தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மார்ச்-8 மகளிர் தினம்
பிடல் காஸ்ட்ரோ
இவர்தான் பெரியர்
நேர்காணல்
கவிதை
சிறுகதை
வரலாறு்
தமிழ் பேசுவோரெல்லாம்
ஹாலிவுட் கலை - 15
மருத்துவமும்
சிறந்த நூலிலிருந்து
அணு அணுவாய் - 6
தமிழர்கள் மீதான
நெசந்தானுங்க...
திரைப்பார்வை
பெட்டிச் செய்திகள்

 

 

பெட்டிச் செய்திகள்

பெண்களுக்கு நகை மாட்டியது ஏன்?

"ஆதியில் பெண்களுக்கு நகைகள் உண்டாக்கப்பட்டதன் கருத்தே பெண்களை அடிமையாக்கவும், அடக்கிப் பயன்படுத்தி வைக்கவும் செய்த தந்திரமேயாகும். காது, மூக்கு முதலிய நுட்பமான இடங்களில் ஓட்டைகளைப் போட்டு அவைகளில் உலோகங்களை மாட்டி வைத்ததானது மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட்டால் அது எப்படி இழுத்துக்கொண்டு ஓடாமல், எதிர்க்காமல் இருக்கப் பயன்படுகிறதோ அதுபோல் பெண்கள் காதில், மூக்கில் ஓட்டைகளைப் போட்டு, ஆணிகள் திருகி இருப்பதால் ஆண்கள் பெண்களைப் பார்த்து கை ஓங்கினால் எதிர்த்து அடிக்க வராமல், எங்கு காது போய்விடுகிறதோ, மூக்கறுந்து போய்விடுகிறதோ என்று தலைகுனிந்து முதுகை அடிக்கத் தயாராக இருப்பதற்காக அது உதவுகிறது. அன்றியும் நிறைய நகைகளை மாட்டிவிட்டால், மாடுகளுக்கு தொழுக்கட்டை கட்டிய மாதிரி வீட்டை விட்டு எங்கும் தனியே போக மாட்டார்கள். நகை போய்விடும் என்று வீட்டோடு கிடப்பார்கள்."

