பிடல் காஸ்ட்ரோ

1926 ஃபிடல் அலெஜான்ட்ரோ காஸ்ட்ரோ ருஸ் - என்ற நீளமான பெயருடன் 13.8.1926இல் பிறந்தார்.
1950இல் சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞராகப் புரட்சி இயக்கத்தில் இணைந்தார்.
1952இல் நாடாளுமன்றத்துக்குப் போட்டி-யிட்டார். சர்வாதிகாரி பாடிஸ்டா தேர்தலை ரத்து செய்து விட்டார்.
1953 மொன்காடா போர்ப்படை இருப்பைத் தாக்கிய முயற்சியில் 1953இல் ஈடுபட்டார். காஸ்ட்ரோவின் தம்பி ரவுல் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப்பின் விடுவிக்கப்பட்டார்.
1955 கொரில்லாப் போரை மீண்டும் நடத்திட மெக்சிகோவுக்குப் புறப்பட்டுத் தங்கினார்.
1956 டிசம்பர் 2இல் சிறிய படையுடன் கியூபாவுக்குப் படகில் வந்து, தாக்குதல் நடத்தி சேகுவாரா மற்றும் ரவுல் முதலியோரை விடுவித்து கியர்ரா மேஸ்ட்ரா மலைப் பகுதிக்குப் போய் கொரில்லா போரைத் தொடங்கினார்.
- 1959 ஒன்பதாயிரம் வீரர்களுடன் கியூபாவின் தலைநகர் ஹவானாவில் தாக்குதல் நடத்தி சர்வாதிகாரி பாடிஸ்டாவைத் துரத்தினார். நாட்டின் பிரதம மந்திரியானார்.
1960 அன்றைய சோவியத் பிரதமர் நிகிடா குருஷ் சேவுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றார். கியூபாவில் இருந்த அமெரிக்க நிறுவனங்கள் அனைத்தையும் இழப்பீடு எதுவும் தராமலே நாட்டுடமையாக்கினார். அமெரிக்கா அரசியல் உறவுகளைத் துண்டித்துக் கொண்டது.
1961 கியூபாவில் ஏற்பாடு செய்யப்பட்ட 1300 விபீஷணர்களைக் கொண்டு தாக்குதலை அமெரிக்கா ஏற்பாடு செய்து நடத்தியது.
1962 ஏவுகணைச் சிக்கல் உண்டானது. துருக்கியில் அமெரிக்கா ஏவுகணைகளைக் குவித்து கியூபாவை மிரட்டியது. சோவியத் ஏவுகணைகளைக் கியூபாவுக்கு ஆதரவாகத் தந்தது. ஏவுகணைப் போர் மூண்டிடுமோ எனும் நிலை ஏற்பட்டது. அமெரிக்காவும் சோவியத்தும் ஏவுகணைகளை விலக்கிக் கொண்டுவிட்டதால் போர் தவிர்க்கப்பட்டது.
1976 கியூபா நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சி புதிய சமதர்ம அரசியல் கூட்டத்திற்கு ஒப்புதல் தந்தது. ஃபிடல் காஸ்ட்ரோ அதிபரானார்.
1976-1981 அங்கோலா எதியோப்பியா நாடுகளில் சோவியத் படை-களை கியூபா அதிகரித்தது.
1980 ஒன்றேகால் லட்சம் கியூபா மக்கள் அமெரிக்காவுக்கு ஓடினர்.
1993 கியூபா மீதான பொருளாதார, வணிகத் தடை-களை அமெரிக்கா மேலும் இறுக்கியது. கியூபா தளர-வில்லை. அமெரிக்க டாலரை சட்டப்படி அனுமதித்தது. சில தனியார் நிறுவனங்களை ஊக்குவித்தது.
1996 வணிகத் தடையை நிலையானதாக அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்காவின் இரண்டு விமானங்களை கியூபா சுட்டுத் தள்ளியதன் விளைவு இது.
