுடைய இடையரை இளங்கோவடிகள் படம் பிடித்துக் காட்டுகிறார்.
மறித்தோள் நவியத்து உறிக்காவாளரொடு
சிலம்பு - மதுரைக் காண்டம் அடைக்கலக் காதை.
கா-காவுதடி. அதன் இரு நுனியிலும் உறிகட்டப் படுதலின் உறிக்கா எனப்பட்டது. காவதடி என்பது இக்காலத்தில் காவடி என வழங்கப்படுகிறது.
காவடியின் முழுவடிவத்தையும் சீவக சிந்தாமணியில் பார்க்கலாம். சீவகனுக்கும் காந்தருவதத்தைக்கும் திருமண ஏற்பாடு நடை-பெறுகின்றது. அப்போது பல்வேறு வகையான பொருட்கள் அரண்மனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. அவற்றுள் கண்ணுக்கும் நாவுக்கும் இனிமை சேர்க்கும் காய்கனிகளும் அடங்கும். மரகதமணி போலும் பசுங்காய் களையுடைய குலையும் விரும்பத்தக்க பழங்-குலையும் காவடியில் கொண்டு வரப்படும் காட்சியை
மரகதமணிப் பசுங்காய் கொள்வான் குலை
சுவர் பழுக்காய்க் குலைகனியக் காவுறீஇ
-சிந்தாமணி - 926
எனும் அடிகள் நம் கண் முன்னே நிறுத்து-கின்றன. காவுறீஇ எனும் சொற்-றொடர் காவடியில் சமந்து வந்த எனும் பொருளுடையதாகும். இத்தொடரிலுள்ள கா எனும் சொல் காவுதடி எனப்படும். அஃதாவது தோளில் சுமந்து செல்லப் பயன்படும் தடி என்பதாகும். காவுதடியின் இருமருங்கிலு-முள்ள உறியில், காய்களையும், கனிகளையும் வைத்துத் தோளில் சுமப்பதைச் சிந்தாமணி தெளிவாக விளக்குகின்றது.
சீவகசிந்தாமணி போன்று கலித்தொகை குறிப்பிடுதல் வருமாறு: திருமணத்திற்கு முன் ஓர் ஆணும் பெண்ணும் அன்பு வயப்பட்டுப் பிறரறியாமல் பழகுவதற்குக் களவு என்று பெயர். இக்களவொழுக்கம் இரண்டு திங்கள் மட்டுமே நிகழும். அதன்பின் இருவரும் ஊரறிய மணம் புரிந்து வாழ்வர். இதற்குக் கற்பொழுக்கம் என்று பெயர். களவியலில் தலைவனும், தலைவியும் பெறும் இன்பம் போல் துன்பத்தையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
நல்லாந்துவனார் புனைந்துக்கட்டும் ஆணும் பெண்ணும் யாருமறியாமல் பழகுவதாக அவர்கள் எண்ணினாலும் ஊரார் கண்களி-லிருந்து ஒருபோதும் தப்புவதில்லை. காதலருக்-குரிய கண்களோ நான்கு, ஆனால் ஊராரின் ஓராயிரம் கண்கள் அவர்களைக் கூர்ந்து கவனிக்கின்றன. அவ்வாறு கவனித்த கண்கள் அயர்ந்தாலும் அவர்களின் வாய் வாளா-விருக்குமோ? காட்டுத் தீ போல், செய்தி ஊர் முழுமையும் சென்றடையும். உலை வாயை மூடினாலும் ஊர்வாயை மூட இயலுமோ?
மலரிலுள்ள இதழ்கள் ஒன்றோடொன்று சிறிதளவு சேராமல் தனித்தனியே நன்கு விரிந்து நிற்றலுக்கு அலர் என்று பெயர். மொட்டினுள் இதழ்கள் ஒன்றிலொன்று மறைந்திருப்பது போல் காதலர் இருவரின் உள்ளங்கள் மட்டுமே உணர்ந்திருந்த மந்தணமான (இரகசியம்) காதல் செய்தியானது மொட்டின் இதழ்கள் மிக நன்றாக விரிந்து அலர்ந்ததுபோல் ஊரார் அனைவரின் தானியங்கள் தூற்றப்படுவதுபோல் இவர்-களின் இரகசியக் காதலைக் கேள்வியுற்றார் அனைவரும் ஒருவரோடொருவர் பேசத் தொடங்கி, எங்கும் பரப்புவதால் இதற்கு அலர் தூற்றல் என்று பெயர். கலித்தொகை அலர் தூற்றலை கெளவை எனக் குறிப்பிடுகின்றது.