- தந்தை பெரியார்


நாகரிகமான பிரிவு

சரியான மணப்பொருத்தமின்றி பெற்றோர் ஏற்பாட்டில் நடைபெறும் திருமணங்கள் பல முறிந்து விடுவது அதிகரித்து வருகிறது. இதனை, தொடர்ந்து பத்திரிகைகள் படிப்போர் உணரமுடியும். பெரும் பாலும் நல்ல வசதியான குடும்பங்களில் இது அதிகஅளவில் நிகழ்கிறது. பிரபலமான குடும் பங்களில் ஏற்படும் இத்தகைய மனமுறிவுகளை படம்பிடித்து பக்கம் பக்கமாக எழுத பல பத்திரிகைகள் இருக்கின்றன. ஒரு சிறு சிக்கலை, மண வாழ்க்கை முறிவை நாகரிகமின்றி பத்திரிகைகள் எழுதுவதும் அதிகரித்து வருகிறது. பிரியப்போகும் கணவனும் மனைவியும் மாறிமாறி குற்றம் சுமத்துவதும் அதை பத்திரிகைகள் வெளியிடுவதுமான அநாகரிகங்கள் அரங்கேறுகின்றன. சம்பந்தப்பட்டவரின் விருப்பம் இல்லாமல் அவரது அந்தரங்கங்களில் பத்திரிகைகள் தலையிடும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்தக் காலகட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த ஒரு மண முறிவு, பத்திரிகைகளின் அத்துமீறல்களுக்கு சரியான சவுக்கடி கொடுப்பதுபோல அமைந்தது.
திரைப்பட இசையமைப்பாளர் இளைய ராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா லண்டனைச் சேர்ந்த சுஜாயா என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் விரும்பி மணம் செய்து கொண்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன் இருவரும் ஒன்றாக காரில் நீதிமன்றங்களுக்கு வந்தனர். இருவரும் மனம் ஒப்பி மணமுறிவு வேண்டினர். மணமுறிவுச் சட்டப்படி 6 மாதங்கள் பிரிந்து இருந்தனர். 6 மாதங்கள் கடந்தது. மீண்டும் நீதிமன்றம் அழைக்கப்பட்டனர். சட்டப்படி மண விலக்குப் பெற்றனர். மணவிலக்குப் பெற்றார்கள் என்ற ஒரு செய்தியைத் தவிர அவர்களின் அந்தரங்கம் பற்றியோ, சுய சிக்கில்கள் பற்றியோ எந்தச் செய்தியையும் யுவன்சங்கர்ராஜா - சுஜாயா இருவரும் துளி அளவு கூட வெளியிடவில்லை. மிகுந்த நாகரிகத்துடன் தமது மணவாழ்வை முறித்துக் கொண்டனர். 30 வயதுக்கும் குறைவான இவர்களது முதிர்ச்சி பாராட்டப்பட வேண்டியது. பல சினிமா பிரபலங்கள், வயதில் மூத்தவர்கள் சிறு பிள்ளைத்தனமாக அடித்துக் கொள்வதும் அவர் களது தனிப்பட்ட காரணங்களை பத்திரிகை கள் வெளியிடுவதுமான கேவலமான நிலையை, நாம் பார்த்துவரும் காலத்தில் இளம் வயதிரான இவ்விருவரும் நடந்து கொண்டவிதம் நாகரிக மானதும் ஒருவரை ஒருவர் மதிப்பதையும் உணர்த்துகிறது. இது இன்றைய இளம் தலை முறையின் வரவேற்கத்தக்க முதிர்ச்சியின் அடையாளம்தானே.


