தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மார்ச்-8 மகளிர் தினம்
பிடல் காஸ்ட்ரோ
இவர்தான் பெரியர்
நேர்காணல்
கவிதை
சிறுகதை
வரலாறு்
தமிழ் பேசுவோரெல்லாம்
ஹாலிவுட் கலை - 15
மருத்துவமும்
சிறந்த நூலிலிருந்து
அணு அணுவாய் - 6
தமிழர்கள் மீதான
நெசந்தானுங்க...
திரைப்பார்வை
பெட்டிச் செய்திகள்

 

 

திரைப்பார்வை

தாரே சமீன் பர்

குழந்தைகள் திரைப்படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் அறிவுக்குப் பொருந்தாத கதைகளையும், ஆபத்தான ஆசைகளையும் ஊட்டிக் கொண்டிருக்கும் குழு ஒரு புறம். அமானுஷ்யத்தன்மையுடனோ, அதிகப் பிரசங்கித் தனத்துடனோ இருக்கும் குழந்தைகளைக் காட்டிக் கொண்டிருப்போர் ஒரு பக்கம்.
ஏற்கெனவே குழந்தைகள் ஆண்டில் அஞ்சலி என்றொரு படமெடுத்து பொடிசுகளையெல்லாம் லவ்யூ சொல்ல வைத்தார் அறிவு ஜீவி இயக்குநர் மணிரத்தினம். ஆபாச இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வேறு குழந்தைகள் படம் எடுப்பதுதான் எனது லட்சியம் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இந்தியில் வெளிவந்திருக்கும் படம் தான் தாரே சமீன் பர் மாறுபட்ட கதையம்சங்களையும் சில புதிய முயற்சிகளையும் எடுக்கத் தயங்காத இந்தி நடிகர் அமீர்கான் இதில் முதன்முறையாக இயக்குநராகியிருக்கிறார். அடுத்த தலைமுறையின் வளர்ச்சியில் நாம் காட்டவேண்டிய அக்கறையை எடுத்துச் சொல்கிறது தாரே சமீன் பர்; என்னை ரசிப்பதற்கென்று இருக்கும் இளைஞர் பட்டாளம் விரும்புவதைத் தான் வழங்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் நடிகர்கள் வரிசையில் வேறுபட்டு நிற்கிறார் அமீர்கான். படத்தின் நாயகன் நான் அல்ல இந்தச் சிறுவன் கதாபாத்திரம் தான் என்று அவனது நடிப்பை விருதுக்காக பரிந்துரை செய்திருக்கிறார் அமீர்கான். என்ன சொல்கிறார் தாரே சமீன் பர் - இல்?
பள்ளி வளாகத்திலிருக்கும் சிறிய கால்வாயில் ஓடும் மீன்களை ரசித்துக் கொண்டிருக்கும் சிறுவன் இஷாந்த். அதில் தனக்குப் பிடித்த மீன்களை குட்டி வலையில் பிடித்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டுக் கொள்கிறான். அவனை இழுத்து அவசர அவசரமாக பள்ளி வாகனத்தில் ஏற்றுகிறார் பணியாளர். இப்படி தொடங்குகிறது படம். விளையாட்டுத் தனமாக இஷாந்த்-ன் செயல்பாடுகளை அருகிலிருந்து படம் பிடிக்கிறது கேமரா. விலங்குகள் மீது அவன் கொள்ளும் நேசம். அம்மா மீது கொண்டுள்ள பாசம், வெளியில் காட்டும் கோபம், உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் பயம் தனது அறையையே ஓவியக்கூடம் போல் வைத்திருக்கும் திறமை என்று போகிறது இஷாந்தின் உலகம்.
பள்ளியிலோ எப்போதும் இவன் Outstanding மாணவன். வகுப்பறையை விட்டு பெரும்பாலும் வெளியில்தான். உறக்கப் படிக்கச் சொன்னால், எழுத்துக் கூட்டிப் படிக்க சிரமப்படுகிறான் இஷாந்த். திடீரென வைக்கப்படும் வகுப்பறை கணிதத் தேர்வில் உள்ள எண்களைப் பார்த்ததும் அவை அனிமேஷன் கதாபாத்திரங்களாக மாறி காட்சியளிக்கின்றன. 3 x 9 என்ற கேள்வியைப் பார்த்தால் 3க்கும் 9க்கும் சண்டை நடப்பதைப் போலத் தோன்றுகிறது இவனுக்கு. அந்தச் சண்டையில் 9-அய் வீழ்த்தி 3 வெற்றி பெறுவதால் விடை 3 என்று எழுதுகிறான் விடைத்தாளில். இந்தக் கற்பனை முடிவதற்குள் தேர்வு நேரம் முடிந்து விடைத்தாள் வாங்கப்பட்டு விடுகிறது. இப்படி இஷாந்தின் உலகம் தனியானது.