இத்தகைய கவ்வையால் கலித்தொகைத் தலைவி பெரிதும் துன்புறு-கின்-றாள். ஒருபொழுது இன்பம் தந்த காதல் மறு-பொழுது துன்பம் தரு-கின்றது. காதல், கவுமை ஆகிய இரண்டு துன்பங்-களும் உயிரைக் காவாகக் கொண்டு (காவடித் தண்டாக) அழுத்தித் துன்-புறுத்துவதாகத் தலைவி கூறுவதை,
நலிதரும் காமமும் கவ்வையும் என்றில்
வலிதின் உயிர்காவரத் தூக்கி யாங் கொன்னை
நலியும் விழுமம் இரண்டு
-நெய்தல் கலி -25
எனும் பாடலில் காணலாம். உயிர் காவாத் தூக்கி எனும் தொடரிலுள்ள கா எனும் சொல், இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ள உறிகளில் பண்டங்களை வைத்துத் தோளில் சுமக்கப் படும் காவுதடியாகும்.
நல்லுந்துவனார் போன்று திருவள்ளுவர் குறிப்பிடும் காவடியைப் பார்ப்போம். திருமணத்திற்கு முன் நிகழும் களவு வாழ்க்கை-யில் துன்பப்படும் தலைவி மூலம் நல்லந்து-வனார் காவடியைக் காட்டினார். ஆனால், வள்ளுவரோ, திருமணத்திற்குப் பின் நிகழும் கற்பு வாழ்க்கையில் துன்பப்படும் தலைவி மூலம் காவடியைக் காட்டுகின்றார்.
இல்லறம் இனிது நடைபெற பொருள் தேடச் செல்கின்றான் ஒரு கணவன். மனைவியோ கணவன் பிரிவை நினைத்து நினைத்து உடல் மெலிந்தாள். காதல் நோயாலும் இதைக் கணவனிடம் சொல்ல இயலாத நாணத்தாலும் மிகவும் துன்புறு-கின்றான். தனது மெலிந்த உடம்பில் உயிரானது காவடித் தண்டாகயிருக்க, அதன் இரு முனைகளிலும் காதல் நோயும் நாணமும் தொங்கி அழுத்துவதாகக் கூறி வருந்துகின்றாள். இவளுடைய துன்பத்தைக்
காமமும் நாணும் உயிர் காவாத் தூங்கும் என்
நோனா உடம்பினகத்து.
-குறள் - 1163
எனும் குறளால் அறியலாம். உடல் மெலிந்த ஒரு பெண்ணின் தோளில் அவளது உயிர் காவுதடியாக உருவகப்படுத்தப்பட்டு, அன் இருபுறமும் தொங்குகின்ற உறிபோன்ற அமைப்-பின் ஒன்றில் வைக்கப்பட்ட பொருளாகக் காதல்நோயும், மற்றொன்றில் இடப்-பட்ட பொருளாக நாணமும் உருவகப்படுத்தப்பட்டு, இரண்டும் சம அளவில் தோளை அழுத்து-வதாகக் கற்பார் கண்முன்னே நிறுத்தியிருக்-கின்ற வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலம் வியந்து மகிழ்தற்குரியதாகும். இது நிற்க, இக்குறளில் வரும் கா எனுஞ்சொல் காவுதடி எனும் பொருளுடையதாகும். காவுதடி எனுஞ் சொல்லே பின்னாளில் காவடி ஆயிற்றென்பது வெளிப்படையான உண்மையாகும்.
திருவள்ளுவர் பிறிதோரிடத்திலும் காவடி-யின் வடிவை நமக்குக் காட்டுகிறார். கணவன் பிரிவால் மனைவி தனிமைக்காளாகின்றாள். தனிமை அவளை வாட்டி வதைக்கிறது. ஒரு ஆணையோ, பெண்ணையோ நீண்ட நாள் தனிமைப்படுத்தினால் உடலாலும் உள்ளத்-தாலும் வாட்ட முற்றுப் பித்தம் பிடிக்கும் நிலையடைவரென்பதில் அய்யமில்லை. தனி ஒருவருக்கே இந்த நிலைமையெனில் கணவன் பிரிவால் தனிமைப்படுத்தப்பட்ட மனைவியின் நிலை சொல்லவும் வேண்டுமோ?
தனிமைத் துயரில் தத்ளிக்கும் ஒருத்தி, கணவனிடமுள்ள காதலைக் காவடியின் மூலம் வெளிப்படுத்துகின்றாள். காதலுக்கும் காவடி-க்கும் என்ன தொடர்பு என எண்ணத் தோன்று-கின்றதல்லவா? தொடர்பின்றி ஓர் இல்லறத் தலைவியை திருவள்ளுவர் பேசவைப்பாரோ? ஆண் பெண் இருவருள் காமம் (காதல்) ஒருவரிடத்தில் மட்டுமிருந்தால் துன்பமாகும்.. காவடியில் பாரம் சுமை இருபக்கமும் ஒத்திருத்தல் போல் காதல் இருவரிடத்தும் சம-நிலை ஒத்திருக்குமானால், இன்பம் தருமெனத் தலைவி கூறுகின்றாள். தலைவியின் நேர்மை-யான வருத்தத்தை,
ஒரு தலையான் இன்னாது காமம் காப்போல
இரு தலையானும் இனிது.