தன்னைச் சுற்றி நடப்பதை அறியும் ஆவல்கூட பெண்களுக்கு இல்லை

- பேரா. பத்மாவதி விவேகானந்தன்

சமூகம் எப்படி போனாலும் கவலையில்லை அப்படிங்கிற மாதிரியான சிந்தனையுள்ள மாணவி கள் அதிகரிச்சிருக்காங்க. நாம, அவங்க உணர்வுகள வந்து பல்வேறு விதங்கள்ல மழுங்கடிச்சிக்கோம். அவங்க பாட்டுக்கு கல்லூரிக்கு போறாங்க. படிக்கிறாங்க, செல் போனை கையில வச்சுகிட்டு தோழிகளோடோ, தோழர்களோடோ விளையாடறாங்க. பேசறாங்க அப்புறம் நிறைய சாப்பிடப் போறாங்க, வர்றாங்க எல்லாமே இருக்கு. ஆனா, படிக்கற நேரம் தவிர, முக்கியமா தொலைக்காட்சி, அதுல என்ன பார்க்கிறாங்க, நிறைய அழகிப் போட்டிகள், கல்லூரி அளவுல கூட நடத்தறாங்க. இந்த நுகர்வு கலாச் சாரம் விற்காத பொருள்களையெல்லாம் விக்கறதுக் காக இங்க வந்து விற்க ஆரம்பிச்சுட்டாங்க.
சிந்தனை ரீதியா எல்லாமே வேற மாதிரி போய்க்கிட்டு இருக்கு. சிந்தனையை மழுங்கடிப் பதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. நமக்கு, ஆட்டம், பாட்டம் கொண்டாட்ட மெல்லாம் தேவை. ஆனா, எல்லாமே பண்பாடு சார்ந்தவைகளாக இருக்க வேண்டும். அவைகளை நாம் வரவேற் கிறோம். ஆனால், அதே சமயம் நமது பண் பாட்டுக்கு மாறாக, ஏதோ ஒரு கலாச்சாரத்தால் முன்மொழியப்பட்டு, அந்த விசயங்களை கொண்டு வந்து வச்சுகிட்டு இதுதான் நமது கலாச்சாரம்னு காப்பியடிக்கறோம். ஆடம்பரம் குறித்த விழிப்புணர்வையும் பெண்கள் பெற வேண்டியிருக்கிறது. இருந்தாலும் பெண்கள் காலத்தோடு போராடி வெற்றி பெற்றி யிருக்கிறாகள். அவர்கள் எல்லா பிரச்சினை களையும் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். அதற்கான விழிப்புணர்வை பெற வேண்டும்.
புத்தகச் சந்தைகளில் கோடிக்கணக்கில் புத்தகங் கள் விற்பனை ஆனதாக நாம் படிக்கிறோம். பெண்கள் பொதுவாக தன் முன்னேற்ற புத்தகங் களை படிக்கிறார்கள். சமுதாய முன்னேற்றத்தை இரண்டாம் பட்சமாக்கிவிடலாமா, தன் முன் னேற்றம் மட்டுமே போதுமா? அரசியல் சார்ந்த என்பதை விட நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் மாணவிகளும், பெண்களும் பத்திரிக்கைகளை படிப்பதே தங்கம் விலை என்ன என்பதை பார்க்கத்தான் என்பதை வேதனையோடு கூறவேண்டியிருக்கிறது. தன்னைச் சுற்றி நடப்பதை அறியும் ஆவல்கூட பெண்களுக்கு இல்லை. அது ஆண்களுக்கானது என்று இருந்து விடுகிறார்கள். பெண்கள் சமூகத்திற்கான குறைந்த பட்ச பங்களிப்பை கொடுக்க வேண்டும். தானுண்டு என்று இருப்பவர்கள் நிச்சயமாக மனநோயாளியா கத்தான் இருப்பார்கள். ஆகவே, பெண்கள் பகுத்தறி வுடன் கூடிய விழிப்புணர்வு பெறவேண்டும்.


அதென்ன இசட் பிரிவு பாதுகாப்பு?

அடிக்கடி செய்திகளில் முக்கியத் தலைவர் களுக்கு இசட் பிரிவுப் பாதுகாப்பு, இசட் பிளஸ் பாதுகாப்பு என்றெல்லாம் கேள்விப்படுகிறோமே! அப்படி யென்றால் என்ன? மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சிறப்புப் படைப்பிரிவு, தேசிய பாதுகாப்புப்படை போன்ற பல்வேறு பாதுகாப்புப் படைகளின் சார்பில் உயர் பதவிகளில் இருக்கும் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற - உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்சபட்ச தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தான் இது. ஒவ்வொன்றுக்கும் என்ன வேறுபாடு? இதோ படியுங்கள்:
36 பாதுகாப்பு வீரர்கள், அதிகாரிகள் கொண்ட படைப் பாதுகாப்புக்கு இசட் பிளஸ் பிரிவு (z+) பாதுகாப்பு என்று பெயர். இதுதான் அதிபட்ச பாதுகாப்பாகும்.
22 பாதுகாப்பு அதிகரிகள் கொண்ட படைக்கு இசட் பிரிவு என்றும்
11 பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட படைக்கு ஒய் பிரிவு என்றும்
2 பேர் கொண்ட படைக்கு எக்ஸ் பிரிவு என்றும் பெயர்.


