பெட்டிச் செய்திகள
 |
போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதிவேக சாதனமுமாகவே இருக்கும்.
கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்.
உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்.
மேற்கண்ட சாதனங்களால் ஒரு இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொக்கச் சாத்தியப்படும். உணவுகளுக்குப் பயன்படும்படியான உணவு, சத்துப் பொருள்களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக்கூடிய உணவு ஏற்பட்டுவிடும்.
மனிதனுடைய ஆயுள் நூறு வருஷமென்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம். இன்னும் மேலே போனாலும் போகலாம்.
பிள்ளைப்பேறுக்கு ஆண் பெண் சேர்க்கை என்பது கூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக பொலிகாளைகள் போல் தெரிந்தெடுத்து மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்களது வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகள் பிறக்கச் செய்யப்படும். ஆண் பெண் சேர்க்கைக்கும், குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப் பட்டுவிடும்.
அநுபோகப் பொருள்களும் வெகுதூரம் மாற்ற மடைந்துவிடும். அதற்காக ஏற்படும் செலவும் அதை அனுபவிக்கும் முறையும் வெகு சுருக்கமாக மாற்றமடைந்துவிடும்.
ஒரு டன்னுள்ள மோட்டார் கார், ஒரு அந்தர் வெயிட்டுக்கு வரலாம். பெட்ரோல் செலவு குறையலாம்; பெட்ரோலுக்குப் பதில் மின்சார சக்தியே உபயோகப்படுத்தப்படலாம்; அல்லது விசை சேகரிப்பாலேயே ஓட்டப்படலாம்.
மின்சாரத்தின் உபயோகம் எல்லா மக்களுக்கும் பயன்படக் கூடிய விதமாகவும், மக்கள் வாழ்க்கை வசதிகளுக்குத் துணை செய்யும் விதமாகவும் விரியும் - பெருகும், விஞ்ஞானம் வாழ்க்கையில் இன்பம் அனுபவிக்கப் பயன்படும்படியான அதிசயப் பொருள்களும், கண்டுபிடிப்புகளும் தனிப்பட்டவர்களின் இலாபத்துக்காக என்று முடங்கிக் கிடக்காமல் சகல மக்களும் சவுகரியம் தருகிற பொதுச் சாதனங்களாக அமையும்.
இவ்வளவு மாறுதல்களோடு இனி வருங்காலம் இருக்குமாகையால், இன்றைய உலக அமைப்பிலே உள்ள அரசு, உடைமை, நீதி, நிர்வாகம், கல்வி முதலிய பல துறைகளிலும் இப்போது எவையெவைப் பாதகாக்கப்பட என்னென்ன முறைகள் கையாளப்பட்டு வருகின்றனவோ, அம்முறைகளுக்கெல்லாம் அவசியமில்லாமல் போய்விடும் என்பதோடு அவை சம்பந்தமாக இன்று நிலவும் பல கருத்துக்கள் அர்த்தமற்றதாகவும் போய்விடும்.
மக்கள் பிறப்பு கட்டுப்பத்தப்பட்டு ஒரு அளவுக்குள் கொண்டுவந்துவிடக்கூடும்.
- 'இனிவரும் உலகம்' நூலில் பெரியார்
காந்தியார் இறக்கும்போது...
காந்தியாரை ஆர்.எஸ்.எஸ். பார்ப்பான் கோட்சே சுட்டுக்கொன்றபோது - காந்தியார் ஹே... ராம் என்றபடி உயிரிழந்தார் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், இது தவறு என்று ஏற்கெனவே கல்யாணம் (காந்தியாரிடம் உதவியாளராக இருந்தவர்) குறிப்பிட்டிருந்தார். அண்மையில் காந்தியார் ஹே.. ராம் என்று கூறவில்லை; ராம்... ராம்... என்றுதான் கூறினார்; அவரது கொலை குறித்த முதல் தகவல் அறிக்கையிலும் இப்படித்தான் பதிவாகி உள்ளது என்றும் ஒரு தகவல் வெளியானது.