-குறள் - 1196
எனும் அழகிய குறளால் வள்ளுவர் வெளிப்படுத்துகின்றார். காவுதடியில் இருபுற-முள்ள உறியில், சுமை சமமாக இருந்தால்தான் சுமப்பதற்கு எளிதாகவும், சுமையின் அழுத்தம் தெரியாமலும் இருக்கும். அவ்வாறின்றிச் சுமையானது கூடியும் குறைந்துமிருந்தால் அழுத்தப்பட்டுத் துன்பமடையும். காவுதடியின் இருபுறமுள்ள சுமைதோளின் இருபகுதியிலும் அழுத்தத்தை தருமென்பதில் அய்யமில்லை. ஆனால் காதலெனும் சுமை ஆண் பெண் இருவரிடமும் சமமாக இருப்பின் இன்பத்-தையே தருமெனும் வள்ளுவர் வாய்-மொழியிலுள்ள நயம் இவண் சிந்திக்கத் தக்கதாகும். இருவருக்கும் இன்பம் தருமென்பது எவ்வாறு வாய்க்குமெனில், மனைவியிட-மிருக்கும் காதல் உணர்வுபோல் கணவனிடமும் இருக்குமானால், பிரிந்துசென்ற கணவன் இல்லம் நோக்கி விரைந்து வருவானன்றோ? பிரிந்தவர் ஒன்று சேர்ந்தால் இருவருக்கும் இன்பந்தானே! வள்ளுவன் காட்டும் இந்த நுட்பமான செய்தி எண்ணி எண்ணி இன்புறத்-தக்கதாகும். இக்குறளில் பயின்று வந்துள்ள காப்போல எனும் தொடரிலுள்ள கா எனும் சொல் சுமையைத் தோளில் சுமக்கும் காவு தடி எனும் பொருளுடையதாகும்.
மேலும் குறளுக்கு உரை வரைந்துள்ள பரிமேலழகர்
அறத்தாறிது வெனவேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை.
-குறள் -37
எனும் குறளில் சிவிகை பொறுத்தான் எனும் தொடருக்குச் சிவிகையைக் காவுலான் என்று பொருள் விளக்கம் தருகின்றார். காவுலான் என்பது சுமப்பவன் என்று பொருளாம். எனவே காவுதல் சுமத்தல் பொருளாம்.
இலக்கியச் சான்றுகள் ஒருபுறமிருக்க, அண்மைக் காலம் வரை வீதிதோறும் வீடுதோறும் வந்த காவடிகளை நினைவு-கூர்வோம். இரந்துண்ணும் வாழ்வினையு-டையார், செத்துவராடையோ வெண்ணிற ஆடையோ அணிந்து, இருபுறமும் பிச்சைப் பாத்திரங்களோடு கூடிய உறிகளையும் காவடியைத் தோளில் சுமந்தவாறு அன்னக் காவடி தர்மம் தாயே என்று வீடுதோறும் இரவலர்கள் குரலெழுப்புவர். அன்னக்காவடி இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலமாற்றத்தால் மறைந்து விட்ட.து. பிச்சை-யெடுத்துண்பவர்கள் சோறு வாங்குவதற்குப் பயன்படுத்தியது காவடியாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பதநீர் விற்போர், பதநீர் நிரப்பிய இரண்டு பானைகளைக் கொண்ட உறிகளையுடைய காவடி-யைச் சுமந்தவாறு, வீதிதோறும் பதநீரைக் கூவி விற்கும் காட்சியைத் தென் மாவட்டங்களில் இன்றும் காணலாம். பதநீர் விற்போர் பயன்படுத்துவது காவடியாகும் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
குருவிக்காரர்கள் எனும் ஒரு வகுப்பார் தமிழகத்திலுள்ளனர். குறி சொல்வதும், கைரேகை பார்ப்பதும் அவர்களது தொழி-லாகும். அவர்களுக்கு வீடுகளிலிருந்தாலும் பிழைப்பின் பொருட்டு ஊர்தோறும் சென்றவண்ணம் இருப்பர். ஒரு குறிப்பிட்ட காலத்தில் சொந்த ஊர் திரும்புவர். அவ்வாறு ஊர்தோறும் செல்லும்போது, துணிமணி, தட்டுமுட்டுச் சாமான்கள், கோழி புறா போன்றவைகள் வைக்கப்பட்ட உறிகளையு-டைய காவடியைத் தோளில் சுமந்து செல்வர். இக்காட்சியைத் தமிழகத்தில் சில இடங்களில் இன்னும் காணலாம். குருவிக்காரர்கள் அவர்-களுக்குத் தேவையான பொருட்களைச் சுமந்து செல்லப் பயன்படுத்துவது காவடியாகும்.