ஏழைகளைச் சுரண்டும் மதவாதம்

இந்துக்கள் மதம் மாறக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியினர் கூறி வருகின்றனர், எங்கள் ஊர் கிராமங்களில் ஊர் அம்மன் கோயில் உண்டு. அதற்கு வருடா வருடம் கும்பாபி ஷேகம் செய்வார்கள். அதற்கு வரி எவ்வளவு தெரியுமா? ஒருவர்க்கு வரி ரூ.600 திருமண மாகாதவர்கள் என்றால் அரை வரி. ஒரு வீட்டிற்கு எப்படியும் ஆயிரத்து அய்ந்நூறு ரூபாய் ஆகும். அவனது வருமானமே மாதம் 2000 தான் வரும்.
கண்டிப்பாக வரி கட்டியே ஆக வேண்டும்; இல்லையென்றால் மிரட்டுவார்கள், இதற்கு பயந்து பாடுபட்டு உழைத்த பணத்தை வரிக்கு கொடுத்து விடுவார்கள். இவர்கள் இந்த பணத்தை வைத்துக் கொண்டு கும்ப ஆட்டம் என்றபெயரில் வேசியை கூட்டி வந்து நடனம் ஆட வைப்பது, வீண் ஆடம்பரங்கள், கேளிக்கைகள் நடத்துவார்கள் - இவர்களுக்கு வேலையே இதுதான். மீதிப் பணத்தை தர்ம கர்த்தாக்கள் என்ற போர்வையில் கள்ளக் கணக்கு எழுதி உல்லாசமாக செலவு செய்வார்கள். இப்படி ஏழைகளின் உழைப்பை சுரண்டப் போய்தான் அவர்கள் வேறு மதத்துக்கு சென்று விடுகிறார்கள். மன்னர் ஆட்சிக் காலத்தில், நீ தீண்டத்தகாதவன்; கோயிலுக்குள் வராதே என்று சொன்ன அதே பார்ப்பனர்கள் தான், இன்று மதம் மாறக்கூடாது என்கிறார்கள். புரோகிதத்துவம் இந்தியாவை பிடித்த ஒரு சனியன் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். கிராமப்புறங்களில் தான் கோயில் தர்மகர்த்தா என்ற போர்வையில் ரவுடிகளே வரி வசூல் பண்ணுகின்றனர். இந்து முன்னணி, கோயில் தர்மகர்த்தாக்களே உங்கள் போலி மத ஆசாரங்களையும், கோயில் திருவிழாவுக்காக ஏழைகளிடம் வரி வசூலிப் பதையும் விட்டு விடுங்கள். அதுவே சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் சேவையாகும்.

- அ. பார்த்தசாரதி, பேரூரணி


வடமாநிலத்தவர் மதிப்பதில்லை

இயல்பாகவே தென்னிந்திய மக்கள் சட்டத்துக்குக் கட்டுப் பட்டு நடக்-கிறார்கள். இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதி யில் வசிப் பவர்கள், சட்டத்தை மீறி நடப்பதை பெருமை யாகக் கருதுகிறார்கள்.
சட்டத்தை மீறிச் செயல்படும் போது அவர்கள் மீது பெரிதாக நடவடிக்கை எதையும் எடுக்காமல் விட்டுவிடுவது தான் இதற்குக் காரணம். இது ஒரு கலாசாரப் பிரச்சினை. எனவே மக்கள் தாங்களாகவே சட்டத்தை மதித்து நடக்க முன்வர வேண்டும். பொறுப் புள்ள குடிமக்களாகத் தங்கள் கடமை களை ஆற்ற வேண்டும்.

- டெல்லி ஆளுநர் தேஜேந்திர கன்னா


பொய்சொன்ன புஷ்

ஈராக் சிக்கல் தொடங்கி போர் மூண்டது வரை அமெரிக்க அதிபர் புஷ் வெளியிட்ட 259 அறிக்கை களில் பொய்த் தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக அமெரிக்காவின் இரு பத்திரிகையாளர் அமைப்புகள் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளன. புஷ்ஷைப் போலவே அவரது வெளி யுறவு அமைச்சர் காலின் பாவெல் 255 முறை பொய் சொல்லியுள்ளார் என்றும், புஷ்ஷின் அதிகாரிகள் வெளியிட்ட 935 அறிக்கைகளிலும் பொய்த் தகவல்கள் இடம் பெற்றிருந்தன என்றும் அந்தப் பத்திரிகையாளர் அமைப்புகள் கூறியுள்ளன.