சிறுவனின் தந்தை பரபரவென அலுவலகத்தில் பறக்கும் பணியாளர், அண்ணன் டென்னிஸ் பயிற்சியை முடித்துக் கொண்டு பள்ளிக்குப் பறக்கும் மாணவன். இவர்களைக் கிளப்பிவிட்டு விட்டு தூங்கி விழும் இஷாந்தைத் தூக்கி நிறுத்தி குளிப்பாட்டி, அவசர அவசரமாக சீருடை மாட்டி, ஊட்டி விட்டு பள்ளிப் பேருந்தில் அனுப்பும் தாய் என பரபரப்பான நடுத்தர வர்க்க குடும்பம்.
வீட்டுப் பாடத்தை முடிக்காமல் வகுப்பிற்குச் செல்ல முடியாது என்பதால் பள்ளியை விட்டுக் கிளம்பி பகல் முழுக்க நகரப் பேருந்துகளில் ஏறி, ஆசை தீர சுற்றிவரும் இஷாந்த், நல்ல பிள்ளையாக மாலை பள்ளிப் பேருந்தில் ஏறி வீடு திரும்புகிறான். விடுமுறைக் காரணத்தை எழுதி அண்ணனை வைத்து அம்மாவின் கையொப்பம் போட்டு, பள்ளிக்குப் போகாத பிரச்சினையை சமாளித்து விடுகின்றான். பின்னர் ஒரு கட்டத்தில் கிழித்தெறியப்பட்ட அந்தத் தாள் தந்தையின் கைகளில் கிடைக்க, பெற்றோர் பள்ளிக்கு அது குறித்து தகவல் தந்து ஆசிரியர்களை சந்திக்கின்றனர்.
பள்ளியில் இஷாந்தின் போக்கு, படிப்பு நிலை, மதிப்பெண் விவரம் என அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளால் இஷாந்தை Boarding School எனப்படும் ஹாஸ்டல் படிப்புக்கு அனுப்பி வைக்க முடிவு செய்கிறார் தந்தை. அழுது புரண்டு, ஆர்ப்பாட்டம் செய்தும் பயனின்றி, குடும்பத்தோடு சென்று இஷாந்தை ஹாஸ்டல் படிப்பில் விட்டு விடுகிறார்கள் பெற்றோர்.
புதிய பள்ளி, புதிய சூழல், பெற்றோர் இல்லாத தனிமை என யாரோடும் பழக முடியாதவனாக இஷாந்தின் மனநிலை மாறிப் போகிறது. வாசிக்கத் தொடங்கினாலே புத்தகத்தில் எழுத்துகள் இடம் மாறித் தோன்றும் இஷாந்துக்கு, பாடத்தை கவனிப்பது மிகப் பெரிய பிரச்சினை. மீண்டும் பழைய பள்ளி நிலைதான். படிப்பில் மோசம் என்று பெயர் எடுக்கிறான் இஷாந்த். விரக்தி அவனை ஆட்டுகிறது.
வழக்கமான ஒரு ஓவிய வகுப்பு. பின்னணியில் பாடும் குரல் வர, என்னவென எல்லா மாணவர்களும் தேடிப் பார்க்க கோமாளி போன்ற தோற்றத்தோடு வெளிப்படுகிறார் ஓவிய ஆசிரியர் அமீர்கான். ஒட்டுமொத்த மாணவர் களையும் தன் பாட்டாலும், பழகும் முறையாலும் கவர்ந்து விடும் அமீர்கானிடம் கூட ஒட்டுதல் இல்லாமல் இருக்கிறான் இஷாந்த். வீட்டில் ஓவியத்தில், வண்ணத்திலேயே நேரத்தை செலவிட்ட இஷாந்த் ஒரு மைத்துளி கூட விழாமல் வெற்றுத் தாளாய் வைத்திருக்கிறான்.
