சிறுகதை
- மேசா
 |
ஒரு ஆடு பின்னாடியே எல்லா ஆடுகளும் போகுங்கிறது நூத்துக்கு நூறு உண்மைதான் போல. சிந்தாமணி ஆடுகளை அவிழ்த்து விட்ட-தும் எல்லாம் முதல் ஆட்டை தொடர்ந்து ஓடின. சில ஆடுகள் போகும் பொழுதே நின்று பின்பக்கத்தைத் தாழ்த்தி ஒண்ணுக்கிருந்து புளுக்கையையும் போட்டுவிட்டுப் போனது.
தே... அழிச்சாட்டியம் புடிச்சதுகளே... அத இங்கிட்டே போட்டுட்டு போனா... அள்ள கொள்ள லகுவாயிருக்கும்ல என்று ஆடு-களைத் திட்டியவாறே தொரட்டிக் கழியை எடுத்தவள் தோட்டத்தின் படலைச் சாத்தி-விட்டு ஆடுகளைத் தொடர்ந்து போனாள். ஒரு கையில் பித்தளைத் தூக்கில் மதிய உணவு இருந்தது.
முதல் ஆடு வழக்கமாக அவள் ஓட்டிச் செல்லும் நந்தவனத்திற்குப் போகும் பாதையில் போனது. எல்லா ஆடுகளும் அதனைத் தொடர்ந்தது. அது பெரிய மந்தை, குட்டியும், நடுத்தரமும் பெரியதுமாய் ஆணும் பெண்ணு-மாய்ச் சினைப் பிடித்ததும் இல்லாததுமாய் ஒன்றன் மேல் ஒன்று ஏறி விளையாடிக் கொண்டே போனது.
போகிற வழியில் சில வேலிகளின் நுனி-களில் இருக்கும் பசுமையைத் தொத்துக்கால் போட்டு மேய, பின்னால், போய்க் கொண்டிருந்த இவள் அதட்டினாள். தே... வழிய பார்த்துப் போங்க. இல்லாத ஏச்சு பேச்சுக்கெல்லாம் ஆளாக்காதீங்க. அவள் அதட்ட சில பயணத்தை தொடர்ந்தன. சில தொரட்டிக் கழியால் ரெண்டு வாங்கிக் கொண்டு ம்... ம்... மே... என்று கத்திவிட்டு ஓடின.
இவள் ஆடுகளை அதட்டும் சத்தம் கேட்டு வாசலில் நின்ற பெண்கள் முகவாய்க் கட்டை-யைத் தோள்களில் இடித்துக் கொண்டனர். காலம் கெட்டப் போச்சிடி. புருஷன அள்ளி வச்சி இன்னும் நாற்பது கூட முடியல. அதுக்குள்ள வீதியில நடக்குறத பாரேன்.
அட நீ ஒண்ணு. நீ இன்னைக்குத்தான் பாக்குறியா... அவ பத்துப் பதினைஞ்சு நாளா ஓட்டிக்கிட்டுப் போறா நீ காயலா கிடந்த. அதனால ஒனக்குத் தெரியல போலயிருக்கு.
அப்படியா சங்கதி. மானம் மறுக்குதுன்னா ஏன் மறுக்காது. இந்த மாதிரி பாவிங்-களாலதான் மழை பெய்யாம எல்லோரையும் காயப்போடுவது. சே... பூட்டங்கி கிடக்க வேண்டிய நேரத்துல போறா வீதிவுலா...
நாளைக்கிதான் நாப்பதா நாளு. பேசாம அவள ஒக்கார வச்சி அறுத்துக் கட்டுணவங்கள வுட்டு சடங்க செய்யச் சொல்லணும். அப்-படியே அவங்கள விட்டே நல்லா ஒரைக்கிற மாதிரி நறுக்குன்னு நாலு வார்த்தை புத்தி சொல்லச் சொல்லணும்.
அட வுடுக்கா. அவளுந்தான் என்ன செய்வா, ஒத்த மனுசி, அவளே அவ ஆடுகள மேய்க்கப் போறா, அவள போயி...
