தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மார்ச்-8 மகளிர் தினம்
பிடல் காஸ்ட்ரோ
இவர்தான் பெரியர்
நேர்காணல்
கவிதை
சிறுகதை
வரலாறு்
தமிழ் பேசுவோரெல்லாம்
ஹாலிவுட் கலை - 15
மருத்துவமும்
சிறந்த நூலிலிருந்து
அணு அணுவாய் - 6
தமிழர்கள் மீதான
நெசந்தானுங்க...
திரைப்பார்வை
பெட்டிச் செய்திகள்

 

 

கவிதை

சுமை
கட்டிலில் கணவனை சுமந்தோம்! கருவறைத்
தொட்டிலில் பிள்ளையை சுமந்தோம்
சுமை எங்களுக்கு சுகமே! எங்களை
சுமை என்றால் பெருஞ்சோகமே!

எங்கள் கருவறையில்
எங்கள் இனத்தைச் சுமக்க
எங்களுக்குச் சுதந்திரம் எப்பொழுது?

அடுப்பையும் படிப்பையும்
அயராது சுமந்தோம் - அன்று
எங்களை சுமையென்று
சொல்லித் திரிந்தவர்கள் - இன்று
அண்ணாந்து பார்க்கின்றனர்
விண்வெளி ஓடம்
எங்களைச் சுமப்பதை!

- காதம்பரி, நெய்வேலி

இரண்டாயிரத்து எட்டிலும்...
சிறகொடிந்த பறவையை
சுட்டுத்தின்னும் சீர்கெட்ட வாழ்வில்

கொட்டும் பாம்பின் உருவத்தை
வழிபட்டு பால் வார்க்கும் பழக்கம்

வன்கொடுமையில் வாழ்விழந்தவளை
கறையெனக் கசக்கிப் பிழியும் வாழ்வில்

நெறிகெட்டு கற்பை விற்று
காசைப் பார்ப்பவளை கை கும்பிடும் பழக்கம்

புன்னகையுடன் பொன்னகையும் பூட்டி
கொடிமலராய் அய்ம்பதிலும் வாழத்துடிக்கும் வாழ்வில்

சிங்காரச் சேலை சின்னஉடைக்கே பாட்டெழுதி
சில்லறைக்கே சிந்தனையைச் சீரழித்து பழக்கம்.

கருத்தப் பொண்ணு வெள்ளையம்மாள்
தட்சணையில் வெந்த தங்கம்மாளின் வாழ்வில்

மானினத்தை வேங்கையாக்கி பாயச் சொல்லி
மருட்சியை புரட்சியென மாற்றிடும் பழக்கம்

- நா. சுப்புலட்சுமி, திருப்பத்தூர்


ஏட்ட எழுதியவன்
இருட்டில் வெச்சு எழுதிட்டான்

வானமும் பூமியும்
விரிஞ்சுதான் கிடக்கு
என்
வாழ்க்கை மட்டும்
சூனியமா போச்சு...

அசலூர் சோதிடமாமணி
சிங்காரத்த பார்த்து
அழுது வடிச்சாரு
உப்புக்காரர் கரும்பாயிரம்
(எங்க ஊருல
அப்படிதான் அழைப்போம்)

எப்பேர்பட்ட தலையெழுத்தையும்
அழிச்சு எழுதுற சாதுர்யம்
சிங்காரத்துக்கு உண்டு
ஊரே நம்புது.

கட்டம் பணிரெண்ட
கச்சிதமா போட்டு
துப்பு தொலக்கினார்
உப்புக்காரர் சாதகத்த...!

சோகம் போக
யோகம் இருக்கனும்
போதும் வர யாகம் இருக்கனும்.

கஜகேசரி
யோகம் உனக்கு
நாடாள பவரு இருக்கு ன்னாரு

ரவா கேசரியவே பார்க்காத
உப்புக்காரர் முகம்
சோடியம் விளக்கா
சொக்கிப் போச்சு,

சின்ன வீட்டோட
இருக்குற உனக்கு
பன்னிரெண்டு வீடு
சாதகத்தில் இருக்கு....

சாதக வீட்டில்...
ராகு, கேது
நாப்பது நாள்
சனி, சந்திரன்
ஆறு மாதம்
சூரியன், சுக்கரன்
ஒரு ஆண்டு
முறையே தங்குராங்க...

மாதக் கடைசியில்
எட்டு லட்சுமியும்
வீட்டுக்குள்ள
எடுத்தடி வெக்கிறாங்கன்னாரு.

தலைசுத்திப்போன
உப்புக்காரரு...

என்ன சோசியரே
எட்டு பொண்ணுங்களும்
ஏகப்பட்ட ஆம்பளைகளும்
மொரைவச்சு தங்குராங்களே...

இது
வேற மாதிரி வீடுன்னு
போலீசு வந்திடாதா?

எலே...
குசும்பு பண்ணாம கேளு
சும்மா நச்சுன்னு இருக்கிற
அங்கப்பன் சாதகத்துக்கு
ஆயுசுன்னு பார்த்தா
எண்பத எட்டுதுன்னாரு
சிங்காரம்

என்ன
அங்கப்பன் சாதகமா...!?

அங்கப்பன் செத்து
அஞ்சு வருடம் ஆகிடுச்சு...
சிங்காரம்...
என்
சாதகம் மாரிப்போச்சு

உன் சாதுரியம் சரிஞ்சு போச்சு
எப்படியோ
சாதகமும் பொய்யின்னு
தெரிஞ்சுப் போச்சுப்பா,
....?


புதுப்பாக்கள்

பிதாவே மன்னியும்
தொப்புள் கொடி
சாதிக்கொடி
பூணூல்

தேவையில்லை
தகுதி - திறமை
தோட்டி

எதிரி கைகளில்
எங்கள் ஆயுதம்
அமளிப் படை

தாழ்ச்சி இறைச்சி
உயர்ச்சி மூத்திரம்
இந்திய மாடு

இடமின்றி பெண்கள்
இட ஒதுக்கீடு
ஆணாளுமன்றம்

தீட்டு
தமிழ் முழுக்கு
மதம் முழுக்கு

விபூதி, நாமம்
தலையுறை, சிலுவை
மந்தைக்குறி

பழையன கழுவின
புதிய பாவங்கள்
பிதாவே மன்னியும்

அணு ஆயுத உற்பத்தி
முதலிடம் இந்தியா
பிள்ளையார் சிலைகள்

பிச்சையெடுக்கிறார்
பெருமாள்
திருப்பதி

கருகினர்
குழந்தையும், தெய்வமும்
கும்பகோணத் தீ

- புதுவை ம.ஞானசேகரன், முத்தரையர்பாளையம்

சுத்தம்
குப்பைப் பொறுக்கிகள்
பன்றி மேய்ப்பவர்கள்
செருப்புத் தைப்பவர்கள்
சாக்கடைகளைச் சுத்தப்படுத்தும்
நகரச்சுத்தி தொழிலாளர்கள்
மூட்டை சுமப்பவர்கள்
சாக்கடையோரச் சேரிவாசிகள்
என எல்லோருக்கும்
எப்பொழுது
சுத்தம் சோறு போடும்?

பாடத்திட்டம்
திருத்தவே இயலவில்லை
பிழைகளை
இந்தியக் கல்வி முறையில்!

சும்மா
சும்மா இருந்தாலும்
சுமந்துகொண்டிருக்கின்றது பதவியை
கல்! கடவுளாக.

- வீ. சிவசங்கர், கள்ளக்குறிச்சி