இஷாந்த்-ன் இந்த வேறுபட்ட நிலையை, அங்கிருக்கும் இஷாந்தின் ஒரே நண்பனான ஊனமுற்ற சிறுனிடம் விசாரிக்கும் அமீர்கான், அவனது வகுப்பு ஏடுகளைப் புரட்டிப் பார்க்கிறார். அவன் எழுதியிருக்கும் முறை, எழுத்துகளில் தோன்றும் தலைகீழ் பிம்பம், ளு அய் ஷ் என எழுதும் பழக்கம் என ஒவ்வொன்றாய் தென்பட இஷாந்தின் பிரச்சினை புரிகிறது அமீர்கானுக்கு!
அது டிஸ்லெக்சியா! இந்தியாவில் இன்று எண்ணற்ற குழந்தைகளுக்கு இருக்கும் பிரச்சினை. தனக்கும் அப்படியிருந்து மாறியது அமீர்கானுக்கு. இஷாந்த் மீது தனிக்கவனம் செலுத்த முடிவெடுக்கிறார். அவனது பிரச்சினை என்னவென்பது குறித்து இன்னும் தெளிவு பெற இஷாந்தின் வீட்டுக்குச் சென்று, அவனது தாய், தந்தை மற்றும் அண்ணன் மூலம் தெரிந்து கொள்கிறார்.
அமீர் சொல்வதை எரிச்சலுடன் பார்க்கிறார் இஷாந்தின் தந்தை. அவனது ஏடுகளைப் புரட்டும்போது அவனது ஓவியத் திறன் பற்றியும் அறிந்து கொள்கிறார் அமீர். தனது வகுப்பில் தாளில் ஒரு துளி மையையும் பயன்படுத்தாத இஷாந்தின், உண்மையான திறமையை உணர்ந்து கொள்கிறார் அமீர்.
தங்கள் கும்பத்திலிருந்து தான் மட்டும் பிரிந்து ஹாஸ்டல் செல்வதை தொடர் ஓவியமாக வரைந்து உணர்த்தியிருந்த ஓவிய ஏட்டை கையில் எடுத்துக் கொள்ளும் அமீர்கான் மறுநாள் வகுப்பில் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டு பின்னாளில் பேரறிஞர்களாகத் திகழ்ந்த சாதனையாளர்களைப் பற்றி எடுத்துரைக்கிறார். என் பெயர் நிகும்ப் என்பதை My Name is nikumbh என்பதை ////// என்று கரும்பலகையில் எழுதி அதை கண்ணாடி மூலம் வைத்து பிம்பத்தை படித்துக் காட்டி, மெல்ல மெல்ல கேள்விகளுக்கு இஷாந்தை பதில் சொல்ல வைத்து அவனது இறுக்கத்தை தகர்க்கிறார். வீட்டிலிருந்து எடுத்து வந்த ஓவிய ஏட்டை அவன் கையில் கொடுத்து அவனுக்கு நம்பிக்கை தருகிறார்.
இஷாந்த் மேல் தனி அக்கறை காட்டி, அவனை மற்ற மாணவர்களைப் போல் மாற்ற, எழுத்துக்களையும் எண்களையும் நினைவில் வைத்துக் கொள்ள தனிப்பயிற்சிகளை வழங்கி மெல்ல மெல்ல அவனது வளர்ச்சிக்கு உதவுகிறார் அமீர். தன் ஓய்வு நேரங்களில் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளியில் சேவை செய்பவர்.
அமீரின் கைப்பிடித்து நடக்கத் தொடங்கும் குழந்தை யாக மாறுகிறான் இஷாந்த். அவனது படைப்பாக் கத்திறனை மற்ற மாணவர்களுக்கு விளக்கும் விதத்தில் வாய்ப்புத் தந்து நம்பிக்கையை வளர்க்கிறார் அமீர். ஆசிரியர்கள், மாணவர்கள் என ஒட்டு மொத்தப் பள்ளியும் கலந்து கொள்ளும் போட்டி ஒன்றை தலைமை ஆசிரியர் ஒப்புதலுடன் அறிவித்து, அத்தனைப் பேரையும் ஒரு திறந்தவெளி அரங்கத்தில் குவிக்கிறார் (நிகும்ப்) அமீர்கான்.