ஆனால், இந்தத் தகவலும் தவறானது என்று காந்தியாரிடம் 1945லிருந்து அவர் இறக்கும் வரை (1948) உதவியாளராக இருந்த வெங்கிடராமன் (வயது 85) தெரிவித்துள்ளார். சென்னையில் வசிக்கும் இவர் மேலும் கூறும்போது, காந்தியார் சுடப்பட்ட போது அவர் அருகே அரை மீட்டர் தொலைவில் நின்று கொண்டிருந்தேன். கோட்சே துப்பாக்கியில் இருந்து காந்தி மீது அய்ந்து துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அதில் ஒரு குண்டு அவரது உடலைத் துளைத்தது. குண்டு பாய்ந்தவுடனேயே அவர் கீழே விழுந்து விட்டார். அவருடைய வாயில் இருந்து எந்த வார்த்தைகளும் வரவில்லை என்று கூறியுள்ளார்.
புத்த வழிபாட்டுத்தலமாக இருந்த சபரி மலை சாஸ்தா கோயில்
இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள கோயில்கள் ஏற்கெனவே புத்த மத வழிபாட்டுத்தலங்களாக இருந்தவை தான் என்பதற்கு அண்மையில் ஓர் உதாரணம் வெளியிடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. அதில், கேரள மாநிலத்தின் பழைய வரலாற்றை எழுதிய சில அறிஞர்கள், சபரிமலை சாஸ்தா கோயில் ஒரு காலத்தில் புத்த மத வழிபாட்டுக் கோயிலாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிலையால்...
புகையிலைத் தயாரிப்புகளுக்கு விதிக்கப்படும் வரிகள் மூலம் உலக நாடுகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 8 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் இதில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான பணமே புகையிலைக் கட்டுப்பாட்டுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்களில் இந்த நூற்றாண்டில் ஏழத்தாழ 100 கோடி பேர் உயிரிழப்பார்கள் - இத்தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்தியும் சிந்தனையும்
செய்தி: பெண்கள் சபரிமலை யாத்திரை மேற்கொள்வதற்கு - தனி சீசனை நிர்ணயிக்கலாம்.
- கேரள அரசு யோசனை
சிந்தனை: பலே.. பலே.. ஏற்கெனவே உள்ள சீசன்களில் வரும் வருமானம் போக, புதுசா ஒரு சீசன் உருவாக்கினால் அரசுக்கு மேலும் வருமானம் பெருகும்தானே. காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே!
விளக்கு பூசை மோசடி
 |
கோயில் வணிகத்தின் வாடிக்கையாளர்கள் பெண்கள்தான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நன்கு படித்து சுயமாகப் பொருள் ஈட்டும் பெண்கள் கோவிலுக்குச் செல்வது வெகுவாக குறைந்து வருகிறது. இவர்களை எப்படி ஈர்ப்பது என்று திட்டம் தீட்டிய பித்தலாட்டப் பார்ப்பனர்கள் பெண்களை கோவிலுக்கு இழுக்க நாள் தோறும் புதுப்புது மாய வலைகளை விரிக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் விளக்கு பூசை.
இந்த விளக்கு பூசை நிகழ்ச்சிக்கு ஒரு முகவர் இருக்கிறார். அவர் கோவில் அர்ச்சகர்களோடு தொடர்பு கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை பூசை நடத்த ஏற்பாடு செய்து கொண்டு இன்ன மாதம் இந்த ஊர் எனத் திட்டமெல்லாம் தயார் செய்து கொள்கிறார்கள். முதலாவது ஒரு ரசீது புத்தகம், விளக்கத் துண்டறிக்கை இதுதான் முதலீடு. ஒரு சீட்டின் விலை குறைந்தது ரூ. 100/-க்கு குறையாமல். சராசரியாக ஒரு கிராமம் என்றால் 500 சீட்டாவது விற்பனை ஆகிவிடும்.