2000 - எலியன் கோன்ஸ்லஸ் எனும் கியூபா அகதியைத் திரும்பக் கொணர நடத்தப் பெற்ற ஏழு மாதச் சண்டையில் கியூபா வென்றது.
2006 - நோய்க்கான சிகிச்சை-க்குப் பின் தன் தம்பி ரவுல் காஸ்ட்ரோவை அதிபராக்கிப் பொறுப்பைத் தற்காலிகமாக ஒப்படைத்தார்.
2008 - பிப்ரவரி 19இல் தனது பதவி விலகலை அறிவித்தார் - நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தும் பதவி விலகி விட்டதால் புதிய அதிபர் தேர்தல் பிப்ரவரி 24இல் நடக்கும்.
கருத்தப் போர் வீரனாக என்றும் பணியாற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி ஏடான கிரானமாவில் கட்டுரைகள் எழுதி மக்களுக்கு வழிகாட்டுவார்.
புரட்சி என்பது ரோஜா மலர்ப்படுக்கை அல்ல; பழமைக்கும் புதுமைக்கும் இடையில் நடக்கும் போராட்டம் என்றார்.
1959இல் 82 பேர்களுடன் புரட்சியில் ஈடுபட்டவர். எவ்வளவு பேர்கள் போராடுகிறார்கள் என்பதல்ல முக்கியம்; பத்துப்பேரோ பதினைந்து பேரோ இருந்தாலும் நான் போராடுவேன், நம்பிக்கையும், திட்டமிட்ட புரட்சியும்தான் முக்கியம் என்றார்.
புரட்சியின் வெற்றி என்னவென்றால் பரத்தைகூடப் பட்டதாரி என்பது தான்.
1953இல் சிறைப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது ஃபிடல் காஸ்ட்ரோ எனும் 27 வயது வழக்குரைஞர் கூறினார்: நீங்கள் என்னைத் தூக்கில் போடுங்கள். கவலையில்லை; ஆனால் வரலாறு என்னை விடுதலை செய்யும் என்றார்.
49 ஆண்டுக்காலமாக உலகில் எவரும் இவ்வளவு நீண்ட காலமாக நாட்டின் தலைமைப் பதவியில் இருந்ததில்லை என உலகுக்கு எடுத்துக்காட்டும் வண்ணம் சிறப்புடன் அமர்த்தி வரலாறு விடுதலை செய்ததோடு சிறப்பும் செய்துள்ளது.
1948இல் மிர்தா டயஸ் பலர்ட் என்னும் பெண்ணை மணந்தார். ஒரு மகன் ஃபிடலிடோ உண்டு. 1952இல் மணவிலக்கு பெற்றனர். நட்டி ரெவியுல்டா என்பவரை 1956இல் மணந்தார். அவர் எலினா எனும் மகளைப் பெற்றார். பின் 1957இல் செலியா காஞ்செஸ் என்பவாருடன் இணைந்து வாழ்ந்து அவர் 1980இல் இறக்கும் வரை வாழ்ந்தார்.
சில ஆண்டுகள் கழித்து டாலியா கோட்டோ டெல் வல்லி என்பாருடன் வாழ்ந்தார். ஏஞ்சல், அன்டோனியோ, அலெஜான்ட்ரோ, அலெக்சிஸ், அலெக்ஸ் என்ற அய்ந்து குழந்தைகள் உண்டு.
பிப்ரவரி 24ஆம் நாளன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் ஃபிடலின் தம்பியும் புரட்சியில் பங்கு பெற்ற வீரரும் தற்போதையைத் தற்காலிக அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ கியூபா நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தாமாகவே மனமுவந்து பதவி விலகிய ஃபிடல் என்றும் போலவே கியூபா நாட்டுக்கும் கியூபா மக்களுக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்குவார் என்பதிலும் தொடர்ந்து அமெரிக்காவுக்குக் குடைச்சலை ஏற்படுத்துவார் என்பதிலும் எள்ளளவும் அய்யம் இல்லை. |