இதுகாறும் பார்த்த விளக்கங்களால் காவடி எனும் சொல் உருவான முறை எளிதில் விளங்கும். கா - காவுதடி - காவடி என்றாயிற்று. காவுதடி, காலடி எனும் இரண்டிலும் உருவ-மாற்றம் ஏற்பட்டதோடல்லாமல் அதன் நோக்கத்திலும் தலைகீழ் மாற்றம் ஏற்-பட்டுள்ளமை சிந்திக்கத் தக்கதாகும்.
காவடிதடியின் இருமருங்கிலும் சுமப்பதற்-கான உறிகள் தொங்கும். காவடியில் உறிகள் இல்லை. மாறாக காவடியின் மேற்பகுதி அரைவட்ட வடிவமாக அமைந்திருக்கும். இதன் தோற்றம் முன்னுரையில் காட்டப்-பெற்றுள்ளது. கா எனும் காவு தடி பரிசில் பொருட்களையும் காய்கனிகளையும் சுமக்கப் பயன்பட்டது. ஆனால், காவடியோ கடவுளின் அருள்பெற பக்தர்களுக்குப் பயன்படுகிறது. காவுதடியின் தொன்மையான வடிவம் பிச்சைக்காரிடத்தும், பதநீர் விற்பாரிடத்தும், குருவிக்காரரிடத்தும் இன்றும் பயன்-பாட்டிலுள்ளது. ஆனால், காவுதடியின் வடிவத்தையும், நோக்கத்தையும் மாற்றியமைத்த-வர்களின் சூழ்ச்சித் திறனும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பவர்களின் சிந்தனையற்ற போக்கும் சிந்திக்கத்தக்கதாகும்.
தமிழகத்தின் எல்லாக் கோயில்களிலும் காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றாலும் முருகன் கோயில்களில் தான் இந்நிகழ்ச்சி மிகுதியாக நடைபெறுகின்றது. முருகனைப்-பற்றி கூறுகின்ற பரிபாடல், திருமுருகாற்றுப் படைபோன்ற இலக்கியங்களில் அடியார்கள் காவடி தூக்கியதாகச் செய்தியில்லை. அவ்வாறிருக்க, பொருள்களைச் சுமப்பதற்குப் பண்டு தொட்டு இன்றுவரை பயன்படுத்தப்-படும் காவுதடி, மிகவும் பிற்காலத்தில்தான் கடவுளர்க்கு நேர்த்திக் கடனாகத் தூக்கப்படும் காவடியாக உருமாறியுள்ளது. அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து போன்ற காவடிப் பாடல்கள் இருபதாம் நூற்றாண்டிண் முற்பகுதியில் தோன்றியனவாம். தமிழகத்தில் மட்டுமல்லாமல், தமிழன் குடியேறியுள்ள உலகின் பல்வேறு நாடுகளிலும் உலக நாட்டார்க்குக் காவடி தூக்குதல் தமிழர்களின் தொன்று தொட்ட வழக்கம் போலும் எனும் எண்ணத்தைத் தோற்றுவிக்குமன்றோ? தமிழனின் சிந்தனையற்ற செயல்பாட்டிற்கு இஃதொரு தலையாய சான்றாகும்.
கி.மு. 1000 என்று கணிக்கப்படுகின்ற சிந்து வெளி நாகரிகத்திற்குச் சொந்தக்காரர்களாகிய நாம், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே உழவு, நெசவு, அழகிய பாதுகாப்பான வீடமைத்தல், பகைவர் நெருங்கொணா அரண் அமைத்தல், முத்துக்குளித்தல், வானியல், புவியியல், பொன்வேலை, இரும்பு வேலை, மரவேலை, கடல் வாணிபம் போன்றவற்றில் மேம்பட்டிருந்தமையைக் கடைச்சங்க நூல்கள் உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றன. உலகின் இன்றுள்ள பல நாடுகள் வெளியுலகுக்குத் தெரிந்திராத காலத்தில் நாகரிகத்திலும் பண்-பாட்டிலும் சிறந்திருந்த நாம் என்ன செய்திருக்-கிறோம்? என்று சிந்திக்காமலேயே அறிவு மழுங்கிய நிலையில் காவடி சுமந்துகொண்டு, வருங்காலச் சந்ததியையும் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோமே! இத முறைதானா? இந்நிலை மாறுவதெப்போது?
|