தே... என்ன நாலு எழுத்துப் படிச்சிட்-டோம்னு பேசுறியா? எல்லாத்துக்கும் ஒரு வரைமுறை இருக்குல்ல. இவ பாட்டுக்கு நடமாடுனா அக்கம் பக்கம் மக்க மனுச வாழ வேணாம். சின்னஞ் சிறுசுக தழைக்க வேணாம். இன்னைக்கே இதுக்கொரு முடிவு கட்டுறேன் ஒரு பெண் சபதம் செய்தாள்.
காதில் விழும் வார்த்தைகள் - கண்ணில் விழுந்த மணல்களாய் உறுத்தினாலும் அவள் மனம் நினைத்தது. சே... ஆடு தெருவுல போட்ட புளுக்கையாவது ஒரமாகும். இது எதுக்கு ஆகும் என்று நினைத்தவள் ஆடுகளின் பின்னால் சென்றாள்.
நந்தவனம் அருகே வருகிறதென்றாலே குளிர்ந்த காற்று வீசும். மாம்பூவோ பழமோ மணக்கும். மா, புளி, வேம்பு என்று மரங்கள் சூழ்ந்து நிற்கும். தரையில் நிழலும் வெயிலும் கலந்து போட்ட கோலம் காற்றடித்தால் அசையும். நந்தவனத்திற்குப் பக்கத்திலேயே புள்ள வாய்க்கால்! ஆற்றுப்படுகை பசுமை-யாயிருக்கும். ஆறே வறண்டு போனாலும் நந்தவனத்திற்கு நேராக ஆற்றில் கொஞ்சம் தண்ணீர் கிடக்கும். அதில் சலவை வேலை நடக்கும். ஆடுகளை மேய்த்து அவற்றிற்குத் தண்ணீர் காட்ட அவளுக்கும் வசதியா-யிருந்தது.
ஆடுகள் அதனதன் பாதைகளில் போய் விருப்பம் போல மேயத் தொடங்கியது. இவள் அடம்புகளில் ஏறியிருக்கும் கோவைக் கொடிகளை இழுத்துப் போட்டாள். இன்னைக்-காவது நாளைக்காவது வெள்ள வாயும் மூக்குறிஞ்சியும் குட்டி போட்டாலும் போடும். இன்னைக்கு இராத்திரியாயிருந்தா கண்ணு முழிக்கணும். ஒத்தையா நின்று பெரிய உசுரு சின்ன உசுருகள காப்பாத்தணும். என்ன செய்யப் போறேனோ! என்று நினைத்தவள் ஆற்றில் குளித்துவிட்டுப் படியேறி வரும் இரண்டு பெண்களைப் பார்த்தாள். இவளு-டைய ஆருயிர்த் தோழிகளின் அம்மாக்கள். படிப்பிற்காக வெளியூர் சென்றிருக்கும் தோழிகளைப் பற்றி விசாரிக்கலாம் என்று நினைத்தவள் அவர்களை நோக்கிச் சென்றாள். அவர்களோ முகத்தைத் திருப்பிக் கொண்டு விடுவிடுவெனச் செல்ல திகைத்துப் போய் அப்படியே நின்றாள். சே இவுங்க பொண்ணுங்க வயசுதானே எனக்கும்; மனத்தில் எண்ணம் ஓட ஆணியடித்தது போல நின்றாள்.
வழியில் சில ஆண்களும் இவளைப் பார்த்ததும் வந்த வழியே திரும்பிச் சென்றதும் ஞாபகத்திற்கு வந்தது. வழியில் அந்தப் பெண்-கள் பேசியதும் ஞாபகத்திற்கு வர நந்தவனத்தில் வந்து உட்கார்ந்தாள். இன்னைக்கே இதுக்-கொரு முடிவு கட்டுறேன் என அந்தப் பெண் சொன்னது அவள் காதுகளில் ஒலிக்க ஆரம்-பித்தது. என்ன செய்யப் போறாங்க யோசிக்க ஆரம்பித்தாள்.