விடிகாலையே எழுந்து இயற்கையை ரசிக்கச் சென்று விட்ட இஷாந்த், தாமதமாய் போட்டிக்கு வந்து, ஒரு மூலையில் சென்று வரையத் தொடங்குகிறான்.
போட்டியில் வெற்றி பெறுபவரின் ஓவியம் தான் இவ்வாண்டு மலரின் அட்டைப்படம் என அறிவிக்கப் பட்டிருக்கிறது. அரங்கம் முழுக்க ஆழ்ந்த யோசனையோடு படம் வரைய, அமீர்கானும் ஓவியம் தீட்டுகிறார். தான் வரைந்த படத்தை கொண்டு வந்து கொடுத்துவிட்டு அமீர்கான் வரைந்த ஓவியத்தைப் பார்க்கும் இஷாந்துக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அமீர் வரைந்திருப்பது இஷாந்தின் முகம். இஷாந்த் வரைந்தது அதிகாலையில் தான் ரசித்த இயற்கைக் காட்சி.
போட்டியில் இஷாந்த் வென்றதாக அறிவிக்கப்பட, கூட்டத்தின் முன்னால் வருவதற்கும் கூட கூச்சப்பட்டு மருகும் இஷாந்தை, மாணவர்கள் எழுப்பி மேடையை நோக்கி அனுப்ப, அரங்கம் அதிரும் கைதட்டலுடன் பரிசு பெறும் இஷாந்த், அமீர்கானை நோக்கி ஓடி கட்டிப்பிடித்து அழும் காட்சியில் நம் கண்களில் நீர் பொங்குவதை, கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆண்டு மலரின் முகப்பு அட்டையில் இஷாந்த் வரைந்த படம், பின் அட்டையில் இஷாந்த்தை அமீர் வரைந்த படம் வெளிவருகிறது. அதைப் பார்க்கும் பெற்றோர் உருக இஷாந்த்-ன் படிப்பில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தை ஆசிரியர்கள் சொல்லி மகிழ்கின்றனர். விடுமுறைக்காக வீட்டுக்குத் திரும்பும் வேளையில் தன்னை மீட்டெடுத்த அமீரை நோக்கி இஷாந்த் துள்ளிக் குதிக்க நிறைகிறது மனம்.
இன்றைய இந்தியக் குழந்தைகளின் பெரும் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு, முழுமை யாக அப்பிரச்சினையை அனைவரும் புரிந்து கொண்டு செயல்பட ஏதுவாக படத்தை அணுகியிருக்கும் அமீர்கான் உள்ளிட்ட குழுவினருக்கு எத்தனை முறை, நன்றி சொன்னாலும் தகும்.
விளக்கப்படம் போன்றோ, பிரச்சாரப் படம் போன்றோ அமைந்துவிடாமல் தான் கற்ற திரைக்கலையை தெளிவாகப் பயன்படுத்தியிருக்கிறார் அமீர். டிஸ்லெக்சியா பாதித்த குழந்தையின் போக்கு எப்படியிருக்கும் என்பதை அலசி ஆராய்ந்து கதாபாத் திரத்தை படைத்திருக்கிறார்கள். அத்தனை நேர்த்தி.
இஷாந்தாக நடித்திருக்கும் சிறுவன் தர்ஷில் சபாரி கண்முன்னே இன்னும் நிற்கிறான் அவனது ஆற்றலால். இது குழந்தைகள் பார்ப்பதற்கல்ல மிக முக்கியமாக பெற் றோரும், அதைவிட முக்கியமான ஆசிரியர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம். அறிஞர்களாக உருவாக வேண்டியவர்களை நாம் இழந்து விடாமல் இருக்க அது அவசியத் தேவையாகும். கண்ட குப்பைகளையும் தமிழில் மொழிபெயர்த்து டூமாக் கோழி சைனீஸ் டப்பாங்குத்து என்று ஒளிபரப்பும் தொலைக் காட்சிகள், கவனத்தில் கொண்டு, மொழிபெயர்த்து நாடெங்கும் ஒளிபரப்ப வேண்டிய படம் தாரே சமீன்பர்.

- சமா. இளவரசன்