அவரவர் (பெண்கள்) வீட்டிலிருந்து ஒரு குத்துவிளக்கு மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும். நிகழ்ச்சி முடிந்து அதாவது பூசை முடிந்து திரும்பும் போது சீட்டு பெற்றவர்களுக்கு அச்சடிக்கப்பட்ட ஒரு பை, அதில் வழக்கம் போல பாதிமூடி தேங்காய், பழம், பூ....
இந்தப் பூசை மோசடிக்கு ஏற்பாடு செய்யும் ஏஜெண்ட் (முகவர்) குறைந்தது 500 சீட்டு விற்பனை செய்திருந்தால் ரூ. 50,000 வசூல். இதில் பார்ப்பன அர்ச்சகர்களுக்கு பாதி அளவு கட்டணம், மற்ற செலவு போக மீதம் உள்ளது முகவருக்கு கிடைக்கும்.
முகவராக இருப்பவரும், பார்ப்பனப் புரோகிதர்களும் ஒரு நெட்ஒர்க் அமைத்துக் கொண்டு பூசை, சடங்குகள், கோயில் விழாக்கள் இல்லாத காலங்களில் - அதாவது வருமானம் இல்லாத காலங்களில் நவீன மோசடி சீசனை உருவாக்கி வருகிறார்கள்.
- வைகறைதாசன்
ஜோதிடத்தால்...!
மனைவிக்காக இல்லேன்னாலும், பிள்ளைக் காக சரியாகிடுவாருனு முகத்துல சிரிப்பு வந்துடுச்சு. எனக்கு என்ன குழந்தை பிறந்துச்சு... தாயும் பிள்ளையும் செத்தாங்களா... பொழைச் சாங்களா...னு கூடஎட்டிப் பார்க்கலை என் காதல் கணவர். பொண்ணை தூக்கி வளர்த்தோம். இனி அவ பெத்த பிள்ளையத் தூக்கி சுமக்க வேண்டியதுதான்னு பதறி அடிச்சுக்கிட்டு ஓடி வந்தாங்க என் அம்மா. ஆண் பிள்ளை பிறந்திருக் குன்னு அவருக்குச் சொல்லி அனுப்பினதும், பிள்ளையப் பார்க்க வராம ஜோசியக்காரன் பார்க்கப் போயிருக்கார்.
அந்த ஜோசியக்காரனோடு பேர் என்னனு தெரியாது. ஊரு என்னனு தெரியாது. கறுப்பா, வெள்ளையா, நல்லவனா, கெட்டவனானு எதுவும் தெரியாது. ஆனா, அவன் விளையாடின விளை யாட்டுதான் என் வாழ்க்கையில பெரிய விபரீத விளையாட்டாச்சு.
இந்தக் குழந்தையால தகப்பன் உயிருக்கு ஆபத்துனு சொல்லிருக்கான் ஜோசியக்காரன். நல்ல புருஷனா இல்லன்னாகூட ஒரு நல்ல தகப்பனா இருக்கிற வாய்ப்புல பெரிய குழிதோண்டி தன் வார்த்தைகளால மண்ணை அள்ளி கொட்டிட்டான் அந்த புண்ணியவான். ஆஹா, பிள்ளையப் பார்க்க தகப்பன் வந்துட்டான்னு நிமிர்ந்தா, இந்தக் குழந்தை வேண்டாம்னு சொன்னதும் இடிஞ்சு போய் உட்கார்ந்தேன்.
குழந்தையைத் தூங்க வெச்சுட்டு வாசலுக்கு வந்தா, திடீர்னு வீறிட்டு அழறான் குழந்தை. உள்ள போனா, குந்தையோட தொடை சிவந்திருக்கு. பக்கத்துல பெத்தெடுத்த மகராசன் கல்லு மாதிரி நிக்கிறான். வன்மத்தோட பச்ச புள்ளைய கிள்ளிப் பார்க்கிற ஒருத்தன் இதுக்கு மேல எதுக்கு நம்ம வாழ்க்கைக்குன்னு வெறுத்துப் போய் அந்த உறவைத் தூக்கி எறிஞ்சேன்.
- நடிகை மனோரமா (‘குங்குமம்’, 14.2.2008) |