இந்தத் தாலியால இன்னைக்கு நேத்தா பேச்சு வாங்கறேன். என்னைக்குக் கல்யாணம்னு ஆரம்பிச்சதோ அன்னையிலிருந்து ஏச்சு பேச்சால மனசும், அடி ஒதையால உடம்பும் நிறைஞ்சி போச்சு, அவளுக்குள்ளிருந்த மனம் வலிக்க ஆரம்பித்தது.
ஒருநாள் அத்தை இவளைப் பெண் பார்ப்-பதற்காக வீட்டிற்கு வர, விளையாடிக் கொண்டிருந்தவளைப் பாதியில் வீட்டுக்கு இழுத்து வந்து அம்மா திட்டிய திட்டுகள்... ஒன்பதாவது தானே முடிச்சிருக்கேன் மேக் கொண்டு படிக்க வையுங்கள். கல்யாணம் இப்ப வேண்டாம் என்று அவள் கதறி அழ அப்பா திட்டிய திட்டு... எல்லாம் நாளடைவில் மறக்க வேண்டியவைதாம். ஆனால், கழுத்திலேறிய தாலியால் தினம் ரணமாகிக் கொண்-டேயிருந்தது.
முரடனா இருந்தா என்ன? ஊர் சுத்தியா இருந்தா என்ன? கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் சரியாயிடுவான் என்று சொல்லிப் பாசிமணி ஆடிய கழுத்தில் ஒரு சுபயோக சுபதினத்தில் தாலி ஏறிவிட அவளுடைய உலகமே, இரண்டு தெரு தள்ளியிருக்கும் புக்ககமாகிப் போனது.
தாலிய வாயில வச்சி கடிக்காதடி என்று ஆரம்பித்தால் தாலி கட்டுனவனுக்கு முழிச்-சிருந்து சோறு போட்டா என்னாடி என்பது வரைக்கும் திட்டு தான். தாலியோடு தோழி-களைத் தேடிப்போய் விளையாடிய குற்றத்-திற்காக அடி உதை. மேலும் பகலில் சண்-டையாலும் இரவில் சல்லாபத்தாலும் உண்டாகும் வலிகள். இவை எல்லாம் தாலியால் அவளுக்குக் கிடைத்த வரங்கள்.
மேற்கொண்டு படிக்க இருந்தவளை அத்தை வீட்டிற்கு அடுப்படி அடிமையாக்கிய பெருமை இந்தத் தாலியையே சேரும்.
தாலியோட பெருமை தெரியாத தறுதலை என்று தினம் திட்டும் அத்தை ஒருபுறம். குடிக்கக் காசு இல்ல என்று தாலியைக் கழட்டித் தர சொல்லும் கணவன் ஒருபுறம்.
விளையாட்டுத் தனமாய் இருந்தவளை எல்லோரும் கொட்டிக் கொட்டித் தாலி ஒரு பெண்ணுக்கு வேலி என அதன் அருமை பெருமைகளை அறிய வைத்தனர். அவள் அப்படி மாறியதும் தாலியைக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். அதன் மகத்துவத்தை உணர்ந்தவளாய் வலம் வந்தாள். ஆனால் அது அவள் அப்பா வீட்டுச் சொத்தையே மாமி-யாரும் கணவனும் கேட்கக் கேட்கக் கொண்டு வந்து கொடுக்க வைத்தது. அவளுடைய தாய் தந்தையை உருக்குலைந்து போக வைத்தது.
ஒரு நாள் குடிக்கக் காசு இல்லை என்று தாலியைக் கேட்டவனிடம் இவள் மறுக்க உடல் வீங்கி உதடு கிழிந்து இரத்தம் ஊற்ற, கழுத்திலிருந்த தாலியைப் பிடித்துக் கொண்டு நின்றாள். மாட்டை அடக்கிக் கொம்பிலிருந்து கால் அரைக்கால் பவுன் என்று எடுப்பவனே அவளிடம் தோற்றுப் போய் வெளியேற வைத்தது அவளுடைய தாலி வைராக்கியம்.
ஒரு நாள் வெளியே போனவன் வீடு திரும்பவில்லை. சிறிது நாள்கள் கழித்துதான் தெரிந்தது. அவன் நகரத்தில் வேறு ஒரு பெண்ணுடன் கற்றுவதாக...
