ஆசிரியர் பதில்கள்

கேள்வி: தன்னையும், தன் சொத்துக்களையும் காப்பாற்றிக்கொள்ள நினைக்கும், மனிதன் முதலில் இழப்பது எதை?
- வடகாடு கரு.காளிமுத்து
பதில்: உயிரினும் மேலான சுயமரியாதையை!
கேள்வி: இந்தியாவையே ஆள்வோம் என்கிறாரே ஜெயலலிதா! .... எப்படி?
- மு. தமிழ்ப்பாண்டியன், சென்னை - 49
பதில்: ஆசைகளை குதிரைகளாக்கி அதன்மீது சவாரி செய்ய விரும்புகிறவருக்கு எந்த முரட்டுக் குதிரை இவரைக் கீழே தள்ளிவிடும் என்று நினைக்க இயலாத போதையில் அவர் மிதக்கிறார்!
கேள்வி: திரும்பவும் ரஜினிக்கு தூபம் போடுகிறார்களே! ஒரு வேளை அவரே தனிக்கட்சி ஆரம்பித்தால் விஜயகாந்தை மீறி வளர முடியுமா?
- மு. தமிழ்ப்பாண்டியன், சென்னை - 49
பதில்: தமிழ் மக்கள் அவ்வளவு ஏமாந்த சோணகிரிகளுமல்ல; இளிச்சவாயர்களும் அல்ல; இளைஞர்களால் ஏற்படும் இந்த மாயை கலையும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
கேள்வி: விளம்பரங்களின் பெயரால் அஞ்சலட்டையில் மீண்டும் இந்தி தலை தூக்கத் தொடங்கி விட்டதே?
- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில்: அஞ்சல் அட்டையில் அந்தந்த வட்டார மொழிகள் இடம்பெற நாம் அறப்போரை மீண்டும் துவக்கிட வேண்டும்.
கேள்வி: பெற்றவர்கள் என்பது பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு உதாரணமாக அமைய வேண்டுமே தவிர மத மூட்டைகளையும், செபமூட்டைகளையும் சுமக்க வைக்கப் படாத பாடுபடுகின்றார்கள். இந்த பிற்போக்கு ஜென்மங்களை திருத்திட நீண்ட நாள் ஆகுமா?
- ஆ. பாக்கியசாமி, கூவத்தூர், ஆண்டிமடம்
பதில்: பழைய பாசிக்குட்டையில் இருந்து அவர்களை வெளியேற்ற பிள்ளைகள் முயலுவதோடு, இவர்கள் தப்பிக்க வேண்டுவதே முன்னுரிமை!
கேள்வி: நான் பத்திரிகை துறைக்கு வந்ததால் வழக்கறிஞர், திரைப்படம், நாடகம், நடிப்பு, இயக்குனர் ஆகிய தொழில்கள் தப்பித்தது நாட்டு மக்களுக்கு நான் நன்மை செய்துள்ளேன் என துக்ளக் ஆசிரியர் சோ கூறியுள்ளாரே?
- மன்னை சித்து, மன்னார்குடி - 1
பதில்: அத்துறைகளில் பரவவேண்டிய பார்ப்பன விஷ(ம)ம் எல்லாம் ஒட்டு-மொத்தமாகச் சேர்ந்து, பத்திரிகை சுமந்து-கொண்டுள்ளது - அது பெற்ற துர்ப்பாக்கியம்!
கேள்வி: ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் - தீபாவளி சிறப்பிதழில் கண்ணன் துவாரகையில் வாழ்ந்தது உண்மையே என அகழ்வாராய்ச்சி மூலம் கண்ட ஒரு செய்திக் கட்டுரை வெளிவந்துள்ளதே? அது உண்மைதானா?
- அரவரசன்,சென்னை
பதில்: இப்போதெல்லாம் பார்ப்பனர் இம்முறை மூலம் சரடுவிடுவதுதான் புதிய முறையாக உயர்ந்து வருகிறது!
கேள்வி: முதன் முதலில் தோன்றிய மதம் புத்தமதம். அது மற்ற மதங்கள் தோன்றுவதற்கு அடிப்படையாகிவிட்டது என்பது சரியா?
- வீ. உதயக்குமாரன், வீரன்வயல்
பதில்: அறிவை வெறுத்த சூழ்ச்சியாளரின் நம்பிக்கை. - குருட்டு நம்பிக்கை - போதைகளால் மக்களை மடக்க வேண்டிய அவசியம் - சுரண்டும் அயோக்கியர்களுக்கு அவசியப்-பட்டது. அதன் விளைவே இது!
கேள்வி: கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ பதவி விலகியதை அமெரிக்க அதிபர் வரவேற்று - இனி அங்கு ஜனநாயகம் தழைக்கும் என்கிறாரே?
- முத்துராமன், சேர்க்காடு
பதில்: அமெரிக்காவின் ஜனநாயகம் உலக நாடுகளில் எப்படிப்பட்ட அடிமைத்தனத்தை, அநியாயங்களை விதைத்து வருவது கண்கூடு. அதிபர் காஸ்ட்ரோ அதைப் பின் பற்றாதது தான் அவரது தனிச்சிறப்பு! அமெரிக்க சூழ்ச்சி வலையை அறுத்தெறிந்த அறிவுப் புரட்சியாளர் அல்லவா அவர்!
கேள்வி: தன்னலம் கருதாமல் தன் வாழ்வை இயக்கத்திற்கு அளித்த அன்னை மணியம் மையார் அவர்களின் நினைவு கூரும் வகையிலும் இளைய தலைமுறை தெரிந்து கொள்ளவும் (அன்னை தெரசா விருதுபோல்) அன்னை மணியம்மையார் விருது - சிறந்த அளவில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வோருக்கு வழங்கலாமே?
- செங்கை பூ.பூபதி, செங்கற்பட்டு
பதில்: நல்ல யோசனை; விரைவில் செயலாக்க முன்வருவோம்! |