என் கழுத்தில் வேலிய போட்டுட்டு இவன் எப்படி நகரத்தில் மேய்கிறான்! பின் இதை என் கழுத்தில் கட்டியதற்கு என்ன அர்த்தம் கட்டியவன் ஓடிப் போனதால் தாலியைப் பற்றி மறுபரிசீலனை செய்ய இப்பொழுது அம்மா அப்பா உயிரோடு இல்லை. அத்தையும் உயிரோடு இல்லை. கழுத்திலிருந்த தாலியை எடுத்துப் பார்த்தாள். இது அர்த்தமில்லாத ஒன்று. ஆனால், பல அர்த்தங்களை ஏற்ற ஏற்ற அது சுமந்து கொண்டிருக்கிறது. அதைப் பெண்கள் சுமந்து கொண்டிருக்கிறார்கள். அது பிறகு பெண்களைச் சுமையாக்கிவிடுகிறது. இப்படி ஏதேதோ சிந்தனைகள் அவளுக்குள்.
இரண்டு ஆண்டுகள் கழித்து அவளுக்கு இன்னொரு தகவல் கிடைத்தது. அலங்-காநல்லூர் மஞ்சு விரட்டில் அவள் கணவன் மாடு முட்டிக் குடல் சரிய அந்த இடத்திலேயே இறந்து போனான் என்று மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்க்கப் போன ஊர்க்காரர்கள் பிரேதத்தை எடுத்து வீட்டுக்கு வர, என்ன சொல்லி அழுவது என்று தெரியாமல் இவள் திகைக்க, அன்றும் இப்படித்தான் ஊரே திட்டித் தீர்த்தது அவளை!
இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்த அவளுக்கு ஆடுகள் நினைவுக்கு வர எழுந்தாள். இலைதழை ஒடித்துப் போடத் தொரட்டிக் கழியை எடுத்தாள். அதற்குள் எக்காவ், எக்காவ் என்று கத்தியபடி கோணக்கால் மாயாண்டி ஓடி வந்தான்.
அவன் அருகில் வந்ததும் பதட்டமில்லாமல் கேட்டாள். ஏன் மாயி? என்ன விஷயம்?
உன்ன வூட்ல போயி பார்த்தேன். அங்க நீ இல்ல அதான் இங்க வந்தேன்.
சரி விஷயத்தைச் சொல்லு
ஊர்கூடி ஒரு முடிவு பண்ணிடுச்சிக்கா. நாளைக்கு உனக்குத் தாலியறுக்கிற சடங்காம். இன்னைக்கு ராத்திரியே ஊர் பொம்பளைங்க வந்து ஆரம்பிச்சிடுவாங்களாம். நீ எங்கேயும் போகக் கூடாதாம். தலையாரி சொல்லச் சொன்னார். என்றான். இன்னும் அவனுக்கு மூச்சிரைத்தது.
கேட்டுக் கொண்டிருந்த அவள் அவனை விசித்திரமாய்ப் பார்த்தபடி கேட்டாள். என்ன மாயி சொன்ன? தாலி அறுக்கப் போறாங்-களா...? அட போ மாயி! என்னைக்கு அவன் என்னை விட்டுட்டு இன்னொருத்திய தேடிப் போனானோ அன்னைக்கே அத நான் அறுத்துட்டேன். அத வித்துட்டு ரெண்டு குட்டிய வாங்கிவுட்டேன். இன்னைக்கு அது இவ்வளவு பெரிய மந்தையா நிக்குது. எது இனிமே எனக்குத் தேவைப்படாதுன்னு ஊர்-கூடி, இப்ப முடிவு எடுத்துச்சோ, அத நான் எப்பவோ எடுத்துட்டேன் என்றாள்.
என்னக்கா சொல்ற அதிர்ச்சியோடு கேட்ட மாயியின் கண்ணில் பட்டது. அவள் கழியுடன் தொரட்டியைச் சேர்த்துக் கட்டி-யிருந்த மஞ்சள் கயிறு.
- (சுவரில் எழுதாதீர் என்ற நூலிலிருந்து)
|